செலவுகளை குறைத்தோம்!

செலவுகளை குறைத்தோம்!
Published on

காயத்ரி - பதிப்பாளர், ஜீரோ டிகிரி

பதிப்புப் பணியை ஆரம்பித்து மூன்று வருடமாகிறது. இதிலிருந்து ஒரு பைசா கூட எடுத்ததில்லை. ஏனெனில் பதிப்புத் துறை பற்றி எல்லோருக்கும் தெரியும். என்னுடைய கணவரின் வருமானத்தில் தான் குடும்ப செலவுகளைப் பார்க்கிறோம். அவர் ஒரு நல்ல வேலையில் இருப்பதால் பெரிய அளவுக்கு கஷ்டம் என்று சொல்ல முடியாது, ஆனாலும் முந்தைய அளவுக்கான சம்பளம் என்பது கொரோனாவால் இல்லாமல் போனது. எனவே இப்போது நிறைய செலவுகளைக் குறைத்துக் கொண்டோம். வெளியில் போவது குறைந்துள்ளதால், செலவும் குறைந்துள்ளது.

என்னுடைய கணவர் கொரோனாவால் உயிரிழந்த அவருடைய நண்பரின் குழந்தைகளுடைய கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். அதேபோல், மற்றொரு நண்பருக்கு வேலை இல்லை என்பதால் அவருக்கு இரண்டு மாதமாக வீட்டு வாடகை கட்டியுள்ளார். இதுபோன்று உதவுவதற்காக எங்களிடம் தேவையற்ற செலவுகளைக் குறைக்கச் சொல்லியிருக்கிறார். நாங்கள் கடந்த ஆறு, ஏழு மாதத்தில் புதியதாக எதுவும் வாங்கவேயில்லை என்பது தான் உண்மை.

வீட்டுக்குள் முடக்கம்!

கவின் மலர் - பத்திரிகையாளர்

என்னுடைய பொருளாதாரம் என்பது நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாம் நன்றாக இல்லை. ஏனெனில் வேலையில் இல்லை.  அவ்வப்போது இதழ்களில் எழுதுவது அல்லது ஏதேனும் யூடியூப் சேனலுக்கு யாரையேனும் பேட்டி எடுத்துத் தருவது போன்றவற்றை செய்வதால் கொஞ்சம் தொகை கிடைக்கும். அது வந்தவுடன் செலவாகிவிடும் என்பதால், நிர்வகிப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.

கொரோனா காலத்திற்கும் முன்பே பணியில் இல்லை. ஆனால் ஒரு சுதந்திர பத்திரிகையாளராக இருப்பதால் ஏதேனும் பிரச்னைகள் எங்கேனும் நிகழ்கையில் நேரே களத்திற்கு

செல்வது முடியாததாகிறது. பேட்டிகளைக் கூட இணையம் மூலம்தான் எடுக்கவேண்டும் என்கிற நிர்ப்பந்தம். ஆகவே இது அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானத்தையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. ஏதோ ஒன்றரை ஆண்டு காலமும் பெற்றோரின் உடல்நிலை கருதி அவர்களோடிருக்க வேண்டி இருப்பதால் சமாளிக்க முடிகிறது. அப்பா இந்த ஜனவரியில் காலமாகிவிட, ஊரில் சில மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அங்கே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சென்னை வந்தவுடனேயே கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததும் வீட்டிற்குள் முடங்கும்படி ஆகிவிட்டது!

சேமிப்பில் சேதாரம்!

இளநகை, தொழிலதிபர்

கோவிட் எனது கெமிக்கல் உற்பத்தித் தொழில், வணிகத்தை பாதிக்கவில்லை. ஆனால் எனது இரு சொத்துகளான வீடு மற்றும் அலுவலகம் வாடகையின்றி பூட்டிக்-கிடக்கின்றன. இது ஒரு இலட்சம் ரூபாய் அளவுக்கான மாத வருமானத்தை பாதித்துள்ளது இது எனது வருமானத்தில் நான்-கில் ஒரு பங்கு. இதனால் எனது சேமிப்பு கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் வீட்டுச்செலவுகளை மாதச் சம்பளத்தில் சமாளிக்க முடிகிறது.

வருமானத்துக்கு ஏற்ற வாழ்வு!

