டிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல!

Published on

திரையில் தோன்ற வேண்டும் என்ற  எண்ணம் மிருகம் முதல் மனிதர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் இயல்பான உணர்வுதான். அதில் ஒன்றும் தவறு இல்லை. எப்போதாவது ஒரு செல்பி எடுப்பதோ அல்லது டிக் டாக் வீடியோ செய்வதோ சாதாரண விஷயம்தான் ஆனால் அதை தினசரி வாடிக்கையாக செய்வது அல்லது லைக்குக்காக எப்படி வேண்டுமானாலும் வீடியோ செய்யும் மனநிலைதான் ஆபத்தானது.

டிக் டாக் செயலியால்தான் பெண்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்று கூறமுடியாது. இயல்பாக பெண்கள் தலைமை ஏற்பவர்கள்தான். பெண்களை நீ வெளியே வராதே, இந்த மாதிரி உடைஉடுத்து, முகத்தை மறைத்து உடை அணி என்று ஆணாதிக்கமே கட்டுப்படுத்தி வைத்துள்ளது.  ஆண்களைவிட பெண் குழந்தைகள் தங்களை வெளிகாட்டிக்கொள்வதில், பேசுவதில் எழுதுவதில் அதிக  முனைப்புத் தன்மையுடன் இருப்பார்கள்.  ஒரு ஆண் குழந்தையிடம் சென்று பாட்டு பாடு, நடனம் ஆடு என்று சொன்னால் அவர்கள் தயங்குவார்கள். ஆனால் பெண் குழந்தைகளுக்கு

சிறிய தயக்கம் இருந்தாலும் அவர்கள் உடனே செய்து காட்டுவார்கள். குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வயது ஆகும்போதிலிருந்தே இந்த வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். ஆகவே இந்த வெளிப்பாட்டுத்தன்மை பெண்களுக்கு இயல்பானாது. ஆனால் இந்த டிக்டாக் வீடியோக்களை பெண்களுக்கான அதிகார வெளி என்று சொல்லமுடியாது. என்னை நீ லைக் பண்ணு என்று கேட்பது அவர்களுக்கான மேம்பாடு அல்ல. லைக்குக்காக கெஞ்சுவது, தன்னை கவர்ச்சியாகக் காட்டிக்கொள்வது என்பது மேம்பாட்டுக்கு, அதிகாரம் அடைவதற்கு எதிரானது. இந்த பெண்களுக்கு தன்னை வெளிப்படுத்த ஒரு சுதந்தர வெளி கிடைத்தும் அதை தன்னை மீண்டும் அடிமையாக்கிக்கொள்ளப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் சோகமானது.

எல்லோரும் தங்களை ஒரு பிரபலமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் இதன் பின்னால் ஒரு எதிர்மறையான விளைவும் இருக்கும் அல்லவா? அதை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்களா? அதுபற்றி அவர்களுக்குத்தெரிவதில்லை. அதனால்தான் டிக் டாக்கில் இறங்கி வம்பில் மாட்டிக்கொள்கிறார்கள்.

டிக் டாக் செயலி மூலம் நிறைய பெண்கள் வீடியோக்களை வெளியிடுவது ஏன்? கிராமப்புற பெண்கள் கூட இதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேட்கிறீர்கள். பெண்கள் சலிப்பில் இருக்கிறார்கள். கூடஞுதூ ச்ணூஞு ஞணிணூஞுஞீ! அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சமையல் முடிப்பதற்குள் மத்தியானம் ஆகிவிடும். ஆனால் இப்போது அதை பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். மீதப்படுகிற தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு தெரியவில்லை.  சுய முன்னேற்றத்துக்கு அதைப் பயன்படுத்துவதில்லை. சுய வெளிப்பாட்டுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள்.  தங்களை கவர்ச்சியான பெண்ணாக முன் வைக்கிறார்கள். சில பெண்கள் புரட்சி பேசுகிறார்கள். பெரியாரியமும் அம்பேத்கரியமும் பேசும் இளம் கிராமத்துப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவை எண்ணிக்கையில் குறைவுதான். நிறைய பெண்கள் செக்சியான ஒரு பாட்டைப் போட்டு, பக்கத்தில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இடுப்பைக்காட்டி, உதட்டைக் காட்டி, மிக அல்பத்தனமான வீடியோக்களை செய்கிறார்கள். அவர்கள் குடும்பத்தலைவிகளாகவும் வேறு இருக்கிறார்கள்.  தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் எவ்வளவு கிண்டல் செய்வார்கள், கணவரை அலுவலகத்தில் எவ்வளவு ட்ரால் செய்வார்கள் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. என் சுதந்தரம் இது என்கிறார்கள்.   என் நண்பர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்களே... என்றெல்லாம் கணவர்கள் எல்லாம் கதறுகிறார்கள். ஆனால் மனைவிகள் இது என் சுதந்தரம். அப்படித்தான் செய்வேன், இல்லையெனில் நான் கிளம்பிவிடுறேன்... என்கிறபோது கணவர்கள் திணறுகிறார்கள். குடும்ப அமைப்பே இதனால் ஆட்டம் கண்டுவிடுகிறது.

இது விடுதலை என்று பெண்கள் சொல்வது முட்டாள்தனம். இது சுதந்தரம் அல்ல. மீண்டும் தன்னை தன் பாலியல்புக்கு அடிமையாக்கிக் கொள்வதுதான்.

(கேட்டு எழுதியவர் வாசுகி)

பிப்ரவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com