இக்கட்டுரையை 1894ல் இருந்து தொடங்குவோம். அந்த ஆண்டுதான் தமிழ் நாவல் உலகில் முதல் துப்பறியும் நாவல் எனக் கொள்ளத்தக்கதாக கருதப்படும் “தானவன் என்னும் போலீஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்” என்ற துப்பறியும் புதினம் பண்டித எஸ்.எம். நடேச சாஸ்திரி (1869 - 1906) என்பரால் எழுதப்பட்டது. தமிழில் துப்பறியும் புதினம் என்ற வகைக்கு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கோலோச்சிய ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார் (திகம்பர சாமியார் பாத்திரம்), ஜே. ஆர். ரங்கராஜு (துப்பறியும் கோவிந்தன்) ஆகியோருக்கு ஒரு உறுதியான அஸ்திவாரமாக அமைந்த இக்கதையில் தானவனுக்கு துணையாக ஒரு போலீஸ் அதிகாரியும் இருந்தார்.
ஆரம்பத்தில் தமிழில் துப்பறியும் நாயகர்கள் ஆதர்ச புருஷர்களாக, ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பத்துடன் வராமல், சராசரி மனிதர்களாக படைக்கப்பட்டதற்கு துப்பறியும் சாம்பு ஒரு முக்கிய காரணம். ஆகஸ்ட் 30, 1942 ஆனந்த விகடன் இதழில்தான் தேவனின் துப்பறியும் சாம்பு முதன்முதலில் வாசகர்களை சந்தித்தார். எழுத்தாக மட்டுமே இருந்த சாம்புவுக்கு உருவம் கொடுத்தவர் ராஜூ.
வங்கி குமாஸ்தாவாக இருந்து பின்னர் தனியார் துப்பறிவாளராக மாறும் சாம்பு, புறா உட்கார பலாப்பழம் விழுந்ததைப்போல எதேச்சையாக பல விஷயங்களை கண்டுபிடிப்பார் (எவ்வளவு நாளுக்குத்தான் காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததையே உதாரணமாக சொல்வது?). தேவன் 1957ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்பாக மொத்தம் 50 + 1 கதைகளை சாம்புவை வைத்து எழுதி இருந்தார்.
சாம்புவின் மனைவி பெயர் வேம்பு. இவருக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலனும், சி.ஐ.டி சந்துருவும் இந்த கதைத்தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள். சாம்பு தொலைக்காட்சி தொடராகவும் ரசிகர்களை மகிழ்வித்தார்.
சாம்புவுக்கு பின்னர் ஐம்பதுகளின் மத்தியிலும், அறுபதுகளிலும் சிரஞ்சீவி, மேதாவி, சந்திரமோகன், பி.டி.சாமி போன்றவர்கள் மர்ம நாவல்களையும், பேய் கதைகளையும், கொஞ்சம் (கொஞ்சமா?) ஸ்ருங்காரம் சேர்த்து இளைஞர்களை வசியப்படுத்தி வைத்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாயகனையோ அல்லது துப்பறியும் ஜோடியையோ மையப்படுத்தி கதைகள் எழுதப்படவில்லை.
இந்த நேரத்தில் தான் தமிழக மக்களுக்கு ஹலோ சொல்ல வந்தார் சங்கர்லால். கல்கண்டு இதழின் ஆசிரியர் தமிழ்வாணன் படைத்த ஒரு அற்புத கதாபாத்திரம்தான் இவர். தமிழ் துப்பறியும் நாவல்களின் இரும்புக்கை மாயாவி இவர்தான். இவரால் கவரப்பட்டவர்கள் பலர். தமிழ்வாணன் சங்கர்லாலை மையமாக வைத்து மொத்தம் 23 நாவல்களை தொடர்ச்சியாக எழுதினார். ஹலோ சங்கர்லால்,
சங்கர்லால் வந்துவிட்டார், இருண்ட இரவுகள்,
சங்கர்லால் துப்பறிகிறார், பாரிசில் சங்கர்லால், செய்யாத குற்றம், செய்தவர் யாரோ?, இன்னொரு
செருப்பு எங்கே? என்று ஒரு தனி ராஜாங்கமே நடத்தினார் சங்கர்லால்.
