ஜெர்மனியில் நேதாஜி: ஒர்லண்டோ மஸாட்டோவின் இந்திய விடுதலைப் போர்!

ஜெர்மனியில் நேதாஜி:  ஒர்லண்டோ மஸாட்டோவின் இந்திய விடுதலைப் போர்!
Published on

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் என்றால் சிங்கப்பூர், பர்மாவில் போராடியவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள். ஜெர்மனியில் சுபாஷ் உருவாக்கிய மூவாயிரம் பேர் கொண்ட இந்தியவீரர் படையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா?

1941-ல் கல்கத்தா வீட்டுச்சிறையில் இருந்து தப்பிச்சென்ற நேதாஜி காபூல் சென்றார். அங்கே இத்தாலிய அதிகாரிகள் அவருக்கு போலிப்பெயரில் பாஸ்போர்ட் தயாரித்துத்  தந்தனர். என்ன பெயர் தெரியுமா? ஒர்லாண்டோ மஸாட்டோ! அங்கிருந்து மாஸ்கோ சென்ற அவர், பெர்லினை வந்தடைந்தார். பெர்லினில் இருந்தவரை அவர் இந்த பெயரிலேயே இருந்தார். ஒரு கட்டம் வரை அவரது இருப்பு ரகசியமாகவே வைக்கப்பட்டது. ஏனெனில் அவரைத் தீர்த்துக்கட்ட பிரிட்டிஷ் அரசு உளவாளிகளுக்கு அவர் தப்பித்தபோதே உத்தரவு இடப்பட்டிருந்தது. அவர் இந்திய விடுதலைப் படையை உருவாக்கியபோதுதான் அவர் ஜெர்மனியில் இருப்பதை பிரிட்டிஷ் உளவாளிகள் கண்டுபிடித்தனர்.

ஜெர்மனியின் வெளியுறவுத்துறை போஸ் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்திருந்தது. அவருக்கு ராஜாங்க அந்தஸ்து அளிக்கப்பட்டு அவர் ’மேதகு’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவரது செயல்பாடுகளுக்கான நிதியை ஜெர்மனி கடனாக வழங்கியது. இந்தியா விடுதலை பெற்றபின் அதைத் திருப்பித்தரும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஜெர்மனியிலிருந்து கிழக்காசியா வந்து திரட்டிய நிதியில் கடனை அடைக்கவென்று கொஞ்சம் அனுப்பியும் வைத்தார் நேதாஜி. பெர்லினில் தனக்கு அளிக்கப்பட்ட மாளிகையில் சுதந்தர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி இந்தியாவில் உள்ள மக்களுக்காக ஏழு மொழிகளில் வானொலி ஒலிபரப்பை அவர் நடத்தினார். அந்த அமைப்பில் 35 பேருக்கு மேல் சேர்ந்து வேலை செய்தனர். இவர்கள்தான் போர்க்கைதிகளாக இருந்த இந்தியர்களிடம் இந்திய விடுதலைப் படையில் சேருமாறு பிரச்சாரம் செய்து அவர்கள் மனதை மாற்றுவதில் ஈடுபட்டனர்.

ஜெர்மனிக்குப் போய்ச்சேர்ந்த புதிதில் ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் சுபாஷுக்கு எல்லா உதவிகளையும் செய்தாலும் இந்திய விடுதலையைப் பற்றி பிடிகொடுக்கவில்லை. அச்சு நாடுகள் இந்திய விடுதலையை ஆதரித்து அறிக்கை விடவேண்டும் என்று சுபாஷ் விரும்பினார். வலியுறுத்தினார். ஜெர்மன் அரசுக்கு இதற்கான அறிக்கை நகலையும் அனுப்பினார். ஆனால் ஹிட்லர் அப்போது பிரிட்டனுடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முயற்சி செய்துவந்ததால் இதற்கு செவிமெடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு கழித்தே 1942- மே 27-ம் தேதி நேதாஜியால் ஹிட்லரை சந்திக்க முடிந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் இந்திய விடுதலையை ஆதரித்து ஹிட்லர் அறிக்கை அளிக்க மறுத்துவிட்டார்.

