திரு தொண்டனின் தேர்தல் புராணம்

திரு தொண்டனின் தேர்தல் புராணம்
Published on

சந்திப்போம் சந்திப்போம்... ’67-ல் சந்திப்போம் என்று மாவட்ட மகாநாடுகள் தோறும் முழங்கி வந்த 1967வந்து விட்டது. பிப்ரவரி 21 ல் தேர்தல். வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டாயிற்று. திருநெல்வேலிக்குப் புதுமுகமான இளைஞர். அங்கங்கே தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. திருநெல்வேலி டவுனில், காந்திமதி அம்மன் கோயிலுக்கு எதிர்த்தாற் போல் சி.த.கோ.இ.பெருமாள் பிள்ளை ஜவுளிக்கடை நொடித்துப் போய், துணிகள் எதுவும் அடுக்கப் பெறாமல்  வெறும் அட்டங்கள், எலும்புக்கூடு போல் காட்சியளிக்கக் கொஞ்ச நாள் வெறுமனே திறந்து மட்டும் இருந்தது. அப்புறம் அதை யாரோ விலைக்கு வாங்கி விட்டார்கள். அதில் புதிய கடை வைக்க பலருக்கும் யோசனை, அதனால் அடைத்துக் கிடந்தது. அதை தி.மு.க தேர்தல் அலுவலகம் வைக்க வாடகைக்குக் கேட்டதும் கொடுத்து விட்டார்கள். அடைத்தே கிடந்த கடை, ஆட்கள் வரவும் போகவுமாக ‘கல கல’வென்று மாறி விட்டது. கடை நீளத்திற்கும் அதன் முன்னால் ஐந்தடி அகலத்திற்கு,‘வேனல்ப்பந்தல்’ போலப் போட்டு, ஓரமாக குளத்திலிருந்து கரம்பையைப் பாளம் பாளமாகப் புல்லுடன் வெட்டிக் கொண்டு வந்து பாத்தி கட்டியது போல் அடுக்கி, அதற்குள் ஆற்று மணல் அடித்து, பெரிய மண்பானையில் தண்ணீர் பிடித்து வைத்து.. அந்த இடமே பிப்ரவரி மாத முன் கோடையில், ஏதோ பாலைவனச் சோலை போல இருந்தது. கரம்பை வெட்டி வந்தது, மணல் அள்ளி வந்து கொட்டியது, எல்லாமே தினசரி காய்கறி மார்க்கெட், அண்ணாச்சிகளும் தம்பிகளும்தான். மார்க்கெட்டில் இலை வியாபாரம் பார்க்கும், இ.நம்பி அண்ணாச்சிதான் நகரச் செயலாளர். மார்க்கெட்டில் ஒரு தொண்டர் படையே இருந்தது. இவ்வளவுக்கும் அவரும் சீட் கேட்டிருந்தார், கிடைக்கவில்லை.

