தூக்குமேடை போராளிகளின் இறுதி மூச்சில் பிறந்தது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தூக்குமேடை போராளிகளின் இறுதி மூச்சில் பிறந்தது
Published on

நாடுகளின் இயல்புக்கேற்பவே, கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிறப்பெடுக்கின்றன. தலை மறைவு வாழ்வில், காடுகளிலும் மலைக் குகைகளிலும். சில நாடுகளில் இவை பிறந்துள்ளன. சிறைச்சாலையின் இருண்ட அறைகளில் வேறு நாடுகளில் கம்யூனிஸ்டு கட்சி பிறந்துள்ளன. சில தருணங்களில் தூக்கு மேடை பேராளிகளின் இறுதி மூச்சு, காற்றில் கலந்து மக்களிடம் வந்து சேர்ந்து பின், கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கியுள்ளன.

எந்த ஒரு நாட்டிலும் ஆதிக்கமும் செல்வாக்கும் படைத்த சக்திகளின் அரவணைப்பில் கம்யூனிஸ்டு கட்சிகள் பிறந்ததில்லை. பிறக்கவும் முடியாது. அடக்குமுறையையின் கொடுமைகளை எதிர்த்து, வீரியம் கொண்ட விதைகளாகவே கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றங்கள் நிகழ்கின்றன. புயற்காற்று, பூகம்பங்கள், எரிமலை என்று அனைத்தையும் எதிர்த்து, இந்த விதைகளால் தன் முளைப்பு திறனைக் காட்ட முடிகிறது. இதுதான் கம்யூனிஸ்டு கட்சிக்கும் மற்றக் கட்சிகளுக்கும் அடிப்படையில் அமைந்த வேற்றுமையாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவ்வாறே இந்திய மண்ணில் தோன்றியது.

பம்பாயின் கவர்னர் வெலிங்டன் 1918 ஆம் ஆண்டில் கீழ்க்கண்டவாறு கூறினார். ‘காந்தியை என்னால் ஒரு நேர்மையானவர் என்று ஏற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள் மிக மிக அபாயகரமானவர்கள். இவர்கள் கருணையில்லாமல் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கொள்கையைத்தான், பிரட்டிஷ் அரசும் இந்தியா முழுவதிலும் தன்  கொள்கையாகக் கொண்டிருந்தது.

இந்த சுதந்திரப் போராட்டத்தின் அர்ப்பணிப்பு மிக்க தலைமகன் பகத்சிங் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்று அறிவித்துக் கொண்டவன். ரஷியப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்டுகளாக தங்களை அறிவித்துக் கொண்டவர்கள், நாற்பதுக்கும் குறைவான வயதைக் கொண்டவர்களாகவே இருந்தனர். இந்தியாவில் சித்தரவதை சிறைகள் எங்கெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அந்தமான் சிறைச்சாலைகளிலும் சிலர் இருந்தனர். இந்தப் பின்னணியில் 1925 ஆம் ஆண்டு கான்பூர் நகரில், டிசம்பர் 26,27,28 ஆகிய மூன்று நாட்கள் மாநாடு பெற்றது. இதுதான் முதல் மாநாடு.

இதற்கு முன்னர் கம்யூனிஸ்ட கட்சியைத் தொடக்குவதற்கென்று பல்வேறு முயற்சிக்ள நடை பெற்றன என்பதும் உண்மைதான். இந்தியாவிற்கு வெளியே சோவியத் ரஷ்யா தாஷ்கண்டிலேயே 1920 ஆம் ஆண்டில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கம்யூனிஸ்டுகளை அடக்குவதற்கு சதிவழக்குகளை ஒரு முக்கியமான ஆயுதமாக பிரிட்டன் பயன்படுத்திக் கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்ற பல்வேறு சதி வழக்குகள் போடப்பட்டன. தமிழ்நாட்டிலும் சென்னை சதி வழக்கு, மதுரை சதிவழக்கு, கோவை சதிவழக்கு இராமநாதபுரம் சதி வழக்குகள் போடப்பட்டன. கொடிய அடக்குமுறை போர்க்குணம் கொண்ட தலைவர்களை சிறைச் சாலைகளில் உருவாக்கின. இத்தகைய ஆரம்ப கால முயற்சிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர் ஒருவருக்கு முக்கியமான பங்குண்டு. சிந்தனை சிற்பி சிங்காரவேலர். இவர் கான்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

