தமிழின ஆதரவு நோக்கில்...

நா.த.க
தமிழின ஆதரவு நோக்கில்...
Published on

கோஷ்டியை உயர்த்தி முழக்கமிடுவதுடன், எந்தக் கூட்டமாக இருந்தாலும் வலது கையை முன்னே நீட்டி அகவணக்கம் செலுத்துகின்ற ஒரு புது முறையை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த கட்சி என்றால், கண்ணை மூடிக்கொண்டு, ‘நாம் தமிழர் கட்சி' என்று சொல்லிவிடலாம்.  ஏற்கெனவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெயரில் கட்சி நடத்திய சி.பா. ஆதித்தனார், ஒரு கட்டத்தில் தி.மு.க. அமைச்சராகி, அத்தோடு தன் கட்சியையும் அக்கட்சியோடு இணைத்துவிட்டார். 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து, மீண்டும் புதிதாக உருவானது, நாம் தமிழர் கட்சி. இன்றைக்கு நா.த.கட்சி என்றாலே சீமான்தான் என அறியப்பட்டாலும், இப்படியொரு கட்சியைத் தொடங்குவதில் அவர் முனைப்புடன் இருந்திருக்கவில்லை. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஈழத்தமிழினப் படுகொலையின் இறுதிக்கட்டத்தில், அதைக் கண்டித்து தமிழகமும் புதுவையும் குமுறி அழுதபோது, தமிழ்த் திரையுலகமும் அதில் உணர்வுபூர்மாகப் பங்குகொண்டது. 

அப்போது, மாவட்டங்கள் தோறும் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலமும் சமர்க்களத்தைப்போல காணப்பட்டது. இராமேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநராக சீமானும் பேசினார்.

அன்றைய ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசாங் கத்தின் இலங்கைக் கொள்கை பற்றியும் குறிப்பாக அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்தை நோக்கி மிகவும் மரியாதையாக சீமான் எழுப்பிய கேள்விக்கணைகள், தமிழக அரசியல் மேடைகளின் புதுவிதக் காட்சி!

பொதுவாக, ஒரு மத போதகரைப் போல ஒவ்வொரு மனிதரையும் ஈர்க்கும் சொற்பொழிவாளராகவும்,

பேச்சின் இயல்பில் தன் பழைய இராமநாதபுரம் வட்டார வழக்கை போகிறபோக்கில் செருகிச்சேர்த்துவிட்டு, கேட்பவரின் மனதைக் கொள்ளையடிப்பதைப் போல தாக்கம் ஏற்படுத்தியது, சீமானின் பேச்சு மொழி.

தமிழீழப் பிரச்னைக்கு முன்னர், தமிழ்நாட்டின் பெரியாரிய இயக்கக் கூட்டங்களில்தான் சீமான் அதிகமாகப் பேசியிருந்தார். ஆனால் அந்தக் களமும் தளமும் வேறு. இனப்படுகொலை நீதிக்காகப் பேசிக் கொண்டிருந்த சீமான், கைதுகளுக்கும் ஆட்பட நேர்ந்தது.

ஈழத்தமிழரைக் காக்க தற்கொடைச் சாவடைந்த முத்துக்குமாருக்கு, தமிழகமே திரண்டுவந்து ‘வீரவணக்கம்' செலுத்திக்கொண்டு இருந்தபோது, சீமான் அங்கு இல்லை. இதை இப்போது பலரும் நம்பக்கூட மறுக்கலாம். ஆனால், உண்மை!

சொந்தப் பணிகளில் சிக்கி, வரமுடியாமல் இருந்தார்!

சீமான் தலைமையில் போர்க்குணம் மிக்க தமிழின ஆதரவு இயக்கம் ஒன்றை அமைப்பது என ஈழ ஆதரவுக் கொள்கையினர் வட்டம் ஒன்று தீர்மானித்தது. மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் வீட்டில் இதற்காக 2009ஆம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதே ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரத்தை எதிர்த்து, இன்றைக்கு தி.மு.க.வின் மாணவரணித் தலைவராக இருக்கும் இராஜீவ்காந்தி நிறுத்தப்பட்டார். முத்துக்குமார் இளைஞர் எழுச்சி இயக்கம் எனும் பெயரில், பல மாவட்டங்களைச் சேர்ந்த புதுவகை இளைஞர் கூட்டம் இராஜீவ்காந்திக்காக பிரசாரம் செய்தது. அதிலிருந்த கணிசமானவர்களே மணிவண்ணன் வீட்டுக் கூட்டங்களில் முக்கியமாக இடம்பெற்றனர்.

அதேசமயம், மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி, அன்றைய சேவ் தமிழ் மூவ்மெண்ட் இன்றைய இளந்தமிழகம் அமைப்பின் செந்தில் போன்றவர்கள், ஒரு திரைபிம்பத்தின் பின்னால் அணிதிரள்வதில் உடன்பாடு இல்லை என நகர்ந்துவிட்டார்கள்.