அன்று ஞாயிற்றுக் கிழமை, கல்லூரி கிடையாது, இருந்தாலும் போகப் போவதில்லை. கல்லூரிப் பக்கம் போய் ஒரு வாரத்திற்கு மேலாகியிருந்தது. எம்.ஜி.ஆர். சுடப்பட்டு, பொங்கல் விடுமுறை வந்து, தேர்தல் மும்முரமாகி விட்டது. ’வோட் லிஸ்ட்’ வந்திருந்தது. அதை வாக்காளர் பட்டியல் என்று நாங்கள்தான் சொல்ல ஆரம்பித்தி ருந்தோம். இன்னும் முழுதாக அந்த வார்த்தை பழகாததால், நாங்களே கொஞ்சம் தயக்கமாகவே சொல்லுவோம். சாதாரணப் பேச்சில் ‘ஓட் லிஸ்ட்’ தான் அன்றையப் புழக்கம். காங்கிரஸ் விளம்பரங்களில்,  காங்கிரஸ்‘அபேட்சக’ராகிய மகாராஜபிள்ளைக்கு இரட்டைக்காளை சின்னத்தில் ‘ஓட்’ செய்யுங்கள் என்றுதான் இருக்கும். இங்கே, “உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்”.  அதிகாரபூர்வமான கட்சி விளம்பரச் சுவரொட்டிகள் வரும் வரை, ஒன்றிரண்டு தெருக்களில் திமுகவினர் “ஏ.எல்.சுப்பிரமணிய பிள்ளைக்கு, வாக்களியுங்கள்” என்று தட்டி போர்டு எழுதி வைத்திருந்தார்கள். அப்புறம் அதை நீக்கும்படிச் சொல்லி விட்டார்கள். “தம்பி, நீங்க 11வது வார்டுதானே, உங்க வார்டு வோட் லிஸ்டை வாங்கிட்டுப் போயிருதீங்களா”, என்று கேட்டார் நம்பி அண்ணாச்சி. . உங்களைப் பார்க்கத்தானே வந்திருக்கேன் என்று நினைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆர் குண்டடி பட்டு கழுத்தில் பிளாஸ்டர் போட்டிருக்கும் சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டு இரண்டு மூன்று நாட்களாகியும் அதன் பரபரப்பு அடங்கவில்லை. எங்கள் தெருவில் ‘பார்வையான’ இடத்தில் ஒட்டவில்லை. என் தனிச் சேகரிப்பிற்கும் தேவையாய் இருந்தது. அதனால் அந்தப் போஸ்டர் வாங்கப் போயிருந்தேன்.அதற்குப் பெரிய ‘ரேஷன்’ அப்போது.

வாக்காளர் பட்டியல் வாங்கிய கையோடு ரகசியமாக போஸ்டர் கேட்டேன். அவர், “இப்ப உனக்கு குடுத்தேன்னா பெரிய ஆவலாதியாயிருண்டே.. குடுத்து விடுதேன்,” என்றார். என் முகம் வாடுவதைப் பார்த்து, “இல்லேன்னா நீ நைட்ல வா...நாம்லா தாரேன்...” என்றார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதிகப் படியான போஸ்டர்கள் வந்தப்புறம் தந்தார், அதற்குள் நான் ஜங்ஷன் நண்பர்களிடம் வாங்கி வந்து விட்டேன்.

வாக்காளர் பட்டியலைப் பிரதி எடுப்பது அப்போது பெரிய வேலை. குயர் குயராக வெள்ளைத்தாள் வாங்கி கோடு போட்டு, (கோடு போட்ட தாள் வாங்கினால் விலை குயருக்கு 10 பைசா அதிகம்) கார்பன் வைத்துப் பிரதிகள் எடுக்க வேண்டும். பால் பாயிண்ட் பேனாவும் கொஞ்சம் அபூர்வம். அதனால் ‘காப்பியிங் பென்சில்’ வைத்து எழுத வேண்டும். அதை தண்ணீரில் முக்கி எழுதினால் அழகான வைலட் நிறத்தில் எழுதும். ஆனால் தாள் நனைந்து விடும். காப்பியிங் பென்சில் என்றால் இப்போது தெரியுமோ என்னவோ. அதில் எழுதினால் ரப்பர் வைத்து அழிக்க முடியாது. வாக்களர் பட்டியல் பிரதி எடுத்ததும் வீடு வீடாகப் போய் குறிப்பிட்ட வாக்களர்கள் இருக்கிறார்களா, அவர்கள் வேறு எங்கும் வீடு மாறி விட்டார்களா என்றெல்லாம் குறிப்பெடுப்போம். எந்த வீட்டின் அடுக்களை வரையும் போய் விடுவேன்.

