நமது வாலிபப்பருவத்தில் நமக்கெல்லாம் ஒரு வியாதி அவ்வப்போது வரும். அதற்கு அலோபதிக் மற்றும் AYUSH என்ற வகையில் வரும் எந்த இந்திய மருத்துவத்திலும் மருந்து கிடையாது!
ஒரு நல்ல சிறுகதை, நாவல் படித்தாலோ, ஒரு நல்ல சினிமா பார்த்தாலோ, அதில் வரும் கதாநாயகனாக தன்னை வரித்துக்கொண்டு சிலமணி நேரங்களாவது வாழ்ந்து பார்த்துவிட மனம் முயலும். நாகர்கோவில் கிருஷ்ணா தியேட்டரில் இரவு செகண்ட் ஷோ சிவாஜி படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, பல சிவாஜிகளைப் பார்க்கலாம். அதே நடை, அதே கையசைவு. பலருக்கு இந்தக்கிறக்கம் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளை எடுப்பது வரை தொடரும். சிலருக்கு சைக்கிளில் ஏறினபிறகும், வலதுகையை வீசி, ‘‘அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்!'' (ஸாரி... இது எம்ஜியார் பாட்டு இல்லே?... இருந்திற்றுப்போட்டுமே!).... என்று கூட பாடத்தோன்றும்!
தில்லியில் இருந்த காலத்தில் எனக்கும் இந்த வியாதி வந்ததுண்டு. என் மனதில் எழுந்த கதாநாயகர்களெல்லாம் சாந்தமானவர்கள்.
சண்டை போடத்தெரியாதவர்கள். அமோல் பாலேகர், Farouk Sheik டைப். தெருவில் நின்று ‘‘வேங்கையன் மகன்....ஒத்தயிலெ வாங்கலே!'' என்றெல்லாம் சொல்லி சொடக்குப்போடத் தெரியாதவர்கள்!
எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ‘பைத்தியமாக'ப் பிடிக்கும். அதுவும் ‘அம்மா வந்தாளு'க்குப்பிறகு ரொம்பவும் பிடிக்கும். எழுபதுகளின் தொடக் கத்தில் கணையாழியில் தொடர்நாவலாக வெளிவந்த ‘மரப்பசு' நான் மாதாமாதம் காத்திருந்து, விரும்பிப்படித்த நாவல்களில் ஒன்று. அப்போதே அது விமர்சகர்களான க.நா.சு, செல்லப்பா, என்.எஸ். ஜகந்நாதன் போன்றவர்களின் புருவங்களை சுருங்க வைத்தது. 1975 - ல் புத்தகமாக வெளிவந்தது.
தி.ஜா. நாவல்களில் ரிப்பெட்டிடிவ்னெஸ் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி எல்லாம் பின்னால் வந்த மரப்பசுவுக்குப் பிறகு நல்ல நாவல்கள் ஆகிவிட்டன என்பாரும் உண்டு. எல்லா விமர்சனங்களுக்கும் ஜானகிராமன் தன் ஒன்றரைக்கண்ணைச் சிமிட்டி, ஒரு நமுட்டுச்சிரிப்போடு தாண்டிப்போய்விடுவார். அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது: ‘‘நாம எழுதறதெல்லாம் காலையிலே பாத்ரூம் போயுட்டு வர மாதிரி! சங்கிலியை இழுத்து விட்டப்புறம் ‘அதை' மறந்துடணும்!'' அவர் இறந்து பல ஆண்டுகள் கடந்தும், தி.ஜா. ஒரு பாலகுமாரன் ஆகிவிட்டார் எனச்சொல்லும் மூன்றாம் தலைமுறையினரும் உண்டு. இன்னொரு பக்கம் எஸ்.ரா. ‘மரப்பசு'வை தமிழின் சிறந்த நூறு நாவல்களில் ஒன்றாக பட்டியலிட்டிருப்பார்.
