அந்திமழையின் சிறப்புப்பக்கங்களில் இடம்பெறும் தலைப்புகளுக்காக கடும் விவாதங்கள் நடப்பதுண்டு. அதேசமயம் தேர்வான ஒரு தலைப்பை செய்வதற்கு பெரும் தயக்கம் ஏற்பட்ட ஒன்று உண்டென்றால் அது இந்த இதழில் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் யூடியூப் அரசியல் விமர்சகர்கள் என்கிற தலைப்புதான்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாகி தொலைக்காட்சிகளில் இருந்து கையடக்க மொபைலுக்கு காட்சிகள் வந்தபின்னர் உருவான குழந்தையே யூடியூப். காந்தியார் காலத்துக்கு முன்பிருந்த பெரும் கூட்டத்துக்கு முன்னால் பிரசங்கங்கள், சொற்பொழிவுகள் என நகர்ந்து இன்று அரசியல் உரையாடல் இணைய வெளியின் காட்சி ஊடகத்தில் நிலைகொண்டு விட்டது. தொலைக்காட்சியில் தோன்றி அரசியல் விமர்சனங்களை ஊடகத்தவர்கள் மேற்கொண்டதைப் பார்த்து வளர்ந்த நம் கண்முன்னால், யூடியூபர்கள் என்றொரு புது வகைமை தோன்றி அரசியலை தங்கள் விருப்பப்படி அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார்கள். வழமையான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும் அங்கே வேலை போனபிறகு அல்லது வேலையை விட்ட பின்னர் யூடியூப் சானல் ஆரம்பித்து அரசியல் விமர்சன சேவையைத் தொடங்கினதொடர்கின்றனர் என்பது ஒருபுறம். நன்கு அரசியல் பேசத் தெரிந்தவர்கள் எந்த நிறுவனத்தின் கையையும் எதிர்பாராமல் சொந்தக் காலில் நிற்க யூடியூப் உதவி செய்துள்ளது. 2022 இல் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் யூடியூப் நிகழ்ச்சிகளின் பங்களிப்பு மட்டும் 16000 கோடி. கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு இதனால் கிடைக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் தமிழகத்தில் சினிமா, அரசியல் துறைகளைச் சேர்ந்த யூடியூபர்கள் அதிகம் சம்பாதிப்பதாகவும் அத்துடன் இவ்விரண்டு துறை சேர்ந்த கிசுகிசுக்கள் யூகங்கள் தொடர்பாகப் பேசினால் வருமானம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே இத்துறை பற்றிப் பேசுவதிலிருந்த நம் தயக்கம் உடைந்தது.
இதில் வரும் வருமானம் என்று பார்த்தால் நமது வீடியோவில் யூடியூப் நிறுவனம் விளம்பரம் வெளியிட்டு பார்வைகளுக்கு ஏற்ப அளிக்கும் தொகை முக்கியமானது. இதற்காக பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டவேண்டிய கட்டாயம் இந்த சானல்கள் நடத்துகிறவர்களுக்கு உள்ளது. எனவே இவர்கள் அதற்காக இணையவெளியில் அதிகம் பார்க்கப்படும் அல்லது பார்க்க வைக்கப்படும் சர்ச்சை அல்லது வெறுப்புப் பேச்சின் பக்கம் சாயவேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. இதுவே மிக முக்கிய பிரச்னை. சர்ச்சைக்குரிய அல்லது யாரையாவது குறை சொல்லும் அல்லது திட்டும் உள்ளடக்கம் இல்லையென்றால் இந்த இணைய செயலிகள் அந்த காணொலியை பலரும் பார்க்கும் வண்ணம் கொண்டுபோவதில்லை என்பது விமர்சகர்களால் ஒரு குறையாக முன் வைக்கப்படுகிறது.
இந்தியாவில் சுமார் ஐம்பது கோடி பேர் யூடியூப் சந்தாதாரர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. டேட்டா விலை மலிவாகி அனைவருக்கும் கிடைப்பதால் காணொலிகளைக் காண அனைவரும் முண்டி அடிக்கின்றனர். இந்த சானல்களில் பார்க்கப்படும் முதல் ஐந்து உள்ளடக்கங்களில் அரசியல் தொடர்பான உள்ளடக்கம் இடம்பெறுகிறது.
