எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீதான ஆர்வம் இருந்தது. திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் தான் என்னுடைய பால்யகாலம் கழிந்தது. எங்கள் ஊரில் நிறைய தியேட்டர்கள் இருந்தாலும் புவனேஸ்வரி, கன்னியப்பா என்ற இரண்டு தியேட்டரில் நிறையப் படங்களை பார்த்திருக்கிறேன். இயக்குநர் வசந்தபாலன் ‘வெயில்‘ திரைப்படத்திற்கான தியேட்டர் காட்சிகளை கன்னியப்பா தியேட்டரில் தான் படம் பிடித்தார். பிறகு அந்த தியேட்டரை இடித்துவிட்டனர்.
கன்னியப்பா, புவனேஸ்வரி தியேட்டருக்கு போட்டியாக திருக்கழுகுன்றத்தையே சேர்ந்த தேவதாஸ் என்பர் அண்ணா என்ற பெயரில் புதிய தியேட்டர் ஒன்றை திறந்தார். அந்த தியேட்டர் என்னுடைய வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. கீற்றுக் கொட்டையாக இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு பாடல்களை ஒலிக்கவிடுவார்கள். முதலில் ‘காக்கும் கடவுள் கணேசனை நினை‘ என்ற விநாயகர் பாடலையும், பிறகு இந்தி பாடல்களையும் தான் போடுவார்கள். தியேட்டரில் ஒலிக்கும் பாடல் அப்போது பலருக்கும் கடிகாரமாக இருந்தது.
அத்தியேட்டருக்கு பின்னாடி ஒரு ஓட்டை இருப்பதை என்னுடைய அண்ணன் கண்டுபிடித்தான். படம் ஆரம்பித்த பதினைந்து நிமிடங்கள் கழித்து அந்த ஓட்டை வழியாக தியேட்டருக்குள்ளே வருவோம். இரண்டு,மூன்று முறை அந்த ஓட்டை வழியாக சென்று படம் பார்த்தோம். பின்னர் ஒருநாள் மாட்டிக்கொண்டோம்.
தியேட்டரில் பெஞ்சு இருக்காது. முழுவதும் மணல் தான். படம் பார்க்க வரும் ஆண்கள் பிடித்த பீடி துண்டை மணலில் புதைத்து விடுவார்கள். தியேட்டர் முழுவதும் பீடி நாத்தமாக இருக்கும். பெண்கள் தியேட்டருக்கு வந்தால், சாப்பாடு செய்து எடுத்து வந்து சாப்பிடுவார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் வந்தால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே டிக்கெட் வாங்க சென்றுவிடுவோம். தோள் மீது ஏறிச் சென்று டிக்கெட் வாங்கியிருக்கிறோம்.
மே, 2022