திருமதி. கி.ரா. (கணவதி அம்மையார்) அவர்களுக்கு தீப.தங்கம்மாள் (ரசிகமணி டி.கே.சி.யின் பேத்தி) எழுதியது.

திருமதி. கி.ரா. (கணவதி அம்மையார்) அவர்களுக்கு தீப.தங்கம்மாள் (ரசிகமணி டி.கே.சி.யின் பேத்தி) எழுதியது.
Published on

அன்புள்ள பிள்ளையார் அம்மாவுக்கு,

‘என்னம்மா ஒரே அடியாத்தான் கொஞ்சிகிட்டு இருக்கேங்க‘. ‘யார் அம்மா கொஞ்சுகிறது. நீங்களா? நானா? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் நீங்க என்னண்ணா ஒவ்வொரு கடிதத்திலும் பங்காரு அம்மா, அபரஞ்சி அம்மா என்று என்னத்தையாவது எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். அப்படியாவது அர்த்தத்தையாவது சொல்லித்துலைக்கிறீர்களா? அதுவும் மாட்டேன் என்கிறீர்கள். பதில் கடிதத்தில் அபரஞ்சி அம்மாவுக்கும், பங்காரு அம்மாவுக்கும் என்ன பாஷையில் என்ன அருத்தம் என்று விவரமாக எழுதி அனுப்புங்கள் தயவுசெய்து. அருத்தம் தெரியாமல் ரெண்டாட்டில் ஒரு ஆடு முளித்த மாதிரி முளித்துக்கொண்டு இருக்கிறேன். நான் பிள்ளையார் அம்மா என்று எழுதியதிற்கு மாத்திரம் நீங்க 2 பலம் கோபப்படுகிறீர்களே? நீங்க இப்படியெல்லாம் எழுதுவதற்கு நான் எத்தனை பலம் கோபமோ படலாமே.

நான் அப்படியா உங்களைப்போல் கோபப்படுகிறேன்?‘ ‘ஐயே நேரில் வந்து பார்த்தால் அல்லவா அம்மா கோபத்தில் உங்கள் முகம் போரபோக்குத் தெரியும். யார் கிட்ட அம்மா வைத்துக் கொண்டீர்கள் உங்கள் டூப்பெல்லாம். அதெல்லாம் இந்த ஆசாமிகிட்ட நடக்காது அம்மா நடக்காது.‘ ‘டூப்பும் இல்லை கீப்பும் இல்லை, நிசமாகவேத்தான் சொல்லுகிறேன். வேணுமானால் நீங்கள் இங்கு வந்து நேரில் நான் கோபப்படுகிறேனா இல்லையா என்று பாருங்களேன்‘. ‘நான் வந்த நேரம் கோபப்படாமல் இருப்பீர்கள்.

நான் ஊருக்கு திரும்பியதும் கோபப்படுவீர்கள்‘. ‘இது என்னடா தொல்லையாக இருக்கிறது அப்படின்னா இப்படி இப்படினா அப்படி என்று கொண்டு இருக்கிறது‘ ‘என்ன இருக்கிறது? யானையா பூனையா இருக்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லையோ? இல்ல கேட்கிறேன்‘ ‘அம்மா தாயே மகாலச்சுமி, வாய் தவறி வந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் அப்படி எல்லாம் சொல்லவில்லை. தப்பு தப்பு தப்பு. இது எதற்கு இவ்வளவு சண்டை போட வேண்டும். நான் முதல்க் கடிதத்தில் கேலியாக பேர் எழுதிவிட்டு மறு கடிதத்தில் உங்கள் பேரை எழுதி இருந்தேன் அல்லவா? அதை மாதிரி நீங்களும் இரண்டாவது கடிதத்தில் என் பேரை எழுதி இருந்தால் இவ்வளவு சண்டை வந்து இருக்காது அல்லவா? இனிமேல் நீங்களும் இப்படி எல்லாம் எழுதாதீர்கள். நானும் எழுதவில்லை.

