திரையரங்குகளே கதைக்களங்களான தமிழ்த் திரைப்படங்கள்

திரையரங்குகளே கதைக்களங்களான தமிழ்த் திரைப்படங்கள்
Published on

திரைப்படங்கள் தமிழர் சமூக வாழ்வில் நிகழ்த்திய மாற்றங்களில் திரையரங்குகளின் பங்கு மிகப் பெரியது. திரைப்படங்களின் வரலாற்றை விரிவாகப் பதிவு செய்த மூத்த முன்னோடி ஆய்வாளர், தியோடர் பாஸ்கரன் அவர்கள் திரையரங்குகள் ஜாதியப் படிநிலைச் சமூகத்தில் உருவாக்கிய வெகுவான மாற்றங்களைப் பதிவு செய்துள்ளார். திரையரங்குகள் சமூகப் பொதுவெளியில் நிலவிய ஜாதிய அடையாளம் சார்ந்த விலக்கத்தை பெருமளவில் இல்லாமலாக்கிய களமென்கிறார். திரையரங்குகளின் இந்த உடைப்பு வெகுவான சமூக விளைவுகளைக் கொண்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், அந்த ‘அழிப்பின் ' போக்கில் எதிர்கொள்ளப்பட்ட தடைகள், அவற்றைக் கடந்த விதம் பற்றிய பதிவுகள் இன்னும் ஆய்வின் கவனவெளியில் பெரிய அளவில் காணக் கிடைக்கவில்லை. சமீபத்தில் தோழர் குமரன் தாஸ் அவர்களின் ‘தமிழ் சினிமா : அரிதார அரசியலும் நாற்காலிக் கனவுகளும்' நூலிற்கு முன்னுரை எழுதிய போதுதான், ஜாதிய படிநிலையை குலைத்து ஒரு நூற்றாண்டு கடந்த பின்னும், திரையரங்குகள் ஜாதிய மோதல் களங்களாகத் தொடர்ந்திருக்கின்றன என்பதை அறியக் கிடைத்தது. ராமேஸ்வரம் தீவின் திரையரங்கொன்றை களமாகக் கொண்டு குமரன் தாஸ் அவர்கள் எழுதியிருந்த கட்டுரைகளின் தொகுப்பு ஓர் ஆர்வமூட்டிய ஆவணம் என்றே கருதுவேன். எழுபதுகளின் மத்திய காலத்தில் தூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் போது, எம்ஜிஆர் திரைப்படங்களின் வெளியீட்டு நாளில், டிக்கெட் கவுன்டர் நுழைவு முந்தலில் தனிநபர்களிடையே நடக்கும் மோதல் பின்னர் ஜாதிகளிடையேயான மோதலாக உருமாறி, ஒரு சில நாட்களுக்கு ஊரையே ஒரு அசாதாரண சூழலிற்கு தள்ளி விடுவதைக் கண்டிருக்கிறேன். இதே போல் இதற்கு முன்னர் ‘காட்சிப்பிழை' இதழில் தொடராக பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய ‘நிழல் முற்றத்து நினைவுகள்' ஒரு திரையரங்கில் அவரது தந்தை வைத்திருந்த சோடா கடையை மையமிட்டு எழுதப்பட்டது. அது திரையரங்கம் குறித்த நினைவுக்குறிப்புகளைப் பதிவு செய்த முக்கியமான ஆவணம். தமிழ் எழுத்தாளர்களில் மிக விரிவாக திரையரங்கள், திரைப்படங்கள் பார்க்கும் அனுபவங்களை எழுதியவர் அண்ணாச்சி கலாப்ரியா அவர்கள் என்றே கூறுவேன். அவரது எழுத்துகளில் எம்ஜிஆர் திரைப்படங்கள் வெளியான திருநெல்வேலி திரையரங்குகள் பற்றிய விவரணைகள் ஏராளமாகக் காணக் கிடைக்கும். நிற்க.

