“ஜானகிராமன் மரணத்துக்கு ஒரு விசாரணை கமிஷன் தேவை!”

Published on

எனக்கு வரக்கூடிய கடிதங்களில் நான்குபேருடைய கடிதங்களை வாசிக்கவே முடியாது. இன்னார் கிட்டேர்ந்து கடிதம் வந்திருக்குன்னு தெரியும்.

வாசிக்க முடியாதுங்கறதுக்காக கவலைப்பட்டுட்டே இருக்க முடியுமா? முடியாது. ஆகவே நண்பர்கள்கிட்ட சொல்வேன், இன்னார்ட்ட இருந்து  கடிதம் வந்திருக்குன்னு. உதாரணத்துக்கு ராம அய்யங்கார்ட்ட இருந்து கடிதம் வரும். படிக்கவே முடியாது. அப்புறம் எழுத்து பத்திரிகை ஆசிரியர் சி.சு.செல்லப்பாகிட்ட இருந்து கடிதம் வரும். வாசிக்க முடியாது. அவரும் ஒண்ணும் கடிதத்தில எழுதிருக்க மாட்டார்.  உங்க சந்தா முடிஞ்சுபோச்சு. அனுப்புங்கன்னு இருக்கும் அவ்வளவுதான். ராம அய்யங்கார் விஷயத்திலும் ஒண்ணும் இருக்காது. அவர்ட்ட இருந்து கடிதம் வந்திருக்குன்னு நினைச்சுக்குவேன். அதுபோல தி.ஜானகிராமன்கிட்ட இருந்து கடிதம் வந்திருக்குன்னு தெரியுது. என்ன எழுதி இருக்கார்னு தெரியல. கையெழுத்து படிக்கவே முடியாது!

நான் பாண்டிச்சேரி வந்ததுக்கு அப்புறம்தான் வருது அந்த கடிதம். நான் சந்துருகிட்ட கடிதத்தைக் காண்பிச்சேன். ஓய், தி.ஜானகிராமன்கிட்டே இருந்துல்ல வந்திருக்குன்னார் அவர். என்ன எழுதிருக்குவே சொல்லும்னேன். அவர் படிச்சுட்டார். என்னோட ஏதோ ஒரு எழுத்தை படிச்சதாகவும் ரொம்ப சந்தோஷம்னும் எழுதியிருந்தார். இந்த கடிதமே உமக்குப் புரியலை இதைக் கொண்டுபோய் என்ன செய்யப்போறீர்னு அவர் கேட்டார். உமக்கு வேணுமா வெச்சிகிடும்னேன் நான். ரொம்ப சந்தோஷம் அவருக்கு.

அப்புறம் ஏழெட்டு கடிதங்கள். நான் எழுத, அவர் பதில்போட.. இப்படி. அதுல ஒரு கடிதம் ‘பிஞ்சுகள்' படிச்சுட்டு, அவர் ஒரு இன்லாண்ட் லெட்டர் போடறாரு. சந்துரு அதைப் படிச்சுட்டி நான் வெச்சிகிடலாமான்னு கேட்டார். வெச்சிகிடும்னேன். ‘இது உம்மகிட்ட இருந்தா கசங்கிடும். நா லேமினேட் பண்ணி வெச்சிருதேன். இது பெரிய பொக்கிஷம்வே'ன்னார்.

அப்புறம் ஏதோ ஒண்ணுக்காக அந்த  கடிதம் தேவைப்பட்டபோது அவர்கிட்ட கேட்டேன். நான் தேடித்தர்றேன்னார். அப்புறம் மறந்துட்டேன்.

இடைச்செவல்ல இருக்கும்போதிருந்தே நான் திஜாவைப் படிச்சிருக்கேன். அதைப் படிக்காமல் இருக்க முடியாதில்ல.. அப்படி ஒரு எழுத்து அது. அவரது எழுத்தைப் படிச்சுட்டு கும்பகோணம் போனவங்க, அங்கிருக்கும் வீட்டுக்கதவுகளைப் பார்த்திட்டு திஜா எழுதின வீட்டுக்கதவா இது? பாபு இங்கதான் இருந்திருப்பானான்னு நினைச்சுகிடுவாங்க. அந்த மன பிரமை எனக்கும் இருந்திருக்கு. அவர் தன் சமூகத்தின் மீது இருந்த கோபத்தை வெளிப்படையாகக் காட்டினாரு. மத்த எழுத்தாளர்கள் மாதிரி வேறு பாத்திரங்களை உருவாக்கலை. அவர் யாரைப் பாத்தாரோ அதைத்தான் கொண்டுவந்தார்.