இந்த சந்திப்பு அவ்வளவு சுமூகமாக நடக்கவில்லை. கிழக்காசியாவில் ஜப்பானியர்கள் வெற்றி பெற்றுவிட்டதால் சுபாஷ் அங்கே சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று ஹிட்லர் ஆலோசனை கூறினார். அத்துடன் இப்போதைய போர்ச்சூழலில் ரஷ்யாவை வெல்லாமல் இந்தியா அளவுக்கு தூரமாக ஜெர்மனியால் வர இயலாது என்றும் அவர் கூறினார். ஜப்பான் செல்வதற்கு விமான மார்க்கம் மிகவும் ஆபத்தானது என்ற ஹிட்லர் நீர்மூழ்கிக் கப்பல் தருவதாகச் சொன்னார். பேச்சின் போது இந்தியாவின் எதிர்காலம் பற்றி ஹிட்லர் கூறிய ஆலோசனைகளை போஸ் ஏற்கவில்லை. ‘நானும் அரசியலில் இருக்கிறேன். எந்த ஆலோசனையும் எனக்குத் தேவை இல்லை’ என்று மொழிபெயர்ப்பாளரிடம் அவர் கூறியதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இத்தாலியில் அந்த காலகட்டத்தில் இக்பால் ஷெர்டாய் என்ற இந்திய முஸ்லிம் ஒருவர் இருந்தார். அவர் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து பிரச்சாரமும் வானொலியும் நடத்திக்கொண்டிருந்தார். அவருக்கு இத்தாலி அதிகாரிகளிடம் செல்வாக்கு இருந்தது. இந்தியாவின் பிரதிநிதியாக சுபாஷ் சந்திரபோசை எப்படி ஏற்பது? அவர் காங்கிரசின் பிரதிநிதியோ, வேறு சக்திவாய்ந்த அமைப்பின் தலைவரோ இல்லை என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையை மாற்றி ஜெர்மனியை போஸ் சார்பாக சரிய வைத்தது அவரது ஆளுமைத் தன்மையே.

ஆரம்பத்தில் விடுதலைப்படை அமைப்பது பற்றி குறிப்புகள் எதுவும் நேதாஜி ஜெர்மனி அதிகாரிகளுக்கு அளித்த குறிப்பில் காணப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆபரேஷன் டைகர் என்ற பெயரில் பயிற்சி பெற்ற கமாண்டோக்களை அனுப்பி ஜெர்மன் படையெடுப்புக்கு வாகான நிலையை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப் பட்டிருந்தது.  அதன்பின்னர் நடந்த ஆலோசனைகளில்தான் ஜெர்மனி வெளியுறவு அமைச்சருடன் பேசுகையில் சரணடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு படைப்பிரிவு உருவாக்குவது பற்றிக்கூறினார்.

வடக்கு ஆப்பிரிக்க போரில் பிடிபட்ட இந்திய வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஜெர்மனியில் அனாபர்க் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். 1941-ல் வட ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் இந்தியப் படையின் சார்பாக போரிட்டபோது ‘பாலைவன நரி’ என்று அடைமொழியுடன் புகழப்பட்ட ஜெர்மன் தளபதி ரோம்மல் என்பவரால் கைது செய்யப்பட்டவர்கள் இவர்.

1941 டிசம்பரில் சுபாஷ் சந்திரபோஸ் அனாபர்க் முகாம் சென்று அங்கிருந்த இந்திய வீரர்களை நாட்டுவிடுதலைக்காகப் போராட முனவருமாறு கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லையென்பதே காரணம். அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க பலநாட்கள் பிடித்தன.

 ஏனெனில் அவர்களின் குடும்பங்கள் இந்தியாவில் இருந்தன. அத்துடன் அவர்கள் நெடுங்காலம் பிரிட்டிஷ் இந்தியா படையில் பணிபுரிந்திருந்தனர். அவர்கள் ஓய்வூதியத்தைத் தான் குடும்பங்கள் நம்பியிருந்தன. தங்கள் விசுவாசத்தை மாற்றினால் எதுவும் கிட்டாது என்று அஞ்சினர்.

