டூரிங் டாக்கீஸ்

டூரிங் டாக்கீஸ்
Published on

மாலை 6 மணிக்கு ‘விநாயகனே வினை தீர்ப்பவனே' என்று சீர்காழி கோவிந்தராஜன் விஜயா டூரிங் டாக்கீஸ் ஒலிபெருக்கியில் பாடும் பாடல் ஒலியைக் கேட்டதும் இனம்புரியாத ஒரு உற்சாகம் வீட்டுக்குள் தறிக் கொட்டாயில் நூல் நூற்றுக்கொண்டிருக்கும் எனக்கு தொற்றிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டருக்கு அக்கம் பக்கத்து ஊரில் அந்த பாடல் கேட்கும். அந்தப் பாடல் போட ஆரம்பித்து விட்டார்கள் என்றால் டூரிங் டாக்கீஸில் படம் போடுவதற்கு தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம்.

சீர்காழி கோவிந்தராஜன் டூரிங் டாக்கீஸ் இல் இருந்து பாடுவார், நாங்கள் மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற எங்கள் கிராமத்தில் தயார்நிலைக்கு ஆளாவோம்.

விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பாடுவது கடவுள் வாழ்த்துப்பாடல் அல்ல எங்களுக்கு. சீர்காழி கோவிந்தராஜனே ‘இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க தியேட்டருக்கு வந்து பாருங்கடா' என்று அழைப்பது மாதிரி இருக்கும்.

அந்த பாடலை கேட்டுவிட்டு சும்மாவே இருக்க முடியாது. அம்மாவிடம் காசு வாங்கிக்கொண்டு, அப்பாவிடம் காசு வாங்கிக்கொண்டு, நெய்ய வைத்திருந்த நூலினை மளிகைக்கடையில் விற்று காசு வாங்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஓட்டமும் நடையுமாய் அந்த டூரிங் டாக்கிஸ் செல்வோம்.

ஒரு பாடல் 5 நிமிடம் பாடும் என்று ஒரு கணக்கு. எனவே ஐந்து பாடல்கள் கேட்பதற்கு முன்பாகவே தியேட்டரை சென்றடைய வேண்டும் என்று ஐந்து நிமிடத்திற்குள் காலை எட்டி எட்டி நடந்து சென்று அந்த மூன்று கிலோமீட்டர் தூரத்தை ஐந்து பாடல்கள் கேட்டு நிறைவுசெய்வதற்குள் போய் நிற்போம்.

இன்னொரு முக்கியமான பாடல் “கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் ஏழைக் கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் “ என்ற பாடல் கேட்கும்.

அந்தப் பாடல் முடிய முடிய டூரிங் டாக்கீஸ் அருகே வந்து அந்த விஜயா டூரிங் டாக்கீஸ் என்று கொட்டை எழுத்தில் எழுதிய போர்டைப் பார்த்ததும் எங்களுக்கு கோயிலுக்குள் நுழைந்த ஒரு சந்தோஷம் கிடைக்கும்.

கியூவில் நின்று சின்ன பொந்தில் கையை உள்ளே விட்டு அந்தக் காசை டிக்கெட் கொடுப்பவர் வாங்கி கலர் கலராய் இருக்கும் டிக்கெட் வாங்கி, டாக்கீசுக்குள் பாதி டிக்கெட் கிழித்துத் தர உள்ளே பாய்ந்து போய் இடம் பிடிக்கிற சுகமே தனி..

தரை டிக்கெட்டு முப்பது பைசா என்று நினைக்கிறேன். பெஞ்ச் டிக்கெட் கொஞ்சம் கூட.. மடக்குச் சேர் போட்டு கடைசியில் உட்காருவது பர்ஸ்ட் கிளாஸ். ஆனால் அதில் யாரும் உட்காருவது இல்லை. தியேட்டர் ஓனர்ஸ் சிலசமயம் உட்காருவது உண்டு. சில சமயம் பஞ்சாயத்து தலைவர் உட்காருவர்.

தரை டிக்கெட்டில் ஆண்-பெண் இருவருக்கும் இடையே ஒரு இரண்டு அடியில் சிறிய தடுப்பு சுவர் இருக்கும். பெரியவர்கள் எல்லாம் வந்து முன்னால் உட்கார்ந்து கொண்டால் தலை மறைக்கும். எனவே மணல் குவித்து உட்கார்ந்தால் தான் படம் பார்க்க முடியும்.

பெரும்பாலும் எம்ஜிஆர், சிவாஜி படங்கள்தான் போடுவார்கள்.வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை படம் மாற்றுவார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மேட்னி காட்சி என்று போடுவார்கள். பெரும்பாலும் ஜெய் சங்கர் படங்கள், சில சமயம் பக்திப்படங்கள் போடுவார்கள். பட்டணத்தில் பூதம், மாய மோதிரம், ஜெகன்மோகினி, கங்கா என்ற படங்களெல்லாம் தான் போடுவார்கள்.

