சத்யா ஸ்டூடியோ வாசலில் ஒருநாள் எம்ஜிஆர் அவர்களின் அம்பாசடர் காரின் முன்னால் வந்து விழுந்தான் அந்த இளைஞன். கார் நின்றது. கண்ணாடி இறங்கி, எம்ஜிஆரின் முகம் தோன்றுகிறது. அந்த இளைஞனிடம் என்ன வேண்டும் உனக்கு? என்னால் என்ன ஆகவேண்டும் என்று கேட்கிறார். “எனக்குத் திருமணம் செய்துவைக்க என் பெற்றோர் முயற்சி செய்கிறார்கள். உங்கள் தலைமையில் தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் எனக் காத்திருக்கிறேன்,” என்கிறான் அந்த எளிய ரசிகன். திருமணத் தேதியுடன் வா என்கிறார் அவர். மூன்றே நாளில் பத்திரிகையுடன் வருகிறான். அன்று உழைத்துவாழ வேண்டும் படப்பிடிப்பு. பத்திரிகையை வாங்கி தன் மேக் அப் பெட்டியில் செருகிக்கொண்டே உதவியாளரிடம் அந்த தேதியை நினைவுபடுத்தச் சொல்கிறார். இளைஞன் பூரிப்புடன் திரும்பிப்போகிறான்.
சொன்ன நாளில் திருமணப்பந்தலில் காலை முகூர்த்த நேரம். எம்ஜிஆர் வரவில்லை. அந்த இளைஞனிடம் நீயெல்லாம் சாதாரண ஆள். அவர் எங்கே வரப்போகிறார் என்கிறார்கள். திருமண மேடையில் இருந்து தாவிக்குதித்து அவன் சத்யா ஸ்டூடியோ நோக்கி சென்னைப் புறநகரில் இருந்து பஸ் பிடித்து பறக்கிறான். அதே நேரம் ஸ்டூடியோ படப்பிடிப்புக்கு வருகிற எம்ஜிஆர் கண்ணில் அந்த திருமணப்பத்திரிகை படுகிறது.
ஆகா.. தனக்கு நினைவூட்டத் தவறிவிட்டார்களே என படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மேக்கப்பைக் கலைக்காமல் காரில் ஏறி விரைகிறார். மணப்பந்தலில் மணமகனைக் காணவில்லை.! இன்னொரு கார் விரைந்து சத்யா ஸ்டூடியோ வாசலை அடைந்திருந்த மணமகனைத் தூக்கிக்கொண்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர் தன் ஜிப்பா பையில் இருந்து நோட்டுகட்டுகளை அள்ளிக் கொடுத்துவிட்டுச் செல்கிறார் எம்ஜிஆர். மறுநாள் அதே சத்யா ஸ்டூடியோ. மதியம் சிறப்பு விருந்து அந்த புதுமணத்தம்பதிக்கு வழங்கப்படுகிறது! பொன்மனச்செம்மலுடன் விருந்துண்ட அந்த இளைஞன் யார்? பின்னாளில் அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, தீ மிதித்து தன் கையை வெட்டிக்கொண்டதாகச் சொல்லப்பட்டவன்!
அன்று ஒரு எம்.எல்.ஏ. இல்லத்திருமணம். அதற்காக இரவில் அவர் புறப்படும் நேரம், ஒரு எளிமையான கட்சிக்காரர் வந்து அந்த எம்.எல்.ஏ பற்றி புகார் தெரிவிக்கிறார். நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். கார் கிளம்புகிறது. இருபது கார்கள் வரிசையாகச் செல்கிறன. காரில் செல்லும்போதே புகார் பற்றி விசாரிக்கிறார். உண்மை என்று தெரிகிறது. கார்கள் சென்னைக்கு வெளியே போய்க்கொண்டிருக்கின்றன. அர்த்த ராத்திரியில் தூரத்தில் விளக்குகள் எரிகின்றன. இரட்டை இலை ஒளிர்கிறது. அது ஒரு குடிசை வீடு.