ஒருசமயம் நான் தில்லி தமிழ்ச்சங்கத்தில் இருந்தபோது, ஓர் ஆஸ்திரேலிய தம்பதியர் தி.ஜா.வின் வீட்டு விலாசம் கேட்டு வந்தனர். சிட்னியில் ஒரு தமிழர் வாராந்திரக்கூட்டங்களில் மரப்பசுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொன்னதாகவும், அந்த நாவல் மிகவும் பிடித்துப்போனதால், தில்லியில் எழுத்தாளரை சந்திக்க விருப்பமிருப்பதாகவும் தெரிவித்தனர். மகிழ்ச்சியோடு வீட்டு விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தனுப்பினேன்.
மரப்பசு கணையாழியில் தொடராக வெளிவந்தபோதோ, 1975 - ல் புத்தகமாக வெளியானபோதோ தில்லியில் இருந்த எழுத்தாளர் அம்பை அது குறித்த விமர்சனங்கள் ஏதும் எழுதினாரா என்பது தெரியவில்லை. தி.ஜா. மறைந்து பதினைந்து ஆண்டுகளுக்கப்புறம் அவர் திண்ணையில் எழுதிய விமர்சனங்கள் படித்திருக்கிறேன். படிக்கும்போது அவர் தரப்பை ஓரளவு ஒத்துக் கொண்டாலும் படித்து முடித்தபின் என் ஓட்டு தி.ஜா.வுக்குத்தான். காரணம் நான் ஒரு ஆண் ஜாதி. அம்பை அவர் பார்வையில் நாவலைப்பார்க்கிறார். எனக்கு சரியென்று படுவது அவருக்கும் சரியென்று பட வேண்டிய அவசியமேயில்லை. தி.ஜா.வின் தீவிர பெண்வாசகர்களுக்கும் மரப்பசுவைப்பற்றிய பார்வை ‘ச்ச்சீ....இப்படியெல்லாம் இருக்குமா?' என்பதாகவே இருந்திருக்கும். Man is a man, Woman is a woman! எத்தனை தான் ‘ஈயங்களிலிருந்து' விடுபட்டுப்பேசினாலும், ஒரு அளவுக்கு மேல் ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் தான் பேசமுடியும். அது தான் இயற்கை...நியாயமும் கூட. தண்டவாளங்களைப்போல். Narrow Gauge, Meter Gauge, ப்ராட்கேஜ் வேண்டுமானால் இருக்கலாம். It can co-exist. ஆனால் ஒரு தொடுபுள்ளி சாத்தியமேயில்லை. We agree to disagree! Period.
‘மரப்பசு' வெளிவந்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு வந்து வசித்த ஒரு பிரபல கவிஞர், எல்லா தமிழ்நாட்டுப்பெண்களும், குறிப்பாக பெண் எழுத்தாளர்கள், அம்மணிகளாக மாறியிருப்பார்களென்ற தீர்மானத்தில், ஒரு பெண் எழுத்தாளரை ‘ஏதோ' கேட்டதாகவும், அதற்கு அவர் தன் செருப்பால் ‘நன்றாக' பதில் சொன்னதாகவும் தலைநகர் வரலாறு ஒன்றுண்டு!
தி.ஜா. மரப்பசு எழுதுவதற்கு முன்பே நான் 1970 - ல் அம்மணி போன்ற, ஆனால் அவளுக்கு நேர் எதிர்திசையில் இருக்கிற ஒரு கதாநாயகியோடு மேடையில் ஐம்பது தடவைகளுக்கும் மேலாக அவள் அண்ணனாக வாழ்ந்திருக்கிறேன். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘மழை' நாடகக்கதாநாயகி நிர்மலா, அம்மணி போல ஒரு பட்டாம்பூச்சியல்ல. ஆழத்துளைத்து உள்ளேயே வாழும் ஒரு மாம்பழ வண்டு! அப்பாவிடமே, ‘‘காலாகாலத்தில் எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு விருப்பமில்லே! ஏன்னா இலவசமா ஒரு நர்ஸ், சமையல்காரி, வேலைக்காரி வீட்டிலியே இருக்கணும்னு ஆசைப்பட்டேள்!' என்று குற்றம் சாட்டுவதையும், வீட்டுக்கு வந்துபோகும் டாக்டர் ஜேம்ஸிடம், ‘‘டாக்டர்! என்னைப்பாத்தா ஏன் இப்படி பயப்பட்றீங்க I need a man....அது நீங்களாகவே இருக்கலாம்!... Doctor! Are all the saints impotent ?' என்றெல்லாம் கேள்விகள் கேட்பவள். அப்பாவின் மரணத்துக்கு தான் தான் காரணம் என்று பிடிவாதமாக நம்புபவள். சிக்மண்ட் ஃப்ராயிடை கரைத்துக்குடித்தவள்! இ.பா.வின் இந்த நாடகத்தை பலமுறை மேடையேற்றினோம். பிறகு மேடையேறிய ‘போர்வை போர்த்திய உடல்கள்' நாடகத்தின் கதாநாயகி வசந்தி இன்னொரு வகை.
