சேட்டன்களின் காதல்

சேட்டன்களின் காதல்
Published on

காதல் கதைகளை கையாளுகிற விதத்தில் மலையாள சினிமாவும் தமிழ் சினிமாவும் மாறுபட்டத் தளத்திலேயே இயங்குகின்றன. வாழ்வின் இயல்புகளை அதன்போக்கில் உண்டாகும் முரணுடன் வகைப்படுத்தும் காதல் படங்கள் தமிழில் சற்றுக் குறைவாகவே அமைந்திருக்கின்றன. மலையாளத்தில் அமைந்த படங்களில் எண்ணிக்கை அளவில் போதாது என்றாலும் சாத்திய அளவில் அவை தமிழின் எல்லையைத் தாண்டியிருக்கின்றன எனக் கருதலாம். இதற்கு அடிப்படையான காரணங்களில் முதலாவது செறிவுமிகுந்த கதை சொல்லிகள்.  உறூப், தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன், ஜான்பால், லோகிததாஸ், என்று எழுதத் துவங்கினால் பெரிய வரிசையேக் கிடைக்கும் அளவிற்கு மலையாளம் எழுத்தாளர்களை உள்வாங்கிக் கொண்டது.

1954 இல் வெளியான உறூப்பின் ‘‘நீலக்குயில்'' ராமுகாரியட், மற்றும் பி.பாஸ்கரனால் இயக்கப்பட்டது.  எடுத்த எடுப்பிலேயே ஒரு தலித் பெண்ணின் காதல் பற்றிப் பேசியது இந்தப் படம், அது மலையாள திரை உலகை புரட்டிப் போட்டது. இதன்மூலம் மலையாள திரையுலகின் ஆரம்பத்திலேயே பெரும்பான்மையற்ற, ஒதுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்கள் திரையின் மூலமாக மக்களுக்குப் பழக்கப் படுத்தப்பட்டன.

கே.எஸ்.சேதுமாதவனால் இயக்கப்பட்ட ‘‘சட்டக்கரி'' 1974 - இல் வந்தது. நேரடியாகவே திரைக்கதை எழுதும் ஆற்றல் கொண்ட எழுத்தாளரும் நடிகருமான தோப்பில் பாசி இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதினார். கதை பம்மனுடையது. இது ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் காதல் கதை. ஜூலி என்ற பாத்திரத்தில் நடிகை லட்சுமி இதில் அறிமுகமானார். பேசப்பட்டத் திரைப்படம். 

தகழியின் கதைகள் அதிகமும்  விளிம்புநிலை மக்களைப் பற்றிப் பேசின. இவரது கதைகள் வாழ்வின் காரத்தினையே அதிகம் சொல்லியதால் வாழ்வை புனைவாக்கியபோது அதே காரத்துடன் திரைப்படமுமாகியது. கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘செம்மீனை' இயக்கிய ராமுகாரியட் நாவலை மிகச்சரியாகவே கையாண்டார்.  நாவலாக எந்த அளவிற்கு ரசிக்கப்பட்டதோ அதே அளவிற்கு ரசம் குறையாது திரைப்படமும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. கருத்தம்மாவும், பரீக்குட்டியும், பழனியும்  ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பகிர்ந்து இன்றளவும் நிலைத்திருக்கிறார்கள். 1965 -இல் எடுக்கப்பட்ட செம்மீன் இன்றைய சமூகச் சூழலுக்கும் பொருந்திப் போவதாகவே இருக்கிறது.

மலையாளத் திரை உலகில் நட்சத்திர மரியாதையுடன் பயணிக்கும் எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகளில் ஒன்று இயக்குநர் பரதனால் படமாக்கப்பட்ட ‘‘வைஷாலி''. தேர்ந்த இரண்டு சிற்பிகளால் ஒரு சிலையினை செதுக்கமுடியும் என்பதற்கு ‘‘வைஷாலி'' ஒரு சான்று. இயக்குநர் பரதன் ஒரு அபூர்வம் .

