தந்தை எனும் அதிகாரம்!

தந்தை எனும் அதிகாரம்!
Published on

தந்தையும் தனயர்களும் என்ற தலைப்பில், இவான் துர்கனேவ் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்தத் தலைப்பு எனக்குப் பிடித்தமானது. காரணம், தலைமுறைகள் மாறினாலும் தந்தைக்கும் தனயனுக்குமான உறவிலுள்ள எதிர் நிலை மாறவேயில்லை.

தந்தையாக இருப்பது என்பது ஒரு அதிகாரம். எல்லாத் தந்தைகளுக்கும் அது பொருத்தமானதே. தனயன் என்பது ஒரு மீறல். ஒரு விடுபடல்.

சுதந்திரம். எல்லாக் காலத்திலும் மகன் தந்தையினைக் கடந்து போகவும் மீறிச் செயல்படவுமே முயற்சிப்பான். அதுவே இயல்பு.

மகன் வளர்ந்து பெரியவன் ஆகி திருமணமாகி மகனோ, மகளோ பெற்றவுடன் அவனும் தந்தையின் வேஷத்தை புனையத் துவங்குவான். தன் தந்தையைப் போல நிச்சயம் நடந்து கொள்ளமாட்டான். அவரை விடச் சிறப்பாக, சுதந்திரமாக, கட்டுபாடுகள் அற்றுப் பிள்ளைகளை வளர்க்க முற்படுவான். ஆனால் அதில் அவன் எவ்வளவு வெற்றி அடைகிறான் என்பதைக் காலம் தான் முடிவு செய்கிறது.

காஃப்காவிற்கு அவரது தந்தையைப் பிடிக்காது. தந்தையின் கெடுபிடிகள். அறிவுரைகள். கண்காணிப்பு குறித்து வேதனையுடன் கடிதம் எழுதியிருக்கிறார்.

உண்மையில் காஃப்காவின் அப்பா ஒரு குறியீடு. அவரைப் போலத் தானே புதுமைப்பித்தனின் அப்பா இருந்தார். மகாகவி பாரதியின் அப்பா நடந்து கொண்டார். சுந்தர ராமசாமி தனது தந்தையின் கண்டிப்பு மற்றும் அறிவுரைகள் பற்றி எழுதியிருக்கிறாரே. இந்தியாவிற்கே தந்தையான மகாத்மா காந்தியை அவரது பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லையே. காந்தியின் மகன் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பினானே?

தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை தனது சந்தோஷமே முக்கியம் என நினைப்பவர். தனது சுகத்திற்காக எதையும் செய்ய முற்படுகிறவர். மகாபாரத்தில் அப்படி யயாதி வருகிறாரே. நாவலில் வரும் கரமசோவ் தஸ்தாயெவ்ஸ்கியின் நிஜதந்தையின் சாயலில் உருவாக்கப்பட்டவரே. கோகோலின் தாரஸ்புல்பாவில் வரும் தந்தை, பிள்ளைகளை மிகவும் நேசிப்பவன். ஆனால் இனப்பெருமைக்காக மகனைக் கொல்லக் கூடியவன். மகாபாரத்தில் வரும் பாண்டு, நோயாளியான தந்தை. திருதாரஷ்டிரன், பார்வையற்றவன். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயமே அவனை இயக்குகிறது. பாரபட்சமாக நடந்து கொள்ளச் செய்கிறது. தசரதன் போன்ற தந்தைக்கு நால்வரில் மூத்தவன் ராமன் மீது தான் பாசம் அதிகமாக இருக்கிறது. அப்படி எத்தனையோ குடும்பங்களில் மூத்த பையனை அதிகம் நேசிக்கும் தந்தை இருக்கதானே செய்கிறார்கள்?

தந்தைக்கும் மகனுக்குமான இடைவெளி, புரிதல். கருத்துமோதல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே வருகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய திரைப்படத்தில், வளர்ந்த பையனை தந்தை அடிக்கும் காட்சியைக் காண முடிகிறது.

நவீன இலக்கியத்திலும் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத தந்தை, சொத்து தரமுடியாது எனச் சண்டையிடும் தந்தை. பொறுப்பில்லாமல் குடும்பத்தை விட்டு ஓடிய தந்தை. மகள் வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தந்தை எனத் தந்தையின் பல்வேறு வடிவங்களைக் காண முடிகிறது.

தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு ஒடிய பையன்கள் இருக்கிறார்கள். தாயிடம் சண்டையிட்டு அப்படி ஒடியவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

குடும்பப் பொறுப்புகளை மறந்து சுயநலத்துடன் ஓடிப்போன தந்தையை இலக்கியம் பதிவு செய்கிறது. அப்படியான பெண் பற்றிக் குறைவான பதிவுகளே காணப்படுகிறது.

தந்தைக்கும் மகளுக்குமான உறவு இந்தத் தலைமுறையில் மிகவும் மாறியிருக்கிறது. பெண்ணைப் படிக்கவைப்பது. வேலைக்கு அனுப்பி வைப்பது, விரும்பியவரை திருமணம் செய்து தருவது எனத் தந்தை மிகவும் மாறியிருக்கிறார். தந்தையை ஒரு தோழனைப் போலப் பெண்கள் நினைக்கிறார்கள். தந்தைக்குச் சவரம் செய்துவிடும் மகளைப் பற்றி நானே ஒரு கதை எழுதியிருக்கிறேன்.

தந்தையைப் பற்றி உயர்வாக எழுதப்பட்டவை யாவும் பெண்களால் எழுதப்பட்டதே. அபூர்வமாக ஆண்களில் ஒரு சிலர் தந்தையின் தியாகத்தை, பொறுப்புணர்வை உருகி எழுதியிருக்கிறார்கள். பொதுவில் தந்தையோடு கொண்ட வெறுப்பு, பிணக்கு தான் அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.

தந்தை ஒரு தலைமுறையின் அடையாளம். அவரது வெற்றி தோல்விகள் பிள்ளைகளின் மீது படிவதை தவிர்க்க முடியாது. தந்தையின் அவமானங்களைப் பிள்ளைகள் அறிவதில்லை. தந்தை ஒரு பிரபலமாக இருந்தால் அந்த நிழல் தன் மீது விழக்கூடாது எனப் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது சரியே.

வீட்டில் அரசனைப் போல உத்தரவுகள் போடும் தந்தை, அலுவலகத்தில் கைகட்டி நிற்பதுடன் கூப்பிட்ட குரலுக்கு ஓடுவதும், தேநீர் வாங்கித் தருவதையும், உட்கார நேரமில்லாமல் கால்நடுக்க நிற்பதையும் கண்ட எனது நண்பன், தன் இயலாமையைத் தான் அப்பா வீட்டில் காட்டுகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னான். அது தான் உண்மை.

தந்தையாக நடந்து கொள்ளும்போது ஒருவன் கண்ணுக்குத் தெரியாத சுமைகளைச் சுமக்க துவங்கிவிடுகிறான். கற்பனை பயத்தில் உலவ ஆரம்பிக்கிறான். மகன் அல்லது மகளை இப்படித் தான் உருவாக்க வேண்டும் என்று கனவு காணுகிறான். பெரும்பான்மை தந்தையின் கோபத்திற்குக் காரணம் முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதில் தானிருக்கிறது. என்ன படிக்க வேண்டும் என்பதில் துவங்கி, என்ன உடைகள் வாங்க வேண்டும். என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை தானே முடிவு செய்ய வேண்டும் எனத் தந்தை நினைக்கிறார். இன்று தான் அந்த மனநிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

ஒரு மகள் பிறந்தவுடன் அவளது திருமணத்தைப் பற்றித் தந்தை கனவு காணத்துவங்கிவிடுவான். அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான் என்று, சீனர்கள் சொல்கிறார்கள். யியுன் லி எழுதிய சீனச் சிறுகதையில், அமெரிக்காவில் வாழும் மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் எனத் தனியே வாழுகிறாளே என்று தந்தை கவலை

அடைகிறார். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று, தேடி வருகிறார். அவளோ என் வாழ்க்கையை நான் தீர்மானித்துக் கொள்வேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கேட்கிறாள். இந்தக் கவலை இன்று உருவானதில்லை. அது நீ பிறந்த நாளில் இருந்து உருவானது என்கிறார், தந்தை. அது தான் மேற்சொன்ன நம்பிக்கையின் அடையாளம்.

சீனத் தந்தையிடமிருந்து தமிழகத்திலுள்ள தந்தைகள் வேறுபட்டவர்களில்லை. மகள் மீது கூடுதல் அன்பு தந்தைக்கு இயல்பாகவே இருக்கிறது. மகளும் தாயை விடத் தந்தையை அதிகம் நேசிக்கவே செய்கிறாள்.