எனது தேடல் எட்டியவரை தமிழ்த் திரைப்படங்கள் ‘திரையரங்கத்தை' கதைக்களமாகக் கருத வெகுகாலமானது என்றே தெரிகிறது. மாறாக திரைப்படங்களில் நாடகம் / நாடக அரங்கு எனும் கூறு இன்றியமையாததாக தொடர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இதைப் பற்றிய பட்டியலைத் தேட முயல்வதே கடினம். சிவாஜி, எம்ஜிஆர் காலம் துவங்கி ரஜினி, கமல் காலம் வரை இந்தப் போக்கு தொடர்ந்தது என்பதே உண்மை. அந்த வகையில் அஜீத், விஜய் எனும் ‘நடிக்காத/ நடிக்க முடியாத/ நடிக்க முயலக் கூட முனையாத நடிகர்களே' அதிலிருந்து விடுபட்டார்கள் எனச் சொல்லலாம். அதேவேளையில் திரைப்பட/ நாடக ‘இனக்கலப்பில்' கிளைத்துள்ள தொலைக் காட்சித் தொடர்கள் அந்தப் பங்களிப்பை திறம்படச் செய்கின்றன. இத் தொடர்களைப் பார்ப்பதை ‘நாடகம்' பார்ப்பதாகவே பேசுகிறது நம் சமூகம்.

1950 முதல் 70 கள் வரையிலான திரைப்படங்களில் திரையரங்குகள் தோன்றியது வெகு அபூர்வம். அதுபோன்ற தோற்றங்கள், நாயக, நாயகியர், குடும்பத்தினர் ‘சினிமா' பார்க்க திரையரங்கிற்கு போகும் காட்சிகளாகவே இருந்தன என்றே தோன்றுகிறது. அதையொட்டி நிகழும் காதலர் சந்திப்பு, நகைச் சுவை நிகழ்வுகள், சண்டைக் காட்சிகள் எனப் பல இருந்திருக்க வாய்ப்புள்ளது. திரையரங்கங்கள் சமூகத்தின் முக்கியமான பொதுவெளிகளில் ஒன்றாகப் பரிணமித்து வெகுகாலமாகி விட்டபடியால் அது காட்சிப்படுவது மிக இயல்பான ஒன்றாகவே இருந்தது. நகரங்களின் அடையாளங்களாகவே மாறிவிட்டிருந்தன திரையரங்குகள். சிறுநகரங்களின் டூரிங் டாக்கீஸ்களும் இதே போன்ற முக்கிய வெளியாக மாறிவிட்டிருந்தது. குறிப்பாக கிராமப் பகுதிகளின் டாக்கீஸுகள், பகல் பொழுதுகளில் ஆளரவமற்றதாக இருப்பதும், மாலைகளில் உயிர்ப்படைந்து மக்கள் திரளால் நிறைந்திருப்பதும் மாயத்தோற்றத் தன்மை கொண்டது. அறுபதுகளின் இறுதிக்காலம் துவங்கி எழுபதுகள், எண்பதுகள் வரை இந்தக் காட்சிகள் பற்பல திரைப்படங்களில் காட்சிப்படுவது இயல்பாக நிகழ்ந்தது, குறிப்பாக எழுபதுகளின் திரைப்படங்கள் சென்னை ஸ்டுடியோக்களை விட்டு நகர்ந்து கிராமங்களை மையமிட்ட போது, திரையரங்குகளும் கவனவெளிக்குள் வந்தன.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் புதிய திறப்பைச்  சாத்தியமாக்கிய திரைப்படங்களின் முதன்மைப் படமாகக் கருதப்படுவது ‘அன்னக்கிளி'. இளையராஜா முதலில் இசையமைத்த படமான ‘அன்னக்கிளி' திரைப்படத்தின் முதல்காட்சியே, அன்னம் (சுஜாதா) சோலையூர், ‘அழகப்பா டூரிங் டாக்கீஸில்', பத்மினி ‘ஆண்டாள்' ஆக நடித்த படத்தைப் பார்ப்பதாகவே துவங்குகிறது. பஞ்சு அருணாசலம் அவர்கள் திரைக்கதை-வசனம் எழுதிய படத்தை இயக்கியவர்கள் தேவராஜ்- மோகன் ஆகியோராகும். இவர்கள் இந்தவிதமான கிராமியப் படங்களின் முன்னோடிப் படமாகக் கருதவல்ல சிவாஜி, ஜெயலலிதா நடிப்பில் பி. மாதவன் இயக்கிய ‘பட்டிக்காடா பட்டணமா' படத்தின் அசோசியேட் இயக்குநர்கள் என்பது கவனத்திற்குரியது. ‘அன்னக்கிளி' படத்தின் கதை ஆர். செல்வராஜ். இவர் பாரதிராஜா-இளையராஜா அணியின் தளகர்த்தர்களில் ஒருவர். அந்தக் காலத்தின் பல வெற்றிப்படங்களின் கதைகள் அவருடையவை. அன்னம் ஆண்டாளாக கண்ணனுக்காக (வாத்தியார் சிவகுமார் ) வாழ்ந்து, ‘கண்ணகி'யாக மடிவதுதான் கதைக்களம். அந்தச் சோலையூரின் ‘பொட்டல் வெளி' அந்தத் திரையரங்கம். திரைப்படத்தின் பல ‘முக்கியமான காட்சிகள் நிகழ்வதும் அங்கேதான். அந்த ஊரின் பிரதான புலங்கும் வெளியாக அது இயங்குகிறது. ஆனால் அந்தக் கிராமத்தின் அக்கிரமங்கள் நடக்கும் இடமாகவும் அந்தத் திரையரங்கு விளங்குகிறது. அந்தத் திரையரங்கின் உரிமையாளன் காமுகன், அவனது களியாட்டங்கள் நிகழ்வது அங்கேதான். தனது அப்பழுக்கில்லாத புனிதமான காதலை (ஆண்டாள் நிலையில்) காத்துக் கொள்ள ‘அன்னம்' போராடும் போது திரையரங்கில் ‘கண்ணகி' பாண்டியன் அவையில் நீதி கேட்கும் காட்சி நடைபெறுகிறது. கண்ணாம்பாள் தனது வெங்கலக்குரலில் பாண்டியனின் தவறை உணரச் செய்து மதுரை நகரைத் தீக்கிரையாக்குகிறாள். அதேவேளையில் அன்னம் நடத்திய போராட்டத்தின் விளைவாக ‘டூரிங் டாக்கீஸ்' எரிந்து சாம்பலாகிறது. இந்தத் திரைப்படம் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை நண்பர் / திரைப்பட ஆய்வாளர் சுந்தர் காளி அவரது ‘Narrating Seduction ‘(Making meaning in India Cinema: Edited by Ravi Vasudevan: 2000) எழுதியுள்ளார்.