அவருக்கு சாகித்ய அகாதமி விருது குடுக்கிறாங்க. அந்த கமிட்டில ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க வாக் அவுட் பண்றாங்க. ஜானகிராமனுக்குக் குடுக்கிறத நான் எதிர்க்கிறேன், இதைப் பதிவுபண்ணுங்கன்றாங்க. இது எங்களுக்குத் தெரிஞ்சது. அதற்குக் காரணம் என்னன்னு கேட்டா ‘எங்க பிராமணப் பொண்ணுங்களை எல்லாம் தப்பா எழுதுறாரு இவரு.. நான் ஒத்துக்கமாட்டேன்னு' அந்தம்மா சொல்றாங்க. ஆனாலும் அவருக்கு விருது கிடைச்சிடுது. அப்பவே பிராமணர்கள்கிட்ட இவர் மேல ஒரு கண்ணு இருக்குனு தெரிஞ்சுது.

எனக்கு நுரையீரல்ல ஒரு கேவிட்டி இருக்கு. சென்னையில டாக்டர் கதிரேசன்கிட்ட அவர் ரூம்ல பேசிட்டு இருக்கும்போது இப்படி இருக்கேன்னு சொன்னேன். அவர் உடனே ஒரு எக்ஸ்ரேயைக் கொண்டுவரச் சொல்லி பார்த்தாரு. இது கொஞ்சம் சரி பண்ணிடலாமேன்னு சொன்னார். சென்னை தாம்பரம் சானடோரியம் போங்கோ. அங்க சரி பண்ணிடலாம்னு சொல்லி, அனுப்பினார். கூட ஒரு  கம்பவுண்டரை அனுப்பி வெச்சார். அங்கே டோமோகிராம் எடுத்துப் பாத்துட்டு அவர் ஆபரேஷன் பண்ணிடலாம்னும் சொன்னார். அடுத்த மாதம் 18ஆம் தேதி குடும்பத்துடன் வந்து இங்க தங்கிகிடுங்க. மூணுமாசம் இருக்கவேண்டி இருக்கும்னும் சொன்னார். சரின்னு எல்லாம் முடிஞ்சி கிளம்பி கொஞ்சதூரம் வந்திருப்பேன். திரும்ப கூப்ட்டு அனுப்பிச்சார். இந்த நோய் எத்தனை நாளா உங்களுக்கு இருக்குன்னார்.

நான் வருசக்கணக்கான்னு சொன்னேன்.  வேண்டாம். இப்படியே நீங்க இருக்கலாம். அதனால் பிரச்னை ஒண்ணும் இல்லையே.. ஓடறவரைக்கும் ஓடட்டும்னு சொல்லிட்டார்.

எங்கூர்க்காரர் எம்.எல்.ஏ.வா இருக்காரு. அதனால் சென்னையில் எம்.எல்.ஏ. ஆஸ்டலில் போய்த்தங்கறேன். வந்த தகவலை கு.அழகிரிசாமிக்கு சொல்லி அனுப்பறேன். அவன் பேமிலியோட இருக்கான்.  வந்துபாத்தான். எவ்வளவு நாளாச்சு வந்துன்னான். ஒரு நாளோ ரெண்டு நாளோ ஆச்சுன்னேன். தி.ஜா. நாளைக்கு டெல்லிக்குப் போறார். உன்னை பார்க்கணும் பார்க்கணும்னு சொல்லிட்டே இருந்தார். நீ இங்க இருக்கிறது அவருக்குத் தெரியாதே.. இல்லன்னா ஓடிவந்திருவாரே...

திஜாவோட பையன் என்ன பாக்க வந்தான். அப்பா உங்களை கேட்டுகிட்டே இருந்தாங்கன்னான். ஒரு பழம் கொண்டு வந்திருந்தான்.  உன் பேர் என்னப்பான்னேன். சாகேதராமன்னு சொன்னான். தியாராஜ கீர்த்தனையில் வர்ற பேர் அது. அதை வெச்சிருக்கார். தி.ஜா.வுக்கு இசையில அப்படி ஒரு ஆர்வம் இல்லையா...?

