ஜனதா கட்சி பெற்றெடுத்த தலைவர்களில் ஒருவர் தேவிலால். எழுபதுகளில் காங்கிரஸில் இருந்து விலகிய இந்த ஹரியானா சிங்கம், எமர்ஜென்சியில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. சுதந்தர போராட்ட காலத்தில் இருந்தே அரசியலில் இயங்கிய இந்த முன்னாள் காங்கிரஸ்காரர், ஜெயப்ரகாஷ் நாராயணின் முயற்சியில் உருவான ஜனதாவில் சேர்ந்தார்.
எமர்ஜென்சிக்குப் பின் ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஹரியானா முதல்வர் ஆனார். அப்பதவியில் இருந்து இரண்டு ஆண்டுகளில் விலக நேர்ந்தாலும் மாநில அரசியலிலும் சரி மத்திய அரசியலிலும் சரி ஆர்வத்துடன் காங்கிரஸுக்கு எதிரணியில் இயங்கினார். ஜனதா தளம் கட்டமைத்த தேசிய முன்னணி ஆட்சி 1989-இல் வந்தபோது விபிசிங் பிரதமர். தேவிலால் துணைப் பிரதமர். ஹரியானாவின் முதல்வராக இருந்த தேவிலால் அப்பதவியை தன் மகன் அஜய் சிங் சௌதாலாவிடம் அளித்துவிட்டு டெல்லிக்கு வந்தார். தேவிலாலுடன் ஒத்துப்போக விபி சிங் தயாராக இல்லை. இந்நிலையில் டெல்லியில் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து சந்திரசேகர் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமர் ஆகிறார். மீண்டும் தேவிலாலே துணைப்பிரதமர். ஆயினும் இந்த ஆட்சியும் கவிழ்ந்துவிடுகிறது.
தேவிலால் ஹரியானா மாநில ஜாட் விவசாய மக்களின் தனிப் பெருந்தலைவராக இருந்த காரணத்தால் அங்கே அபரிதமான செல்வாக்கைப் பெற்றிருந்தார். ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி அடைந்த நிலையில் 1998-ல் ஹரியானா லோக் தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு இந்திய தேசிய லோக்தளம் என்று அது பெயர் மாறியது. அச்சமயம் தன் மகன் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவிடம் கட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் தேவிலால். அப்பா பிள்ளை உறவில் ஆரம்பத்திலிருந்தே விரிசல்களும்
உரசல்களும் உண்டு. அது தனிக்கதை. இதைத் தொடந்து தேவிலால் மறைந்த நிலையில் ஓம் பிரகாஷ் சௌதாலா, பாஜக கூட்டணி உதவியால் ஹரியானா முதலமைச்சராகவும் ஆனார். 2000-வது ஆண்டு வந்த தேர்தலில் மீண்டும் இந்திய தேசிய லோக்தளம் & பாஜக கூட்டணி வென்று, சௌதாலா ஆட்சிக்கு வந்தார். ஐந்தாண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தமுடிந்தது.
ஆனால் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றாத குற்றச்சாட்டு, ஊழல், அதிகார மீறல் புகார்கள் இருந்த நிலையில் பாஜக கூட்டணி உடைந்தது. அதற்கடுத்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் இ.தே.லோ.த கட்சி வெல்ல முடியவில்லை.
ஆனால் ஓம் பிரகாஷ் சௌதாலா நான்காவது முறையாக ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர் பதவி உயர்வுகளில் ஊழல் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் 2013-இல் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அவருக்கும் அவரது மகன் அஜய் சிங் சௌதாலாவுக்கும் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. 2015-இல் உச்ச நீதிமன்றமும் இத்தண்டனையை உறுதி செய்துவிட்டது.
அப்பாவும் பிள்ளையும் ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே போன பிறகு கட்சி என்ன ஆகும்?
அங்கே காங்கிரசும் நலிவுற்ற நிலையில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஆனாலும் சௌதாலாக்கள் அசரவில்லை.
அஜய்சிங் சௌதாலாவின் தம்பி அபய் சிங் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த ஊழல் கறையிலிருந்தும் தப்புவதற்காக இன்னொரு கட்சி அவர்கள் குடும்பத்தில் இருந்தே தொடங்கப்பட்டுள்ளது. அது ஜன்நாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). ஜன் நாயக் என்பது தேவிலாலைக் குறிப்பதாகும். ஆரம்பித்தவர் துஷ்யந்த் சௌதாலா. அஜய் சிங் சௌதாலாவின் மகன். மிக இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர் என்ற சாதனையைச் செய்தவர்.
2019 தேர்தலில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி தன் பத்து எம்.எல்.ஏக்களுடன் ஆதரவு அளித்தது. இதைத் தொடர்ந்து துஷ்யந்த் சௌதாலா துணை முதல்வராகவும் ஆகி உள்ளார்.
கட்சிகள் காலாவதி ஆனாலும் சௌதாலாக்களின் காலம் தொடந்துகொண்டுதான் உள்ளது.
செப்டம்பர், 2022