தொலைக்காட்சி சானல்களும்கூட யூடியூப்புக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவை நேரலையாக நிகழ்வுகளை ஒளிபரப்புகின்றன. இதற்கென்றே தனி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கவும் செய்கின்றன என்கிறபோது இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
கருத்து வெளிப்படுத்துதல் என்பதை இந்த செயலி ஜனநாயகப்படுத்தி உள்ளது என்பது ஒரு கோணம். அதேசமயம் இந்த சுதந்தர ஊடக வெளியை அரசுகள் அச்சத்துடன் அணுகுகின்றன. அங்கங்கே யூடியூபர்கள் கைது ஆகும் செய்திகள் அதிகரித்துக்கொண்டே செல்வதையும் பார்க்கிறோம். மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத், சாட்டை துரைமுருகன், சவுக்கு சங்கர், பத்ரி போன்றவர்களும் தங்கள் பொதுவெளி கருத்துகளுக்காக கைதை எதிர்கொண்டதைப் பார்க்க முடிந்தது. எது கருத்துச் சுதந்திரம் என்கிற விவாதம் தனி. இந்த சானல்களை முடக்கவும் கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
சுதந்தரமான அரசியல் விமர்சகர்கள் ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் உள்நோக்கத்துடன் கட்சிகளாலும் நிறுவனங்களாலும் இறக்கப்படும் சானல்களும் கணிசமாக உள்ளன. தொழில்முறையாக கட்சிகளுக்குப் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களும் இந்த முறையைக் கையாளுகின்றன. இதனால் பெரும் குழப்பம் யூடியூப் சானல்களில் அரசியல் உலகில் காணப்படுவதை உணரமுடிகிறது. எது பணம் வாங்கிக்கொண்டு செய்யப்படுவது, எது கொள்கை அடிப்படையில் தாங்கிப் பிடிக்கப்படுவது,, எது நடுநிலையில் மக்கள் நலன் மட்டும் கருத்தில் கொண்டு செய்யப்படுவது, எது கட்சிகளால் ஸ்பான்ஸர் செய்யப்படுவது எனத் தெரியாமல் குழம்பிப் போகிறார்கள் பொதுமக்கள்.
இது ஒருவிதத்தில் பழைய காலத்தில் கட்சிக் கூட்டத்துக்குக் கூடும் மக்களைப் போன்றதுதான். ஆபாசமாகவும் திட்டியும் பேசும் பேச்சாளர் உரையை ரசிக்க கூட்டம் கூடும்.
பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக இந்த அரசியல் யூடியூப்சானல்களில் கொட்டப்படும் வெறுப்பு பொதுஜனப் பார்வையாளர்களிடம் என்னவிதமான விளைவை ஏற்படுத்தும்? தொலைக்காட்சியில் தனக்கு விருப்பமான சானல்களைத் தேர்வு செய்து பார்ப்பதுபோல் தனக்கு விருப்பமான அரசியல் விமர்சகர்களைத் தேர்வு செய்து பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் பலர். இதனால் தனக்குப் பிடிக்காத விஷயங்களைப் பேசுகிறவர்கள் மீது ஆன்லைனில் வெறுப்பைக் கொட்டுவது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.
ஆனால் இந்த அரசியல் விமர்சகர்களின் வீச்சு என்பது மிக அசாதாரணமானது. அதன் விளைவுதான் இந்த கைதுகள். இந்த வீச்சால் அவர்கள் தவிர்க்க முடியாதவர்கள் ஆகிறார்கள். மாற்றங்களுக்கும் வித்திடுகிறார்கள்.
பொதுவாக மையநீரோட்ட ஊடகங்கள் செய்ய இயலாத கருத்துருக்களை அந்திமழையில் கையாள்வது வழக்கம். எனவே இந்தமுறை யூடியூபர்கள் அதுவும் அரசியல் யூடியூபர்கள் பற்றிய சிறப்புப் பக்கங்களை மலர விட்டிருக்கிறோம். இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் பலரது கருத்துகளுடன் அந்திமழைக்கு உடன்பாடு எனப் பொருள் அல்ல. ஆனால்
நீங்கள் இவர்களைப் புறக்கணிக்கலாம்; ஆதரிக்கலாம் ஆனால் தவிர்க்கவே இயலாது என்பதுவே உண்மை. இது முதல் கட்டமே. இன்னும் பலர் பற்றி வரும் இதழ்களில் பேசுவோம்.