ஒவ்வொரு தெருவிலும், வார்டிலும் இதே வேலை நடக்கும். காங்கிரஸ் கட்சிக்கு தொண்டனே கிடையாது. எங்கள் தெருவில் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களுக்கு தினமும் ஐந்து ரூபாய் சம்பளமும்,போத்தி ஓட்டலில் டிஃபன் சாப்பிட்டுக் கொள்ள கணக்கும் உண்டு. எங்களைப் பார்த்தாலே தலை கவிழ்ந்தபடி போவார்கள். ஒருவர், ‘மண்டல காங்கிரஸ் கமிட்டியின் காரியதிரிசி’ மகன். ஒருவர் குருவிக்குளம் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்தார். இரண்டு பேருமே ஒருநாள், நல்ல உச்சி வெயில், என்னிடம்,“எங்களைத் தப்பாக நினைக்க வேண்டாம்.” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “வாரும் வேய், ஒரு பழ சர்பத் சாப்பிடுவோம்...” என்று அழைத்தார்கள். கோழிக்கோடு பழம்போட்டு,‘ஜில்விலாஸ்’ நன்னாரி

எசன்ஸ் விட்டு, பழ சர்பத் அப்போது ஃபேமஸ், ஆனாலும் நான் மறுத்து விட்டேன். அதை இங்கே எங்களுக்குள் பகிர்ந்து கொண்டபோது “ஏலெ, சர்பத்தெல்லாம் வேண்டாம், நைசா ரெண்டு பால்பாயிண்ட் பேனா ‘லாத்தி’த் தரச் சொல்லுலே...” என்றார்கள். அப்போது ரீஃபில் கூட சுலபமாகக் கிடைக்காது. இரண்டுக்கு மூன்றாகக் கொண்டு வந்து தந்தார்கள். “ஏல, ரெட்டைக் காளைப் பேனா சோக்கா உழுதுலெ...” என்று கிண்டலும் கேலியுமாக, பிரதியெடுக்கும் வேலை  வேகமாக நடந்தது.

அது முடிந்தால் பூத் ஸ்லிப் எழுதும் வேலை, டோர் ஸ்லிப் ஒட்டுவது. இது போக ஒன்றிரண்டு தட்டி போர்டுகள் எப்போதும் தயாராக இருக்கும். மூங்கிலைச் சீவி பின்னிய ‘பிரப்பம் பாய்’களை சட்டத்தில் அடைத்துச் செய்தவை தட்டி போர்டுகள். அவசரமான நேரங்களில் தகவல்கள், அறிக்கைகள் பொதுக்கூட்ட அறிவிப்புகள் எழுதி ஒட்ட உதவியாய் இருக்கும். மண் உலை மூடிகளில் வர்ணப் பொடிகளைக் கரைத்து, வச்சிரம் காய்ச்சிக் கலந்து வைத்திருப்போம். சுவர் விளம்பரங்களை நாங்களே எழுதி விடுவோம். உதயசூரியன் வரைவது எளிது. ( பின்னால் இரட்டை இலையை அதை விட எளிதாக வரைந்தோம்.) ஆனால் ‘இரட்டைக்காளை’ வரைய கடினம். ‘பசுங்கிளி’ என்று ஒருவர், சைன் போர்டு ஓவியர்.. அவர்தான் வரைவார். அவர் தி.மு.க கரை வேட்டிக் கட்டிக் கொண்டுதான் அதையும் வரைவார். எனக்கு அணுக்கமானவர். அவர் வீட்டிற்கெல்லாம் போயிருக்கிறேன். மாடியிலிருந்து கடைகளின் பெயர்ப்பலகை எழுதுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அம்பர் கலரையும் நீலத்தையும் சேர்த்து கருப்புக் கலர் தயாரிக்க அவர்தான் சொல்லித் தந்தார். தனிக் கருப்புப் பொடி தண்ணீரில் மிதக்கும், சீக்கிரம் கரையாது.

