திரையரங்குகளின் எதிர்காலம்

டிராட்ஸ்கி மருது
டிராட்ஸ்கி மருது
Published on

“இந்த தடவை திரையரங்கங்கள் பத்தி  சிறப்புப் பக்கங்கள் பகுதி பண்ணிடலாமா?''

‘‘ஏன்... அதுல என்ன இருக்கு? கலாப்ரியா சாரே இது பத்தி நம்ம இதழ்ல நிறைய கட்டுரை எழுதி இருப்பாரே?''

‘‘அவர்கிட்டயே இன்னும் எழுதாத சினிமா தியேட்டர் அனுபவம் இருக்கும் கேட்டுப்பாரு... தமிழ்நாட்டுல இருக்கிற அஞ்சுகோடிப்பேர் கிட்டயும் சினிமா தியேட்டர் பத்தி ஒரு சம்பவமாவது நினைச்சுப் பார்த்து பகிர்ந்துகிட இருக்கும்.''

‘‘நெசந்தான்.. நான் இந்த ஐடியாவை ஆதரிக்கிறேன்..''

‘‘அப்டியா? முதல்ல உன்கிட்ட இருந்து ஆரம்பிப்போம். என்ன அனுபவம் அப்டி உன்கிட்ட இருக்கு?''

‘‘சின்ன வயசுலர்ந்து சொல்றன். எங்க கிராமத்துக்கு பக்கத்தூர்ல இருக்கிற டூரிங் டாக்கீஸுக்கு போறதுன்னா, மாலை பள்ளிக்கூட உட்டவுடனே ஓடி வந்து சட்டுபுட்டுன்னு குடும்பமே ரெடி ஆவோம். மாமா மாட்டு வண்டியப் பூட்டுவார்.. அம்மா, அத்தை, பக்கத்து வீட்டு பெரியம்மா எல்லாருமா போவோம். பாத்துட்டு திரும்பி வரும்போது லேட் ஆயிடும். வண்டியிலயே தூங்கிடுவேன். அந்த மாதிரி ரெண்டாம் வகுப்புப்படிக்கும்போது பாத்த படம் சகலகலாவல்லவன். அதில் குடுமி வெச்சிகிட்டு இருந்தவர்தான் கமல்ஹாசன்னு சொன்னத நான் நம்பாம சண்ட போட்டது ஞாபகம் இருக்கு.''

‘‘படம் பேரச் சொல்லாத வயசு தெரிஞ்சுடும்.''

‘‘அதுமாதிரி, சினிமா தியேட்டர்னாலே எனக்கு வர்ற ஞாபகம், பால்மணம் மாறாத என்னோட வயசுல படம் பாக்க முண்டியடிச்ச கூட்டத்தில் நான் காணாமல் போய் தடுமாறினதுதான் ஞாபகம் இருக்கு. திடீர்னு பார்த்தா முன்னாடி போன அப்பாவைக் காணல. என்ன செய்றதுன்னு தெரில. திடீர்னு முன்னாடி ரெண்டு கால்கள் போய்கிட்டு இருந்துது... அப்பாதான்னு நெனைச்சு ஓடினேன். அந்த மனிதர் குனிந்து என்னை நிறுத்தி, நான் உன் அப்பா இல்ல... தோ அங்க பாரு உன் அப்பான்னு காண்பிச்சாரு.. அப்பதான் எனக்கே உயிர் வந்தது..''

‘‘ரொம்ப நெஞ்சைத் தொடர அனுபவமா இருக்கே..''

‘‘இன்னும் இருக்கே.. ஸ்கூலைக் கட் அடிச்சிட்டு ஒரு ரூபா டிக்கெட்டுல பாத்த ரஜினி படம் கமல் படம் சத்யராஜ் படம்... வரிசைல நின்னு நசுங்கி சாகப்பாத்தது... காசத் தொலைச்சது,பிளாக்ல டிக்கெட் வாங்கி பெருமையா உள்ள போய் இந்த படத்துக்காடா இவ்வளவு பணம் குடுத்தோம்னு கதறினதுன்னு இன்னும் நிறைய இருக்கே...''

