கைக்குள் வந்துவிட்ட காமிராக்களால் ஆனது தற்போதைய உலகம். இதில் டிக்டாக், ஹலோ போன்ற வீடியோ செயலிகள் மக்களுக்குத் தேவையான பொழுதுபோக்குக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய கணம் இந்த செயலியை தன் ஸ்மார்ட்போனில் தரவிறக்கும் ஒருவன் தன்னைச் சுற்றி நிகழும் காணொளிகளால் ஆன உலகைக் கண்டு திகைத்தேபோவான். சினிமா குத்துப் பாடல்களுக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் ஆடிகொண்டிருக்கும் இளம் மற்றும் பேரிளம் பெண்கள், கற்ற வித்தை முழுக்க வீடியோக்களாக ஆக்கி இறக்கிக் கொண்டிருக்கும் அரும்பு மீசைஇளைஞர்கள், சதா உதட்டைப் பிதுக்கி லிப்ஸ்டிக் உதடுகளால் கொணஷ்டை காட்டிகொண்டிருக்கும் பெண்கள்,' நீங்க என்ன லவ் பண்ணீங்கன்னா, என் பக்கத்தில் டூயட் போடுங்க' என்று கிறங்க வைக்கும் பெண், ‘எனக்கு ஐ லவ்யூனு மெசேஜ் அனுப்புங்க, நான் ஒருத்தரை தேர்ந்த்டுத்து டின்னர் சாப்பிட அழைப்பேன்' என்கிற பக்கா தமிழச்சி ஒருவர்,‘லே.. செத்த பயலுவளா....
செத்த பயலுவளா...' என சதா திட்டிக்கொண்டே இருக்கும் ஜிபி முத்து... என வீடியோ உலகம் நம் கவனத்தை ஈர்க்க சதா முயன்றுகொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் ஆங்கிலம் சொல்லித்தந்து பிரபலமான பெண்மணியும், கவிதை சொல்லி கவனம் ஈர்க்கும் மனிதரும் கவனத்தை ஈர்க்கிறார்கள். இடையிடையே இந்த பொருளை வாங்கிட்டீங்களா?இந்த செயலியை தரமிறக்கிட்டீங்களா என்று வரும் மார்க்கெட்டிங் வித்தைகளும் உண்டு. இவைகளுக்கு நடுவில் முத்துகளைப் பொறுக்குதல் பெரிய கலை. இதனால்தான் டிக் டாக் செயலியைத் தடை செய்யும் முயற்சியும் நடந்தது போலிருக்கிறது.
உலகெங்கும் 70 கோடிப்பேர் டிக் டாக் செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இது 20 கோடி. இந்த ஆண்டில் சீன தயாரிப்பான இந்நிறுவனம் 100 கோடி வருவாய் ஈட்டும் என்கிறார்கள். ஏன் வீடியோ செயலிகள் மீது இவ்வளவு ஈர்ப்பு?
எளிதில் பிரபலமாகிவிடுவதற்கான வாய்ப்பு. டிக்டாக் பிரபலங்கள் இப்போதே பலர் உருவாகி விட்டனர். இரண்டாயிரமாவது ஆண்டை ஒட்டியும் அதன் பிறகும் பிறந்தவர்களில் சுமார் 86 சதவீதம் பேருக்கு தாங்கள் ஏதோ ஒருவிதத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்று விருப்பப்படுவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கான வழிகளில் ஒன்றாக இருக்கிறது டிக்டாக். எல்லா நகரங்களிலும் வீடியோ செயலிகளைப் பயன்படுத்துவதற்காகவே சில தெருக்களும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு வருவதே இதன் பெருகிவரும் பயன்பாட்டுக்கு ஆதாரம்.
செய்தித்தாள்களுக்குத் தீனி, தொலைக்காட்சிகளுக்கு ஆரவார கண்டண்ட், இணைய தளங்கள், சமூக ஊடகங்களுக்கு பொழுதுபோக்கு என இந்த வீடியோ செயலிகளும் அதில் வரும் ஆட்களும் புதிய கச்சாப் பொருட்களாக அமைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிக்டாக்கால் உருவான சர்ச்சைகள் என்றே இந்த ஆண்டு தொடங்குமுன் சிறப்புத் தொகுப்புகளை தமிழ்த் தொலைக்காட்சிகள் வழங்கின.
சும்மாவே டிக்டாக் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரிடம், எப்படி இருக்குது இந்த வீடியோ செயலி என்றபோது அவர் சொன்னது:
''டொண்டடொடண்டய்ங்.. டொண்டடொண்டய்ங்...டொண்டடொண்ட டொண்டடொட்டய்ங்.... பப்பள பப்பள பளபள பளபளன்னு... பளபளபளன்னு''
இது என்னன்னு கேட்டுச் சொல்லுங்க..
பிப்ரவரி, 2020.