எங்கள் தெருவில் காங்கிரஸ்ஸிற்கு ‘இரட்டைக் காளை’ வரைந்த கையோடு நாங்கள் சுவர் விளம்பரம் எழுதுவதை மேல்ப்பார்த்து யோசனைகள் சொல்லிக் கொடுத்தார். வாசகம் எழுதுவதற்கு முன் நாங்கள் ஸ்கேலை வைத்து கோடுகள் போட்டு அதற்கிடையில் எழுதிக் கொண்டிருந்தோம். “இது வேலைக்காகுமா தம்பி, விடிய விடிய எழுதினாலும் ஒரு சொவர் கூட எழுத முடியாதே..” என்று சொல்லி விட்டு நீளமான பம்பரக் கயிறை லேசாக வர்ணத்தில் நனைத்து இரண்டு முனைகளையும், இரண்டு பேரைச் சுவரையொட்டிக் கயிற்றைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டு லேசாகக் கிள்ளுவது போலப் பிடித்து இழுத்து விட்டார். அழகான கோடு விழுந்தது சுவரில். “இப்ப எழுதுங்க, வாசகம் அச்சடிச்ச மாதிரி வருமே...” என்றார்.“தம்பிகளா, இது எதுக்கு கஷ்டப் படுதிய”, என்னைக் காண்பித்து, “நாளைக்கு தம்பிய அனுப்புங்க, அழகா தகரத்துல ஸ்டென்சில் வெட்டித் தாரேன்..வச்சுகிட்டு ரெண்டு தடவை மேலருந்து கீழா ப்ரஷ்ஷை வச்சு இழுத்தா வேலை சுளுவா முடிஞ்சுருமே...”என்று சொல்லி விட்டு மறு நாள், நான் பார்க்கவே “உங்கள் சின்னம் உதயசூரியன்..தேர்தல் நாள் 21-2-1967” என்று தகரத்தில், எழுத்தும் படமும் வெட்டிக் கொடுத்தார். ஜாக்கிரதையாக அவர்  வெட்டும் போதுதான் ஏன் அந்த மாதிரி விளம்பரங்களில் எழுத்துகளின் குறுக்கே வெள்ளைக் கோடுகள் வருகின்றன என்று புரிந்தது. குழந்தைகளுக்கு ப்ராஜெக்ட் ஒன்று செய்து தரும் போது, இந்தப் பட்டறிவு எனக்கு உதவியாக இருந்தது. (உழைப்புக்கு, என்ன ஒரு காலம் கடந்த பயன்..!)

தெருவுக்குத் தெரு கூட்டங்கள் நடத்துவார்கள். ஒரு கூட்டம் நடத்த பேச்சாளருக்கு ஐம்பதிலிருந்து நூறு, மைக் செட், மேடை(அதுகூட நாலைந்து வீடுகளில் நல்ல கட்டில்களாக வாங்கி, ஒப்பேத்தி விடலாம்.) ஒரே ஒரு மாலை அல்லது துண்டு, இருநூறு ரூபாய்க்குள் முடித்துவிடலாம். ஆனால் அதைச் சேகரிக்கவே சிரமம். நாமொரு தெருவில் போய் பணம் பிரிக்கப் போனால் அவர்கள் பதிலுக்கு ஒரு நாற்பது பக்க நோட்டை நீட்டுவார்கள்... “நாங்களும் கூட்டம் போடறோம்ல்லா, ‘நன்னிலம் நடராசன்’ வாராரு. நீங்க யாரைக் கூப்பிடறீங்க, போலீஸ் கண்ணனையா....” என்பார்கள். ஆனால் எப்படியும் ஏதாவது காசு பெயரும். இதெல்லாம் மொய் எழுதுவது மாதிரித்தான். யாராவது ஐந்து ரூபாய் தந்தால் அவர்தான் கொடைவள்ளல். அப்புறம் கூட்டம் நடக்கும் போதே,துண்டு ஏந்தி வசூல் செய்வோம். அதில் முப்பது நாற்பது கிடைக்கும். கண்டிப்பாக வேர்க்கடலை விற்கும் தோழர் ஒருவர், காசு சேராவிட்டாலும் ஒரு உழக்கு கடலைப் பொட்டலம் தருவார். புட்டாரத்தி அம்மன் கோயில் முன்பாக தமிழரசி கூட்டம் நடந்தது. அவரது பேச்சின் ஹைலைட் தியாகி அரங்கனாதன் தீக்குளித்து இறந்ததை விவரிப்பதுதான். அதை, பேச்சின் கடைசியில்தான் சொல்லுவார்.

