எம்.ஜி.ஆர் விகடனில் எழுதிய தன்னுடைய சுய சரிதையான “நான் ஏன் பிறந்தேன்” தொடரில், தன் வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படுத்திய படங்களாகப் பத்துப் பதினைந்து படங்களைத் குறிப்பிட்டிருப்பார். தனது முதல் படமான ராஜகுமாரி, மருத நாட்டு இளவரசி, நாடோடி மன்னன், திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, எங்க வீட்டுப் பிள்ளை, ஒளி விளக்கு, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன் என்று போகும் அந்தப் பட்டியல். இது அவர் 72-73 வாக்கில் எழுதிய தொடர். மேலே சொன்ன படங்கள் எல்லாமுமே எம்.ஜி.ஆரின் வசூல் சாதனை புரிந்த படங்கள்தான். இதில் இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன் போன்ற மிக அதிக வசூலைக் குவித்த படங்கள், தொடர் நின்ற பின் வந்தவை எனவே அவர் அதை அவர் குறிப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கும் பட வரிசையில் அவர் ஏன் ‘மதுரை வீரன்’ படத்தைக் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை.அதுதான் தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் தமிழகமெங்கும் ஓடிய பின், ஒரு கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படம். 1956ல் ரூபாய் அணா பைசா காலத்தில் வந்து, 36 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது இத்தனைக்கும் இதில் கதைப்படி எம்.ஜி.ஆர் இறந்து விடுவார். அவர் இறப்பதாகக் காட்டிய வேறு எந்தப் படமும் ஐம்பது நாட்கள் கூட ஓடியதில்லை. மதுரை வீரன் பெங்களூர், இலங்கை போன்ற இடங்களிலும் 100 நாட்கள் ஓடியது. மதுரை சென்ட்ரல் திரை அரங்கில், வெள்ளி விழாவும் தாண்டி (200 நாட்கள்) ஓடியதாகச் சொல்லுவார்கள். அதே போல் எம்.ஜி.ஆர் படங்களிலேயே அதிகமாக, 350 நாட்கள் ஓடிய படம் என் தங்கை படம் என்பார்கள். 1952ல் வந்த படம். வசூல் விபரம் தெரியவில்லை. அண்ணன் தங்கை பாசமலர் கதைகளின் மூல விதை இது.
மதுரை வீரனைத் தொடர்ந்து 1958இல் வெளியான நாடோடி மன்னன் படம் அடுத்து பல சிகரங்களைத் தொட்டது. மதுரையில் ஆசியாவிலேயே பெரிய தியேட்டரான தங்கம் தியேட்டரில் வெளி வந்தது. அங்கே முதல் நான்கு வாரங்களில் வசூல் ஒரு லட்ச ரூபாயினைத் தாண்டியது. வேறு எந்தப் படமும் அது வரையில் எங்கும் ஒரு தியேட்டரில் நான்கு வாரங்களில் ஒரு லட்சம் வாரிக் குவிக்கவில்லை. இதற்கான விளம்பரம் அன்றைய நாளிதழ்களில் கால் பக்கத்திற்கு வெளியானது. 13 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதுவும் தமிழகம் எங்கும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலைக் குவித்தது. பல ஊர்களிலும் வெற்றி விழா நடந்தது. சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையிலும், வேலூரில் கலைஞர் தலைமையில் விழாக்கள் நடந்தன. மதுரையில் நடை பெற்ற விழாவில் மதுரை முத்துவின் ஏற்பாட்டின் பேரில், பிரம்மாண்டமான ஊர்வலத்திற்குப் பிறகு 110 சவரன் எடையுள்ள தங்க வாள் பரிசளிக்கப்பட்டது. அண்ணா வழங்கினார். அதே முத்து, எம்.ஜி.ஆரை தி.மு.கவிலிருந்து விலக்க முன்னிலையில் நின்றதும் பிறகு அவரே அண்ணா தி.மு.கவில் சேர்ந்து மதுரை மேயரானதும், அதை நினைவு படுத்தும் முகமாகவே எம்.ஜி.ஆர் தனது (கடைசிப்) படத்திற்கு ’மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ என்று பெயரிட்டதும் பிந்திய வரலாறுகள்.