சங்கர்லாலுக்கு கதையில் ஜோடி என்று யாரும் கிடையாது. தனி நபர் சம்ராஜ்யம்தான். இவரது மனைவியான இந்திரா பல கதைகளில் வந்துள்ளார். சில நேரங்களில் கதையில் சில சூட்சுமத்தை எப்படி கண்டறிந்தார் என்பதை வாசகர்களுக்கு விளக்க, இந்திரா ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டார்.
தேநீர் பிரியரான சங்கர்லால் எப்போதும் தேநீர் அருந்திக்கொண்டேதான் இருப்பார். இவரது தேநீர் தேவையை பூர்த்தி செய்பவர் மாது என்ற ஊழியர். இவரைத்தவிர கத்தரிக்காய், மாணிக்கம், அவரது மனைவி கல்பனா, மைனா ஆகியோர் சங்கர்லாலின் கதைவரிசையில் தொடர்ந்து வரும் கதாபாத்திரங்கள்.
சங்கர்லால் தன்னுடைய காலை மேசைமேல் குறுக்காக வைத்துக்கொண்டு தேநீர் அருந்தும் பாணியை ஒரு ஸ்டைலாக பாவித்த வாசகர்கள் எழுபதுகளில் பலருண்டு.
அசகாய சூரரான சங்கர்லாலை மறக்கடித்தவர் இன்னோரு துப்பறியும் கதாநாயகன். அவர் யாரென்று தானே யோசிக்கிறீர்கள்? அவர் வேறு யாருமில்லை, சாட்சாத் தமிழ்வாணன் அவர்கள் தான்.
தமிழ்வாணன் ஒரு சுபயோக சுபதினத்தில் சங்கர்லாலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தானே துப்பறிய ஆரம்பித்துவிட்டார். தமிழ்வாணனின் ரசிகர்கள் 1976 ஆம் ஆண்டு தீபாவளி இரட்டிப்பு போனஸ் கிடைத் ததைப் போல கொண்டாடினார்கள். அப்போதுதான் கல்கண்டின் அட்டையில் தமிழ்வாணனே துப்பறிகிறார் என்ற வாக்கியத்துடன் ஒரு தொடர் தமிழ்வாணனையே நாயகனாக கொண்டு ஆரம்பித்தது. ஆனால் அடுத்த வருடமே தன்னுடைய 56ஆவது வயதில் தமிழ்வாணன் இயற்கை எய்த, அவருடைய தொடர், சிற்சில கதைகளுடனே முடிவடைந்தது.
இதற்க்கு பிறகு 1986-87ல் லேனா தமிழ்வாணன் மறுபடியும் சங்கர்லால் அவர்களை நாயகனாக கொண்டு தொடர்கதையை எழுத ஆரம்பித்தார். ஆனால் அப்போது தமிழில் க்ரைம் நாவல் மோகம் உச்சத்தில் இருக்க, தூய தமிழ் பேசி, தேநீர் குடிக்கும் சங்கர்லால் பழசா கத் தெரிந்தார். ஆனால் இன்றளவிலும் மணிமேகலை பிரசுரத்தின் அதிக விற்பனையாகும் புத்தகப்பட்டியலில் முதலிடம் சங்கர்லாலுக்கே.
இதற்கிடையில் வேறு ஒரு துப்பறியும் ஜோடியும் தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அது நம்ம பெர்ரி மேசனும் உஷாதேவியும் தான். என்னடா இது ஒருவர் ஆங்கிலேயராகவும் (பெர்ரி மேஸன்) மற்றொருவர் நம்ம நாட்டவராகவும் (உஷாதேவி) இருக்கிறார்களே என்றுதானே சிந்தனை?