திரைப்பட ஆய்வறிஞர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி இந்தவகை ‘மண்வாசனை' சினிமாக்களின் கவனத்திற்குரிய கூறு, அந்தியர்களின் வருகை கிராமத்தின் இயல்புநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதாகப் பதிவு செய்திருக்கிறார். இந்தக் கூறு ‘பதினாறு வயதினிலே' துவங்கி பல படங்களில் காணக் கிடைக்கும். அதேவிதமாக திரைப்படங்களும், திரையரங்கங்களும் கிராமத்தின் இருப்பில் பாரதூரமான விளைவுகளை உருவாக்குதான பதிவுகள் ஏராளமாக உண்டு. பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்' ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு கிராமத்தின் எளிமையில், இயல்புத் தன்மையில் ஒரு பெரும் குலைப்பை நிகழ்த்துவதைப் பேசியிருக்கும். திருவிழாக்களும், திரையரங்குகளும் ஒரே நேரத்தில் களியாட்டங்களும், மகிழ்ச்சியும் நிறைந்தவை என்றும், அதேவேளையில் பல்வேறு விதமான ஒழுக்கக்கேடுகளிற்கான வாய்ப்பை வழங்க வல்லவை என்ற எச்சரிக்கையை திரைப்படங்கள் திரும்பத் திரும்பப் பேசின. இதில் கவனத்திற்குரிய செய்தி இந்தத் திரைப்படங்களை உருவாக்கிய முதல் தலைமுறையினர் பலர் அதேவிதமான கிராமத் திரையரங்கில் தாங்கள் காண வாய்த்த திரைப்படங்களால் உந்துதல் பெற்று கோடம்பாக்கம் வந்தவர்கள் என்பதுதான். இது போன்ற ஆர்வலர்களை கோடம்பாக்கம் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று விடவில்லை என்பதும், அவர்கள் தங்கள் ‘இடத்தை' அடைய நடத்திய போராட்டங்களும் இந்த எச்சரிக்கையைப் பேச வைத்திருக்கலாம். இதைவிடக் கூடுதலாக கலைஞனின் சமூகப் பொறுப்பு எனும் கருத்தாக்கம் காரணமாக இருக்கலாம்.

எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு திரைப்படம், ‘ஏணிப்படிகள்' (1979). இந்தப் படமும், தமிழ் கிராம அன்றாட வாழ்வினைத் களமாகக் கொண்டு உருவானதுதான். இந்தத் திரைப்படம், ‘பட்டிக்காடா பட்டணமா' படத்தை இயக்கிய பி.மாதவன் இயக்கியது. கதை,திரைக்கதை கே.விஸ்வநாத். சேதுமாதவனின் தயாரிப்பில், சிவகுமார்,ஷோபா நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையில் ‘பூந்தேனில் கலந்து' போன்ற இனிமையான பாடல்களைக் கொண்டிருந்தது திரைப்படம். பாலூர் ‘ஜெயந்தி' திரையரங்கில் துப்புரவுப் பணியாளர்கள் மாணிக்கமும் (சிவகுமார்) செல்லக்கண்ணுவும் (ஷோபா). ஒருவர் மீது ஒருவர் ஆழமான உணர்வுகளால் பிணையப்பட்ட காதலர்களும்கூட.திரையரங்க உரிமையாளர் ‘ஆச்சி' மனோரமா. பெரும் கறார் பேர்வழியும்கூட. அவரது ‘எடுபிடி' கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி. செல்லக்கண்ணுவின் ஊதாரி அண்ணன் பாத்திரம் சத்தியராஜுக்கு. பாலூர் புகைவண்டி நிலைய அதிகாரியாக, அவரது மகள், அவளது குடிகாரக் கணவன் என முக்கியப் பாத்திரங்களுமுண்டு.

‘ஏணிப்படிகள்' படத்தின் முதல் காட்சியிலேயே ‘ஜெயந்தி' திரையரங்கம் அறிமுகமாகிறது. அந்நாளைய கிராமியப் படங்களின் தவிர்க்க முடியாத அடையாளங்களிலொன்றான மலைக்கோவிலும் உண்டு. ஒரு கட்டத்தில் ‘செல்லக்கண்ணு', ‘கமலாதேவி' எனும் வெற்றிகரமான நடிகையாகி, பணம், பங்களா, கார் என பெரும் வசதி பெற்று விடுகிறாள். ஆனால் கமலாதேவியாக மாணிக்கத்துடன் ‘பழைய' வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்பதை உணர்ந்து கடலில் மூழ்கி இறந்துவிட்டதாக ஒரு புனைவுச் செய்தியை பரப்பி விட்டு ஊர் திரும்புகிறாள், ‘செல்லக்கண்ணு'. அவளது மரணம் உண்மையென நம்பி, அவர்களது வழக்கமான சந்திக்கும் இடமான பாறையின் முகட்டிலிருந்து உயிர்துறக்கத் தயாராகும் மாணிக்கத்தை கடைசி நொடியில் ‘பூந்தேனில் கலந்து' பாடல் ஒலிப்பின் வழியாகக் காத்து இணைகிறாள் செல்லக்கண்ணு.