 1942 இறுதியில் 1300 பேர் கொண்ட இரண்டு பட்டாலியன் படையாக இது உருவெடுத்தது. அவர்கள் பயிற்சி முடிந்ததும் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஜப்பானிய ராணுவ தளபதி கர்னல் சடோஷி யமமோட்டோ ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். பாயும் புலி பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி பறந்தது. காக்கி சீருடை. தோளில் மூவர்ண பின்னணியில் பாயும் புலி கொண்ட பாட்ஜ். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் விடுதலைக்கான போராட்டத்தில் அடால்ப் ஹிட்லருக்கு நிபந்தனையற்ற விசுவாசத்தை அளிப்போம் என்று கடவுள் மீது ஆணையாக உறுதி கூறுகிறோம் என்பது உறுதிமொழி.

இன்னும் சில மாதங்களில் 1943 பிப்ரவரியில் வீரர்கள் எண்ணிக்கை 2000 மாக உயர்ந்தது. இதற்காக சுபாஷ் சந்திரபோஸ் வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார். 1944-ன் போது இந்திய விடுதலைப் படையின் எண்ணிக்கை 3500-600 ஆக இருந்தது. இதில் ஜெர்மன் அதிகாரிகள், சிப்பாய்களும் அடக்கம்.

1943-ல் நேதாஜி சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக எழுதிய ஒப்பந்தத்தில் ‘இந்திய விடுதலைப்படை இந்திய விடுதலைக்காகப் பாடுபடும். ஜப்பானியர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியைத் தாக்கும்போது இந்தப் படை கடல் அல்லது விமானம் வழியாக வந்து மேற்குப் பகுதியைத் தாக்கினால் உசிதம்’ என்று கூறி இருந்தார்.

இந்தப் படையினர்தான் முதன்முதலில் ஜனகனமண என்ற பாடலைப் பயன்படுத்தியவர்கள். ஜெய்ஹிந்த் என்ற சொல்லும் இங்குதான் உபயோகத்துக்கு வந்தது.

 சிங்கப்பூருக்கு சுபாஷ் சந்திரபோஸ் செல்வதற்கான பயணத்திட்டம் மிகவும் ரகசியமாகச் செய்யப்பட்டது. அந்த தகவல் ஜெர்மனியில் இருந்த இந்திய விடுதலைப்படையினருக்குத் தெர்விக்கப்படவில்லை. தங்கள் தலைவராக சுபாஷை ஏற்று அவருக்காக உயிரையும் கொடுக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்த அவர்களிடம் இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது. பெர்லினில் சுதந்தர இந்திய மையத்தில் பணிபுரிந்தவர்கள் தான் இல்லாத குறை தெரியாமல் பர்த்துக்கொள்வார்கள் என்று அவர் நம்பினார். ஆனாலும் அது அப்படி நிகழவில்லை.

இந்தப் படை முழுக்க ஜெர்மன் ராணுவக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை தேவையான இடத்தில் இந்தப் படையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். இந்தியாவை நோக்கிச் செல்ல பயன்படுத்தலாம் அல்லது பிரிட்டிஷாருக்கு எதிரான மோதலில் பயன்படுத்தலாம் என்பதே சுபாஷுடன் போட்ட ஒப்பந்தம். வடக்கு ஆப்ரிக்கா, காக்கசஸ் பகுதிகளில் ஜெர்மன் படை தோற்க ஆரம்பித்ததால் இந்தியா நோக்கிச் செல்வது சாத்தியப்படவில்லை.

ஐரோப்பாவுக்குள் அட்லாண்டிக் கடல்வழியாக நேசநாட்டுக்கூட்டுப்படை ஊடுருவலைத் தவிர்க்க நெதர்லாந்து கடற்கரைப் பகுதிக்கு இப்படையை அனுப்பத் திட்டமிடப்பட்டது.

 ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தாலும் பின்னர் படையினர் ஒப்புக்கொண்டனர். நெதர்லாந்தில் உள்நாட்டு மக்கள்  இந்திய வீரர்களுடன் நட்பாக பழகினர். சில உறவுகள் நட்பு என்ற எல்லையையும் தாண்டிச் சென்றன!

