தஞ்சை பெரியகோவிலின் நிழல் என்றுமே கீழே விழாது:
இக்கோயில் பற்றிய புகழ்பெற்ற தொன்மங்களில் இதுவும் ஒன்றாகும். இது மிகவும் தவறானது. அக்கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதை யார் வேண்டுமானாலும் பார்த்து அறியலாம்.
தஞ்சை பெரியகோயிலில் இருக்கும் பெரிய நந்தி சிலை ராஜராஜன் அமைத்தது:
இது உண்மை அல்ல. இந்த நந்தியானது பிற்காலத்தில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஏனெனில் இது நாயக்கர் கட்டடக் கலையின் கலையமைதியுடன் அமைந்துள்ளது. ரகுநாத நாயக்கர், அச்சுத நாயக்கர், செவப்ப நாயக்கர் இவர்கள் மூவரின் காலத்தில் இது அமைக்கப்பட்டிருக்கலாம். 13 அடி உயரமும் 56 அடி சுற்றளவு கொண்டது. ஆனால் ஆகம விதிப்படி லிங்கத்தின் உயரத்துக்கு ஏற்ப கட்டப்பட்ட சோழர்கால நந்தியானது உள்ளே இருக்கும் வராகி அம்மன் அருகே அமைந்துள்ளது. அத்துடன் இந்த பெரிய நந்தி உயரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அதன் நெற்றியில் ஆணி ஒன்றை அடித்து வைத்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய தொன்மக் கதைகளில் ஒன்று.
கோபுர விமானம் ஒரே கல்லால் ஆனது:
தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தில் உள்ள விமானம் ஒரே கல்லால் ஆனது என்று பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.அந்த விமானத்தின் மீது ஏறிப்பார்க்கும் வாய்ப்பு மூன்று முறை எனக்கு கிட்டி உள்ளது. அது தனித்தனியான கற்களால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதுதான். அழகி என்றொரு பாட்டி கொடுத்த பாறையால் இதை அமைத்தார்கள் என்றெல்லாம் சுவாரசியமான கதைகளுக்கும் குறைவே இல்லை. இந்த கோவில் கட்டுவதற்கு உதவிய அத்தனை பெயரையும் ராஜராஜன் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறார்.
விமானத்தில் உள்ள கல் எண்பது டன் எடையுள்ள கல்லானது 12 கிமீ தூரத்தில் உள்ள சாரப்பள்ளம் என்ற ஊரில் இருந்து சாரம் அமைத்து இழுத்துவந்து மேலே அமைக்கப்பட்டது என்பது இதுபற்றிய இன்னொரு சுவாரசியமான பொய்த் தகவல். இந்த கற்கள் கோவில் வளாகத்துக்குள்ளேயே சுருள்சாய்வுதளம் அமைத்து அதன் மூலமே மேலே ஏற்றப்பட்டவை. அதற்கான இடவசதி கோவில் அமைந்துள்ள வளாகத்திலேயே இருக்கிறது.
கருவூர் சித்தர் இந்த கோவில் லிங்கம் நிலைநிறுத்த உதவினார்.
இதுவும் இந்த கோவில் பற்றிய சுவாரசியமான தொன்மங்களில் ஒன்று. கருவூர்த் தேவர் எனும் சித்தர் திருவிசைப்பாவை எழுதி உள்ளார். இவர் ராஜராஜராஜன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். அவரது மகன் காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும். பெரிய கோவில் கல்வெட்டுகளில் எங்கும் கருவூரார் பெயர் காணப்படவில்லை. கோவிலின் தலபுராணங்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டபோது, இதுபோன்ற கதைகள் மக்களிடையே பக்தியை வளர்க்க சேர்க்கப்பட்டன.
தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ஐரோப்பியர் சிலை; பிற்காலத்தில் தமிழகம் வெள்ளையர்களால் ஆளப்படும் என்பதை சோழர்காலத்தில் முன்னறிவித்தது:
இதுவும் நம்மவர்களின் கற்பனையே. பெரியகோவில் முழுக்க கருங்கற்களால் அமைக்கப்பட்ட நிலையில் இது சுண்ணாம்புக்கல்லால் அமைக்கப்பட்ட சிலை. 1600-1645 இல் தஞ்சையை ரகுநாத நாயக்கர் ஆண்டபோது தரங்கப்பாடியில் டென்மார்க் குழுவினர் வர்த்தகத்துக்கு வந்தனர். அந்நாட்டு மன்னருடன் ரகுநாத நாயக்கர் நல்லுறவை பேண தங்க ஓலையில் தமிழில் கடிதம் எழுதி தெலுங்கில் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளார். அந்த ஓலை இன்னும் அங்கே இருக்கிறது. அதன் நினைவாக அவர் அம்மன்னருக்கு கோவிலில் சிலை அமைத்திருக்கலாம்.
