துரியோதனன்

துரியோதனன்
Published on

எஸ்.ஏ.அசோகன்

நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிற எனது மூத்த தலைமுறை நடிகர்களில் அசோகனும் ஒருவர். அற்புதமான தமிழ் நடிகன். ஒரு நடிகனுக்கு முகம், உடல், நடிப்பு இது எல்லாமே அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கவேண்டியிருக்கிறதோ அது போல குரலும் நடிக்க வேண்டும். ‘மாடுலேஷன்’ என்பது ஒரு மொழியை ஒரு ரிதத்தோடு உணர்ச்சி கெடாமல் பேசுவது. அது அசோகனுக்கு சர்வ சாதாரணமாக கை வந்தது. ஒரு சாதாரண வசனம் கூட நல்ல நடிகரிடமிருந்து வெளிப்படும்போது அதனுடைய தன்மை நூறு சதவீதம் உயர்ந்துவிடுகிறது. ஒரு வசனத்தை இசை போல அவதானித்து அதை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் அசோகனிடம் உண்டு.

எனக்கு அவரின் உருவ அமைப்பு ரொம்ப பிடிக்கும். திரை வேறு வாழ்க்கை வேறு என்று தெரிந்த போதிலும் கூட வெள்ளித்திரைக்கு முன்னால் வந்து அமரும் மக்கள் தங்களை மறந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அப்போதைய நடிகர்கள் தங்களது திறமையால் கட்டிப்போட்டிருந்தார்கள். அதில் முக்கியமானவராக அசோகனைப் பார்க்கிறேன். அசோகன் வந்தாலே மக்கள் கோபத்தைக் காட்டுவார்கள். ஆனால் அதே சமயம் எல்லோருக்கும் பிடித்த வில்லனாக இருந்தார். ஒரு வில்லன் என்பவன் மக்களுக்கு பிடிக்கக் கூடியவனாக இருக்கக்கூடாது. இது தான் அடிப்படை. ஆனால் அசோ கன் போன்ற வில்லன் நடிகர்களை மக்கள் திரையில் வெறுத்தாலும் கூட, அடுத்து எந்த சீன்ல எப்ப வருவார் என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். ‘வந்துட்டானா..வாத்தியார என்ன பாடு படுத்தப் போறோனோ..’ என்று மக்கள் ஆராவாரம் செய்யக்கூடிய வில்லன்.

எனக்கு அசோகன் என்றால் பளிச்சென்று ஞாபகத்துக்கு வருவது ‘அடிமைப் பெண்’ படத்தில் வருகிற சண்டைக்காட்சி. எம்ஜியாரும், அசோகனும் காலைக் கட்டிக் கொண்டு ஒற்றை காலால்  நின்று சண்டை போடுகிற காட்சி.

‘கர்ணன்’ படம் என்று சொல்லுகிறபோதே நமக்கு நினைவுக்கு வரும் ஒரு காட்சி. அந்தப் படத்தின் ஒட்டுமொத்த மையப்புள்ளியை அந்தக் காட்சி தான் சுமந்துகொண்டிருக்கும். கர்ணன், துரியோதனின் மனைவியோடு  தாயமாடிக்கொண்டிருக்கும்போது, துரியோதனன் அங்கு வருவான். கணவனைப் பார்த்ததும் மனைவி எழுந்து நிற்க, நிலைமை தெரியாமல் கர்ணன் அவள் உடையைப் பிடித்து இழுக்க அவள் ஆடையிலிருந்து முத்துக்கள் சிதறி ஓடும். ரொம்ப தர்மசங்கடமான நிலை. துரியோதனனாக அசோகன் நடித்திருப்பார். நன்றாக கவனிக்க வேண்டும். இதுவரை அவரை மக்கள் வில்லனாகவே பார்த்திருக்கிறார்கள். மகாபாரதத்தைப் பொறுத்தவரை துரியோதனன் கதாபாத்திரமும் வில்லன் பாத்திரம் தான். நண்பன் மீதும், மனைவி மீதும் கொஞ்சமும் சந்தேகம் வராதபடிக்கு நிலைமையை புரிந்துகொண்டேன் என்பதை சகஜமாக காட்டிக் கொள்ள வேண்டும். வேறெந்த உணர்ச்சியை முகத்தில் காட்டியிருந்தாலும் ஒரு நடிகனுக்கு சறுக்கி விடக்கூடிய இடம் அது. மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் அசோகன். எப்படி கர்ணன் என்றால் சிவாஜி நினைவுக்கு வருகிறாரோ, அதே போல் துரியயோதனன் என்றால் அசோகன் முகம் தானே ஞாபகத்திற்கு வருகிறது.