மரப்பசு எனக்கு பிடித்துப்போனதற்கு தி.ஜா. என் வீட்டுக்கு வந்துபோகும், நான் மதிக்கும் ஒரு நண்பர் என்பதாலும் கொஞ்சம் இருக்கலாம். அவரது கஸ்தூர்பா காந்தி மார்க் வீட்டில் அவர் வீணை வாசித்துக்கேட்டிருக்கிறேன். அவர் என்னை ‘இயக்கி'யிருக்கிறார். ஆமாம்! ஆல் இந்தியா ரேடியோ அப்போது வியாழக்கிழமை தோறும் இரவு 9.30 PM 11.00 PM, National Programme of Plays என்ற நிகழ்ச்சியை ஒலிபரப்பி வந்தது. இந்தியமொழிகளில் வெளியான புகழ்பெற்ற நாடகம் ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை பெங்காலி, குஜராத்தி போன்ற அனைத்து இந்தியமொழிகளிலும் மொழிபெயர்த்து, தயாரித்து ஒரே இரவில் ஒலிபரப்பியது. கர்நாடகாவில் கன்னடத்திலும் அஸ்ஸாமில் அஸ்ஸாமியிலும் ஒரே சமயத்தில் கேட்கும் வாய்ப்பளித்த நல்ல நிகழ்ச்சி அது. ஒருமுறை ‘காவ்ய ராமாயணம்' கே.எஸ். ஸ்ரீநிவாசன் (அம்புலுபுத்ரன்) எழுதிய ‘சந்தி' என்ற நாடகம் தேர்வாயிற்று. (இதை அதற்கு முன்பு மேடைநாடகமாக எனது DBNS குழு தில்லியில் மேடையேற்றியிருந்தது. அதிலும் நான் நடித்திருந்தேன்.) இந்த நாடகத்துக்கான தமிழ் வடிவத்தை சென்னை ஆல் இந்தியா ரேடியோ தான் தயாரித்திருக்கவேண்டும். ஆனால் மேலிடத்து அனுமதி பெற்று இந்த நாடகத்தை தில்லியில் தி. ஜானகிராமன் இயக்கி, தயாரித்தார். நான் ஒரு முக்கிய பாத்திரமேற்று நடிக்க, அவர் இயக்கினார்.
