திடமான மனதின் நிறம்!

பால்காரர்கள்
திடமான மனதின் நிறம்!
Published on

நம்முடைய அன்றாடத்தைத் தொடங்கி வைப்பவர்களுள் முதன்மையானவர்கள் நம் வீட்டுக்குப் பால் , காய்கறிகள் , நாளிதழ்கள் கொண்டுவந்து தருபவர்கள்தான். வீட்டின் அருகிலிருக்கும் மளிகைக்கடையை அடுத்ததாகச் சொல்லலாம். இந்த ஊரடங்கு காலத்தில் உள்ளடங்கிப் போகாமல் நம்முடைய அடிப்படைத் தேவையை நிறைவு செய்பவர்களான இந்த பால்காரர்களுக்கு நம் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடமுண்டு. அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து மாட்டின் மடியில் கை வைத்துக் கறக்கும் ஒருவரின் விரல் வழி வழிவது பால் மட்டும் அல்ல, அவரது உறக்கமும் உழைப்பும்தான்.

தேனி மாவட்டத்தில் சுருளியாறு மின்திட்டத்தில் என் அப்பா பணியில் இருந்தபோது பிறந்தவள் நான் என்பதால் கிராமம் என்கிற சூழல் எனக்கு அதிகம் அறிமுகம் ஆனதே ஆறு வயதுக்குப் பிறகுதான். அப்போது எங்கள் வீட்டுக்கு பால் கொண்டு வருகிற மணி அண்ணாதான் எனக்கு நினைவிலுள்ள முதல் பால்காரர். அந்த காலகட்டத்தில் தபால்காரர் வருகிற பனிரெண்டு மணி சைக்கிள் மணியோசையும், காலை மாலை என இருவேளையும் வருகிற பால்காரரின் சைக்கிள் மணியோசையும் மட்டுமே இருவேறு பிரத்யேக ஓசை கொண்டவையாக இன்னமும் நினைவில் உள்ளது.

இப்போதும் அதே பால்கார மணியண்ணாவின் மகன் சடையாண்டிதான் எங்களுக்கெல்லாம் பால் கொண்டு வருகிற தம்பியாக இருக்கிறார். ஆனால் சைக்கிள் அல்ல அவருடைய வாகனம்.டிவிஎஸ் எக்ஸ்செல் வண்டியில் புதுவிதமான ஓசையை ஒலிக்கச் செய்கிற ஒலிபெருக்கி மணியை இணைத்துள்ளார். அப்பாவிடமிருந்து மகனுக்கு வாகனம் அல்லது மணியின் ஓசை மாறியுள்ளது விஷயமல்ல, ஆனாலும் இன்னமும் அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து பால் கறக்கச்செல்கிறார்.

என்னுடைய பதின்பருவம் முழுக்க விடுதியிலும் விடுமுறை தினங்கள் அப்பா அப்போது பணிசெய்த காடம்பாறையிலுமாகக் கழிந்தது. முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் மட்டும் சில நாட்கள் சொந்த கிராமத்துக்கு வருவதுண்டு.

அப்படியான தினங்களில் நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடையில், எப்போதும் பால் கொண்டு வந்து தருகிற பால்கார மணியண்ணா வரவில்லை. மாறாக அவருடைய ஐந்து வயது மகன், அவன் உயரம் இருக்கும் பால் வாளியைத் தூக்கிக் கொண்டு வருவான். சின்னப் பையன்ட்ட கொடுத்து விடுறாங்களே, அவங்க அப்பா வரலையா என்று விசாரித்தபோது அப்பா வேறு கல்யாணம் செய்துட்டு போயிட்டார். அம்மா கோவிச்சிட்டு, அவங்க அம்மா வீட்டுக்குப் போய் விட்டார்கள். சித்தப்பா அன்னகாமுதான் மணியின் மூன்று குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறார் என்று சொன்னார்கள். தகப்பன் தாய் இருவரின் அண்மையையும் தொலைத்துவிட்டு வளர்ந்த ஒருவன் இன்றைக்கு ஆறு பால் மாடுகளுக்குச்

சொந்தக்காரனாக வளர்ந்து நிற்கிறான். காலை மாலை பால் கறந்து வீடுகளுக்கு ஊற்றுகிற

சித்தப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்துகொண்டே பனிரெண்டாம் வகுப்புவரை படித்து முடித்துவிட்டு, வேறொரு வேலையும் தேடிக்கொண்டிருக்கிறார் சடையாண்டி.

எப்போதாவது மனந்தளர்ந்து இருக்கும்போது என்னை புதுப்பித்துக் கொள்வதற்காக நான் பருகும் காப்பியில் இருப்பது பால் அல்ல, திடமான ஒரு வெள்ளை மனது.

ஆகஸ்ட், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com