தனித்தமிழ் உயிர்பெற உதவுக

தனித்தமிழ் உயிர்பெற உதவுக
Published on

தமிழைச் செம்மொழி என்கிறோம். செம்மொழி என்பதற்குத் தொன்மைப் பழம்பெரும்மொழி என்பதே முதற்றகுதி. ஆயிரக்கணக்கான மொழிகள் உலகில் இருக்கின்றன. அவற்றுள் செம்மாண்பு மிக்கவற்றையே செம்மொழி என்றாக்குகின்றனர். செம்மாண்புகளுக்கெல்லாம் வேர்ப்பண்புடைய தன்மை நம் தமிழுக்கு உண்டு. செம்மையில் செம்மை என்றால் அம்மொழி எவ்வொன்றின் துணையும் இல்லாமல் தனித்து இயங்கவல்லது. ஒருமொழி இயங்குவதற்குப் பிறமொழியின் தோள்மீதேறி அமரவேண்டியிருக்காது. அதன் தோற்றுவாயும் இயங்குநிலையும் தனித்தன்மையுடையன.

தூயதமிழே செந்தமிழாகும். தமிழால் உலகின் எல்லா இயல்களையும் உட்கொண்டு செரித்து அதைத் தன்சொற்களால் எடுத்தியம்ப இயலும். ஆனால், மொழிவாழ் நிலங்கள், முழுவதும் அரண்செய்யப்பட்டு அம்மக்களால் நிலைத்த வாழ்க்கைமுறையில் ஈடுபடுதில்லையே. தமிழர் பிறநிலம் ஏகுவதும் பிறநாட்டார் தமிழ்நாட்டில் வாழத் தலைப்படுவதும் படையெடுப்பும் போர்களும் பூசல்களும் இடம்பெயர்ச்சியும் காலந்தோறும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஓர் அரசியல் வெற்றியை உடனடியாகக் காண்கின்றன என்ற போதிலும், மொழியின்மீது விரும்பத்தகாத பூந்தாதுச் சேர்க்கையைத் தொடர்ந்து நிகழ்த்திவிடுகின்றன. இதனால் பிறமொழிமேல் தமிழ்கலப்பதைவிட தமிழ்மேல் பிறமொழிக் கலப்பு மிகுவதாகிறது.

ஒருமொழியோடு இன்னொரு மொழிச்சொல் கலந்தால் என்னாகும்? பரிதிமாற்கலைஞர் தம் ‘தமிழ்மொழி வரலாறு’ என்னும் நூலில் தூய தமிழில் விளக்குவதைத் தருகிறேன் :-

“தமிழ் மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும் கேள்வி முறையில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்கு வந்தன வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்ல விடுதலுங் கேடே. தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும். இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு மிகுந்துகொண்டே போமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டில் நின்றுவிடும். மற்றுப் பாமரர் தமிழோ, தெலுங்கு மலையாளம்போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.”  

நூறாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இன்றுள்ளதுபோல் இருக்கவில்லை. முழுக்க முழுக்க வடசொற்கலப்பால் இது தமிழா இல்லை வடமொழியா என்று ஐயுறுமளவுக்குக் கேடுபட்டிருந்தது. அதைத் திருத்துவதற்குத் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம். மறைமலையடிகளாரும் பிறரும் சேர்ந்து அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர். தமிழில் கலந்துள்ள வடசொற்களைக் களைந்து அவற்றுக்கு நேரான தூய தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தினர். இவ்வியக்கத்தின் பலனாய்த்தான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழில் பெருமளவு வடசொற்கலப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் இடையில் செல்வாக்கு செலுத்திய திராவிட இயக்கங்களின் தமிழ்ப்பயன்பாடும் மெச்சத்தக்கது. தனித்தமிழியக்க நூற்றாண்டு கொண்டாடப்படவேண்டிய இவ்வாண்டில் அதற்குரிய எவ்வொரு சிற்றசைவையும் நாம் காணமுடியவில்லை என்பதும் வருந்தத்தக்கதே.

வடசொற்கலப்பு நம்மிடையே ஆட்பெயர்களில்தான் முதலில் ஊடுருவிற்று என்பது என் கணிப்பு. தமிழில் பெயர்வைத்தல் இயல்வு நவிற்சியாய் இருந்திருக்கிறது. ஆனால், வடசொற்பெயர்கள் உயர்வு நவிற்சியாய் புகழ்மொழிகளாய் இருந்திருக்கின்றன. குப்பத்தில் வாழ்பவன் குப்பன் எனப்பட்டான். கால் கரிந்தவன் கரிகாலன் எனப்பட்டான். கூன்பாண்டியன், முடத்திருமாறன், பிசிராந்தை, இரும்பிடர்த்தலையர் என்று தமிழ்ப்பெயர்கள் இயற்கையோடியைந்த இயல்பு நவிற்சியாய் அமைந்திருப்பதைக் காணலாம். ஆனால், வடசொற்பெயர்கள் எடுத்த எடுப்பில் ஒருவரை வானளாவப் புகழ்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன், விஜயாலயன், சுந்தரபாண்டியன் என்னும்போது புகழ்விளி தோன்றுகிறது. அதன்மீது மயக்குற்றுத் தத்தம் பிள்ளைகளுக்கு வடமொழியிற் பெயரிடும் வழக்கம் ஏற்பட்டிருக்கவேண்டும்.