தி.ஜா.வை தினமும் ஒருமுறை UNI Canteen ல் சந்தித்துவிடுவேன். மாதமொருமுறையாவது க.நா.சு.வைப்பார்க்க வருவார். மாலைவேளைகளில் அவருக்குப்பிடித்த கர்நாடக சங்கீதத்தோடு இலக்கியம் தவிர எல்லாமும் பேசுவோம். தி.ஜா.வுக்கு நான் செய்யும் ‘எள்ளு மிளகாய்ப் பொடி' மிகவும் பிடித்தமானது. ‘வறுத்த எள்ளின் வாசனையோடு, வாயில் கடிபடும் பருப்பு...அப்ப்பா!.. இப்பல்லாம் மொளகாப்பொடியெ டால்கம் பௌடர் மாதிரி பண்ணிடறாங்க!'' என்பார். என் வீட்டில் சாப்பிட்டால், தயிர்சாதத்துக்கு வத்தக்குழம்பு, மூன்றுவகை ஊறுகாய் எல்லாம் இருந்தாலும், ‘மணியோடெ மொளகாப்பொடி கொஞ்சம் போடுங்க!' என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார். எனக்கு உச்சி குளிர்ந்துவிடும்! ஒருநாள் அவர் மிகவும் விரும்பும் ‘மதுர மணி' தரங்கிணி ராகத்தில் பாடிய தீக்ஷிதரின் ‘‘மாயே! த்வம் யாஹி....'' கேட்டுக்கொண்டிருந்தபோது, அவரிடம் 'மரப்பசு'வை ஒரு நாடகமாக எழுதித்தரமுடியுமாவென்று நைஸாக கேட்டேன். ‘‘கொஞ்சம் மெனக்கெடணும். பார்ப்போம்....செய்யலாம்!' என்று பதிலளித்தார். அவருக்கு எங்கள் குழுவின் மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்ற நாடகங்கள் அப்போது வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தன என்பது தெரியும். அதனால் அவருக்கும் அதில் ஆசையிருந்தது. ஆனால் தூர்தர்ஷனில் அவருக்குக்கிடைத்த பிரமோஷன் காரணமாக ஆபீசில் வேலைப்பளு, வெளியூர்ப்பயணங்கள் நெருக்கடி. பிறகு அவரும் அதை மறந்துவிட்டார். நானும் ஞாபகப்படுத்தவில்லை!
நான் மரப்பசுவை நாடகமாக போட நினைத்ததற்கு முக்கிய காரணமே நான் அதில் வரும் சங்கீத வித்வான் கோபாலி பாத்திரத்தை நடிக்கவேண்டுமென்பதற்குத்தான். எனக்கு ஒரு நாடகத்திலாவது சங்கீத வித்வானாக நடிக்க ஆசை இருந்தது. காரணம் அதுவரை நான் சினிமாவிலோ நாடகத்திலோ பார்த்த வித்வான் நடிகர்கள் அந்தப்பாத்திரத்தை ‘நாடகீயமாக' கையாள்வார்கள். பாந்தமாக தொடையில் ஒரு ஆதிதாளம் போடத்தெரியாது! சங்கீத வித்வான்களுக்கேயுரிய தனித்துவமான உடல்மொழி ஒன்றுண்டு. அதில்லாமல் பக்கத்து நாட்டை கைப்பற்றிய ஒரு சக்கரவர்த்தி போல் விறைப்பாக வந்துபோவார்கள்!
அந்தப்பருவத்தில் செறிவுள்ள நாவல், சிறுகதைகளும் படித்து முடித்தவுடன், அதில் வரும் நாயகனாக நடமாடிய நாட்கள் பலவுண்டு. இது எல்லா கதைகளுக்கும் நேர்வதில்லை. சிலவற்றைத் தாண்டி போய்விடுகிறோம். சிலது தான் உள்ளேயே பச்சக்கென்று உட்கார்ந்துகொண்டு சிலநாட்களுக்காவது நம்மைப்படுத்தும். அதிலும் வாசகனாக இருப்பவன் ஒரு நடிகனாகவும் இருந்துவிட்டால், மனதுக்குள் ஒரு நாடகமே தயாராகிவிடும். அந்த நாடகத்தை மேடையேற்றிப்பார்க்க ஓர் ஆவலும் உடன் வரும்.
இப்படி நிறைய நாடகங்கள் என் மண்டைக்குள் இருக்கின்றன. இந்த ‘மண்டையை'ப் போடுவதற்குள் (ஜெயகாந்தன்) ‘பாரீசுக்குபோ' சாரங்கன், ‘ஒரு வீடு' ஹென்றி, (சுஜாதா) ‘ஊஞ்சல்' வரதராஜன், (இ.பா.) ‘காலயந்திரம்' மஹாதேவன் போன்ற பாத்திரங்களையும் நடித்துவிடவேண்டும் என்கிற தணியாத ஆசை எனக்குண்டு! எண்பத்தியொரு வயதெல்லாம் ஒரு வயசா என்ன?..... "Age is just a number!' என்று சொன்னவன் பொய்யா சொல்லியிருப்பான்?
ஜூலை, 2018.