தமிழ்நாவல்கள் உலகுக்கு வரவேற்கிறோம்

நாவல்கள்
நாவல்கள்
Published on

It's much better to do good in a way that no one knows anything about it  - Leo Tolstoy
( Anna Karenina, 1877)

'இலக்கிய நாவல்கள் ஏன் விற்பதில்லை சொல்லுங்க பார்க்கலாம்?'

 'அதிகமா வித்தா அது நல்ல விஷயமா, நம்ம ஊர்ல சாராயம் தான் விற்பனையில் சக்க போடு போடுது, அப்போ சாராயம் சிறந்ததா?'

 (இதற்கு பின் பேசப்பட்ட வார்த்தைகள் சென்சார்)

ஒரு இலக்கிய நாவல் வெளிவந்து 2000 பிரதி விக்க இரண்டிலிருந்து நாலு வருஷம் ஆகுதுன்னு சொல்றீங்க. ஒரு வார்டு கவுன்சிலருக்கு ஜெயிக்கணும்னா கூட இதைவிட அதிக ஆதரவு வேண்டும். விற்பனையில் சக்க போடு போடும் நாவல்தான் சிறந்தது'

'மாருதிகார் விற்பனை பென்ஸ் காரை விட அதிகம் தான்,    அதனால மாருதி கார்தான் உயர்ந்ததுன்னு சொல்வீங்களா?'

'அதிகமானவங்க படிக்க வேண்டுமென்பது முக்கியமில்லையா?'

 கோவையில் நான் தங்கியிருந்த விடுதி அறையில் ஐந்து நண்பர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் ஒரு பகுதி தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான அந்த விவாதம் எந்த முடிவும் இன்றி முடிந்தது.

பாளை புனித சவேரியர் கல்லூரியில் ஓராண்டு படித்தேன். அங்கே வண்ண நிலவனின் ‘கம்பா நதி' பாடமாக இருந்தது. கம்பா நதி பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருந்த தமிழ் பேராசிரியரிடம் நாவல் ஏன் படிக்க வேண்டும்? சினிமா பார்ப்பது அதைவிட சிறந்ததல்லவா? என்று ஒரு மாணவன் கேட்டான்.

 'நாவல் படிப்பது ஒரு காட்சிப்படுத்தும் பயிற்சி (Visualization Exercise). இந்த வகுப்பறையில் உள்ள அனைவரும் ஒரே நாவலைப் படிக்கலாம். அந்த நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறுவிதமாக பரதிபளிக்கும். இந்த காட்சிப்படுத்தும் பயிற்சி உங்கள் மனதிற்குள் ஏற்படுத்தும் விசாலம் முக்கியமானது' என்றார் பேராசிரியர்.

 நாம் வாழாத வாழ்க்கையையும் அது தரும் அனுபவமும் நாவல் தன்னை வாசிப்பவருக்கு பரிசாகத் தருவதுண்டு. ஏழு நல்ல நாவலை வாசித்தவர்கள் வலியில்லாமல் ஏழு ஜென்மம் வாழ்ந்த அனுபவத்தைப் பெறலாம்.

 எனது நாவல் வாசிப்பனுபவத்தை திரும்பிப் பார்த்தேன். தமிழ்வாணனில் ஆரம்பித்து பலரைக் கடந்து சுஜாதா ஸ்டேசனில் இளைப்பாறி தி.ஜாவை ரசித்து ஜெயகாந்தனை ருசித்து சுந்தர ராமசாமியை அடைந்த பின் உலக இலக்கியங்களை தேடலானேன். இதற்குப் பிறகு தான் நாவல்களை உன்னிப்பாக வாசிக்கும் பக்குவத்தின் முதல் படியை மிதித்தேன்.

ஜனரஞ்சக நாவலின் பட்டியல் பல கேள்விகளை எழுப்பலாம். தமிழின் புதிய வாசகர்களை உருவாக்கும் பணியை ஜனரஞ்சக நாவல்கள் செய்வதாக சொல்லப்படுவதுண்டு. ஜனரஞ்சக நாவல் பதிப்பாளர்களின் மார்க்கெட்டிங் செயல்பாடுகள் அபாரமானது. பாக்கெட் நாவல் அசோகன், சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை' நாவலை வெளியிட்டு 15000 க்கும் மேற்பட்ட பிரதிகளை விற்று அதிசயத்தை நிகழ்த்தினார்.

எழுத்தையும் எழுத்தாளர்களையும் கொண்டாடுவதற்கு தமிழகத்தில் போதுமான முயற்சிகள் இல்லை என்பது நண்பர் சாருநிவேதிதாவின் ஆதங்கம். எழுத்தைக் கொண்டாடும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பது அந்திமழையின் தலையாய கடமைகளில் ஒன்று. நாவல்கள் பற்றி ஜெயமோகன் மிக விரிவாக எழுதியுள்ளார். படிக்க வேண்டிய பட்டியல்களை ஜெயமோகன், முருகேச பாண்டியன் மற்றும் பலரும் எழுதியுள்ளனர்.

அந்திமழையின் 50 இலக்கிய நாவல்கள் + 50 ஜனரஞ்சக நாவல்கள் பட்டியல் ஆய்வுக்கானதல்ல. தமிழர்களைப் புத்தகம் வாங்க தூண்ட வேண்டுமென்ற ஆசையில் உருவான பட்டியல். சரியான பட்டியலை காலம் தரும். காலத்தை வென்று புதிதாக பிறக்கிற ஒரு வாசகனை வசீகரிக்கும்  நாவல்களை சிறந்தது எனலாம்.

 நல்ல நூல்களை வாசியுங்கள், பரிசளியுங்கள்!

என்றும் உங்கள்

அந்திமழை இளங்கோவன்.

ஜனவரி, 2019 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com