அவரது அடுத்த முக்கியமான திருப்பம், திருடாதே. 1959 இல் அவரது கால் ஒடிந்து ஓய்வில் இருந்தார். 1959இல் படமே இல்லையென்று போய்விடக் கூடாது என்பதற்காக கடைசி நாளான டிசம்பர் 31ம்தேதி தாய் மகளுக்குக் கட்டிய தாலி வந்தது. படம் படு தோல்வியைக் கண்டது. எம்.ஜி.ஆருக்கும் சமூகப் படத்திற்கு ஒத்து வராது, அத்தியாயம் முடிந்தது என்றார்கள். அடுத்து வந்த ஐந்து படங்களும் ராஜா ராணிக் கதைகள். அவை ஓடவில்லை. 1961 மார்ச்சில் திருடாதே வந்தது. அதுவும் பாவ மன்னிப்பு வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு வார இடைவெளியில் வந்தது. எம்.ஜி.ஆர் பேண்ட்டும் சட்டையும் போட்டு ஜெயிக்கவா என்ற நினைத்த நேரத்தில் படம் படு ஹிட் ஆனது. ‘பேசும் படம்’ அப்போதைய இதழில் ஒரு கேள்வி பதிலில், “பாவமன்னிப்பு, திருடாதே இரண்டில் எது சிறந்த படம்” என்ற கேள்விக்கு, “கருத்தில் பாவமன்னிப்பு, வசூலில் திருடாதே” என்று பதில் அளித்திருந்தது. எம்.ஜி.ஆர்.- சிவாஜி ரசிகர்களின் நாடோடி மன்னன் -உத்தமபுத்திரன் சண்டைகள், திருடாதே - பாவ மன்னிப்பு சண்டைகள் என புதுப்பிக்கப்பட்டன. அடுத்து வந்த சபாஷ் மாப்பிள்ளேயில் எம்.ஜி.ஆரின் நடிப்பை குமுதம் இதழே பாராட்டி இருந்தது. (எம்.ஜி.ஆர் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு விட்டார், தனக்கு நடிக்கத் தெரியாது என்று சொன்னவர்களின் தலையில் என்று எழுதியிருந்தார்கள்). அந்த வருடத் தீபாவளி, சமூகப்பட எம்.ஜி.ஆருக்கு தலைத் தீபாவளி. தாய் சொல்லைத் தட்டாதே வெளிவந்து சக்கைப் போடு போட்டது. பந்துலு கஷ்டப்பட்டு உருவாக்கிய கப்பலோட்டிய தமிழன் படத்தைக் காணாமல் ஆக்கி விட்டது. அதே போல 1964 பொங்கலுக்கு வந்த கர்ணன் படத்திற்கு எதிராக வந்த வேட்டைக்காரனின் சினிமாத் துப்பாக்கி முன்னால் கர்ணனின் வில் வித்தை எடுபடவில்லை. கர்ணனுக்கான செலவில் பத்தில் ஒரு பங்கு கூட தேவர் செலவழித்திருக்க மாட்டார். ஆனால் அதை விட நாலு மடங்கு பணம் பார்த்திருப்பார். திருநெல்வேலியில், முதன் முறையாக கர்ணன் இரண்டு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 15, 16 நாட்கள் ஓடி ஒரு லட்சம் வசூல் ஆனது. அதே நாட்களில் வேட்டைக்காரன் ஒரே தியேட்டரில் 84,000 ரூபாய் வசூல் ஆனது.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய வருடம் 1965. படம் தயாரிப்பில் இருக்கையில், விஜயா புரொடக்ஷனின் ’பெயரிடப் படாத பட’த்தில் இந்தக் காட்சி என்று ஸ்டில்கள், செய்திகள் வந்து கொண்டிருந்த படத்திற்கு, 1964 உள்ளாட்சித் தேர்தலில் பிரபலமான தி.மு.க வினரின் வாசகமான ‘உங்கள் வீட்டுப் பிள்ளை” -க்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்பதிலிருந்து படத்தின் தலைப்பை எடுத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படியே வைக்காமலும், பேச்சு வழக்கில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்று வைத்தார். இதுதான் அவரது சாமர்த்தியம். படம் பார்த்தவர்களிடமெல்லாம், அவர்‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்ற உணர்வை உண்டாக்கினார். மதுரை வீரன் வந்து 9 வருடங்களுக்குப் பின் 15 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேலும், 6 தியேட்டர்களில் வெள்ளி விழாவும் ஓடியது. 100 வது நாளுக்கு தியேட்டர் வாரியாக வசூல் விளம்பரம் முழுப் பக்கம் தந்திப் பேப்பரில் வெளியிட்டார்கள். அந்தப் பேப்பர் இன்றும் ஒரு அபூர்வ சேமிப்பு- Collector's Item. அதே போல திருவிளையாடலுக்கும் விளம்பரம் வந்தது. அந்த விளம்பரங்கள் வந்த இரண்டு பேப்பர்களையும் கேடயமாக வைத்து அடுத்த சண்டை நடந்தது. எங்க வீட்டுப் பிள்ளை சென்னை உள்ளிட்ட முக்கியமான 13 முதல் வெளியீட்டு நகரங்களில் மட்டும் 36 லட்சம் வரை வசூலானது. தூத்துக்குடி மக்கள்திலகம் ரசிகர் மன்றம் (People star M G R fans association) தமிழ் நாட்டின் அனைத்து தியேட்டர் வசூலையும் வெளியிட்டு ஒரு எட்டுப் பக்கத்தில் புத்தகம் வெளியிட்டது. அதை வைத்திருக்கும் ரசிகன் இன்னொரு எம்.ஜி.ஆர். அதில் உள்ள சில வசூல்களை இப்படி நினைவு வைத்திருந்தோம், 3 - 13 - 23. அதாவது சென்னையில் மட்டும் 3 தியேட்டர்களில் 13, 23, 000- ரூபாய் மொத்த வசூல். திருநெல்வேலியில் ரூ1,61,000.