நாங்கள் போன போது நேரமாகி விட்டது. மேடைக்கருகே தெருவில் இடமே இல்லை. தெரு அடைத்து தரையில் உட்கார்ந்திருந்தார்கள்.சாதாரண நாளில் அங்கே மாடுகளும்,வண்டியும் ஒரே நெருக்கடியும் அசிங்கமுமாக இருக்கும். நாங்கள் கோயில் மேலே ஏறி விட்டோம். ஒருத்தன் ஏறினால் போதும் அவன் கையைக் காலைப் பிடித்து எல்லோரும் ஏறி விடுவோம். கொஞ்ச நேரம் கழித்துத்தான் மூத்திர வாசனை ஆளையே கிறங்க வைத்தது. கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு முடுக்குதான் அந்த ஏரியாவிலுள்ள எல்லோருக்குமே‘ஜலதாரை’ போலிருக்கிறது. அதோடு மேடைக்கும் எங்களுக்கும் இடையே ஒரு தெரு விளக்கு. அதன் குண்டு பல்பைத் தாண்டி மேடையில் உள்ளவர்களைப்  பார்க்கமுடியாமல் கண் கூசிற்று. யாரோ போஸ்டில் ஏறி பல்பைக் கழற்ற அது கையைச் சுட தொபீலென்று கீழே விழுந்தது. போலீஸ் சத்தம் போட்டு கீழே இறங்கச் சொன்னார்கள். அதில் ஒரு ஏட்டு நயம் காங்கிரஸ்காரர். ஆனால் அவர் கொஞ்சம் உணர ஆரம்பித்திருந்தார்.. “நாளைக்கு இந்த முடிவானுவ ஆட்சிக்கு வந்தாலும் வந்துருவானுவோ...” என்று சொன்னதாகச் சொல்வார்கள். பேச்சு முடியப் போகும் தருணம்...மணி பத்து ஆகி விட்டது..என்று பேச்சை முடிக்கச் சொன்னது போலீஸ். மைக் செட்டையும் விளக்குகளையும் அணைத்து விடவே பேச்சாளர், எல்லோரையும் அருகே அழைத்து நிற்கச் சொல்லி மைக் இல்லாமலே பேசினார். கூட்டம் முடிந்ததும் மைக்கைப் பிடுங்கிய எஸ்.ஐ-ச் சுற்றிக் கொண்டார்கள் சிலர். நாங்கள் கிளம்பி விட்டோம். எங்களுக்கு தெளிவாகச் சொல்லப் பட்டிருந்தது, “நீங்க எல்லோரும் படிச்சு வேலை சோலின்னு போகப் போறவங்க, ஏதாவது ரிக்கார்டு ஆகாம காரியம் பார்க்கணும்,” என்று. ஆனால் அதையெல்லாம் கேட்கிற வயசுமில்லை, பயமுமில்லை அப்போது.