சென்னையில் மீனவர் குடும்பத்தில் பிறந்த இவர், வழக்கறிஞர். அந்த காலத்தில் வேறு யாருரிடமே இல்லாத நூல்கள் அடங்கிய நூலகம் இவரிடமிருந்தது. தொழிலாளர் விவசாயிகள் கட்சி ஒன்று, 1923 ஆம் ஆண்டில் சென்னையில் இவரால் தொடங்கப்பட்டது. விஞ்ஞானப் பூர்மான கொள்கைகளை பிரசாரம் செய்யும் ‘தொழிலாளி' என்னும் பத்திரிகையையும் இதே ஆண்டில் இவர் தொடங்கியிருந்தார்,

பிரிட்டன் இந்தியாவை அடிமைபடுத்தியிருந்தது என்ற போதிலும் அதன் தொழிலாளர் வர்க்கமும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சியும் முதலில் இந்தியாவிற்கு பூரண விடுதலை தர வேண்டும் என்பதை முன் வைத்திருந்தன. 1922 ஆம் ஆண்டு கயாவில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. துண்டறிக்கை ஒன்று ரகசியமாக, பிரதிநிதிகள் பலரின் கைகளுக்கு சென்றிருந்தது. இந்தியாவிற்கு பூரண விடுதலை கோரும் தீவிர முழக்கம் இதில் இருந்தது. இதே கருத்தை சிங்காரவேலர் மாநாட்டில் உணர்ச்சி பொங்க முன் மொழிந்தார். காங்கிரஸ் இயக்கம் பிறகு தங்கள் கொள்கையாக பூரண விடுதலை என்பதை ஏற்றுக் கொண்டது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைக்கும் பல போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சி முன்நின்று நடத்தியது. காந்தியடிகள் அமைதியான வழியில் சுதந்திர போராட்டம் என்று அறிவித்திருந்த போது, கம்யூனிஸ்டு கட்சி தீவிர மக்கள் போராட்டத்தைக் கையிலெடுத்திருந்தது. இதில் 1946 ஆண்டு நடைபெற்ற இந்திய கப்பற்படை எழுச்சி குறிப்பிட்டு சொல்லத்தக்கதாகும். பிரிட்டிஷ் இந்திய கப்பற்படையில் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, காங்கிரஸ் கொடி,கம்யூனிஸ்டு கொடி, முஸ்லிம் லீக் கொடி மூன்றும் ஏற்றபட்டன. காந்தியடிகளின் போராட்டம் வலிமை கொண்டது என்றாலும், பம்பாய் கப்பற்படை எழுச்சி இந்தியா இனிமேல் ஆளமுடியாது என்ற உண்மையை ஆங்கிலேருக்கு உணர்த்தி விட்டது.

இதைப் போலவே தெலுங்கானாப் போராட்டம் ஒரு வீரம் செறிந்தப் போராட்டம். நிஜாம் ஹைதராபாத்தை, இந்தியாவுடன் இணைக்க மறுத்தார். தெலுங்கானா 1947 முதல் 1951 வரை தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகள் கட்டுப்பாட்டில் இருந்தது.  நான்காயிரம் கிராமங்களில் இருந்த 12 லட்சம் ஏக்கர் நிலமும் நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கை நான்காயிரம் பேர்.