வசூல்ச் சண்டையின் உச்சம் எங்க வீட்டுப் பிள்ளை Vs திருவிளையாடல் சண்டை. அடுத்து வந்த ஆயிரத்தில் ஒருவன் இன்றைக்கும் வெள்ளி விழா ஓடும் ஒரு money spinner. ஆனால் அப்போது எ.வீ.பிள்ளையை எட்டவில்லை. அன்பே வா படமும் அப்படியே. 1968 பொங்கலுக்கு ரகசிய போலீஸ் 115 வந்தது. அதை இரண்டு தியேட்டர்களில் திரையிட்டார்கள். எங்களுக்கு காய்ச்சலே வந்து விட்டது. கர்ணன் படத்தின் இரண்டு தியேட்டர் வசூலை மிஞ்ச வேண்டுமே. நல்ல வேளையாக, கிட்டத்தட்ட 1000 ரூபாய் கூடி விட்டது. பொறுக்குமா, உடனே வசூல் நோட்டீஸ் அடித்தோம். “துள்ளி வருகுது புள்ளி விபரம் !! பகையே சுற்றி நில்லாதே போ !!!” என்று தலைப்பிட்டு, தாராளமாக ஆச்சரியக்குறிகள் விதைத்து நான் தான் மேட்டர் எழுதினேன். அன்றிலிருந்து, திட்டமிட்டு தகவல்கள் திரட்டி ஒளிவிளக்கு படத்திற்கு சாதனை மலர் அடித்தேன். எம்.ஜி.ஆருக்கும் அனுப்பினேன். அவர் பாராட்டி, நன்றிக் கடிதம் எழுதியிருந்தார். ஒளி விளக்கு 100 நாள் படம். சென்னையில் ஓடவில்லை மதுரை, திருச்சி, கும்பகோணத்தில் ஓடியது.
அடுத்த சாதனை அடிமைப்பெண். 14 தியேட்டர்களில் 100 நாட்களும் மதுரை சிந்தாமணியில் வெள்ளி விழாவும் ஓடியது. 100 நாட்கள் வரையிலான வசூலாக 34 லட்சம் வந்தது. இதற்கு இணையாக மாட்டுக்கார வேலன் ஓடியது. அது நாங்களே எதிர்பார்க்காதது. 14 தியேட்டர்களில் 100 நாட்கள். இது போக இலங்கையில் இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ( இலங்கை 1970 இல் எப்படி அமைதித் தீவாக இருந்திருக்கிறது!)
சென்னை, கோவை, மதுரை என மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா ஓடியது. காவல்காரன் வெற்றியை அடுத்து ரிக்ஷாக்காரன் தயாரித்தார் ஆர்.எம்.வீரப்பன். ரிக்ஷாக்காரன் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. சென்னையில் மட்டும் 16 லட்சம் வசூலானது. தமிழகம் எங்கும் 51 நாட்களில் 50 லட்சம் வசூல், அரசுக்கு வரி மட்டும் 20 லட்சம் என்று விளம்பரம் வந்தது.12 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியது.