எங்களுக்கு விருதுநகருக்குப் போய் இரண்டு நாளாவது தேர்தல் பணி செய்ய வேண்டும் என்று ஆசை துடித்தது. புறப்பட்டும் விட்டோம். 35 மைல்களுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு ரயில்தான் அப்போதெல்லாம். மத்தியானம்,திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்புவதாக யோசனை.   ஆனால், காலைப் பத்திரிகையில் தேர்தல் பணி செய்து வந்த மாணவர்கள் மொட்டை மாடியில் இருந்து தூக்கத்தில் உருண்டு விழுந்து காயமடைந்ததாகச் செய்தி வந்திருந்தது. இதைப் பார்த்ததும் எங்களைப் போக விடவில்லை. இதில் ஏதும் அரசியலிருக்கலாம் என்று நினைத்தார்களோ என்னவோ. ஆனால் அங்கிருந்து வந்து என்னுடன் கல்லூரியில் படித்து விடுதியில் தங்கியிருந்த ஆயிரங்காத்தான் சொன்னான், இந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் இருப்பதாகவும், தாய்மார்கள் மத்தியில் இது கொதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும். மாணவர்கள் எல்லோரும்,ஆளுக்கொரு மூட்டைப்பூச்சி மருந்து பாட்டிலோடு அலைவதாகவும், வீட்டில் அம்மாக்களிடம், சீனிவாசன் ஜெயிக்கலைன்னா, நாங்க மருந்தைக் குடிச்சுருவோம்ன்னு சொல்லிக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். வெளியூர் மாணவரென்றால் நிச்சயம் ஆபத்து காத்திருப்பதாகச் சொன்னான். இதை பின்னால் உணர்ந்தோம். காமராஜர் போட்டியிட்ட நகர்கோயில் எம்.பி இடைத்தேர்தலுக்குப் போகும் போது, எங்களை ஆராம்புளி தாண்டி காரில் போக விடவில்லை. ‘MDT’ என்ற திருநெல்வேலி பதிவு எண்ணைப் பார்தத்தும் ஒரு கும்பல் ஜீப்பில் வந்து மறித்து,“ஒழுங்கா ஊர் போய்ச் சேருங்கலே..”என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.

நாங்கள் விருதை புறப்பட்டவர்கள், ஸ்ரீவைகுண்டம் போய்ப் பார்த்து விட்டு திருச்செந்தூர் போய் விட்டோம். போகும்போது ஒரு வேடிக்கை, அது அரசு பஸ். அப்போது அது ஒன்றுதான் அரசு பஸ். மற்றதெல்லாம் தனியார் மயம். தனியார் பஸ்ஸில் ஒரு சீட் கூட ஸ்டாண்டிங் அனுமதிக்க மாட்டர்கள். இதில் நாங்கள் மூன்று பேர் உட்கார்ந்திருந்த இருக்கையருகே இரண்டு பெண்கள் ஒரு குழந்தையுடன் வந்து  நின்றார்கள். நாங்கள் எழுந்து இடம் கொடுத்தோம். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.நன்றி என்று வாய் திறந்து சொல்லவும் கூச்சம். அவர்களது சந்தோஷத் தடுமாற்றத்தைப் பார்த்த எங்களில் ஒருவன், ‘

‘நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் அம்மா, உங்க ஊர்ல உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கம்மா...” என்றான். “நீங்க சொல்லணுமா அதை..” என்றார்கள். அதையே அசை போட்டுக் கொண்டு வந்ததில் திருச்செந்தூர் சீக்கிரமாக வந்துவிட்டது போலிருந்தது.

மறுநாள் கண்ணதாசன் கூட்டம், காங்கிரஸ்ஸை ஆதரித்து. பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். வழக்கமாக காங்கிரஸ் கூட்டங்களுக்கு ஆட்களே இருக்காது. அன்று நல்ல கூட்டம். கண்ணதாசன் பேச்சை யாருமே கேட்டதில்லை. ஆவலுடன் நாங்களும் நின்றிருந்தோம். கண்ணதாசன் வரத் தாமதமானது. அவருக்கு ‘பேசப்பட்ட வசதி’களைச் செய்து தரவில்லை என்று கோபத்தில் இருப்பதாக ‘காங்கிரஸ் ஏட்டு’ சொல்லிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் ‘அபேட்சகரே’  போய் சமாதானம் செய்து கூட்டி வந்தாராம். வந்தவரும் நன்றாகப் பேசவில்லை. எங்களுக்கு பெரிய ஏமாற்றம். அதை விட காங்கிரஸ்காரர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். “என்னய்யா கவிஞர் இப்படிப் பேசறாரு, கிடைக்கிற ஓட்டையும் கெடுத்திருவாரு போல இருக்கே...”என்று அங்கலாய்த்தார்கள்.