ஏணிப்படிகள் திரைப்படம் எனது நீங்கா நினைவுகளில் பதிவானதற்குக் காரணம், அந்தத் திரைப்படம் வெளிவந்த அடுத்த ஆண்டிலேயே (1980), அந்தக் காவிய நாயகி, எளிமையின் பேரெழில் அசலாகவே தன்னை மாய்த்துக் கொண்டார் என்பதுதான். அவரது மரணச் செய்தியை மாலைச் செய்தி இதழ் ஒன்றில் சென்னை மெரினா கடற்கரையில்தான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்திலும் அவரது ‘பொய் மரணம்' நிகழும் களம் மெரினாதான். தமிழ்  சினிமா நடிகையரில் இருவரின் மரணம் எப்போதும் துயரில் தள்ளி விடும் இழப்பின் வலி நிறைந்தவை. ஒன்று ஷோபா, மற்றொன்று ‘சில்க் ஸ்மிதா'.

‘ஹவுஸ்புல்' திரைப்படம், தமிழ்நாட்டின் மிகப் பெரிய திரையரங்குகள் நிரந்தர மூடுவிழா காணத் துவங்கிய நாட்களில், அது போன்ற மதுரையின் ‘கைவிடப்பட்ட ' நெடிய வரலாறு கொண்ட ஸ்ரீதேவி திரையரங்கில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதாவது அந்தப் பிரமாண்டங்கள் ‘ஹவுஸ்புல்' ஆவதை இழந்துவிட்ட நாளில் எடுக்கப்பட்ட படம். ரா. பார்த்திபன் எனும் நல்ல படைப்பாளியின் விபரீதமான பரிட்சார்த்தங்களில் ஒன்று. ‘பாரத்' திரையரங்கில் வைக்கப்பட்ட தீவிரவாதிகளின் வெடிகுண்டிலிருந்து மக்களைக் காக்க தன் இன்னுயிர் ஈந்த ‘ஐயா'வின் கதை. முற்றிலுமாக திரையரங்கத்தின் பல்வேறு கூறுகளை, அதனோடு தொடர்புள்ள மனிதர்களைப் பாத்திரங்களாக்கி உலவ விட்டு எடுக்கப்பட்ட படம். அதில் திறமை வாய்ந்த நடிகர்கள் பங்கேற்பும் உண்டு. விக்ரம், ஸ்வாதி, வடிவேலு எனச் சிறந்த நடிகர்களைப் போட்டு விட்டு, திரைக்கதையை முறுக்கு பிழிவதைப் போல தன்னைச் சுற்றி காந்தி, தேசம், சுதந்திரம்,தேசப்பற்று எனக் கிறுகிறுக்க வைத்திருப்பார் பார்த்திபன். விளைவு சிதிலாமாகி நிற்கும் திரையரங்கையும், பாரத தேசத்தையும் ஒப்பிட்டு ஒப்பாரி வைத்து உயிரை விட்டிருப்பார். அநேகமாக மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் எடுக்கப்பட்டு அதிலேயே ஓடிப் பெருந்தோல்வி கண்டு அந்தத் திரையரங்கத்திற்கு மூடுவிழா காண வைத்ததும் இந்தத் திரைப்படம் எனவே கருத வாய்ப்புள்ளது. இன்றும் அந்த சிதிலமடைந்த நிலையில் நிற்கும் திரையரங்கில் நாங்கள் கண்ட திரைப்படங்களோடு ‘ஹவுஸ்புல்' படமும் வந்து நிற்கிறது. இன்னும் இந்தப் படத்தின் போஸ்டர் எச்சங்கள் எங்காவது ஒரு மூலையில் இருக்கக்கூடும். ஒரு வகையில் பார்த்திபன் பாராட்டிற்குரியவர், விக்ரம் போன்ற சிறந்த நடிகரை வீணடித்தாலும், தேசபக்தி, தீவிரவாதம் எனப் பினாத்தி அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை வென்றுவிட்டார்.

 அதே 1999 ஆம் ஆண்டின் ‘அமர்க்களம் ‘திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் நிகழ்வதும் சென்னை ‘ஸ்ரீநிவாசா ‘திரையரங்கில்தான். அஜீத்குமார், ஷாலினி, ரகுவரன் நடித்த இந்தப் படத்தில் நாயகன் ஒரு அடியாள், அவன் இருப்பிடம் அந்தத் திரையரங்கமே. கதைக்களத்தின் முக்கிய முடிச்சான நாயகன் - நாயகி மோதல் அந்தத் திரையரங்கில் அன்று வெளியாக வேண்டிய ‘ரஜினியின் அண்ணாமலை' படத்தின் கிளைமாக்ஸ் ரீல் தொடர்பில்தான்.

