தூங்குவதில் எத்தனை ஆண்டு அனுபவம்?

பதவி உயர்வு
தூங்குவதில் எத்தனை ஆண்டு அனுபவம்?
Published on

இந்திய வர்த்தக உலகில் சந்திரமௌலி வெங்கடேசன் பிரபலமானவர். Asian Paints, Cadbury, Onida, Pidilite போன்ற பிராண்டுகளை உச்சத்திற்கு கொண்டு போனதில் சந்திரமௌலிக்கு பெரும் பங்குண்டு.


தன்னுடைய மனதிருப்திக்காக சந்திரமௌலி வர்த்தக உலகில் பல்வேறு அடுக்குகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு உயர்வது பற்றிய பயிற்சிகளை நடத்தியிருக்கிறார். பயிற்சியின் போது கூட்டத்தில் ஒருவரிடம்  ' நடந்து செல்வதில் உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம்' என்று கேட்பார். கேள்வியை முடித்தவுடன் கூட்டத்தில் சிரிப்பலை எழும்பும் .

அடுத்து மற்றொருவரிடம் , 'தூங்குவதில் உங்களுக்கு எத்தனை வருடம் அனுபவம் ' என்று கேட்பார். மறுபடியும் சிரிப்பலை பரவும்.

பின் சிலரிடம் ,' உங்களுக்கு மனிதவளம்/ விற்பனை /  நிதி / உற்பத்தியில் எத்தனை வருடம் அனுபவம்?' என்று அவர் கேட்க சீரியஸான பதில்கள் வரும். நடப்பது மற்றும் தூங்குவதில் நாம் செலவழிக்கும் காலத்தை அனுபவம் என்று குறிப்பிடாமல் இருக்கும் போது மனிதவளம்/ விற்பனை /  நிதி / உற்பத்தி என்ற துறையில் செலவழிக்கும் காலத்தை எப்படி அனுபவம் என்று குறிப்பிடமுடியும்? ஒரு துறையில் நாம் செலவழிக்கும் காலம்  மட்டும் அனுபவத்தை குறிக்காது. நடப்பது அல்லது தூங்குவதை செய்யும் போது இயந்திரத்தனமாக / சிந்தனையில்லாமல் செய்வதால் அனுபவமாகக் கருதுவதில்லை. இதே போல் ஒரு துறை சார் அனுபவத்தையும் இயந்திரத்தனமாக சிந்தனையில்லாமல் தொடர்ந்து செய்து வந்தால் அது எப்படி அனுபவமாகும்?

எல்லாருக்கும் நடப்பதற்கான படிப்பினை சிறு வயதில் தொடங்கி முடிந்து விடுகிறது. அதன் பிறகு அது பற்றி அநேகர் சிந்திப்பதில்லை. ஆனால் ஒலிம்பிக் நடை போட்டியில் தங்கத்திற்காக போட்டியிடுபவர்களுக்கும், ராம்பில் நடக்கும் தொழில் ரீதியான மாடல்களுக்கும் நடைப்பயிற்சி மிக முக்கியம். அவர்கள் தொடர்ச்சியான பயிற்சி மூலமும் அனுபவத்தின் மூலமும்  நடப்பதில் அனுபவசாலி ஆகிறார்கள். ஒலிம்பிக் நடை போட்டிக்கு தயார் ஆகிறவர் மூன்று மணி நாற்பத்து இரண்டு நிமிடங்களில் 50 கி.மீ நடக்க வேண்டும் என்ற டார்கெட்டில் நடக்கிறார் என்றால்,  நடையின் வேகம், உடல் வலிமை என்ற ரீதியிலும், முதல் ஒரு மணி நேரம் நடுவில் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி ஒரு மணி நேரம் என்றும் அலசப்படுகிறது. கடைசியில் சோர்ந்து போகிறவர்களுக்கு அதிகப்படியான தாக்குப் பிடிக்கும் திறனுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  கற்றுத்தேர்வதற்க்கான பல விஷயங்கள் கொண்ட நடைப்பயிற்சியாக ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு தென்படும் நடை அனுபவம் நம்மில் அநேகர்களுக்கு இயந்திரத்தனமாக / சிந்தனையில்லாமல் செய்யும் சாதாரணமான ஒன்றாக இருப்பதாக குறிப்பிடும் சந்திரமௌலி ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் பணிபுரிவதாலேயே நீங்கள் அத்துறையின் வித்தகராக முடியாது என்கிறார்.( Catalyst  என்ற புத்தகத்தில் சந்திரமௌலி புரமோஷன் பற்றிய பல விஷயங்களை விரிவாகப் பேசுகிறார். முடிந்தால் படியுங்கள்).
 நான் இதை வேறு இரு நபர்கள் மூலம் சொல்வதுண்டு. ஒரு அரசியல் தலைவர், கட்சி ஆரம்பிக்கிறார். மிக கடுமையான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து 21 ஆண்டுகளுக்குப் பின் கட்சி, ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது. இந்த 21 ஆண்டு காலமும் தலைமைக்கு மிக அருகில், கிட்டத்தட்ட தலைவருக்கு அடுத்ததாக ஒருவர் இருக்கிறார். வெறும் வருடங்களை மட்டும் கணக்கில் கொண்டால் தலைமை அருகிலேயே எப்போதும் இருக்கும் அவருக்கு அனுபவம் அதிகம். ஆட்சியில் அமர்ந்த பின் தலைவருக்கு உடல் நலம் குன்றி இறந்துவிடுகிறார். அப்போது, அடுத்த தலைவர் யார் என்ற போட்டி.