தேர்தலுக்கு முன் தினம், தெருவின் தேர்தல் அலுவலகத்திற்கு வந்த வேட்பாளர், ஒரு ஒரு ரூபாய்க் கட்டை எடுத்தார். பிதுக்கிப் பிதுக்கி எண்ணி பதினைந்து ரூபாய் எடுத்து சிவசங்கரனிடம், டீ சாப்பிட வைத்துக் கொள்ளும்படி நீட்டினார். அவன்தான் எங்களுக்கு லீடர் மாதிரி. “ அண்ணாச்சி, இதையெல்லாம் எதிர் பார்த்து நாங்க வேலை பார்க்கலை... கட்சிதான் பெரிசு...” என்று மறுத்து விட்டான். அவன் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியாக பணி புரிந்து ஓய்வு பெற்றான். நான் வங்கி, ஒருவன் விவசாயம், ஒருவன் நூற்பாலை...ஒருவன் பாத்திரக்கடை முதலாளி என்று திசைக்கொன்றாகப் போய் விட்டோம். எங்களில் யாரும் அரசு வேலையில் சேரவே இல்லை. அரசியல்வாதிகளிடம் போய் நிற்கவுமில்லை. தொண்டனாகவே தொடந்தது எங்கள் வாழ்க்கை.

ஒரு வழியாக எங்கள் வேட்பாளர் 16255 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காலையிலிருந்து ஓட்டு எண்ணும் தாலுகா ஆபீஸ் முன் கால் கடுக்கக் காத்திருந்து, மாலை ஆறு மணி வாக்கில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வரும்போது சாக்பீஸால் தெருவின் தரைகளில் எல்லாம் எழுதிக் கொண்டே வந்தோம். ஏ.எல்.எஸ் 16255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி. இன்னும் பசுமையாய் நினைவிருக்கிறது, இந்த எண்கள். இது மட்டுமா...!

அன்று இரவு 10 மணி கடைசி வானொலிச் செய்திக்காக பஜாரில் கூடியிருந்தோம். அதற்குள்ளாகவே பெரும்பாலான முடிவுகள் தெரியத் தொடங்கி விட்டன.வானொலி அறிவித்தது,“நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரங்கிமலைத் தொகுதி தேர்தல் முடிவு தெரிய வந்திருக்கிறது....” “ஹே....” என்று ஆர்ப்பாட்டம் ஆனால் அதை மட்டும் சொல்லி விட்டு வேறு தொகுதி நிலவரம் பற்றி அறிவிப்புகள் வெளியாகின. லாலா மணி “ஏல வாத்தியார் தோத்துருவாரோ... காமராஜரே தோத்து,ரீகவுண்ட்டிங் நடக்காம்...” என்றான். உள்ளூர ஒரு பயம் தோன்றினாலும், போடா அவராவது தோற்கிறதாவது,” என்றேன். செய்தி முடியப் போகிற 10.13ஐ ஓட்டி,மறுபடியும் அதே அறிவிப்பு., ”நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பரங்கிமலைத் தொகுதி தேர்தல் முடிவு தெரிய வந்திருக்கிறது...பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.எல்.ரகுபதியைக் காட்டிலும்... 27674 வாக்குகள்..... அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்...மறுபடியும் பஜார் எங்கும் டீக்கடைகள் முன்னால் “ஹே...” என்று ஆரவாரம். இருங்கப்பா என்று அடக்கவும், வானொலி,“திரு எம்.ஜி.ஆர் பெற்ற வாக்குகள் 54,106, என்று அறிவித்தது. அதுதான் 1967ல் ஒரு எம்.எல்.ஏ பெற்ற அதிக பட்ச வாக்குகள். தொடர்ந்து திரு ரகுபதி பெற்ற வாக்குகள், 26432 என்று அறிவித்ததைக் கேட்க யாருக்கும் காதுகளே இல்லை. அதை எங்களைப் போன்ற சிலரே கேட்டிருக்க முடியும்.

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com