இப்படியெல்லாம் எழுதாவிட்டால் நம்மளுக்குள் சண்டை வராது அல்லவா? இது எதற்கு வம்பு சண்டையும் கொண்டையும் போட்டுக்கொண்டு இருக்கவேண்டும்?‘ ‘என்னம்மா கொண்டையும் போடவேண்டாம் என்றா சொல் லுகிறீர்கள்?‘ ‘கொண்டை போடாவிட்டால் என்ன? ஜடை பின்னிப்போட்டுக் கொள்ளவேண்டியதுதானே? கொண்டை போடுவதற்கு நமக்கு என்ன அப்படியா வயசு ஆய்விட்டது? ரொம்ப வயசு ஆனவர்கள்தானே கொண்டை போடுவார்கள்? நம்ம இருவருக்கும் வயசுதான் ஆகவில்லை என்றால் பார்ப்பதற்காவது பெரிய ஆளாக இருக்கிறோமா? அதுவும் இல்லை. நீங்களும் சின்னப்பிள்ளை மாதிரித்தான் இருக்கிறீர்கள். நானோ கேட்கவே வேண்டாம். நீங்களாவது சிறு பிள்ளை மாதிரியாவது இருக்கிறீர்கள். நான் என்னடா என்றால் குட்டைச் சுரைக்காய் மாதிரியேதான் இருக்கிறேன். ஆகையால் நம்ம இரண்டு பேரும் இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜடை பின்னிப் போட்டுக் கொள்ளலாம் அல்லவா?

தங்கள் கடிதமும் பொங்கல் வாழ்த்தும் கிடைத் தது ரொம்ப சந்தோஷம். இது நாள்வரை பதில் போடாததற்கு வருந்துகிறீர்களா? வருத்தப்படாதீர்கள். இங்கு ஒரு சந்தோஷ செய்தி நடந்தது. ஆகையால்தான் இதுநாள் வரை தாமதம் ஏற்பட்டது. ‘அது என்னம்மா சந்தோஷ செய்தி? அதை என்னிடம் சொல்லக் கூடாதா?‘ ‘உட்காருங்கள் சொல்லுகிறேன். அதாவது என் நாத்தனா. நாத்தனா என்றால் என் சொந்த நாத்தனா இல்லை. வாடகைக்கு வாங்கின நாத்தனா.‘

‘இது என்னடா கூத்தா இருக்கு. சொந்த நாத்தனா என்றால் என்ன வாடகைக்கு வாங்கின நாத்தனா என்றால் என்ன’ என்று நினைக்கிறீர்களா?

சொந்த நாத்தனா என்றால் மீனா அப்பாகூட பிறந்த தங்கை. வாடகைக்கு வாங்கின நாத்தனா என்றால் அவர்களுக்கு வேறு எந்த வழியிலாவது தங்கையாக இருக்கவேண்டும். என்ன புரியரதா இல்லையா?‘ ‘ஊம் ஊம் புரிகிறது புரிகிறது. அப்புறம் அந்த வாடகைக்கு வாங்கிய நாத்தனாக்கு என்ன? குறையும் சொல்லுங்கள்’. ‘அந்தப் பிள்ளை பாளையங்கோட்டை காந்திமதி பள்ளிக்கூடத்தில் ருது ஆய்விட்டாள். அந்தச் சமயத்தில் அவள் அப்பாவும் அம்மாவும் தென்காசி ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக முடியாததால் எங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்து 10 நாள் கழித்து சடங்கு விசேஷம் நடத்தி திரும்பவும் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டோம். அந்தப் பெண் இருந்ததால் அந்தப்பெண்கூட பல்லாங்குளி, தாயக்கட்டம், சீட்டு எல்லாம் விளையாடிக்கொண்டு இருந்தேன்.

பொழுது போகிறது தெரியாமல் போய்விட்டது. ஆகையால்தான் உங்களுக்கு கடிதம் எழுத நேரமில்லை. இந்த விளையாட்டில் பாதிநேரம் போய்விடும்.