டூரிங் டாக்கீஸ் விளக்கை எல்லாம் அணைத்து அந்த கார்பன் ஒளியில் அந்த மெஷின் சத்தத்தோடு திரைச்சீலையில் அந்தப் படத்தினுடைய பெயர் ஓடுகிற போது ஆரம்பிக்கிற அந்த பரவசம் இறுதியில் வணக்கம் போடும் வரைக்கும் நீண்டு கொண்டே இருக்கும்.

படம் ஓட ஆரம்பித்து ஒரு சீன் முடிந்த பிற்பாடு உடனே ஒரு குரல் கேட்கும் சோடா சோடா என்று ஒரு குரல் கேட்கும். அந்த பன்னீர் சோடாவை குடிப்பது என்பது ஆனந்தமாக இருக்கும். சோடா குடிப்பவன் வசதியான ஆள் என்பது வேறு விஷயம்.

இன்னொரு குரல் மெது வாய் குனிந்தபடி வடை... சுடச்சுட வடை... என செல்லும்.

அந்த வடை வாசனையைப் பார்த்ததும் சாப்பிடாமல் இருக்க முடியாது. 5 பைசாவுக்கு 10 வடை. ஒரு சிறிய கோலி குண்டு சைஸ் இருக்கும்.

மூன்றாவதுவகுப்பு நான் படித்து கொண்டிருந்தேன். எங்கள் ஆசிரியர் தானப்பன் அந்த டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். எனவே அவரிடம் நான் நட்பாக பேசி அவரது சைக்கிளில் பின்னால் அமர்ந்து போய் படம் பார்ப்பது வழக்கம்.

அப்படிப் போய், எங்க வீட்டுப்பிள்ளை எம்ஜிஆர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் “ என்று  சாட்டையைச் சொடுக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார். அற்புதமாக இருந்த அந்த பாடலை மறுபடியும் கேட்க வேண்டும் என்று மறுபடியும் போடுங்க என்று இருட்டில் நான் கத்த, அதான் சாக்கு என்று தியேட்டரே கத்த ஆரம்பித்தது.

திரையில் அந்தப் பாடல் மறுபடியும் போடுகிறார்கள். சந்தோஷம் தாங்க முடியவில்லை. மறுபடியும் போடுங்கடா என்று கத்துகிறேன். பின்னாலிருந்து ஒருவர் காலால் எட்டி உதைக்கிறார். நான் அய்யோ என்று எகிரி விழுகிறேன்.

யார்டா அது என்று திரும்பிப் பார்த்தால் என் தந்தை. ‘ஏண்டா படிக்க போறேன் வாத்தியார் கூடன்னுட்டு டெய்லி இதைத்தான் பண்ணிட்டு இருக்கியா?' என்று விட்ட உதையில் அன்றோடு திரைப்படம் பார்ப்பது அந்த டூரிங் டாக்கீசில் குறைந்துவிட்டது. பெரும்பாலும் டூரிங் டாக்கீஸ் என்றால் கீற்றுக் கொட்டகைதான் இருக்கும். காசு இல்லாத போது யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு பின்னால்  சென்று சிறுநீர் தட்டிப் பக்கம் போய் கீற்றுத் தட்டியை விலக்கிவிட்டு நைசாக உள்ளே போய் அமர்ந்து விடுவோம். இப்படித் தெரியாமல் கள்ளத்தனமாக பார்த்த நினைவு இருக்கிறது.

பிறகு வேட்டவலம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற போது டூரிங் டாக்கீஸ் மோகம் தீயாய் பற்றிக் கொண்டது. படிக்கிற ஊரில் பார்த்தால் மாட்டிக் கொள்வோம் என்று வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு ஏழெட்டு மைல் தாண்டிப் போய் கண்டாச்சிபுரம் டூரிங் டாக்கீஸில் தேவரின் துணைவன் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

தெற்குப் பக்கம் பத்து மைல் தாண்டி திருக்கோவிலூருக்குச் சென்று ஒளிவிளக்கு படம் பார்த்து, சைக்கிள் பஞ்சராகி நாங்கள் டேஞ்சரில் மாட்டிக் கொண்டது இப்பவும் நினைவில் உள்ளது.

இவை அப்போதைய வீர சாகசங்கள்.

பகல்முழுக்க உழைத்த பின் பார்க்கும் இடமாக அப்போது இருந்த சினிமா இப்போது முழு நேர வாழ்வாக காலம் மாறி விட்டது என்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு டூரிங் டாக்கீஸ் இல் ஒரே ஒரு மாலைக் காட்சியாவது பார்க்க வேண்டும். மணல் குவித்து அமர்ந்து பார்க்க இடையிலே கமர்கட்டு, வடை, சோடாவும் விற்கிற சப்தத்தைக் கேட்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com