தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு!

தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு!
Published on

ய ஷ்வந்த் தேஷ்முக், சிவோட்டர் (Centre for Voting Opinion and Trends in Election Research) என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்துகிறார். கடந்த கால்நூற்றாண்டாக தேர்தல்கணிப்புகளை நடத்திவரும் அவரிடம் புதுடெல்லியில் அந்திமழைக்காகப் பேசினோம்.

கருத்துக்கணிப்பு துறைக்கு வந்தது எப்படி?

எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்ட காலத்தில் நான் ஐந்து வயது சிறுவன். என் தந்தையும் உறவினர்களும் ஆர் எஸ்.எஸ் தொடர்பு உடையவர்கள். அதனால்
சிறையில் அடைக்கப்பட்டிருந்து  இந்திரா காந்தியின் 1977 தேர்தல் தோல்விக்குப் பின் விடுதலையாகி இருந்தனர். எனக்கு ஒன்றும் புரியாத வயதுதான் அது. ஆனாலும் தேர்தல் என்ற விஷயம் என்னை அப்போதிருந்தே ஈர்த்துவந்திருக்கிறது. கவலை நிரம்பிய எங்கள் குடும்பத்தில் தேர்தல்கள் நிம்மதி என்ற வெளிச்சத்தைப் பாய்ச்சியதால் இது ஏற்பட்டிருக்கலாம். அதன்பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகளை ஆர்வத்துடன் கவனித்தேன். 1990களில் தேர்தல் அல்லாத நிகழ்வுகளுக்காக மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுப்பது தொடங்கியது. பிரனாய் ராய் இந்த விஷயத்தைச் செய்துகொண்டிருந்தார். வீக் இதழ் பல விஷயங்களைப் பற்றிய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது. இச்சமயம் நான் ஐஐஎம்சியில் சேர்ந்து இதழியல் படித்தேன். படிப்பு முடிவில் எனக்கு யுஎன்ஐ வழங்கும் விருது கிடைத்தது. 1993&ல் தேர்தல் முடிவுகளை கணினி மூலம் அலசும்  பணியை முதல்முதலாக யுஎன் ஐ வழங்கியது.

பத்திரிகையாளரான நீங்கள் கருத்துக்கணிப்பாளர் ஆனது எப்படி?

ஜீ நியூஸ் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஜெயின் டிவியில் நான் வேலை பார்த்தேன். இங்குதான் கருத்துக் கணிப்புகளைச் செய்ய ஆரம்பித்தேன். ஐக்கிய ராஜ்யம் சென்று தேர்தல் கணிப்புகளில் பயிற்சி பெற்றேன். அதை இங்கே பயன்படுத்தினேன். 1994&ல் சிவோட்டர் நிறுவனம் உருவானது. ஊடக நிறுவனங்களில் கருத்துக் கணிப்பு எடுக்க எந்த வசதியும் இல்லை என்பதால் நானே இதைத் தொடங்கினேன்.

தேர்தல் கணிப்புத்துறை என்பது அறிவியல் அடிப்படையிலானதா? அல்லது போலி அறிவியலா?

தேர்தல் கணிப்பில் போலி என்று எதுவும் இல்லை. இது அறிவியல், கணிதத்தின் அடிப்படையில் ஆனது. நாம் பெறும் கருத்துகளை நிகழ்தகவு அடிப்படையில் முறைப்படுத்தி பெறப்படும் முடிவே இது.

எவ்வளவு பேரிடம் கருத்துக் கணிப்பு எடுப்பது உகந்தது? நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில்?

நூறு கோடி வாக்காளர்களின் போக்கை அறிய சுமார் ஆயிரத்துக்கும் அதிகமாக அதாவது சுமார் 1280 பேரின் கருத்துக்களை அறிந்தாலே போதுமானது. எத்தனை பேரிடம் கருத்துக்களை  கேட்கிறோம் என்பது முக்கியம் அல்ல. அவர்களிடம் இருந்து என்ன கருத்துகளைப் பெறுகிறோம் என்பதே முக்கியம். தேசிய அளவிலான கருத்துக் கணிப்புக்கும் டெல்லி மாநில கருத்துக்கணிப்புக்கும் அணுக வேண்டிய கருத்தாளர்களின் எண்ணிக்கை சமமானதே. இவ்விரண்டு இடங்களிலும் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் இருந்தாலும் கூட இந்த சாம்பிள் எண்ணிக்கை ஒன்றாக இருக்கலாம்.  அதே சமயம் ஆந்திரா பெரிய மாநிலம் அங்கே அதிகம் பேரிடமும் டெல்லி
 சிறிய மாநிலம் எனவே இங்கே குறைந்த எண்ணிக்கையில் கேட்டால் போதும் என்ற கணக்கு இதில் உதவாது. இரண்டையும் சமமாகவே பாவிக்கவேண்டும்.

இதில் பிராந்திய ரீதியிலான மாறுபட்ட அணுகுமுறைகள் உண்டா?