இதுதான் தமிழாக்கத்தின் சாதனை. பெர்ரி மேஸனின் காரியதரிசி (தமிழில் சொல்வதெனின் Secretary) Della Street தான் தமிழில் உஷாதேவியாக்கப்பட்டார்.
1968-ல் குமுதத்தில் சுஜாதா மூலமாக ஒரு வழக்கறிஞர் அறிமுகமாகி பின்னர் எண்பதுகளில் இளைஞர்களின் துடிப்பாக மாறினார். கணேஷ் - வசந்த் ஜோடி முதலில் இருந்தே உருவாக்கப்படவில்லை. 1968ல் குமுதத்தில் வெளியான நைலான் கயிறு கதையில் ஒரு தேர்ந்த வழக்குரைஞராக அறிமுகமான கணேஷ், ‘வெளிப்படையாக தெரிவதை நம்பாதே’ என்ற
சித்தாந்தத்தின் அடிப்படையிலும், மனோதத்துவ ரீதியாகவும் வழக்குகளை எதிர்கொள்வார்.
இந்த கதையில் ரிட்டையர்ட் ஆன போலீஸ் ஆபீஸர் ஒருவரை, தவறாகச் சேர்த்த வழக்கில் இருந்து விடுவிக்க, கணேஷ் வருவார். பின்னர் பாதி கதையில் காணாமல் போய் விடுவார். இதற்கு பிறகு வந்த பாதி ராஜ்யம் என்ற கதையில் நீரஜா என்பவர் ஒரு வாடிக்கையாளராக வந்து பின்னர் ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் இருந்து கணேஷின் அசிஸ்டெண்ட் ஆக மாறிவிடுவார்.
ஆரம்ப கால கதைகளில் வசந்தின் கதாபாத்திரமும் கலந்த கலவையாகவே கணேஷ் இருந்தார். காலப் போக்கில் வசந்த் தேவைப் பட்டிருக்கிறார். இதை சுஜாதாவே ஒருமுறை சொல்லி இருக்கிறார் “கணேஷ் முதல்லே ‘சோலோ’வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது ஸ்ட்ரக்சர் கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல கவுண்டர்பாயிண்ட் தேவையாய் இருந்தது, எனவே பின்னர் வந்த கதைகளில் கணேஷ் - வசந்த் என்று உருவாக்கப்பட்டது”. வசந்த் ஒரு சட்டக்கல்லூரி மாணவர். பயிற்சி பெற கணேஷிடம் அசிஸ்டெண்ட் ஆக சேருகிறார்.
இதுநாள்வரை தில்லியில் இருந்த கணேஷ், வசந்த் வந்தபிறகுதான் சென்னைக்கு குடிபெயர்வார். அதன்பிறகுதான் காயத்ரி கதையில் முதன்முறையாக ஒரு ஜோடியாக செயல்பட ஆரம்பித்தார்கள். இதன் பிறகு விதி, மேற்கே ஒரு குற்றம், மேலும் ஒரு குற்றம், உன்னை கண்ட நேரமெல்லாம், மீண்டும் ஒரு குற்றம், அம்மன் பதக்கம், மெரீனா, புகார், ஐந்தாவது அத்தியாயம் என்று தொடர்ச்சியாக ஒரே கணேஷ் - வசந்த அட்டகாசம் தொடர்ந்தது.
சுஜாதா எழுதிய இரண்டாவது வரலாற்று புதினமான காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருவார்கள்.
இந்த சமயத்தில் தான் புஷ்பா தங்கதுரையும் ஒரு நாயகனை மையமாக வைத்து சில கதைகளை எழுத ஆரம்பித்தார். இவரது பிரதான நாயகன் இன்ஸ்பெக்டர் சிங் என்பவர்.