இந்தப் போர்க்குணத்தால் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சியாக தோற்றம் பெற்றது. தமிழகம் உள்ளிட்ட ‘மெட்ராஸ் ராஜதானி'யில். ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணிக்கையைப் பெற்றிருந்தது. கம்யூனிஸ்ட் கூட்டணியை உடைத்து, ராஜகோபாலாச்சாரி அவர்களை குறுக்கு வழியில் முதலமைச்சராக பொறுக்க வைத்தார்கள். கேரளத்தில் தனித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

பெற்ற சுதந்திரத்தின் பலன்கள் எளிய மக்களுக்கு பயன்பட வேண்டும். அவை முதலாளிகளுக்குச் சென்றுவிடுவதை தடுக்கும் போராட்டத்தை கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக முன்னெடுத்தது. நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் கம்யூனிஸ்டுகள் நடத்திய இயக்கங்கள் எண்ணிலடங்காதவை. சுயசார்பு வளர்ச்சியைக் கவனப்படுத்துவதற்கு அரும்பாடு பட்டது கம்யூனிஸ்டு கட்சி.

நில உச்சவரம்பு, கறுப்புப் பணத்தை கைப்பற்றும் சட்டம், விலை உயர்வு, வேலையில்லா திட்டம், எளிய மக்களுக்கான கல்வி போன்ற அனைத்தையும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வர தொடர்ந்து போராடியுள்ளது. சுயசார்புக்கு வித்திட்டவை ஐந்தாண்டு திட்டங்கள். ஆனால் இவை ரத்து செய்யப்பட்டன.  கார்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அமைப்பாக ‘நிதி அயோக்' உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம், திருச்சி பாய்லர் தொழிற்ச்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, சேலம் இரும்பு சுரங்கம், ஆகிய தொழிற் வளர்ச்சிக்கான ஆய்வுகளை நடத்தி அதை நிறைவேற்ற கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்கெடுத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று கூட நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் கம்யூனிஸ்ட் எண்ணிக்கை குறைவதைக் கம்யூனிஸ்டுகளின் அழிவாக சிலர் முன் வைக்கப் பார்க்கிறார்கள். உண்மையில் கம்யூனிஸ்ட் கருத்துகள் இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட வில்லை. செல்வாக்குப் பெற்று வருகிறது என்பதை நடைமுறை அனுபவங்கள் மெய்ப்பிக்கின்றன.

மோசடி மிக்க கார்ப்பரேட் முதலாளித்துவத்தை எதிர்ககும் சிறந்த கருவிகள் மார்க்சியத்தில் தான் இருக்கிறது என்பதை இன்றைய அறிவுப் பூர்வமான இளையத் தலைமுறை உணரத் தொடங்கியுள்ளது. 1960 முதல் 1990 வரையுள்ள காலத்தை கெடுபிடி யுத்தக் காலம் ( cold war period) என்கிறார்கள். பல்வேறு காரணங்களால் இந்த காலத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் பிரிந்தன. இப்பொழுது நடைபெறுவது கார்பரேட் உலகமயம் (corporate globalisation). இது உலகம் முழுவதும் இடதுசாரிகள் ஒன்றுபடுவதை வலியுறுத்துகிறது.

கார்பரேட் உலகமயத்திடம் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் தவிர வேறு எதுவுமே மிச்சமாக இல்லை. வாக்குரிமை, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் சந்தையின் விற்பனைச் சரக்காக மாற்றி விட்டன. இந்திய பணக்காரர்கள், உலக பணக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். உலகத்திலேயே அதிக ஏழைகள் உள்ள நாடாக இந்திய மாறிக் கொண்டிருக்கிறது. ஏன்? ஒரு சார்பு செல்வக் குவிப்பை தடுத்து வளத்தையும் நாட்டு மக்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கும் ஆட்சி அமைப்பு முறை இல்லாதது தான் காரணம். இதற்கான கொள்கைகள் கம்யூனிஸ்டு கட்சிகளிடம் உண்டு என்றாலும், இதனை காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்துக் கொள்வது இன்றைய உடனடித் தேவையாகும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com