‘‘நீ இறந்ததாய் நானும், நான் இறந்ததாய் நீயும் கணக்கில் வைத்துக் கொள்ளலாம்... முத்தங்களால் பிணைந்த உதடுகளுக்கு விடை தா....'' என்று காதலெனும் மொழியினை சொல்லாமல் உணர்த்திய ரசிகர்களின் நினைவுகளில் நீடிக்கும் எழுத்தாளரும் இயக்குனருமான பத்மராஜனை ரசிகர்களும், திரை உலகமும் கொண்டாடுவதன் ரகசியமும் இதுதான். அவரது பல படங்களை உதாரணம் சொல்லமுடிந்தாலும் நமுக்குப் பார்க்கான் முந்திரி தோப்பும், தூவானத்தும்பிகளும் காதல் படங்களில் குறிப்பிடத்தக்கவை. ஒரு கனவின் ஆழ்தலைப் போல ஸ்பரிசமாய் படர்ந்து உணர்வுகளை தழுவும் படம் நமுக்குப் பார்க்கான் முந்திரித் தோப்புகள். இதில் காணப்படுவது மானசீகமான அன்றாடக் கதாப்பாத்திரங்கள் தான். இது போன்ற  அன்றாடங்களை அசாதாரணமான பாத்திரங்களாக உருமாற்றம் கொள்ள வைப்பதுதான் பத்மராஜனின் புனைவு நிமிருமிடம். காதலை இத்தனை அருகில் ஒரு கோலமாற்றமாக வேறெங்கும் நாம் உணர முடியாது.

தூவானத்தும்பிகள் காதலின் வேட்டையாடல். பத்மராஜன் மலையாளத்திற்கு தந்த புதிய தளம். இதில் தனது நாவலின் இரண்டு கதாபாத்திரங்களை ஒரே பாத்திரமாக்கி இயக்கினார் பத்மராஜன். மலையாளத்தின் ஒரே ‘‘க்ளாசிக்'' என்று கொண்டாடப்பட்டத் திரைப்படம்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அனுபவம் என மனதிற்கு நெருக்கமாகிற விசாலம். மனம் மரணிக்கும்வரை பயணிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்ட திரைப்படம். இந்தப் படத்தில் நடித்ததற்காக மோகன்லாலை தங்கள் கலைவிருப்பத்திற்கான நடிகராக சொந்தமாக்கினார்கள் ரசிகர்கள். மோகன்லாலும் தனது ஆத்மநெருக்கமாக பத்மராஜனை கருதுவதற்கு  பின்னால் இருக்கிற படைப்பிணைவை இந்தப் படங்களின் மூலம் நாம் தொட்டு விடமுடியும்.

ஒரு பறவையின் பறத்தலுக்கு ஒப்ப அத்தனை இலகுவாக பாத்திரங்களை கையாளத் தெரிந்தவர் பஷீர். அவைகளின் உணர்ச்சி நிலையும் அப்படித்தான். சிமிழ் போன்ற கணங்களை உடையாது பாதுகாத்து புனைந்து அவரால் உலவ வைக்க முடிந்தது. எழுத்தின் மூலம் கிடைத்த நிலை இது. அடூர் கோபாலகிருஷ்ணன் திரைக்கு மொழிபெயர்த்திருந்த மதிலுகளை பார்க்கையில் நமக்கு இவ்வெண்ணம் எழாமல் இருக்காது.

பாலு மகேந்திரா முன்பே ஓளங்கள், ஊமக்குயில் படங்களை இயக்கியிருந்தாலும் 85-ல் தெலுங்கு தழுவலாக அவர் இயக்கிய ‘‘யாத்ரா'' முக்கிய கவனம் பெற்றது. தமிழில் இது அது ஒரு கனாக்காலம் என அவராலேயே மீண்டும் எடுக்கப்பட்டது.

1986-ல் வெளியான ‘‘எந்நெந்நும் கண்ணேட்டன்டே'' குடும்பம் சூழ்ந்த காதல் கதையாக வெற்றி பெற்றது. தன் காதலியைக் கொலை செயதவனை பழிவாங்கியதால் பதினாறு வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு வரும் கதாநாயகனின் பார்வையில் அவன் சிறைக்கு செல்லுமுன் நடந்த சம்பவங்கள் சொல்லப்படும். மதுமுட்டம் எழுதிய இந்தக் கதையினை ஃபாசில் இயக்கினார். இதே கதையினை ஃபாசில் ‘வருஷம் 16' என்ற பெயரில் கார்த்திக் குஷ்பூவை வைத்து இயக்கி தமிழில் பெருவெற்றி பெறச் செய்தார். 