அதே நேரத்தில் பிரபல எழுத்தாளர் ராஜேந்திர குமாரும் துப்பறியும் ஜோடிகளை வைத்து கதை எழுத ஆரம்பித்தார். இவரது கதாநாயக ஜோடியின் பெயர் ராஜா - ஜென்னி. ஆனால் இந்த கதைவரிசையில் இருக்கும் ஸ்பெஷாலிடி - வர்ணனையில் இருந்த கிளுகிளுப்பு தான். உதாரணமாக ஜென்னி புல்லட்டில் உட்கார்ந்து இருக்க, ராஜா “ஏன் இங்கே புடைத்து இருக்கிறது?” என்று கதையின் முதல்பாராவிலேயே கேட்பார்.
இவர்களைத்தவிர 1973 முதல் 1982 வரை தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான துப்பறியும் நாயகனோ அல்லது ஜோடியோ இல்லை. அப்படி இருந்தால், என்னுடைய நினைவில் இல்லை என்று கொள்க.
1982 - 1992 காலகட்டம் மாத நாவல்களின் உச்சம். கோவையை சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஏற்கனவே சில பல நூற்றுக்கணக்கில் கதைகளை எழுதி பிரபலமாகி இருந்த வேளையில் 1982-ல் இவர் தாய் வார இதழில் எழுதிய உலராத ரத்தம் கதையில் தான் முதன்முதலில் இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்தும், விவேக்கும் அறிமுகம் ஆனார்கள்.
இந்த கதாபாத்திரத்தின் பின்னணியைப்பற்றி ராஜேஷ்குமாரிடம் கேட்டபோது “நான் தமிழ்வாணனின் சங்கர்லால் கதாபாத்திரத்தின் தீவிர ரசிகன். தமிழ்வாணன் எனக்கு ரோல் மாடல் என்று கூட சொல்லலாம். அதே சமயம் எனக்கு விவேகானந்தர் மீது அளவு கடந்த மரியாதை உண்டு. எனவே நான் உருவாக்கும் பாத்திரத்தின் பெயரை விவேக் என்று வைத்தேன். இந்த கதாபாத்திரம் இளைஞர்களை கருத்தில் கொண்டு மிகுந்த முன்யோசனையுடன் உருவாக்கப்பட்டது” என்று சொன்னார்.
ராஜேஷ்குமார் எழுதிய விவேக் தோன்றும் கதை என்றால் வழக்கமாக விற்பனை ஆவதைவிட மூன்று மடங்கு அதிகமாக விற்க்கும் என்று சொல்கிறார் க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் ஆகியவற்றின் பதிப்பாளராகிய ஜி.அசோகன்.
விவேக்குக்கு ரூபலா என்ற மனைவியும், கோகுல்நாத் என்ற இன்ஸ்பெக்டரும், சமீபகாலமாக விஷ்ணு என்ற உதவியாளனும் துணையாக வருவார்கள். இந்த டீம் வரும்போதெல்லாம் கலகலப்புக்கு பஞ்சமே கிடையாது. அதே சமயம் ரூபலாவையும் சாதாரணமாக எடைபோட்டுவிடவேண்டாம். அவரும் பல சாகசங்களை புரிபவர்.
எண்பதுகளின் மும்மூர்த்திகளாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் - சுபாவை சொல்வார்கள். ராஜேஷ் குமாரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே விவேக் ராஜ்ஜியம் தான். ஒரு உலகத்திரைப்பட விழா சென்னையில் நடக்க இருக்க, அதனை தவிர்க்கும்படி அதன் திரைப்படவிழா கமிட்டி தலைவருக்கு மிரட்டல் கடிதம் வர, அவர் அதை உதாசீனப்படுத்தி, விழாவின் துவக்கத்தில் தன்னுடைய உயிரையே பரிசாக கொடுக்கிறார். இந்த வழக்கை எடுக்கும் விவேக்குக்கு சவால் மேல் சவால் விடுகிறான் மர்ம வில்லன்.