அப்படி ஒன்றும் இல்லை. இந்தியா மூன்று மட்டங்களில் வாக்களிக்கிறது. தேசிய அளவில் நாடாளுமன்றத்துக்குக்கு உறுப்பினர்களை அனுப்ப, மாநில அளவில் ச.ம.உ&க்களைத் தெரிவு செய்ய, உள்ளூர் அளவில் உள்ளாட்சித் தேர்தல்களில் என மூன்று மட்டங்கள். இந்த அடுக்குகளை மனதில் கொண்டே கணிப்புகள் செய்யப்படுகின்றன.

கருத்துகளை எப்படி சேகரிக்கிறீர்கள்?

நேருக்கு நேர் சந்திப்பு, தொலைபேசி உரையாடல்.

இணையம் மூலம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள்?

இணையத்தை விட செல்பேசிகளின் பயன்பாடுதான் அதிகம் உள்ளது. ஆகவே தொலைபேசி கருத்துக்கணிப்புதான் நம்பகமானது. பொருளாதாரப் பின்னணி வேறுபாடுகள் இணைய கணிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றையும் விட நேரில் பார்த்து எடுக்கும் கணிப்புகள்
சிறந்தவை, இதை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் இருந்தாலும்கூட.

கட்சிகள் பெறும் ஆதரவு சதவீதத்தை எப்படி அவை பெறும் இடங்களாக மாற்றுவீர்கள்?

நாங்கள் கட்சிகள் பெறக்கூடிய வாக்கு சதவீதத்தை மட்டும் தான் கணிக்கிறோம். ஆனால் அதை எத்தனை இடங்கள் என்று மாற்றுவது வேறு விஷயம். இதில் தவறு ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணத்துக்கு 2004 பொதுத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால் காங்கிரசை விட அதிகமான வாக்கு  சதவீதத்தை அது
பெற்றிருந்தது. இதுபோல் கடந்த ஆண்டு மத்தியபிரதேச மாநில தேர்தலில் பாஜக காங்கிரசை விட அதிகமான வாக்குகளைப் பெற்றாலும் தோல்வி அடைந்தது. ஆகவே எத்தனை இடங்கள் என்று கணிப்பதில் கவனம் தேவை. இப்போது நாங்கள் சேகரிக்கும் கணிப்புகளைப் பற்றிய தகவல்களை எமது வாடிக்கையாளர்களான ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம். ஊடக நிறுவனங்கள்தான் நாங்கள் அளிக்கும் தகவல்களைக் கொண்டு யார் எவ்வளவு ஜெயிப்பார்கள் என்ற முடிவுகளுக்கு வருகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் விரும்பினால் மட்டுமே நாங்கள் இந்த விஷயத்தில் உதவி செய்வோம்.

நீங்கள் தவறாகக் கணித்த நிகழ்வு?

2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் நாங்கள் தவறாகக் கணித்தோம்.

சரியாகக் கணித்தது?

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதா வெல்வார் என்று சரியாகக் கணித்திருந்தோம். எங்கள் கணிப்பு தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கமாக அமைந்திருந்தது.

கருத்துக்கணிப்புகளில் பயன்படுத்தப்படும் முறைகள் என்னென்ன?

சில இருக்கின்றன. க்யூப் விதி என்ற ஒன்றைப் பயன்படுத்தி எவ்வளவு இடங்கள் ஒரு கட்சி ஜெயிக்கும் என கணிக்கலாம். க்யூப் என்றால்
கனசதுரம். இதன் உயரம், அகலம், நீளம் ஆகியவை சமமாக இருக்கும். இவை மூன்றையும் பெருக்கினால் பரப்பளவு கிடைக்கும். அதுபோல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளும் வாக்கு விகிதங்கள் அவை பெற இருக்கும் இடங்களைப் போல மூன்று மடங்காகப் பிரதிபலிக்கும்.

உங்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்பவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்று எப்படி நம்புவது?

அரசியல்ரீதியாக விழிப்புணர்வு கொண்டவர்கள், கல்வி பெற்ற வர்க்கம், பொருளாதார ரீதியாக மேம்பட்டவர்கள் ஆகியோரிடம் உண்மையான தகவல்களைப் பெறுவது எளிது. ஆனால் ஏதோ ஒரு
விதத்தால் பாதிக்கப்பட்ட, தயக்கம் காட்டும் மக்களிடம் உண்மையான கருத்துகளைப் பெறுவது
 சிரமம்.

ஆகவே இதில் தவறு ஏற்பட வாய்ப்புண்டு?

அதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தவறு ஏற்பட வாய்ப்புண்டு என்று அறிவித்துத்தான் பயனாளர்களுக்கு தகவல்களை அளிக்கிறோம்.

இது எக்ஸிட் போல்களிலும் உண்டா?

எல்லா கணிப்புகளிலும் தவறுக்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கான பிழை  வாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டே ஆகவேண்டும்.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com