அனுபவத்தில் (வருடக்கணக்கில்) குறைந்த ஒருவர், அனுபவத்தில் மிகுந்த அவரை தோற்கடிக்கிறார். வயதிலும் அனுபவத்திலும் உயரமான நாவலர்
நெடுஞ்செழியனை, கலைஞர் கருணாநிதி தோற்கடித்த இந்த கதை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்தப் போட்டிக்கு முன்பே ஒரு ஒலிம்பிக் நடைப்பயிற்சி போட்டியாளரைப் போல் பயிற்சி பெற்ற கருணாநிதியால் தோற்கடிக்கப்பட்ட நெடுஞ்செழியன் அதன் பின்னும் தன் அனுபவத்தையோ ஆளுமையையோ பெருக்கிக் கொள்ளவில்லை.

3 பிப்ரவரி 1969 - 10 பிப்ரவரி 1969 வரை எட்டு நாட்கள் தற்காலிக முதல்வராக இருந்த நெடுஞ்செழியனுக்கு மற்றொரு கட்சியில் 18 ஆண்டு காலம் கழித்து மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் ஆளுமையை பெருக்கிக் கொள்ளாததால் 24 டிசம்பர் 87 - 7 ஜனவரி 88 வரை 18 நாட்கள் தற்காலிக முதல்வராக இருந்து விட்டுப் போனார். நெடுஞ்செழியனின் இந்த  26 நாட்கள், வாழ்க்கையில் முன்னேற வெறும் ஆண்டுக்கணக்கிலான அனுபவம் மட்டும் போதாது என்பதை திடமாக உரைக்கிறது.

ஒருவர் அனுபவசாலி என்பதற்கான முக்கியமான அளவீடாக காலங்காலமாக பார்க்கப்படுவது அதிகப்படியான பங்களிப்பும்(Increasing Productivity) எல்லா சூழல்களையும் சமாளிக்கும் திறனும் தான். இந்த இரண்டையும் சொந்த அனுபவங்களால் மட்டுமே பெற முயற்சிப்பது கடினமானது, ஆனால் புத்தக வாசிப்பு மூலம் இந்த திறன்களைப் பெற முடியும்.

வாழ்க்கையில் சிலர் முக்கியமான வெற்றியாளர்களை சார்ந்து உயர்வுகளை பெற்றுள்ளனர். அண்ணாதுரையையும் எம்ஜிஆரையும் நம்பி அவர் பின் சென்றவர்கள் அடுத்தடுத்து உயரங்களை அடைந்தனர். இதுபோன்ற சார்பு வெற்றிகளை பதவி உயர்வுகளை கார்ப்பரேட் உலகில் அடிக்கடி பார்க்கலாம். பல நேரங்களில் இது ஆபத்தானதாகவும் அமைவதுண்டு. ஈ வி கே சம்பத் மற்றும் வைகோவை பின் தொடர்ந்தவர்கள் நிலையை நினைத்துப் பார்க்கவும்.

அடுத்தடுத்து வாழ்க்கையில் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியை பலமுறை எதிர்கொண்டாயிற்று. மிகவும் சிக்கலான கேள்வி. பதிலை சுருக்கமாக யாராலும் சொல்ல இயலாது. ஆனால் உயரத்தின் தொடக்கப்புள்ளி எதுவென்று சொல்ல முடியும். அதிர்ஷ்டத்தை,அடுத்தவர்களை, சூழல்களை குறை
சொல்வதை விட்டுவிட்டு " I am willing' என்று செயல்பட ஆரம்பித்தால் உயரங்கள் சாத்தியம்.

 Fate leads the willing and drags along the reluctant – Seneca (Roman Philosopher). வாழ்த்துகள், நீங்கள் விரும்பி உழைத்தால் உயரம் வசமாகும்.

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்

ஜூலை, 2019 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com