சில மாதம் கழித்து இந்த படை தெற்கு பிரான்சில் உள்ள போர்டக்ஸ் என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு சிலமாதங்கள் இருந்த நிலையில்  நேசநாடுகளின் கூட்டுப்படைகள் ஐரோப்பாவில் நுழைந்தன. அவற்றை ஜெர்மன் படைகளால் முறியடிக்க முடியாத நிலையில் இந்திய படைப்பிரிவுக்குப் பின்வாங்குமாறு உததரவிடப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் வழியாக கிழக்கு நோக்கி ஜெர்மனிக்கு படை பின்வாங்கிச் சென்றது. நேச நாடுகளின் விமானப்படைத் தாககுதல், ப்ரெஞ்சுப் புரட்சிப்படையின் தாக்குதலுக்கு நடுவே இந்த பின்வாங்கல் நடந்தது. வழியில் ஜெர்மன் அதிகாரி ஒருவருடன் சேர்ந்து 30 வீரர்கள் எதிரியிடம் சரண் அடைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, ஜெர்மனியர் மூவர் தவிர  மீதி இந்தியர்கள் அனைவரும் பிரிட்டிஷாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஒருவழியாக ஜெர்மனிக்குள் இந்தியப்படை பின்வாங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. ஜெர்மனியில் ஹிட்லரின் நம்பகத்துக்கு உரிய சலுகைக் காட்டப்பட்ட மோசமான எஸ்.எஸ். என்ற குழுவின் ராணுவப் பிரிவில் இந்திய விடுதலைப்படை பட்டாலியன்கள் சேர்க்கப்பட்டன. இதை அவர்கள் யாரும் விரும்பவில்லை. ஆனால் வேறுவழியும் அவர்களுக்கு இல்லை. சுபாஷ்சந்திரபோஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இது எதிரானது. ஜெர்மனியை சுற்றிலும் நேசநாட்டுக் கூட்டுப்படைகள் சூழ்ந்துகொண்ட நிலையில் இப்படை பல்வேறு இடங்களுக்குப் போரிட அனுப்பப்பட்டது. ஆனால் போர் திடீரென முடிந்தது. பிரெஞ்சுப் படையினரிடம் இவர்கள் சரணடைந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரிடம் இவர்களை ஒப்படைத்தனர். முதலில் லண்டனுக்குக் கொண்டுபோகப்பட்ட இவர்கள் பின்னர் இந்தியா கொண்டுவரப்பட்டு தென் கிழக்கு ஆசியாவில் இருந்த இந்திய தேசிய ராணுவப்படை வீரர்களுடன் சேர்த்து 1946-ல் விசாரிக்கப்பட்டனர். ராணுவத்துக்கு எதிராகத் துரோகம் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அச்சமயத்தில் காங்கிரசும் நாட்டு மக்களும் சுபாஷின் ராணுவத்துக்கு ஆதரவு காட்டியதால் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். யாரும் இந்திய ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படவே இல்லை. அவர்கள் மெல்ல மறக்கப்பட்டனர். 70களில் இந்திரா காந்தி காலத்தில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இன்று அவர்கள் பெரும்பாலும் மறைந்தே போய்விட்டனர்.

போரில் ஜெர்மனி இன்னும் கொஞ்சம் வெற்றி பெற்றிருந்தால், ஸ்டாலின்கிராட் போர்க்களத்தில் ரஷ்யாவிடம் தோற்காமல் இருந்திருந்தால், ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவின் மேற்கு எல்லைக்கு இந்தப் படை ஜெர்மன் படைகளுடன் வந்திருக்கும். ஆனால் போர்க்களங்களின் போக்கு வேறுமாதிரி அமைந்து ஐரோப்பாவிலேயே அப்படை அலைந்து திரிந்து சரணடையும் அவலத்தைச் சந்தித்தது. அப்படையில் யாருக்கும் ஆங்கிலம் கூட சரியாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மனியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு நெதர்லாந்து, பிரான்ஸ் என்று போர்புரிந்ததன் பின்னணியில் இருப்பது ஒன்றேதான்: தாய்நாட்டு விடுதலை. நேதாஜி, ஜெர்மானியர்களிடம் இவர்களை விட்டுச் சென்றாலும் இந்தியப்படை தன்மானத்துடன் இருந்தது உண்மை! வென்றவர்கள் எழுதுவதுதான் வரலாறு என்பதால் இந்திய விடுதலை வரலாறும் இவர்களுக்கு இடமில்லாமல் எழுதப்பட்டது!

ஆகஸ்ட், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com