தமிழ்த் தேசியக் கட்சி: சற்று பொறுத்திருக்கலாம்!

தமிழ்த் தேசியக் கட்சி: சற்று பொறுத்திருக்கலாம்!
Published on

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து, திமுகவை அறிஞர் அண்ணா தொடங்கியபோது அதில் இடம்பெற்ற ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் ஈவிகே சம்பத். எம்ஜிஆர் போன்ற நிறம், அழகாக உடையுடுத்தி,மேடைகளில் அற்புதமாக உரையாற்றிய இத்தலைவர் ஏராளமான பேரைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

அண்ணாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர். சம்பத்தை கைரிக்‌ஷாவில் அமர வைத்து அண்ணா இழுக்கும் புகைப்படம் ஒன்றே அவர்களின் நெருக்கத்தை பறைசாற்றும். அந்த சம்பத், திமுகவில் இருந்து பிரிந்து சென்று 1961- இல் தமிழ் தேசிய கட்சி என்ற அமைப்பை சந்தித்து தேர்தல் களம் கண்டார்.

திமுக அன்றைக்கு ஒரு வளரும் கட்சிதான். 1957-இல் நாடாளுமன்றத்துக்குத் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த சம்பத், டெல்லிக்குச் சென்று நேரு உள்ளிட்ட காங்கிரஸின் மாபெரும் தலைவர்களுடன் பழகினார். இது அவரது பார்வையிலும் கொள்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அத்துடன் அவர் நேருவிடம் நேரம் கேட்டு அண்ணாவையும் சந்திக்க வைக்க டெல்லிக்கு அழைத்துச் சென்றிருந்தார். நேரு& அண்ணா சந்திப்பு நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது. ஆனால் அந்த சந்திப்பு நடக்க வில்லை. அண்ணாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அதைக் காரணம் காட்டி உடனே அண்ணா சென்னைக்குத் திரும்பிவிட்டார்!

திமுக அன்றைக்கு திராவிட நாடு பிரிவினை கோரும் கட்சி. இந்த அடிப்படைக் கொள்கையில் சம்பத்துக்கு முரண்பாடு ஏற்பட்டது. அத்துடன் கட்சிக்குள் கருணாநிதி போன்ற திரைத்துறை சார்ந்தவர்கள் வளர்ச்சி அடைவதையும் அவர் விரும்பவில்லை. கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முக்கியம் கொடுப்பதை அவர் எதிர்த்தார். “நாம் திராவிட நாடு கேட்கிறோம். ஆனால் தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலங்களில் இது பற்றி மக்களுக்குத் தெரியவில்லை. நாம் அங்கெல்லாம் நமது கழகத்தைப் பரவச்செய்து ஆதரவு திரட்டவேண்டும் என்பதில் தலைவர்களுக்கு ஆர்வமில்லை‘ என ஒரு பொதுக்குழு கூட்டத்தில் கூறினார். சம்பத்தை கேலி செய்து கட்டுரைகள் எழுதப்படுவதும், அவர் பதிலடி தருவதுமாக மோதல்கள் உருவாயின. இதைத் தொடர்ந்து வேலூர் செயற்குழுவில்  அடிதடி அளவுக்குச் சென்றது. பின்னர் திருச்சியில் நடந்த கூட்டமொன்றில் சம்பத் ஆதரவாளரான கவிஞர் கண்ணதாசனை மேடையில் வைத்து காலணியால் தாக்க முயற்சி நடந்தது. இதுபோன்ற வன்முறைப்போக்குகளைக் கண்டித்து சம்பத் மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்து, அண்ணாவின் முயற்சியால் கைவிட்டார். ஆனாலும் இருதரப்பு உரசல்கள் நிற்கவில்லை. 1961- ஏப்ரல் 9 அன்று சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து விலகினர்.கண்ணதாசன், கேஏ.மதியழகன், மேயர் முனுசாமி, க,ராசாராம், எம்பி சுப்ரமணியம், பழ.நெடுமாறன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், என மிகப்பெரிய பட்டியல் விலகிற்று.