சென்னை காவல்துறை கமிஷனர் மகள்தான் ஷாலினி. அவளிடமிருந்து ‘ரீல்' பெட்டியை வாங்குவதில் மோதல் உருவாகிறது. அதைத் தொடர்ந்து அதே திரையரங்கிற்கு வரும் ரகுவரன் தூண்டுதலில் ஷாலினியைக் கடத்துகிறான் வாசு/ அஜீத். கடத்தல் - காதல் எனத் தொடரும் கதைகளத்தின் பெரும்பான்மைக் காட்சிகள் நிகழ்வது அந்தத் திரையரங்கில்தான். இந்தப் படத்தைப் பொருத்தவரை கதை நிகழும் களம் என்பதைக் கடந்து திரையரங்கம் அதனளவில் கவனம் பெறுவதில்லை.

தமிழ்த் திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளின் களமாக திரையரங்கங்கள் இருப்புக் கொண்ட படங்களின் எண்ணிக்கை ஏராளம். நடிகர் பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்' ஒரு திரையரங்கத்தை மையமிட்டதாகவே இருக்கும். ஆனால் அதற்குக் கதைக்களமென்ற அளவில் எந்த பங்கும் கிடையாது.

சத்யராஜ்,வடிவேல்,- சிபிராஜ் கூட்டணியில் திரையரங்கக் காமெடிக் காட்சிகள் பல உடனடியான நினைவைக் கவர்பவை. ‘ஜோர்', ‘சக்திவேல் வெற்றிவேல்' படங்கள் உடனடியாக நினைவிற்கு வருபவை. அதிலும் தியேட்டர் மேலாளர் வடிவேலு, முதலாளி சத்யராஜிடம் சம்பளம் கேட்கும் காட்சி மிகப் பிரபலமானது.

 வடிவேலுவின் தனித்த காட்சிகள் கொண்டது ‘ஐயா' திரைப்படம். காரசிங்கம் ஏ சி ( இங்கே ஏ சி என்பது அவரது இனிசியல்தான்) என்ற தனது பெயரில் ஒரு டூரிங் டாக்கீஸ் நடத்துகிறார் வடிவேலு. இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள், ஏற்கனவே வந்த திரையரங்குகளை மையப்படுத்திய படங்களை பற்றியது அல்லது அதன் தொடர்ச்சியானது என்பதுதான்

