தந்தை என்னும் நாயகன்?

தந்தை என்னும் நாயகன்?
Published on

"Daddy,thanks for being my hero, chauffeur, financial support, listener, life mentor, friend, guardian and simply being there everytime i need a hug - Agatha Stephanie lin

அநேகமான பெண்களுக்கு அப்பா தான் எல்லாம். அரியணையில் அப்பா வீற்றிருக்க அவர் மடியில் இளவரசியாக செல்லங் கொஞ்சும் நினைப்புகள் வாழ்நாள் முழுவதும் வந்து வந்து போகும் அவர்களுக்கு. திருமணத்திற்கு பின் தன் அப்பாவின் மாதிரிகளை கணவனிடத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் பலர். வயதாகும் போது தான் கொண்டாடிய மகன் தன்னை தன் தந்தையைப் போல் உள்ளங்கையில் வைத்து கொண்டாடுவான் என்ற எதிர்பார்ப்பு வரும்...

இதெல்லாம் நனவானாலும், ஆகாவிட்டாலும் பெரும்பாலான பெண்கள் வெளியே சொல்வதில்லை.

ஆனால் அப்பா மகன்கள் உறவு அப்பா மகள்கள் உறவு போல சுமுகமானதல்ல.

அம்மா மகன் உறவு அநேகமாக ஒரே மாதிரியாகத் தானிருக்கிறது. மேலும், அதைப் பற்றிப் பேச மகன்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.

அப்பாவைப் பற்றி மனம் திறந்து பேச மகன்கள் பலருக்கு தயக்கம் இருக்கிறது.

‘‘மனசுகள் மட்டும் ஈரமான மனிதர்களின் மழை பொய்த்த ஊரில் விவசாயத்தை நம்பாமல் நெசவாளியானவர். கடுமையான உழைப்பாளி. ஒவ்வொரு தீபாவளிக்கும் அவரது சொசைட்டியில் துணிக்கடன் கூப்பன் தருவார்கள்.

கோ - ஆப்டெக்சில் குறிப்பிட்ட தொகைக்கு குடும்பத்திற்குத் துணி எடுத்துக் கொள்ளலாம். பின் நெசவு கூலியில் கழிக்க வேண்டும். நான், என் தங்கை, அம்மா, அப்பா எல்லோருக்கும் துணி எடுத்து கணக்குப் பார்க்கும் போது அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை விட பில் தொகை அதிகாமாயிருக்கும். அவருக்கு எடுத்து வைத்த வேட்டி சட்டையை திருப்பிக் கொடுத்துவிடுவார். இப்படியாக, எந்தத் தீபாவளிக்கும் அவர் புதுத்துணி உடுத்தியதில்லை.'' இது தனது அப்பாவைப்பற்றி கவிதாபாரதி எழுதிய குறிப்பு. இது போன்று பலர் தங்களது அப்பாவின் தியாகங்களை வியந்து பார்ப்பதுண்டு.

‘‘துன்பத்தில் இருப்பவர்களுக்காக கொஞ்சம்கூட இரங்காமல் இருக்கும் உங்கள் குணத்தை, உங்கள் கருத்துகளால் சொற்களால் எனக்கு நீங்கள் கொடுக்கும் அசிங்கத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.''

‘‘அப்பா என்னை வளர்த்த முறை பெருமளவு அச்சம், பலவீனம், சுயவெறுப்பு ஆகியவற்றின் சுமையை என்மீது ஏற்றிவிட்டது,''

இவ்விரண்டும் எழுத்தாளர் காஃப்கா தனது அப்பாவைப் பற்றி எழுதிய குறிப்பு.

இந்த இரண்டு அனுபவங்களுக்கும் இடையே தான் பெரும்பான்மையான அப்பா மகன்களுக்கான உறவுகள் குவிந்து கிடக்கின்றன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் அப்பா மகன் உறவுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு போக ஆரம்பித்தது, கூட்டு குடும்பங்கள் சிதைந்தது இந்த இரண்டு நிகழ்வுகள் பல விஷயங்களை மாற்றியுள்ளன. அதில் தந்தை மகன் உறவு முக்கியமானது.