தொடர்ச்சியாக வந்த காதல் படங்களில் பெரிய மையமாக அமைந்தது  1988 - ல் வெளிவந்த ‘‘சித்ரம்''. காதல் கலாச்சாரம் நகைச்சுவை என்று கலந்தடித்த இந்தத் திரைப்படத்தினை ப்ரியதர்ஷன் இயக்கினார். திரையரங்குகளில் ஆர்ப்பாட்டமாக கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கும் மேலாக ஓடியது. மோகன்லாலின் ரசபாவங்கள் இளைஞர்களையும் பெண்களையும் வெகுவாகக் கவர்ந்தது. கல்லூரி நண்பர்களான லால், ப்ரியன் கூட்டணி இதன்பிறகு நிறைய வெற்றிப்' படங்களை குவித்தது. தமிழில் ‘‘எங்கிருந்தோ வந்தான்'' என்ற பெயரில் வெகுநாட்கள் கழித்து சத்யராஜ் நடிப்பில் இந்தப் படம் வெளியானாலும் கவனம் பெறவில்லை.

இயக்குநர் ஃபாசில், குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினியை வைத்து இயக்கிய படம் ‘‘அணியத்திப் ப்ராவு''. காதலில் புதிய பரிமாணமாக காதலர்கள் தாங்களே பிரிந்து திரும்பிச் செல்லுதலின் நிமித்தம் நிகழும் சம்பவங்கள் மூலம் மீண்டும் இணைவதை மிக அழகாகச் சொல்லியிருந்தார் ஃபாசில். மிகப் பெரிய வெற்றிபெற்ற இந்தத் திரைப்படமும் தமிழுக்கு வந்தது. காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ஃபாசிலே இயக்கினார். நடிகர் விஜயும் ஷாலினியும் நடித்தனர். தமிழிலில் விஜய்க்கு ஒரு மரியாதையை பெற்றுத் தந்த படமாகவும் அதிக நாட்கள் ஓடியப் படமாகவும் இது அமைந்தது. ப்ரியதர்ஷன் இதனை இந்தியில் இயக்கினார்.

இந்த அலையின் தொடர்ச்சி சகிதமாக 2012 - ல் வந்தது  மலையாள கதாசிரியரும் இயக்குநரும் நடிகருமான ஸ்ரீநிவாசனின் மகன் வினீத் ஸ்ரீநிவாசன் இயக்கிய ‘‘தட்டத்தின் மறயத்து''. கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கும் ஓர் இந்து இளைஞனின் காதலை இந்தப் படம் பேசியது. எளியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் காதல், அதன் ஏக்கம், நொம்பலம் என சொல்லிய விதத்தில் வெற்றியடைந்த இந்தத் திரைப்படம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த நடிகர் நிவின் பாலி,  இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் என ஒரு புதிய கூட்டமே திரையுலகில் ஒரு சுற்று வலம் வருவதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது.

நிவின்பாலியை அடுத்தத் தலைமுறையின் தவிர்க்கமுடியாத நடிகராக்கிய திரைப்படம் ‘‘பிரேமம்''. வெவ்வேறு மூன்று காலக்கட்டத்தின் காதலினை சொல்லும் பயணமாக அமைந்த இந்தப் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய்பல்லவிக்கும், இறுதிப் பகுதியில் அறிமுகமான பாடகி மடோனா செபஸ்டியானுக்கும் மதிக்கத்தகுந்த அங்கிகாரம் கிடைத்தது. நிவினின் தாடிக்கு ஒரு கிறக்க செல்வாக்கு உண்டானது. உதவி இயக்குநர்கள் தாடியுள்ள நிவினை வைத்துக் கதை தயார் செய்வது தற்போது வரையில் நிகழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக பிரேமம் அமைந்தது.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com