அவளுக்கு புட்டு, களி, பருப்புச்சோறு எல்லாம் வேலையாட்களை செய்ய சொல்லுகிறதில் பாதி நேரம் போய்விடும்.

‘பொய் தானே! சொன்னேங்க’ ‘யாரு நானா என்ன பொய் சொன்னேன் என்றா கேட்கிறீர்கள். அன்று ஒருநாள் உங்களைமாதிரி எனக்கு வக்கணையாக கடிதம் எழுத தெரியாது. அப்படி இப்படி என்று. இப்போ எனக்கு எழுதின கடிதத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறீர்களே. அடி சக்கே பொடிமட்டே உங்கள் சார்வாள் கி.ரா.கிட்டே மார்க்கு கூட 10/100 வாங்கி இருக்கிறீர்களே?

எங்கள் ஊர்க்கோயிலில் ஒரு கலியாணம் தை 29ந்தேதி நடக்கப் போகிறது. ‘கலியாணம் கோயிலில்லா அது யாருக்கு அம்மா?’ ‘அது ஒருத்தருக்கும் இல்லை. வேப்பமரத்துக்கும் அரசமரத்துக்கும். ..ஈஸி ஈஸி... என்னம்மா விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள்?’ ‘பின்ன என்னம்மா? மரத்துக்கு கலியாணம் என்று சொல்லுகிறீர்கள், சிரிக்காமெ என்ன செய்கிறது?’ ‘அப்படினா நான் சும்மா விளையாட்டுக்கு சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?’ ‘அதெல்லாம் இல்லை நிஜமாகவேதான் சொல் லுகிறேன். மரத்துக்கு கலியாணம் நடக்குமா நடக்காதா என்று நீங்களே வேண்டுமானாலும் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். இல்லாவிட்டால் இங்கு வந்து நேரிலே பார்த்தே சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாமே? கட்டாயம் கல்யாணத்திற்கு வந்துவிடுங்கள்.’

‘ஏ அம்மாடி என் கையும் குருக்கும் வலிக்கிறதே.’ ‘ஏன் உங்களுக்கு உடம்பு சௌகரியம் இல்லையா?’ ‘உடம்பு எல்லாம் சௌகரியமாகத்தான் இருக்கிறது. எல்லாம் உங்களால்தான் வலிக்கிறது’ ‘என்னாலா அது என்னம்மா என்னால் என்கிறீர்கள்? நான் என்னம்மா செஞ்சேன்?’ ‘நீங்கதானே அம்மா 8 பக்கம் கடிதம் எழுதச் சொன்னீர்கள். 8 பக்கம் எழுத 4 மணி நேரம் ஆகி இருக்கிறது. ஒரே அடியாக 4 மணி நேரம் எழுதியதால்த்தான் எனக்கு குருக்கு வலிக்கிறது. இனிமேல் எல்லாம் என்னால் இப்படி எல்லாம் எழுத முடியாது அம்மா’

மற்றப்படி இங்கு யாவரும் சுகம்.

இப்படிக்கு

தீப.தங்கம்மாள்.

பின்குறிப்பு:

இலக்கியப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேத்தியார் எழுதிய இக்கடிதம் கேலியும் கிண்டலும் எள்ளலும் மிக்கதாய், பாமரத்தனம் நிரம்பியதாய்த் திகழ்கிறது.

ரசிகமணி அவர்களின் ரசிப்புத் தன்மையும், அங்கதச் சுவையும் நிகழ்ச்சி விவரணையும் இக்கடிதத்திலும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கைத்துணைவிக்கு எழுதிய கடிதம் இது. பெண்களின் தனிமை வாசிப்பிற்கான இக்கடிதம் பொது வாசிப்பிற்கு இப்போது வருகிறது. பெண்களின் மனம்சார் பதிவாக இக்கடிதம் திகழ்கிறது.

கடிதச்சேகரம்: கழனியூரன்

மே, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com