கல்யாணக் களை. ’பூமழை தூவி, வசந்தங்கள் வாழ, ஊர்வலம் நடக்கின்றது’ பாட்டு அவரது காதை வந்தடைகிறது. வண்டியைத் திருப்புங்கள் என உத்தரவிடுகிறார். இரு கார்களும் பிரதான சாலையில் இருந்து விலகி அந்த ஏழைத் தொண்டனின் வீட்டை நோக்கிப் பயணிக்கின்றன. அந்த இரவில் ஜொலிக்கும் முழுநிலவாக அவர் இறங்கியதும் அங்கிருந்த எல்லாருக்கும் அதிர்ச்சி. விடிந்தால் திருமணம். சடங்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. பெண்ணும் மாப்பிள்ளையும் ஓடி வந்து வணங்குகிறார்கள்.
எம்.எல்.ஏ வீட்டு மணவிழாவுக்காக ஜிப்பாவுக்குள் செருகி வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளை எடுத்து, பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அணிவித்து வாழ்த்துகிறார். சுதாரித்த மாப்பிள்ளை ஓடிப்போய் மாலையையும் தாலியையும் கொடுத்து இப்பவே திருமணம் செய்துவைக்குமாறு கோருகிறார். இது பெரியவர்கள் பார்த்துக்கொடுத்த நல்ல நேரமில்லையே என எம்ஜிஆர் தயங்குகிறார். ஆனால் மாப்பிள்ளையின் வற்புறுத்தலால் அப்போதே திருமணம்! எம்ஜிஆர், அப்படியே சென்னைக்குத் திரும்புகிறார். எம்.எல்.ஏ வீட்டுத் திருமணத்துக்குச் செல்லவில்லை!
விழுப்புரம் வழியாகச் செல்லும்போதெல்லாம் சாலையோரத்தில் வடை சுட்டு விற்கும் பாட்டியிடம் சில வடைகளை வாங்குவது எம்ஜிஆருக்கு வழக்கம். ஆளைவிட்டு சில வடைகள் வாங்கிக்கொண்டு, 200 ரூபாயை அங்கிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு வரச்சொல்வார். பாட்டிக்கோ யார் வாங்குகிறார்கள் இவ்வளவு அதிகப் பணம் கொடுக்கிறார்களே என்று ஆச்சரியம்! இதுவே வழக்கமாக பல முறை நடக்கிறது! அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை! அந்த பாட்டியின் தன்னம்பிக்கைக்கு என்று சொல்வார் எம்ஜிஆர். ஒரு நாள் காரை தள்ளி நிறுத்திவிட்டு வழக்கம்போல் வடை வாங்க ஆள்போகிறார். பாட்டியிடம் வடையை வாங்கிவிட்டு பணத்தைப் போட்டுவிட்டுத் திரும்பினால் பாட்டியைக் காணவில்லை! அவர் காரை நோக்கி ஓடோடிச் சென்றுவிட்டார்! உள்ளே எம்ஜிஆரைப் பார்த்தவுடன், அவருக்கு பரவசம்! ’ஏன் மகராசா நீயா என் கடையில் வடையை வாங்கித்தின்னே? தினம் ஆயிரம் குடும்பங்களுக்குப் படியளக்கும் மகராசா, இதை நீ சாப்பிட்டதற்கு நான் தான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும்’ என்கிறார். “ நான் உங்களுக்குக் கொடுத்ததை உங்கள் மகன் கொடுத்ததாக நினைச்சுகிடுங்க’ என்று சொல்லிப் புறப்படுகிறார் எம்ஜிஆர். பின்னாளில் முதியோர் உதவித்தொகை மூலமாக அந்தப் பாட்டிபோல் ஏராளமானவர்களுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்கிறார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆரின் கார் தென்மாவட்டங்களில் கரிசல் காட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது. பருத்திக்காட்டில் பஞ்சவர்ணம் என்ற