ராஜேஷ் குமாருக்காகவே 1986ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட மாத நாவல் தான் க்ரைம் நாவல். ஆரம்பத்தில் ராஜேஷ் குமார், ஜி. அசோகன் மற்றும் ஓவியச்சக்ரவர்த்தி அரஸ் ஆகிய மூவரின் மிரட்டல் கூட்டணி உருவானது. ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் விற்பனை ஆகி சாதனையும் படைத்தது க்ரைம் நாவல்.
தமிழ் நாவல் உலகில் 1982ஆம் ஆண்டு ஒரு மிக முக்கியமான ஆண்டாகும். ஏனென்றால் தாய் வார இதழில் முதன்முதலாக விவேக் வந்ததுபோல மாலைமதி வார இதழிலும் ஒரு புதிய துப்பறியும் ஜோடி தோன்றியது.
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய அவன் தப்பக்கூடாது என்ற கதையில்தான் முதன்முதலில் பரத்தும், சுசீலாவும் தமிழக வாசகர்களை மகிழ்விக்க வந்தார்கள். தமிழின் முதல் ஹைலெவல் துப்பறியும் நிறுவனமான மூன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி இவர்களுடையதே. ஆனால் வாசகர்கள் இத்தொடரை தொடர்ந்து ரசிக்க இது மட்டும் காரணம் அல்ல.
சுசீலாவின் டீ ஷர்ட்டில் எழுதப்பட்ட வாசகங்கள் ஒரு காட்டுத்தீ போல பரவியது. இப்போது பெண்கள் அணியும் டீ ஷர்ட் வாசகங்கள் எல்லாம் எண்பதுகளிலேயே சுசீலா அணிந்த டீ ஷர்ட் வாசகங்கள் முன்பாக பிச்சை ஏந்த வேண்டும். Latest Score 38/2, Riping Season, ooty fruity போன்றவை சில
சாம்பிள்கள். பரத் சுசீலா ஆகிய இருவரைத்தவிர இவர்கள் நிறுவனத்தில் ரிஷப்ஷனிஸ்ட் மாதவியும், ரவி என்ற விடலையும் பணிபுரிந்தார்கள். இவர்களுக்கு உதவுபவர் இன்ஸ்பெக்டர் நியூட்டன். இதைத்தவிர பரத்துக்கு போட்டியாக அனாமிகா துவக்கிய துப்பறியும் நிறுவனத்தின் பெயர் சன்லைட் டிடெக்டிவ் ஏஜென்சி (ஹேப்பி பரத் டே, ஆகஸ்ட் 1989).
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களிடம் உங்களுக்கு பிடித்த பரத் - சுசீலா கதை எது என்று கேட்டபோது, அவர் சொன்னது “எல்லா கதைகளுமே” என்ற பதிலைத்தான்.
1983, நவம்பர் 15-ஆம் தேதி வெளியான மோனா மாத நாவலில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் + பாலா) எழுதிய வெள்ளி இரவு என்ற கதையில் ஈகிள்ஸ் ஐ என்ற துப்பறியும் ஸ்தாபனம் அறிமுகம் ஆனது. தலைவர் ராமதாஸ் (அவர் இல்லீங்கோவ், இவர் முன்னாள் ராணுவ மேஜர்), நரேந்திரன் மற்றும் ஜான்சுந்தர் ஆகியோர் அறிமுகமான நாவல்.
இதன்பின்னர் முத்தாரத்தில் வெளியான ஒரு தலைக் காதல் என்ற தொடர்கதையில் வைஜெயந்தியும், சாவியில் வெளியான மேலே சில கழுகுகள் என்ற தொடரில் இன்ஸ்பெக்டர் பால்ராஜும் அறிமுகம் ஆனார்கள். அதன் பின்னர் மீரா (ஈகிள்ஸ் ஐ டைப்பிஸ்ட், மோனா, நிலா இரவின் நிழல்கள், 15-12-1986), ஜூனியர் (ஈகிள்ஸ் ஐ நாய்க்குட்டி, சூப்பர் நாவல், புயல் எச்சரிக்கை, ஆகஸ்ட் 1987), அனிதா (ஜான்சுந்தரின் ஜோடி, பெண் வேட்டை, நிறைமதி, செப்டம்பர் 1987) ஆகியோர் இணைந்துக்கொள்ள, ஈகிள்ஸ் ஐ ஒரு முழுமையான துப்பறியும் நிறுவனமாக உருவெடுத்தது.
