தேவாரம், திருவாசகம்,பெரிய புராணம் என பன்னிரு திருமுறைகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்து வருகிறவள் என்கிற முறையில் சைவத் தமிழில் கடவுள் குறித்த சிறுகட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி.
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் சிவபெருமானை தொழுது வணங்கினர். மாணிக்க வாசகர்தான் அழுது வணங்கினார். மாணிக்கவாசகர் சிவ பெருமானை, ‘சேர்ந்தறியா கையான்' என பாடுகிறார். அந்த வார்த்தையை நினைக்கும் தோறும் வியப்பேன். சிவ பெருமானுக்கு, யாரையும் வணங்க வேண்டிய அவசியம் இல்லை.யாரிடமும் யாசகம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் அவன் கைகள் சேர்ந்ததே இல்லையாம். ‘சேர்ந்தறியா கையான்' என்கிறார்.
ஞானசம்பந்த பெருமான் திருச்சிக்கு வருகிறார். திருச்சி என்றாலே இன்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் தான் பிரசித்தி. இவரோ அங்கே உள்ள தாயுமான சுவாமியை பாட வந்தவர். என்ன செய்வது என யோசித்த சம்பந்தர், யானை முகத்தானை பாடுவதுபோல பாடினார், ஆனால் அது சிவபெருமானுக்கான தேவாரப் பாடல்.
நன்றுடை‘யானை' தீயதி‘லானை' நரைவெள்ளேறு
ஒன்றுடை‘யானை' உமை ஒருபாகம் உடை‘யானை'
சென்றடையாத திருவுடை‘யானை' சிராப்பள்ளிக்
குன்றுடை‘யானை' க் கூற என்னுள்ளம் குளிரும்மே.
யானை யானை என யானை முகத்தானை பாடுவது போல சிவனை பாடியது சம்பந்தரின் தமிழ்.
சிவபெருமானுக்கே கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் பற்றி,சேக்கிழார் எழுதும் போது, கண்ணப்பன் ஒரு பன்றியை துரத்திக் கொண்டு ஓட, உடன் வந்த எல்லோரும் விலகி விட்டார்கள். இருவர் மட்டுமே உடன் இருந்தார்கள். அவர்கள் பெயர் நாணன்,காடன் என்கிறார்.
இருவர்கள் அடி பிரியார்.
அவர்கள் நாணனும்,நெடு வரையில் காடனும்...
கண்ணப்பன் துரத்திய பன்றி என்பது எல்லோரும் போக நினைக்கிற சொர்க்கம். அப்போது உற்றார், உறவினர், நண்பர், சேர்த்த செல்வம் எதுவும் உடன் வர முடியாது.இரண்டே பேர் தான் உடன் வருவார்கள். அவர்கள் நாம் செய்த நல்வினை, தீவினை.
நல்வினையை மனிதர்கள் குறைவான அளவே செய்வதால், அது நாணி நிற்கும். தீவினைகளை அதிகமாக செய்வதால், அது காடு போல் அளவில் பெரியதாக இருக்கும் என்பதால், நல்வினையை நாணன் என்றும், தீவினையை காடன் என்றும் பெயரைக்கூட மிக மிக நுட்பமாக வைத்தார்
சேக்கிழார்.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சி வாயவே
என்பது அப்பர் தேவாரம்.
வானம் வரை அடுக்கிய விறகு, சிறு நெருப்பினால், ஒன்றும் இல்லாமல் போனது என்ற அப்பர் சுவாமிகளின் இந்த வரிகளைப் படித்ததால் தான், பாரதி,
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு...!
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?
என எழுதியிருக்க வேண்டும். அநீதி நடக்கும் போதெல்லாம் உங்கள் கடவுள் என்ன செய்கிறார் என்று கேட்பவர்களுக்கு இந்த பதிகத்தில், ‘பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை‘ என பதில்
சொல்லியுள்ளார் அப்பர். கடவுள் இந்த உலகத்தை நன்றாக, நற்குணம் நிறைந்ததாக பண்ணினார். மக்கள் தான் பாவங்களை பயின்று கொண்டனர் என்கிறார்.
சுந்தரர் - தம்பிரான் தோழர். ‘பித்தா' என சிவனைப் பாடியவர். நீ பறித்த என் கண் பார்வைக்கு மருந்து கொடு என திருவொற்றியூர் சிவனை வேண்டி பாடுகிறார்.
அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்
அதுவும் நான்படற் பாலதொன் றானால்
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்
பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்
வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய்
ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
ஒளி இழந்த என் கண்ணுக்கு ஒழுக்க மருந்து கொடு என்கிறார் சுந்தரர். ஒழுகுதல் என்றால் சொட்டுதல். தண்ணீர் ஒழுகினால் தண்ணீர் சொட்டுகிறது என்போம். ஒழுக்க மருந்து என்பது சொட்டு மருந்து. கண்ணில் பிரச்சினை எனில்,கண்ணில் அறுவை
சிகிச்சை செய்தால் சொட்டு மருந்து விடுவது வழக்கம்.அதை ஏழாம் நூற்றாண்டிலேயே சுந்தரர் தமிழ் பாடியது பெரும் வியப்பு.
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ர பாதருக்கும் சிவபெருமான் நடனமாடிக் காட்டியதை, அருணகிரியார் இப்படி எழுதுகிறார்.
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்
குலதடினி அசையிசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென முழவொலிமு ழங்க...
சிவபெருமான் நடனமாடிய போது, வாத்தியங்கள் முழங்கின என்று மட்டும் எழுதாமல், அந்த வாத்தியங்கள் எப்படி முழங்கின என்று அந்த ஓசையோடு எழுதுகிறார்.
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெகு டெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் தொகுதீதோ திமிதம்... என்று வாத்தியக்கருவிகளின் சத்தங்களைக் கூட அப்படியே திருப்புகழில் எழுதியுள்ளார் அருணகிரியார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் என்பதால் நான் சந்திக்கிற ஏளனங்கள் நிறைய. ஒவ்வொரு நாளும் நிறைய அவமானங்களுக்கு நடுவே தான் கோவில்கள் பற்றியும், திருமுறைகள் பற்றியும், இந்த பிரச்சினைக்கு இந்த பதிகம் சொல்லுங்கள், இந்த பிரச்சினைக்கு இந்த கோவிலுக்கு செல்லுங்கள் என மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தொடர் ஏளனங்களால் மனம் சோர்வடையும் போது, போற்றித் திருஅகவலில், மாணிக்கவாசகர் எழுதிய பாடலை நினைத்துக் கொள்வேன்.
அவர் பாடுகிறார்: ஆன்மீகப் பணிக்கு வரும் போது ஆறு கோடி மாயா சக்திகள் உன்னை சோதிக்கும். ஏளனம் செய்யும். காயப்படுத்தும். என்ன இது என மனம் வெறுத்தால், நீயும் நாத்திகனாகி விடுவாய். மாறாக, அத்தனை கோடி சோதனைகளையும், அதை விட அதிகமான நம்பிக்கையோடு நீ கடந்தால், சிவபெருமானின் திருவடிகளை நிழல் போல பிரியாமல் இருக்கலாம் என தன் அனுபவமாக சொல்கிறார்.
இப்பாடலை விட சிவபெருமானின் திருவடிகளை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துவது வேறேது?
ஜூன், 2023