சம்பத் விலகலைப் பற்றி அண்ணா குறிப்பிட்ட வரிகள் மிகப்பிரபலமானவை. ‘ காது புண்ணாகி இருக்கிறது. வைரத் தோட்டைக் கழற்றி வைத்திருக்கிறேன். புண் ஆறியதும் அணிந்துகொள்வேன்‘ என்றார். ஆனால் கடைசி வரை வைரத்தோடு அவர் கைக்குக் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சி என்ற அமைப்பை சம்பத் அப்போதே தொடங்கினார். இந்தியக் குடியரசுக் கூட்டாட்சியிலிருந்து பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசிய தன்னாட்சி அமைக்கப்பாடுபடுவது என்பதே அடிப்படைக் கொள்கை. மேலும் கீழும் நீலம், நடுவே சிவப்பு என்ற கட்சிக்கொடி உருவானது. மாநிலம் முழுக்க இந்த புதிய கட்சித் தலைவர்கள் கூட்டங்கள் நடத்தினர். பெரும் கூட்டம் கூடியது. இக்கூட்டங்களில் திராவிடர் கழகத்தினரும் காங்கிரஸ்காரர்களும் கூட கலந்துகொண்டதாகவும், திமுக கழகத்தினர் நடத்திய தாக்குதல்களில் இருந்து இவர்களே பாதுகாப்பு தந்ததாகவும் கண்ணதாசன் தன் மனவாசம் நூலில் குறிப்பிடுகிறார். சென்னை மயிலாப்பூரில் நடந்த கூட்டம், திருச்சியில் நடந்த கூட்டம் ஆகியவற்றில் செருப்புகள் வீசப்பட்டன. பெங்களூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கண்ணதாசன் தாக்கப்பட்டார். கூட்டத்தில் மாடுகள் விடப்பட்டன. கல்லெறிகள் நடந்தன.

சம்பத் சற்று பொறுத்திருக்கலாம். அவரது விலகலுக்கு அடுத்த ஆண்டே தன்னுடைய திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அண்ணா, சீனப் போரை முன்னிட்டு கைவிட்டுவிட்டார்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சவாலாக விளங்கக்கூடிய பொதுத்தேர்தல் என்னும் போர்க்களம் வந்தது.

சம்பத் தென் சென்னைத் தொகுதியில் நின்றார். அவரை ஈரோடு தொகுதியில் நிற்குமாறு ஆலோசனை  சொல்லப்பட்டது. ஆனால் திமுகவின் கோட்டையான சென்னையிலேயே நின்று வெற்றிபெற வேண்டுமென தன்னம்பிக்கையுடன் நின்றார் சம்பத். திமுக சார்பில் நாஞ்சில் மனோகரன் நிறுத்தப்பட்டிருந்தார். காங்கிரஸ் சார்பில் சம்பத்துக்கு ஆதரவு காட்டப்படவில்லை. சி.ஆர்.ராமசாமி என்ற வேட்பாளரை காமராஜர் நிறுத்தி இருந்தார். முடிவில் நாஞ்சில் மனோகரனே வென்றார். சம்பத் மூன்றாம் இடமே பெற்றார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றத்துக்கு இரு இடங்களிலும் சட்டமன்றத்துக்கு ஒன்பது இடங்களிலும் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்களை நிறுத்த முடிந்திருந்தது.

காமராஜர் இத்தேர்தலுக்குப் பின்னால் முதல்வர் ஆனாலும் தாம் கொண்டுவந்த கே ப்ளான் திட்டப்படி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி அகில இந்திய அரசியலில் நேருவுக்கு துணையாக ஈடுபட போய்விட்டார்.

அப்போது (1963) இல் வந்த சென்னை மேயர் தேர்தலில் த.தே.கட்சி உறுப்பினர்கள் துணையுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவியைக் கைப்பற்றியது. ததேகவைச் சேர்ந்த மணிவண்ணன் துணை மேயர் ஆனது ஒன்றுதான் ஆறுதல்.

இதற்கு அடுத்த ஆண்டு நேரு இறந்துவிட்ட நிலையில் காமராஜர் காங்கிரஸில் சோஷலிச  சக்திகள் அனைத்தும் இணையவேண்டும் என அழைப்பு விடுத்தார். சீனப்போர், அதன் பின்னர் நேருவின் மரணம், காமராஜரின் அகில இந்திய தலைமை போன்றவை தமிழக அரசியல் சூழலில் ஒரு சில மாறுதல்களை ஏற்படுத்தி இருந்தன.

தமிழ் தேசிய கட்சிக்குள்ளும் காங்கிரஸில் சேர குரல்கள் எழுந்தன. ஏற்கெனவே கட்சி காங்கிரஸுடன் இணக்கப்பாட்டுடன் தான் இருந்தது. அதன் நிர்வாகக் குழு கூடி காங்கிரஸுடன் இணைவது என முடிவெடுத்தது. அதற்கான தேதியும் குறிக்கப்பட்டு 1964ஆம் ஆண்டு இணைப்புவிழா காமராஜர் தலைமையில் நடந்தது. விழா நடந்த இடம் பெரியார் திடல். காங்கிரஸ் என்ற கடலில் த.தே.க இணைந்து காணாமல் போனது.  பிரிவினை பேசிய கட்சியில் இருந்து உருவான தலைவர்கள், தேசிய நீரோட்டத்தில் கலந்தது ஆச்சர்யகரமான திருப்பம்தான்!

1967-இல் திமுக ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று சென்னை மாகாணத்துக்குப் பெயர் மாற்றியது. அதற்காக எடுக்கப்பட்ட விழாவில்.‘ சம்பத் இந்நேரம் என்னுடன் இருந்திருக்கலாம்! எங்கிருந்தாலும் வாழ்க' என்று அண்ணா பேசியதை இங்கே நினைவுகூரலாம்.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com