இப்படி ஆளப்பார்க்காமலே எங்களுடைய உறவு கடிதம் மூலமாக ஆழமா உருவாகி இருந்தது.

அப்புறம் திரும்பவும் டெல்லியில் இருந்து வரப்போறார்னு சொன்னாங்க. சரி எப்பவேணும்னாலும் பாத்துகிடலாம்னு நினைச்சிகிட்டு இருந்தேன். அப்பதான் அந்த செய்தி வருது. என்ன விவரம்? வெறும் செய்தி மட்டும்தான்.

ஆஸ்பிட்டலில் சேர்த்தவுடன் நோயாளிக்கு ஒரு ஊசி போடுவாங்க. அந்த நர்ஸ் போடுறா. அவ கொஞ்சதூரம் போன உடனே இவருக்கு தொண்டையை நெறிக்கிது. குரல்வரலை, பேசமுடியல.. அப்ப படுக்கையில் பக்கத்தில்  உள்ளவங்க கிட்ட சொல்றார். நர்ஸ் வர்றாங்க. வந்தவங்க நேரா இவர் படுக்கைக்கு வரல. அங்க பக்கத்துல யார்கிட்டயோ பேசிட்டு இருக்கா..

இவரால பேசமுடியாததால அவளை சொடக்கு போட்டு கூப்பிடறாரு.. இங்க வாங்கன்னு. ஆனால் அந்த நர்ஸுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. என்ன என்னைய சொடக்கு போட்டு கூப்டறேன்னு திரும்பிப் போயிட்டா. அப்புறம் இவர் தலையணையில் பேசாம படுத்திருக்காரு. சரி வலி கொறைஞ்சுடுச்சுன்னு பக்கத்துல இருக்கவங்க நினைக்கிறாங்க.. பேச்சு இல்லன்னு யாரோ சொல்றாங்க.. உடனே டாக்டர் வர்றாரு.. பாத்திட்டு முடிஞ்சுபோய் நேரம் ஆச்சே... என்ன நடந்ததுன்னு அவர் கேட்டாராம்!

இப்ப நான் கேக்கிறேன்... இப்படி ஒண்ணு நடந்துதுன்னா உடனே டாக்டர்கிட்ட புகார் கொடுக்கமாட்டாங்களா? அந்த நர்ஸக் கூப்பிட்டு விசாரிங்கன்னு சொல்லமாட்டாங்களா? அப்படி செஞ்சதாகத் தெரியலையே... எனக்கு சந்தேகம். அவரது மரணத்தில் எனக்கு சந்தேகம். சரி.. நாங்கதான் கேட்கல.. நீங்க இந்த பிரச்னையை கிளப்பி இருக்கலாம்ல.. கேட்ருக்கலாம்லன்னு என்னப் பாத்துக் கேட்கலாம். எனக்கு கொஞ்சம் மந்தபுத்தின்னு வெச்சிக்கங்களேன்... எனக்கும் தோணல. அதுபோல அவங்களுக்கும் தோணலன்னு முடிச்சிக்கலாம். இனி என்ன செய்ய முடியும்? நமக்குத் தெரியாது.

பாண்டிச்சேரியில் ஆயி மண்டபம் கட்ட உத்தரவு போட்டவன் இருக்கானே... அவனை விஷம் வெச்சுக் கொன்னாங்கன்னு எத்தனை வருஷம் கழிச்சு தெரிஞ்சது தெரியுமா? விசாரிச்சு கண்டு பிடிச்சுட்டான். அதுபோல் ஜானகிராமன் மரணத்துக்கு ஒரு விசாரணைக் கமிஷன் வைக்கலாம். நானெல்லாம் ஒரு கிராமத்தான் மாதிரி குணம் கொண்டவன் தானே.. கிராமத்தான் எப்பவும் தயங்கித் தயங்கிதான் விஷயங்களைச் சொல்லுவான்.

                   (எழுத்துவடிவம்: புதுவை இளவேனில்)

அக்டோபர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com