ஆனால், இறுதிப்போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகளில் அரசுகளின் தொடர்பிலும் இருந்த பாதிரியார் ஜெகத் கஸ்பர், அவரோடு இணைந்து செயல்பட்ட வழக்குரைஞர் இரவி இளந்திரையன், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியின் இப்போதைய (தி.மு.க.) சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் போன்றவர்கள், குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், அந்தக் கூட்டத்தில் வீசிய திராவிடர் இயக்க எதிர்ப்பு வாடை அவர்களுக்கு ஒப்பவில்லை.

கஸ்பர் அடிகள் ஏற்கெனவே நாம் என்ற பெயரில் சில அரசியல் கூட்டங்கள் நடத்திவந்த நிலையில், அந்தப் பெயரையொட்டி அவர் கருத்து கூறினார்.

பாதிரியார் முன்வைத்த பன்னாட்டு பாணி நீதி/நிதி கோரல் போன்ற கருத்துகளை, மணிவண்ணன் ரசிக்கவில்லை. '' என்னா ஃபாதர், மில்லிட்டண்டா ஒரு இயக்கம் கட்டணும்னா... நீங்க இப்படிச் சொல்றீங்க...'' என்கிறபடி உடனே குறுக்கிட்டு மணிவண்ணன் சொன்னதை, பெரும்பாலானவர்கள் ஆமோதித்தார்கள்.

ஒருவழியாக, இனப்படுகொலைக்கான நீதி, ஈழ ஆதரவுக்கான ஒரு தீவிர வெகுசன இயக்கத்தை/ கட்சியை உருவாக்குவது என முடிவானது. ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்தன.

பலவித கட்சிகள், கழகங்களென ஆளாளுக்கு பெயர்களை முன்வைத்தார்கள். கடைசியில், மறைந்த வழக்குரைஞர் விழிப்புணர்வு இதழ் காமராஜ் கூறிய & நாம் தமிழர் என்பது முடிவானது.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது, வழக்குரைஞர்கள் வடிவாம்பாள், இராஜீவ்காந்தி, பாலாஜி, கயல் (எ) அங்கயற்கண்ணி முதலியோரும், அலாவுதீன் (எ) ஒட்டக்கூத்தன் முதலிய ஆர்குட் காலத்து இன உணர்வு இளைஞர் பட்டாளத்தினரும், தொடக்க கட்ட ஆலோசனைகளில் தீவிரமாகப் பங்கேற்றனர்.

2009ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி மதுரையில், முள்வேலி முகாம்கள் இருந்த கட்டத்தில், ‘அறுத்தெறிவோம் வாரீர்' என்ற அறைகூவலோடு பெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதுவே, நாம் தமிழர் இயக்கத்தின் முதல் முக்கிய பொதுநிகழ்ச்சி எனக் கூறலாம்.

அதுவரை, சீமானுடன் இருந்த தி.மு.க.+ திராவிடர் இயக்க சார்பாளர்கள் அதன்பிறகு அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டனர். 

கூட்டுத் தலைமையாக, சீமானும் மற்ற 24 ஒருங்கிணைப்பாளர்களும் என, மொத்தம் 25 பேரைக் கொண்ட செயற்குழு அமைக்கப்பட்டது. முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பட்ட சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்றே அறியப்படுகிறார்.

அடுத்த ஓராண்டில் மதுரையில் மே 18 ஆம் நாளில் நாம் தமிழர் கட்சி முறைப்படி அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையத்தில் சீமானைத் தலைவராகவும் சந்திரசேகரை பொதுச்செயலாளராகவும் கொண்ட கட்சியாக முறைப்படி பதிவுசெய்யப்பட்டது.

இடையில், நா.த.க. ஆன்றோர் அவையம் எனும் உட்பிரிவு உருவாக்கிய, வரைவுக் கொள்கை ஆவணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இனவாதத்தையும் மதவாதத்தையும் பேசுவதாக முக்கியமாக கடும் சாடலுக்கு உள்ளானது. அது இறுதிசெய்யப்பட்டது அல்ல என்றுகூறி அப்போதைக்கு சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முதல் முறையாக 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நா.த.க. போட்டியிட்டபோது, கட்சியின் வாக்குறுதி, கொள்கை நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அவையே இன்றுவரை அக்கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படுகிறது.

பழைய தி.மு.க.வின் வைகோவைப் போல ஒரு வீச்சான சொற்பொழிவாளராக மட்டுமே, அரசியல் களத்தில் செயல்பட விரும்பியிருந்த சீமானை, அவரா இவர் என வாய்பிளக்கும்படியாக மாறச்செய்திருக்கிறது, நாம் தமிழர் கட்சி. அடுத்து என்ன என்பதை காலம்தான் சொல்லவேண்டும்!

logo
Andhimazhai
www.andhimazhai.com