பெயர்ச்சொற்களில்தாம் வடமொழி பயின்றனவே தவிர வினைச்சொற்களை அசைக்கவே முடியவில்லை. அதுதான் தமிழின் ஆற்றல். தமிழின் வேர்ச்சொற்கள் அனைத்தும் வினைச்சொற்களே. தமிழின் பெயர்ச்சொற்கள் பலவும் வினைவேரைப் பகுதியாகக்கொண்ட தொழிற்பெயர்களே. இந்தத் தன்மையால்தான் தமிழை எத்தகைய படையெடுப்பாலும், ஆட்சி வன்மையாலும் அழித்தொழிக்க முடியவில்லை. தற்காலத்தில் கலந்துள்ள ஆங்கிலச் சொற்களில்கூட பெயர்ச்சொற்களை எளிதில் கலந்துவிடுகிறார்களேயன்றி, வினைச்சொற்களைக் கலக்க முடியவில்லை. 

முன்னெப்போதும் இல்லாதபடி இன்று தமிழில் ஆங்கிலச் சொற்கள் கலந்துவருகின்றன. ஆங்கிலச்சொற்கள் அவற்றுக்குரிய பொருளை நம் மக்கள் மத்தியில் பதியச்செய்தபின் பயன்படுத்தப்படுகின்றனவா என்றால் அதுவுமில்லை. சில சொற்கள் தாய்மொழிச்சொல் போலவே கலந்துவருகின்றன. என்வீட்டு வேலைக்கு வந்த கட்டடக் கொத்தனார் ‘சப்போஸ்’ என்கிற சொல்லை வெகு இயல்பாகப் பயன்படுத்துகிறார். ‘ஒருவேளை’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஒருவேளை என்ற சொல்லை புகட்டினாலும் அதை ‘ஒருவேலை’ என்றே விளங்கிக்கொள்வார். இவ்வாறு கலக்கும் ஆங்கிலச் சொற்கள்தாம் தமிழுக்குத் தீங்கு விளைவிப்பவை.

இன்று ஆங்கிலப் பயன்பாடு தொழில்நுட்ப வளர்ச்சியென்னும் பெருவலிமையோடு நம்மைத் தாக்குகிறது. கைப்பேசியில் உலவவேண்டிய கட்டாயமுடைய இத்தலைமுறை அதற்குரிய சொல்லாட்சியை ஆங்கிலத்தில் வழங்குகிறது. இவற்றுக்கு மாற்றாக தமிழ்ச்சொல்லை ஆக்கி அளிப்பதற்கு மொழிவல்லார் இருக்கின்றார்களா என்பதும் கேள்வியே. அவ்வாறு இருப்பவர்கள் எம்போன்ற தனிமுயற்சியாளர்களாய்த் தனித்திருப்பதும் ஆங்கிலப் பரவலுக்கு ஊட்டமாகிவிடுகிறது. தமிழ்நாட்டரசு மொழிச்செயலாற்றல் மிக்கவர்களைத் தேர்ந்து ஒரு கழகம்போல் நிறுவித் தொடர்ந்து செயல்பட வைக்கலாம். அவர்கள் மொழிவழக்குகளைத் தீர ஆராய்ந்து உரிய சொற்களையும் சொற்றொடர்களையும் ஆக்கிக்கொண்டு இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, இன்று மிகுதியாய் விற்கும் திறன்பொருள்களில் ஒன்று கிண்டில் எனப்படும் திரைப்பொருளாகும்.

சிறுதிரையுள்ள அக்கருவிக்குள் ஒரு நூலகத்தையே வைத்தடக்கி வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்லலாம். படிப்பதற்குப் பயன்படுவது. அதற்குப் ‘படினி’ என்ற சொல்லை ஆக்கித் தந்தேன். கணிப்பொருள் கணினி ஆவதுபோல் படிப்புப் பொருள் படினி. கிண்டில் என்பது தூண்டு, தழலெழுப்பு என்னும் வேறு பொருள் தரினும் நாம் பொருளுக்குத் தமிழில் பெயரிடுகிறோம். படினி என்பது பொருட்பெயர். இன்னொரு நிறுவனம் வேறொரு பெயரில் இப்பொருளை வெளியிட்டாலும் அதைப் படினி எனலாம். இவ்வாறு ஒரு பொருளுக்குப் பெயர்களை இட்டுப் பரவலாக்கினாலே ஆங்கிலப் பயன்பாட்டைத் தடுத்தாட்கொள்ளலாம்.

தனித்தமிழ் இயக்கம் என்பது இனி தனியாள் சார்ந்த முயற்சிகளோடு தொடர்புடையது. தற்காலத்தினர் அனைவரும் வடமொழி ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்கள் தவிர்த்து உரிய தமிழ்ச்சொற்களில் எழுதவும் பேசவும் முயலவேண்டும். அதில் எந்தக் குறையுணர்ச்சியும் கொள்ளக்கூடாது. அவ்வாறிருந்தாலன்றி தமிழைக் காப்பது கடும்பணியாகிவிடும். ஒவ்வொருவர்க்கும் உரிமையானது நம் தமிழ்மொழி. அதைக் கெடவிடுவது கண்ணிருந்தும் பார்வையிழந்து வாழ்வதற்கு ஒப்பாகும். மொழிவாழும் புலம் மொழிமாந்தரின் உள்ளமும் பேச்சும் எழுத்தும்தாம். அங்கே மொழிக்குரிய இடத்தில் மாற்றாள் வரத்தகாது. வெறுமனே சில்லாயிரம் சொற்களால் ஆகிய எளியவர்களின் வாழ்வில் பன்னூறு பிறமொழிச்சொற்கள் கலந்தால் தமிழ் என்னாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

செப்டெம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com