‘‘உனக்கே இவ்ளவு இருக்கே.. தியேட்டர் உரிமையாளர்கள், மேனேஜர்களுக்கெல்லாம் எவ்வளவு இருக்கும்? ஒரே படத்தை தினமும் பாக்கிற வெறி பிடிச்ச ரசிகனோட அனுபவம் எப்படி இருக்கும்?''

‘‘ரொம்ப டெர்ரரா இருக்கும்போல.''

‘‘ஆனா.. இப்படியெல்லாம் சினிமா தியேட்டர் இருக்கும். ஊர்ல அதுல போடற பாட்டை வெச்சிதான் நேரம் தெரிஞ்சிகிடுவாங்க. ப்ரஜெக்டர் ஆபரேட்டர், டிக்கெட் கிழிக்கிறவர், தியேட்டர் மேனேஜர் போன்றவங்கதான் ஊருக்குள்ள பலரும் அடிக்கடி தேடிப்போய் ப்ரெண்ட்ஷிப் வெச்சிக்கிற ஆளா இருந்தாங்கன்னு இப்ப சொன்னா யாரும் நம்புவாங்களா?''

‘‘உண்மைதான். நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இருந்த ஒற்றை தியேட்டர்கள் எல்லாம் இப்ப இடிச்சு கல்யாண மண்டபம், ஷாப்பிங்மால், அடுக்குமாடி குடியிருப்புன்னு ஆயிடுச்சு... ஊருக்கு ஊரு பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் திரையரங்கு பேர்லதான் இருக்கும். இதெல்லாம் சொன்னா நம்மள மேலயும் கீழயும் பார்ப்பாங்க இப்ப இருக்கிற பசங்க.''

‘‘நம் காலத்திலேயே நாம் பார்த்துக்கிட்டிருக்கிற இந்த மாற்றத்தை, சமூகப் பண்பாட்டில் பெரும் தாக்கம் செலுத்திய சின்னங்கள் காணாமல் போறத இந்த இதழ்ல பதிவு பண்ணிடலாம்.... என்ன சொல்றீங்க?''

‘‘ஆண்பாவம் படத்துல வீகே ராமசாமி சொல்வார். ‘நான் ஒரு கோயில கட்டினேன். நீங்க யாரும் சாமி கும்பிடவே வரல. பள்ளிக்கூடம் கட்டினேன். நீங்க யாரும் படிக்கவே வரல..ஒரு சினிமா கொட்டகையைக் கட்டினேன். நீங்கல்லாம் கொட்டு மேளத்துடன் வரவேற்கறீங்க' உண்மைதான் அந்த அளவுக்கு சினிமா கொட்டகை மேல மக்களுக்கு ஆர்வம் இருந்துச்சு...''

‘‘ஆமாமா... நம்ம ஆபீஸ் பையன் ஏதோ சொல்ல வர்றான் போலிருக்கே? என்னப்பா?''

‘‘அப்படியே.. மன்னன் படத்துல பாம்பு வருதுன்னு சொல்லி வரிசைய கலச்சு ரஜினியும் கவுண்டமணியும் டிக்கெட் வாங்குவாங்க... ரஜினிக்கு ஒரு கண்ணாடி கூட ஒடஞ்சிரும்... இதயும் சேத்துக்கங்க.''

‘‘ரைட்டுப்பா.... நாமளே பேசிகிட்டு இருந்தா முன்னுரைக் கட்டுரை ரெண்டு பக்கத்த தாண்டி போயிடும். சிறப்புப் பக்கங்கள் பகுதிக்குப் போகலாம்.. ரை.. ரைட்!.''

(அந்திமழை ஆசிரியர் குழுவின் உரையாடலை ஒட்டுக்கேட்டு(!) எழுதியவர்: செல்வன்)

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com