அதே போல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம். அதில் எம்ஜியாருக்கு முருகன் என்று பெயர். மஞ்சுளாவோடு எம்ஜியார் உலகம் முழுக்க சுற்றி வருவார். படத்தின் வில்லன் அசோகன். அதில் ஒரு வசனம் வரும், “முருகன் காதலியோட உலகம் முழுக்க சுத்தறான்.. நான் காரியத்தோட முருகனை சுத்தறேன்..” அதை அவர் சொல்கிறபோது அந்த வசனத்துக்கு கூடுதல் அழுத்தம் கிடைத்துவிடும்.

‘உயர்ந்த மனிதன்’ சிவாஜி நடித்த படம். அந்தப் படத்தில் அசோகனுக்கு டாக்டர் வேடம். காதலி பிரிந்து போன துக்கத்துல இருப்பாரு சிவாஜி.

உடனே அசோகன், சிவாஜியோட துக்கத்தை மட்டுப்படுத்துவதற்காக , ‘உனக்கு முன்னால நான் தாண்டா அவளை காதலிச்சேன். நீ காதலிச்சதுனால நான் விட்டுக்கொடுத்துட்டேன்’ அப்படீங்கற மாதிரி சொல்லுவாரு. அந்தக் காட்சியில அவரோட நடிப்புத் திறமை ரொம்ப இயல்பா வெளிப்படும்.

‘அன்பே வா’ படம் அவருடைய சா துரியமான நடிப்பு வெளிப்பட்ட படம். பொதுவா எம்ஜியார் படங்கள்ல அசோகனுக்கு வில்லன் கதாபாத்திரம் தான். அந்தப் படத்துல எம்ஜியார் சரோஜாதேவிய காதலிப்பாரு. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது தான் சரோஜாதேவிக்கு அத்தான் ஒருத்தர் இருக்க வர்றது தெரிய வரும். அந்த அத்தான் யாருன்னா நம்ம அசோகன். கடைசி நேரத்துல வாத்தியாருக்கு எதிரா வந்துட்டான் அப்படின்னு தான் பார்வையாளர்கள் நினைச்சாங்க. ஆனா, அந்தப் படத்துல அவர் யாரும் எதிர்ப்பாராத ஒரு கதாபாத்திரத்துல நடிச்சாரு. இன்னிக்கு எல்லாரும் சொல்றாங்களே, ‘இன்டெலக்சுவல் ஆக்டிங்’, ‘ண்தஞtடூஞு ணீடூச்தூ’ இதையெல்லாம் நாம அந்தப படத்துல அசோகன் நடிப்புல பாக்க முடியும்.

ஒரு வில்லனா மட்டுமல்லாம, நண்பனா, அண்ணனா, அப்பாவா , நகைச்சுவை நடிகராவும் அவரால திறமைய வெளிப்படுத்த முடிஞ்சது.

இன்னொன்னு நாம முக்கியமா பார்க்க வேண்டிய விஷயம். அவர் சினிமால நடிக்க வரும்போது ஏற்கனவே பெரிய ஜாம்பவான்கள்லாம் இருந்தாங்க. ஏழு, பத்து வயசுல இருந்து நாடக் கம்பெனில தொடர்ந்து நடிச்சவங்க தான் சினிமாக்குள்ள வர முடியும். ஆனா அந்தக் காலத்து நடிகர்கள்ல காலேஜ் போய் படிச்சு பட்டம் வாங்கிட்டு வந்து நடிச்ச நடிகர்கள் ரெண்டு பேர். ஒண்ணு ஜெய்ஷங்கர். இன்னொன்னு அசோகன். பட்டப்படிப்பு படிச்சவங்களே அபூர்வமா இருந்த காலகட்டத்துல, சினிமாவுக்காக எதிர்காலத்தை பணயம் வெச்சதுனால கூடுதலா எனக்கு அசோகனைப் பிடிக்கும். எல்லாரும் நடிக்க வந்துட்டு பட்டம் வாங்குவாங்க. இவர் பட்டம் வாங்கிட்டு நடிக்க வந்தவர். 

(ஜா.தீபாவிடம் கூறியதிலிருந்து)

ஜூன், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com