ஆச்சர்ய மூட்டுகிறது. ஒரு காட்சியில் திரையரங்கத்திற்கு முன்னால் வந்து விட்டு மக்கள் திரும்பிச் சென்றபடியிருப்பார்கள். முதலாளி வடிவேலுவிற்கு ஒன்றும் புரியாது. அப்படித் திரும்பும் ஒருவனைப் பிடித்து ‘ஏண்டா இப்படி திரும்பிப் போறீங்க ‘என்று கேட்க, அவன், ‘நீ தான் முன்னாடியெல்லாம் ‘ஹவுஸ்புல்'என்று போஸ்டர் ஒட்டியிருக்கீயே' என்பான். அதாவது அன்று காண்பிக்கப்படும் படத்தின் பெயர் ‘ஹவுஸ்புல்' என்பதை மக்கள் அரங்கு நிறைந்துவிட்டது என்பதாகப் பொருள் கொண்டு விட்டார்கள் என்பது தெரியவரும். அவனே போன வாரம் கூட ‘இன்று போய் நாளை வா ‘என்ற போஸ்டரைப் பார்த்து விட்டு தினசரி வந்து போனேன் என்பான். இந்தப் படத்தின் இன்னொரு காட்சி ‘அமர்க்களம் ' படத்தின் சாயல் கொண்டது. குரங்காட்டி ஒருவன் தன் குரங்கோடு சினிமா பார்க்க வருகிறான். அவனை முதலாளி காரசிங்கம் அனுமதி மறுத்து விரட்டி விடுகிறான். குரங்காட்டி பழிவாங்கத் திட்டமிட்டு, தன் குரங்கை அனுப்பி அன்று காண்பிக்கப்படும் ரஜினியின் ‘அருணாச்சலம்' படத்தின் கிளைமேக்ஸ் ரீலை தூக்கி வரச் செய்து விடுவான், காரசிங்கம் கோஷ்டி கைக்கு சிக்காமல் குரங்கு தப்பி விடும். ஆபரேட்டர் பதினாலாவது ரீல் முடியப் போகிறது என்ன செய்வது எனப் பதறுவான். கிளைமாக்ஸ் இல்லையென்றால் தியேட்டரை அடித்து நொறுக்கி விடுவார்களே எனப் பயப்படுவான். காரசிங்கத்திற்கு ஒரு அபூர்வமான யோசனை தோன்றும். ‘நாளை ஓடும் படத்தின் பெட்டி வந்து விட்டதா ‘எனக் கேட்பான். ‘ஆம்' என்பான் ஆபரேட்டர். ‘அது பாட்ஷா படம்தானே. இந்தப் படத்தில் யார் வில்லன்? ரகுவரன். அந்தப் படத்திலும் ரஜினி ஹீரோ, ரகுவரன் வில்லன் . அதனால அந்தப் படத்து கிளைமேக்ஸை எடுத்து இதில் ஓட்டுடா' என்பான். திரைச்சீலையில் ‘பாட்ஷா, பாட்ஷா' என ரஜினி நடந்து வர கூட்டம் ஆரவாரமாகக் கொண்டாடும். இது ஒரு நகைச்சுவைக் காட்சிதான் என்றாலும், தமிழ் அதிநாயக சினிமா ( குக்குகீ குகூஅகீ இஐNஉMஅ) மீதான கேலியான விமர்சனமாகவும் கொள்ள முடியும். ரஜினி, விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் பல படங்களின் காட்சிகளை நுட்பமாக வெட்டி ஒட்டி அவர்களின் இன்னொரு திரைப்படத்தை உருவாக்கி விட முடியலாம். அதிநாயகத்தன்மைதான் காட்சியின் உள்ளடக்கமன்றி, கதைக் கரு என்ற தனித்துவம் ஏதும் இவர்கள் திரைப்படங்களில் கண்டு விட முடியாது.