பஞ்சவன் மாதேவி பெரியகோவில் தேவரடியார்களில் ஒருவர்:
தஞ்சை பெரியகோவிலில் 108 கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் எண்பது பூர்த்தியான நிலையிலுள்ளன. இந்த நாட்டிய கரணங்களை செதுக்க நடனமங்கை ஒருவர் உதவியதாகவும் அவர்தான் பஞ்சவன் மாதேவி என்ற தேவரடியார் குலப் பெண்மணி என்று இப்படி ஒரு தகவலும் கற்பனையாக உலவுகிறது. பஞ்சவன்மாதேவி ராஜராஜனின் 11 தேவியரில் ஒருவர். பழுவேட்டரையர் மகள். ராஜேந்திரனின் சிற்றன்னையான இவர் ஏராளமான கொடைகளை கோவிலுக்குச் செய்துள்ளார். இவரது பள்ளிப்படை பட்டீசுவரத்தில் அமைந்துள்ளது.
ராஜராஜன் தற்கொலை செய்துகொண்டான்:
கருவூர் சித்தர் சாபத்தால் ராஜராஜன் சித்தம் கலங்கிவிட்டதாகவும் மகன் ராஜேந்திரனுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் பெரியகோவில் கோபுரத்தின் மீதிருந்து வீழ்ந்து இறந்துவிட்டான் என்றும் இதற்கு ஆதாரமாக கன்னிமாரா நூலகத்தில் நூல் ஒன்று உள்ளதாகவும் பல கதைகள் உலவுகின்றன. ராசேந்திரன் தன் தந்தை மீது பெரும் மதிப்பு வைத்திருந்தான். 1012லேயே மகன் ராசேந்திரனை ராஜராஜன் இளவரசனாக நியமித்து விட்டான். தந்தையின் மீது அவன் கொண்டிருந்த மதிப்பையும் பணிவையும் பல கல்வெட்டுகள் உரைக்கின்றன. ராஜராஜன் அமைதியாக உடையாளூர் அருகே உயிர்துறந்தான்.
ஆதித்தகரிகாலன் கொலை செய்யப்பட்டதில் மதுராந்தக உத்தமச் சோழனின் கைவண்ணம் உண்டு; ராஜராஜனின் இரண்டாம் ஆட்சி ஆண்டில்தான் கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது:
இதுவும் ஒரு தவறான தகவலே ஆகும். உடையார்குடி கல்வெட்டை தவறாகப் படித்துப் புரிந்துகொண்டமையால் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் மேற்சொன்ன தவறான தகவலைக் கூறிவிட்டார்.
சதாசிவப் பண்டாரத்தார் இந்த தகவலை ஏற்கவில்லை. ஆயினும் இதை மறுக்கும் ஆதாரங்களை வெளியிடவில்லை. இந்த கல்வெட்டைப் படியெடுத்து வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அந்த சாசனம் ராஜராஜனின் இரண்டாவது ஆட்சிகாலத்தில் வெளியான ராஜராஜனின் நேரடி ஆணை அல்ல. இது கொலையாளிகளின் பெயரை மட்டுமே ஒரு வரியில் குறிப்பிடும் சாசனம். தனிநபர் ஒருவர் (வியாழ கஜமல்லன் என்பவர்) தான் வாங்கிய நிலத்தைப் பதிவு செய்வது பற்றியது என்பதை உறுதி செய்து ஆய்வுக்கட்டுரை வெளியிட்டேன். ஆதித்த கரிகாலனின் கொலையாளிகளின் நிலங்களைக் கைப்பற்றியது என்பது முன்னதாக சுந்தரசோழர் காலத்திலோ பின்னர் வந்த உத்தம சோழர் (மதுராந்தகர்) காலத்திலோ நடைபெற்றிருக்கவேண்டும். ஆகவே மதுராந்தகர் மீது கொலைப்பழி சுமத்துவது தவறு. இதை பிற ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஜூலை, 2020.