அடுத்த சாதனையின் போது எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு அ.தி,மு.க உதயமாகிவிட்டது. எம்.ஜி.ஆரின் உச்ச பட்ச சாதனையான உலகம் சுற்றும் வாலிபன் வந்தது. சென்னையில் 67 நாட்களில் 201 காட்சிகளும் மதுரையில் 241 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி மாபெரும் சாதனை செய்தது. முன்பதிவு ஆரம்பித்த மூன்று மணி நேரத்தில் 100 காட்சிகளுக்கும் முன்பதிவு ஆனது. சென்னையில் 23 லட்சம் வசூலானது. 6 திரையரங்குகளில் வெள்ளி விழா ஓடியது. இதற்கு வந்த சோதனைகளையும் மீறி சாதனைகள் புரிந்தது. 40 திரையரங்குகளில் ஆறுமாதங்களில் அரசுக்கு கேளிக்கை வரி மட்டும் 1 கோடியே 35 லட்சம் கட்டியது. இதயக்கனி படமும் இதே அளவு சோதனைகளை மீறி சாதனைகள் செய்தது. 10 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. சென்னையில் மட்டும் 20 லட்சம் வரை வசூலானது. 75 நாட்களில் 15 லட்சம் வசூலும் 8 லட்சம் வரியும் குவித்ததாக விளம்பரங்கள் வந்தன. சென்னை வசூலில் மூன்றாவது இடம், அவர் முதலமைச்சர் ஆன பின் வந்த மீனவநண்பன். 17 லட்சத்திற்கும் மேலாக வசூல் ஆனது.
எம்.ஜி.ஆர் படங்களில் எம்.ஜி.ஆர் மட்டுமே இருந்தார். அவரது படங்களின் வெற்றி அதன் திரைக்கதையில்தான் இருந்தது. ஒரு படம் தயாராகும்போதே தெரிந்து விடும் அவருக்கு,அந்தப் படம் நன்றாக அமையும் என்று. அதற்கேற்றாற் போல திரைக்கதையையும், பாட்டு, சண்டைக்காட்சிகள் போன்ற விஷயங்களையும் அமைப்பார். அவர் ஒரு சிறந்த எடிட்டர். உ.சு வாலிபன் படத்தைப் பற்றி ‘பொம்மை’ சினிமா இதழில் நாகேஷ், எழுதியிருந்தார். “அவர், தாய்லாந்திலும் சரி, எக்ஸ்போ 70 கண்காட்சியிலும் சரி, எங்களை நீ அங்கே போ, இங்கே வா, உனக்குத் தோன்றிய அசைவுகளைச் செய், ஏதாவது பேசு என்பது போலச் சொல்லி விட்டு, காமிரா அருகே நின்று கொள்வார்.இது என்ன இவர் சினிமா எடுக்கிறாரா இல்லை டாகுமெண்டரி எடுக்காரா, அவ்வளவுதான் படம் பனால் என்று நினைத்தேன். ஆனால் எடிட்டிங் மேசையில் உட்கார்ந்து அதையெல்லாம் வெட்டி ஒட்டி, டப்பிங்கில் வசனங்களைப் பேச வைத்து ஒரு பிரமாதமான படமாக ஆக்கி விட்டார். மனதுக்குள்ளேயே படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார், சினிமாவில் அவர் மன்னன்தான்” என்று எழுதியிருந்தார். அதே பொம்மையில் எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பற்றி நடிகை லட்சுமி தமிழில் ஜனரஞ்சகப் படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். மாட்டுக்கார வேலன் படத்தையும் அவர் குறிப்பிட்ட நினைவு.
அப்போதைய சினிமாவும் மக்களும் வேறு. இவ்வளவு பணமும் சாமான்யனின் பணம். குருவி குருவியாகச் சேமித்தது. குருதிக் கொடை கொடுத்து சேமித்தது. அதிக பட்ச டிக்கெட்டே திருநெல்வேலியைப் பொறுத்து ரூ 3.46 பைசா. ஏ/சி பாக்ஸ் ரூ 4.20. பெஞ்சு டிக்கெட் 31 புதிய காசுகள். ஒரு முறுக்கின் விலை மூன்று பைசா. காளி மார்க் கலர் 25 நயா பைசா, கடலை மிட்டாய் 2 பைசா. அதில் வந்ததுதான் இந்தக் கோடிகள். பணம் மட்டுமல்ல விஷயம், கோடிக்கணக்கான மக்களின் எங்க வீட்டுப் பிள்ளையாக, இதயக்கனியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுதான் உண்மையான சாதனை.
குறிப்பு : 1971 க்குப் பிறகான சில தகவல்களை http://mgrroop.blogspot.in / என்ற வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுத்தாண்டிருக்கிறேன்.
நவம்பர், 2016.