இந்த வேளையில்தான் மதி நிலையம் கு.க.ராமு அவர்கள் சுபாவுக்காகவே ஆரம்பித்த மாத நாவல் சூப்பர் நாவல். ஆரம்பத்தில் ராமுவின் அட்டைப்படங்களுடன் வெளிவந்த இந்த மாத நாவல் விரைவில் ஒரு கேமரா கவிஞனின் படங்களுடன் வர ஆரம்பித்தது. பின்னர் சூப்பர் நாவலில் ஒரு தொடரும் எழுத ஆரம்பித்த அந்த இளைஞன்தான் தேசிய விருது பெற்ற ஒளி ஓவியர் மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த்.
சுபா இதுதவிர தனியார் துப்பறிவாளராகிய செல்வா, யுஎஸ்பி சக்தியுள்ள ஷெர்லக் கமல்குமார் ஆகியோரையும் வைத்து எழுதினார்கள். ஷெர்லக் கமல்குமார் வந்த கதைகள் குறைவே. ஆனால் செல்வா அப்படியல்ல.
செல்வா ஒரு முன்னாள் ராணுவ வீரர். ஒரு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த்ததால் ஒரு காலை விந்தி விந்தி நடப்பார். அவருடைய அலுவலக உதவியாளன் பெயர் முருகேசன். மெட்ராஸ் பாஷை பேசும் முருகேசனைவிட அவனது அத்தைகள் தான் வாசகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். ஓர் ஓட்டை உடைசல் ஆபீசில் இயங்கும் செல்வாவுக்கு பெரும்பாலும் வருபவை எல்லாமே தேறாத கேஸ் தான்.
சுபா எழுதிய கதைகளிலேயே மிகவும் பிரபலமானது தூண்டில் கயிறு. மூன்று பாகங்களாக தொடர்ந்த இந்த கதை இன்றளவும் சுபா ரசிகர்களால் சிலாகித்து பேசப்படுகிற ஒன்று. இதைதவிர குறிப்பிடும்படியாக சொல்வதெனின் எழுத்தாளர் தேவிபாலாவின் பிரசன்னா - லதா துப்பறியும் ஜோடி,ஆர்னிகா நாசரின் - டியாரா ராஜ்குமார் - தேஜிஸ்வினி ஜோடி, ஜேடிஆரின் அருண் -இந்துஜா ஜோடியும் துப்பறியும் பாத்திரங்களாக வந்து சக்கைபோடு போட்டார்கள்.
ஆங்கிலத்தின் ‘ஃபேன் பிக்ஷன்’ என்றொரு வகையான எழுத்தமைப்பு உண்டு. புகழ் பெற்ற நாவலாசிரியர்களின் கதைகளை ரசிகர்களே அதே கதாபாத்திரங்களை கொண்டு எழுதுவது. தமிழில் ஜெயமோகன் 2002’ல் திண்ணை இணையதளத்தில் இந்த எல்லா துப்பறியும் பாத்திரங்களையும் கொண்டு ஒரு தொடர் எழுதினார்.
ஆனால், இப்படி ஒரு கதையை 1988ஆம் ஆண்டு தீபாவளியிலேயே நமக்கெல்லாம் படைத்தவர் எஸ்.வி.சேகர். நாவல் சத்யா மாத இதழின் 10ஆவது இதழில் இந்த பாத்திரங்களைக் கொண்டு சரியாய் ஒன்பது மணிக்கு... என்ற 16 பக்க கதையை பரபரப்பாக எழுதிவிட்டார்.
(கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்)
நவம்பர், 2014.