முன்பு அம்மாவின் மூலம் தேவைகளை/ ரகசியங்களை அப்பாவிற்கு தெரிவித்த காலம் போய் தற்போது தந்தையின் மூலம் அம்மாவிடம் தெரிவிப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

எனது நண்பரின் மகள் அம்மாவிடம் தனது காதலுக்கு சம்மதம் வாங்கித் தர அப்பாவிடம் விண்ணப்பித்துள்ளார். இந்த மாற்றம் சுவாரஸ்யமாகத்தானிருக்கிறது. தனது மனைவியின் பிரசவத்திற்காக ஊரறிய சர்வதேச கிரிக்கெட்டில் விடுப்பு எடுக்கும் விராட் கோலியின் செய்கை பல மனைவிகளின் விருப்பத்தின் தொடக்கமாகலாம். பல தனியார் பெரு நிறுவனங்கள் மனைவியின் பேறுகாலத்தை ஒட்டி கணவன்களுக்கு விடுமுறை அளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘ மகன்கள் ஒன்று தம் தந்தையரைப் போல ஆகவிரும்புகிறார்கள். அல்லது அதற்கு முற்றிலும் எதிரானவராக''- கில்ராய் ஜே ஓல்ட்ஸ்டெர் அப்பா மகனுக்கான உறவு சிக்கல்களை இந்த கருத்தில் இருந்து அலச ஆரம்பிக்கலாம்.

பல அப்பாக்களுக்கு தன் பிள்ளைகள் ஏன் தன்னிடம் சுமுகமாக இல்லை என்பது புரியாத புதிர். இருவரிடையே இருக்கும் சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்பது மற்றொரு புதிர்.

மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். ஆனால் சில பொதுவான விஷயங்கள் எல்லா மகன்களுக்கும்/மகள்களுக்கும் தேவையாக இருக்கலாம். பிள்ளைகளுடன் நல்ல உறவை விரும்பும் தந்தைகள் செய்யவேண்டிய சில விஷயங்கள்.

1. அட்வைஸ்களை தவிர்த்துவிட்டு, அனுபவங்களை பிள்ளைகளிடம் பகிருங்கள். அறிவுரைகளை விட நல்ல முன்மாதிரிகள் பின்பற்றவைக்கும்.

2. உங்களுக்கு விரோதமான விஷயங்களை செய்தாலோ தேர்ந்தெடுத்தாலோ பிள்ளைகளை வெறுக்காதீர்கள், கரித்து கொட்டாதீர்கள். அவர்களது தேர்வை மதிப்பது...

3. பிள்ளைகளின் அம்மாவை (உங்கள் மனைவியை) நேசிப்பது. அம்மாவை கொடுமைப்படுத்தும் அப்பாவை பிள்ளைகள் வெறுக்கிறார்கள். (ஒருவேளை விவாகரத்து நிலைக்கு செல்ல நேர்ந்தால் கூட பிள்ளைகளின் முன்னால் மனைவிக்கு அதிகம் கஷ்டம் கொடுக்காதீர்கள்)

4. அவர்கள் வாழ்வின் முக்கிய  தருணங்களில் முடிந்தவரை உடனிருங்கள்.

5. பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் இடையே ஒரே மாதிரி விஷயங்களில் ஆர்வம்  இருப்பதை வளர்த்தெடுங்கள்.

6. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக நேரம் செலவழிப்பது அவசியம்.

7. ஒரு குழந்தையை உங்களது மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடுவது வெறுப்பை சம்பாதிப்பதற்கான எளிய வழி. இதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

8 - 9. பொதுவாக தந்தைகள் இரண்டு விஷயங்களை பிள்ளைகளோடு பேசுவதை தவிர்ப்பதுண்டு. காமத்தையும் காசையும் எப்படி கையாள்வது என்பது தான் அவை.

காமம் பற்றி பேசுவதற்கு பல நேரங்களில் வாய்ப்பற்று போகிறது என்கிற தந்தைகள் உண்டு. பணத்தை எப்படி கையாள்வது என்று பல நேரங்களில் தந்தைகளுக்கே தெரிவதில்லை. வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கப் போவது பணம் பற்றிய படிப்பினைகள் தான்.

இந்த ஒன்பது விஷயங்களை சரியாக கையாளும்போது தந்தை மக்கள் உறவு சிறப்புறும். இந்த சிறப்பிதழில் அப்பா என்ற உறவு பல்வேறு கோணங்களில் அலசப்படுகிறது. பலர் தங்களது அப்பாவைப்பற்றிய அனுபவங்களை பதிவு செய்துள்ளனர். அனுபவங்கள் கதைகளாய் நம் முன் விரிகின்றன. ஒவ்வொரு அப்பா அனுபவத்திற்கும் ஒரு சிறுகதையின் கூறு உள்ளது.

இந்த சிறப்பிதழைப் படிக்கும் எல்லா அப்பாக்களும் மெருகு ஏற்றப்பட்ட அப்பாவாக மாறுவார்கள்.

"The quality of father can be seen in the goals, dreams and aspirations he sets not only for himself, for his family" - Reed Markham

- அந்திமழை இளங்கோவன்

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com