என் நினைவில் திரையரங்கினை, அதன் நலிவை, வீழ்ச்சியை, ஒரு தோற்றுப் போன தனிமனிதனின் வாழ்வினூடாகப் பேசியது ‘வெயில்' திரைப்படம் என்பேன். வசந்தபாலன் தமிழ் சினிமாவின் அரிதான இயக்குநர்களில் ஒருவர் என்பது என் பார்வை. ஆம், தனது திரைப்படத்திற்கு அரிதான, இதுவரை கையாளப்படாத கதைக்களங்களைக் கண்டடைவதில் வல்லவர். அதனால் அவரது திரைப்படங்கள் கவனத்தை ஈர்ப்பது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் கதைக்களங்களை திரைக்கதை ஆக்கும் போக்கில் அவரது முன் தீர்மானங்கள், சார்புகள் (இடதுசாரி புனிதம் ), ஒழுக்கவாதங்கள் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுவதே விமர்சனத்திற்குரியது. அந்த வகையில் ‘வெயில்‘, ‘அங்காடித் தெரு' ஆகியவை அந்த விபத்திற்குத் தப்பியவை என்றே கருதுகிறேன். அதிலும் ‘வெயில்' திரைப்படம் ‘சினிமா பாரடைஸோ' தாக்கம் கொண்டது. தாக்கம் மட்டுமே, நிச்சயமாக தழுவல் கூட இல்லை. அப்பாவின் அதீதமான கண்டிப்பிலிருந்து, தண்டனையிலிருந்து ( அம்மணமாக கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் விருதுநகரின் வெயிலில் கிடத்தப்படுகிறான்) தப்பி ஓடும் ஒரு சிறுவன், லாரி ஏறி வந்தவன், திருக்கழுக்குன்றம் வந்து சேர்கிறான். அங்கே ‘கன்னியப்பா' திரையரங்கத்தில் மூன்று காட்சிகளையும் பார்த்துவிட்டுத் தூங்கி பணத்தையும் பறிகொடுத்து விட்டு அங்கே ஆபரேட்டருக்கு உதவியாளனாகத் துவங்கி, அவர் ஓய்வு பெறும்போது தானே ஆபரேட்டரும் ஆகிறான். எதிரே புதியதாக புரோட்டா கடை வைத்திருப்பவரின் மகளின் காதலையும் அடைந்து மகிழ்ந்து ஒரு புதிய வாழ்க்கைக்கான கனவு கண்டபடி இருக்கிறான். காதலர்களின் சந்திப்புக்களம் திரையரங்கம் என்பதால், அந்தப் பகுதியின் காட்சிகள் முழுமையும் திரையரங்கிலேயே நிகழ்கிறது. கதையின் போக்கில் அவனது வாழ்வு போலவே திரையரங்கமும் களையற்றுப் போகிறது. திரையரங்க உரிமையாளர் அதனை இடித்து விட்டு கல்யாண மண்டபம் கட்டத் திட்டமிடுகிறார். திரையரங்கிலிருந்து புரஜெக்டர் தூக்கிச் செல்லப்படும் காட்சியில், தனித்த திரையரங்கங்களின் வீழ்ச்சி வலி மிகுந்ததாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். தோல்வியுற்ற மனிதன், தோல்வியுற்ற திரையரங்கம் என்ற பிம்பங்கள் அதன் பொருள் செறிவோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அநேகமாக தனித்த, பெரிய திரையரங்குகளின் காலம் இறந்தகாலமாகி விட்டது. சிறுநகரங்களில் கூட தனித்த திரையரங்குகளில் இருப்பு சாத்தியமற்றுப் போயிருக்கிறது. தமிழ் சினிமாக்களின் வெளியீடுகள் 100, 200 ஸ்கிரீன் தொடங்கி ஆயிரங்களில் பேசப்படுகிறது. ஆனால் தமிழ் சினிமாவின் பார்வையாளர் தொகுப்பு வெகுவாக மாற்றமடைந்திருக்கிறது. மல்டிபிளக்ஸில் சினிமா பார்ப்பது பெரும் பொருட்செலவைக் கோருவது. எனவே சமூகப் பொருளாதாரக் காரணிகள் பெரும்பான்மையான அடித்தட்டு மனிதர்களுக்கு சினிமா எனும் அனுபவத்தை அபூர்வமானதாக்கி விட்டிருக்கிறது. பெரும்பான்மையான ஸ்கிரீன்கள் பெருநகரங்களில் மட்டுமே. எனவே கிராமப்புற பின் தங்கிய சமூகங்கள் தொலைக்காட்சிகளில் மட்டுமே சினிமாவைக் காண முடியும் என்பதே யதார்த்தம்.

சினிமா என்பது, இளைஞர்கள் மற்றும் வசதி படைத்த நடுத்தர வர்க்க சமூகத்திற்கானது என்றாகிவிட்டது. அதன் விளைவாக சினிமா உருவாக்கப் பண்புகளிலும் வெகுவான பாதிப்புகள் நிகழ்ந்துவிட்டது. ஒரு காலத்தில் ஜாதியத்தின் பிடியைத் தளர்த்திய திரையரங்கக் கொட்டகைகளின் மரணம், சினிமா பார்வையாளர்களில் மீளவும் ஒருவிதமான படிநிலையை உருவாக்கிவிட்டிருக்கிறது. அதனை ஜாதியமாக மட்டும் பார்க்கவியலாது எனினும், அடித்தட்டு வர்க்கம் அடித்தட்டு ஜாதிகளால் நிறைந்ததுதான் என்பதை இன்னமும் வலியுறுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. பார்க்கலாம்.

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com