புத்தனாவது சுலபம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறேன். அது இன்றைய தந்தையின் மனநிலையை விளக்ககூடியது. தன்னையும் மகனையும் பிரிப்பது மகன் வைத்திருக்கும் பைக் எனத் தந்தை நினைக்கிறார். தன் விருப்பங்களை ஏன் மகன் புறக்கணிக்கிறான் என்று புரியாமல் தடுமாறுகிறார். மகனைப் பற்றிக் காரணமில்லாமல் பயப்படுகிறார். இது நம் காலத்தின் குரல் இந்தத் தலைமுறையில் மகனோ, மகளோ தந்தையைப் புரிந்து கொண்ட அளவில் சென்ற தலைமுறையில் புரிதல் ஏற்படவில்லை.

தந்தை பெரும்பாலும் அன்பை வெளிப்படுத்த தெரியாதவர். மொழியற்றவர். அவரது கெடுபிடிகளும் கோபமான பேச்சும், தோரணையும், உத்தரவுகளும் அவர் மீதான அச்சத்தை எப்போதும் மனதில் ஆழமாகப் பதிய வைத்துவிடுகிறது. தந்தை தன் மீது கொண்டிருக்கும் அன்பை பலரும் கடைசி வரை தெரிந்துக் கொள்ளாமலேயே போவதுதான் வேதனை.

உதிரிப்பூக்கள் படத்தில் வரும் விஜயன் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தான் அந்த வீடு கலகலப்பாக மாறும். அப்படித்தான் பெரும்பான்மை குடும்பங்களில் இன்றும் நிலைமை இருக்கிறது.

இந்தத் தலைமுறையில் பிள்ளைகளுடன் அன்றாடம் உரையாடவும், அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளவும், கூடி விவாதிக்கவும் நண்பர்களைக் கொண்டாடவும் ஒன்றாகப் பயணிக்கவும் பெற்றோர்கள் தயராகியிருக்கிறார்கள். அந்த மாற்றம் உறவில் புதிய சந்தோஷத்தை உருவாக்கியிருக்கிறது மகன் அல்லது மகளின் வெற்றியை உருவாக்குவதில் தந்தைக்குள்ள பங்கு மிக முக்கியமானது. விளையாட்டு வீரர்களைப் பாருங்கள். தன் மகன் விரும்பும் விளையாட்டில் அவனை வெற்றியடையச் செய்ய அவனது தந்தை விடிகாலையில் அவனுடன் மைதானத்திற்கு ஓடுகிறார். தேவையான உதவிகள் செய்கிறார். போக வேண்டிய ஊர்களுக்கு எல்லாம் அழைத்துப் போகிறார். கடன் வாங்குகிறார். கஷ்டப்படுகிறார். மகன் அடையும் வெற்றிதான் அவரது ஒரே கனவு. டெண்டுல்கரின் தந்தை அப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறார். தங்கல் என்ற இந்தி திரைப்படம் அப்படி ஒரு தந்தையினைத் தானே காட்டுகிறது.

காய்ச்ச மரம் என்றொரு சிறுகதையைக் கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். தன் பிள்ளைளை ஒரு தந்தை எவ்வளவு நேசிக்கமுடியும். அப்படிபட்ட தந்தை தாயை பிள்ளைகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, மிகவும் உருக்கமாக எழுதியிருப்பார். அப்படி முதுமையில் துரத்தப்பட்ட தந்தைகள் வேதனைக்குரியவர்கள்.

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் தான், தந்தை பிள்ளைகளிடம் எதைக் கேட்க கூடாது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம்.

பண்பாடும் சமூகமும் தந்தைக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் பயம் எளிதானதில்லை. ஊடகங்கள் அந்த பயத்தை அதிகமாக்குகின்றன. ஆனால், இந்த பயம் அர்த்தமற்றது. தந்தை நாற்பது வயதில் அடைந்த வெற்றியை. உயரத்தை, பையன் இருபது வயதிலே அடைந்துவிடுகிறான். அது தான் இந்தத் தலைமுறையின் சாதனை.

நிறைய இளைஞர்கள் தன் தந்தையின் விருப்பத்தைப் புரிந்து அவரைத் தோழனாக நடத்துகிறார்கள். தந்தையிடம் ரகசியங்களை மறைப்பதில்லை. பணம் கேட்பதும் பணம் கொடுப்பதும் அத்தனை எளிதாக மாறியிருக்கிறது. தந்தையும் வயதை உதறி இளமையின் உற்சாகத்துடன் நடந்து கொள்கிறார். அந்த மாற்றம் தான் நம் காலத்தில் உறவில் ஏற்பட்ட புதிய வரவு என்று சொல்வேன்.

ஜனவரி, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com