சோஷலிச கட்சியின் சோதனை

சோஷலிச கட்சியின் சோதனை
Published on

சோஷலிசவாதிகள் அரசியலில் இருந்த சிந்தனை வாதிகள்; அவர்கள் சிந்தனை செய்யக்கூடிய அரசியல்வாதிகளாக இருக்கவில்லை.

-கோபாலகிருஷ்ண காந்தி

இந்திய தேசிய காங்கிரசுக்குள் சோஷலிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்களால் ஒரு குழுவாகத் தோன்றியதே காங்கிரஸ் சோஷலிசக் கட்சி. இவர்கள் சில காரணங்களால் இடதுசாரியினரிடம்  இருந்து மாறுபட்டிருந்தனர். இந்தக் கட்சியை வேராகக்கொண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பின்னால் ஆச்சார்யா நாராயண தேவ், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டதே இந்தியசோஷலிச கட்சி.

1951 முதல் பொதுத்தேர்தலில் இவர்கள் வென்றது 12 இடங்கள்தான். இதைத் தொடர்ந்து காந்தியவாதியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஜேபி கிருபளானி உருவாக்கிய கிசான் மஸ்தூர்பிரஜா கட்சி என்ற அமைப்புடன் இணைந்து பிரஜா சோஷலிச கட்சி ஆயினர். இதன் உருவாக்கத்தில் அசோக் மேத்தா ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முக்கிய பங்காற்றினர்.  உருவான ஆரம்பக் கட்டத்திலேயே

சோஷலிச கட்சி மாறுதலுக்கு உள்ளானது எதிர்காலத்தில் அக்கட்சி அடையவிருக்கும் மாறுதல்கள் எதிர்கொள்ள இருக்கும் பிளவுகளுக்குக் கட்டியம்கூறுவதாக அமைந்துவிட்டது.

பிரஜா சோஷலிச கட்சி சில ஆண்டுகளில் (1955) ராம் மனோஹர் லோஹியா தலைமையில் சில தலைவர்களால் பிளவு கண்டது. இவர்கள் பிரிந்து

சென்று சோஷலிச கட்சி( லோஹியா) யாக இயங்கினர். கேரளத்தில் இருந்த பிரஜா சோஷலிச கட்சி அரசு நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து லோஹியா பிரிந்து சென்றிருந்தார்.

 ப்ரஜா சோஷலிஸ்ட் கட்சி, மிதவாத சோஷலிஸ்டுகளுடன் இயங்கியது. இதன் தலைவரான அசோக் மேத்தாவை நேரு 1963-இல் திட்டக்குழு துணைத்தலைவராக நியமித்தார். நம் கட்சியில் இருந்துகொண்டு காங்கிரஸ் தரும் பதவியைப்பெறுவதா என அசோக் மேத்தாவை ப்ரஜா சோஷலிஸ்ட்கள் வெளியேற்றினர்.  அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துகொண்டார். பிறகு காங்கிரஸ் பிளவுற்றபோது அவர் காங்கிரஸ் (ஓ) பிரிவில் இருந்தார். எமெர்ஜென்சியில் சிறையுண்டார்.

1964-இல் சோஷலிஸ கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சம்யுக்த சோஷலிச கட்சியாக ஆயின. ஆனால் உருவானவேகத்திலேயே இது உடைந்து புதிதாக பிரஜா சோஷலிச கட்சி திரும்பவும் உருவாகிவிட்டது. இவர்கள் அடுத்த தேர்தலில் காங்கிரஸை மட்டும் எதிர்க்காமல் ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டனர். 1967-இல் ராம் மனோகர் லோஹியா இறக்கும் வரை சம்யுக்தா சோஷலிச கட்சி வலுவான சக்தியாகவே இருந்தது.

1969-இல் இருந்து 72 வரை சம்யுக்தா சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார் ஜார்ஜ் பெர்ணாண்டஸ். திரும்பவும் 1972-இல் இந்த கட்சியும் பிரஜா சோஷலிச கட்சியும் ஒன்றிணைந்து சோஷலிச கட்சி என்ற  கட்சி மறுபடியும் உருவானது.

இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்து இரண்டாண்டுகள் அமல்படுத்தியபோது ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் சிறைக்குச்

சென்றனர். சோஷலிச கட்சியின் தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸும் சற்று தாமதாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார்.

இந்த இடத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி கொஞ்சம்: பெர்னாண்டஸ், தலைமறைவாக இருந்தபோது இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்த்து எதிர்ப்பைக்காட்ட விரும்பியதாகவும் அதற்காக பிரெஞ்சு, அமெரிக்காவின் சிஐஏ உதவிகளை நாடியதாகவும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள்

சொல்கின்றன. பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நிலை பற்றி அறிய அமெரிக்கா விரும்பியதற்காக ஆதாரங்களும் விக்கி லீக்ஸ் ஆவணங்களில் உண்டு.

ஆனால் ஜனதா கட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்ததபோது அமெரிக்க நலன்களுக்கு எதிராகத்தான் பெர்னாண்டஸ் செயல்பட்டார். கோக் நிறுவனம், ஐபிஎம் ஆகியவற்றை துரத்தி அடித்தார்.

எமெர்ஜென்சி முடிவுற்ற நிலையில் சோஷலிச கட்சி பல பிற கட்சிகளுடன் இணைந்து ஜனதா கட்சி என்ற அமைப்பானது. காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்த இக்கட்சியில் சோஷலிஸ்டுகள் செல்வாக்கான குழுவாக இருந்தனர். ஜனசங்க உறுப்பினர்கள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்பைத் துண்டிக்காமல் தொடர்வதை இவர்கள் எதிர்த்ததுடன் ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்தது.

 இந்திராவின் ஆட்சிக்கு எதிராக வீரமிகு போராட்டத்தை முன்னெடுத்த சோஷலிஸ்டுகள் எமெர்ஜென்சிக்குப் பின் ஆட்சி அமைத்ததன் மூலம் தங்கள் அரசியலின் உச்சத்தை அடைந்தனர். அதன் பின்னர் இத்தலைவர்கள் பலர் ஜனதாவிலேயே தொடர்ந்தனர். கொள்கை ரீதியிலான முரண்பாடுகள், அரசியல் புரிதல்கள் இன்மை ஆகியவற்றால் சோஷலிஸ்ட்கள் பல்வேறு கட்சிகளாக சிதறுண்டனர். ஜனதா தளப் பிரிவுகள், சமதா கட்சி என்று பிரிந்த நிலையில்  சந்திர சேகர், தேவகவுடா, ஐகே குஜ்ரால் என  மூன்று  சோஷலிஸ்ட் பிரதமர்கள் இந்த சோஷலிச அரசியல் பாதையில் உதயமாயினர்.

பின்னாளில் உலகமெங்கும் சோஷலிசவாதிகள் வலதுசாரிப்பாதையில் சென்றதைப் போல் இந்தியாவிலும் சோஷலிஸ கட்சிகளின் இடம் பாஜகவால் நிரப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com