இளம்பெண்ணும், பெரியாத்தா என்ற அவளது தோழியும் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தே புரட்சித்தலைவர் வாழ்க என்ற கோஷத்துடன் அவரது கார்கள் போய்க்கொண்டிருக்கின்றன. அதைப் பார்த்துவிட்டு தொலைவில் இருந்து இவர்கள் ஓடிச்செல்கிறார்கள். கார்கள் நிற்கின்றன. மூச்சிரைக்க ஓடிவந்த இருவருக்கும் தன் வாகனத்தில் இருந்து பழச்சாறு கொடுக்கிறார் எம்ஜிஆர். அவர்கள் நம்பவே முடியாமல் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். இருவர் கையிலும் நூறு ரூபாய் நோட்டைத்திணிக்கிறார் புரட்சித்தலைவர். அய்யோ.. பணத்துக்காக நாங்க ஓடிவரவில்லை என்கிறார்கள் பெண்கள். பரவாயில்லை. ஒரு அண்ணன் உங்களுக்கு திருவிழாச் செலவுக்குக் கொடுத்ததாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு பொன்மனசெம்மல் கிளம்புகிறார். வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம், குளிக்கவில்லை.
சாப்பிடுவதற்காகக் கூட கை கழுவவில்லை. பெற்றோர் பிள்ளைக்குப் பிரமை பிடித்துவிட்டதோ என்று அஞ்சுகிறார்கள். அப்போதுதான் எம்ஜிஆர் கை பணம் கொடுக்கும்போது தன் கையில் பட்டதாகவும் குளித்தாலோ தண்ணீர் பட்டாலோ அந்த சுவடு அழிந்துவிடும் என்று பஞ்சவர்ணம் சொல்ல, பெற்றோர் ஆசுவாசம் அடைகிறார்கள்! ஆறுவயதில் இருந்து அறுபது வயதுவரை பெண்கள் எம்ஜிஆர் மீது எதிர்பார்ப்பில்லாத அன்பு வைத்திருந்தார்கள்!
அன்று ஓர் அரசு அதிகாரி தவறு இழைத்துவிட்டார். அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தயாராக இருக்கிறது. அது மதிய நேரம். அவர் எம்.ஜி.ஆர் அறைக்குள் குற்ற உணர்ச்சியுடன் நுழைகிறார். எம்ஜிஆருக்கு சாப்பாடு வருகிறது. அந்த அதிகாரியிடம் சாப்பிட்டீர்களா என்கிறார். அவரோ சாப்பிட்டுவிட்டேன் என்கிறார். அவரது முகக்குறிப்பிலேயே சாப்பிடவில்லை என்பதை உணர்கிற எம்ஜிஆர், அவரை அமரவைத்து சாப்பிடச் சொல்கிறார். சாப்பாடு முடிகிறது. உள் அறைக்குள் அவரைப் பின் தொடர்ந்து நுழைகிறார் அதிகாரி. சஸ்பெண்ட் ஆர்டரை அவர் முகத்தில் எறிந்து என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று அனுப்பிவிடுகிறார். அரசாங்க காரில் வந்துகொண்டிருந்த அதிகாரி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வருகிறார். வீட்டில் எதையோ இறக்கி விட்டு ஒரு வேன் செல்வதைப் பார்க்கிறார். என்ன என்று மனைவிடம் கேட்கிறார். “ அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான மளிகையுடன் மூவாயிரம் ரூபாய் பணமும் புரட்சித் தலைவர் கொடுத்தனுப்பியதைச் சொல்கிறார் அவர்.
(மணவை பொன்.மாணிக்கம் எட்டாவது வள்ளல் எம்ஜிஆர் என்ற நூலின் ஆசிரியர். இந்நூல் பத்து பதிப்புகளைக் கடந்து விற்பனையில் சாதித்திருக்கிறது)
டிசம்பர், 2017.