நிகில் முருகன், பி.ஆர்.ஓ

என்னை எல்லோரும் கேட்பார்கள், எப்படி எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று. என்னுடைய ஆசைகளும் எனக்கான தேவைகளும் மிகவும் குறைவு. இதனால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. எனக்கு என்ன வருமானம் வருகிறதோ அதை வைத்து வாழ்வதற்கு நான் எப்பொழுதோ பழகிவிட்டேன். இதனால் இந்த கொரோனா காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி பெரியதாக இல்லை. எல்லோருக்கும் பல்வேறு ஆசைகள் உண்டு, ஆனால் அது யதார்த்தத்தில் நடக்குமா? என்பது தான் விஷயம்.

பொதுவாக நாங்கள் தயாரிப்பாளர்களைச் சார்ந்திருப்பவர்கள். இன்று திரைப்படத்துறையே முழுமையாக முடங்கி இருப்பதால், தயாரிப்பாளர்களிடம் சென்று உதவி கூட கேட்க முடியாத நிலை உள்ளது. அதனால் இருப்பதை வைத்து வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். ருசிக்காக சாப்பிடுவதை விட பசிக்காக சாப்பிடும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம்.

சோதனைக்காலம்!

நாராயணன் திருப்பதி, பாஜக செய்தி தொடர்பாளர்

நான் ஒரு வர்த்தகன். வீட்டு உபயோக பொருட்களுக்கான தொழிலை செய்து கொண்டிருக்கிறேன். இது என்னுடைய குடும்ப தொழில் என்பதால் இதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து தான் என்னுடைய குடும்ப செலவுகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறேன். வீட்டு உபயோக பொருட்களுக்கான தொழில் என்பது சிறு வர்த்தகம். இந்த சிறு வர்த்தகர்களுக்கு கடந்த சில ஆண்டுகள் சோதனை காலமாகத்தான் உள்ளது. ஏனெனில், ஜிஎஸ்டி-க்குப் பின்னர் நுகர்வோருக்கு சாதகமாக இந்த தொழில் இருப்பதால் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல், கொரோனா காலகட்டம் மிகவும் மோசமானதாக உள்ளது. சென்ற வருடம் கொரோனா பாதிப்பினால் முழுமையாக ஏறக்குறைய ஐம்பது நாட்கள் கடை திறக்கப்படாமல் இருந்தது. பிறகு தளர்வுகளுடன் கூடிய கடையடைப்பு என்பதால் கடைகளுக்கு மக்களின் வருகை என்பது குறைந்திருந்தது. வாங்கும் சக்தி மக்களிடம் இல்லை என்பது தான் உண்மை. அதேபோல், கடந்த ஒன்றரை மாதங்களாக மீண்டும் ஊரடங்கு இருப்பதால், வியாபாரம் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாமல் செலவுகள் தான் அதிகரிக்க செய்கிறது. வீட்டிலேயே அனைவரும் இருப்பதால் மளிகை, மின்சாரம் உள்ளிட்ட இதர செலவுகளும் அதிகரித்துள்ளது. என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு இது மிகவும் சோதனையான காலம்.

ஏற்கெனவே இருக்கின்ற சேமிப்புகள் இந்த கொரோனாவால் செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் தொழில் செய்வதற்கும் சரி, குடும்பத்தை நடத்துவதற்கும் சரி கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விடும்.

முதல் ஊரடங்கு என்பது மருத்துவக் கட்டமைப்பை பெருக்குவதற்காகத்தான் கொண்டு வந்தோம். ஆனால் கொரோனாவில் ஏற்படும் பாதிப்புகளை விட ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பு மிக மிக அதிகமாக இருக்கும். ஊரடங்கு பொருளாதார ரீதியாக குடும்பத்தை பாதிக்கும்போது, அது வாழ்க்கை முறை, குழந்தைகளின் கல்வி என எல்லா வசதி வாய்ப்புகளும் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வருங்காலத்தில் ஊரடங்கு இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். இல்லையெனில், ஏழை, நடுத்தரவர்க்க குடும்பங்களின் வாழ்வு மிக மோசமானதாக இருக்கும். வறுமை, கந்துவட்டி போன்ற பல்வேறு கொடுமைகளை சந்திக்க நேரிடும்.

கொஞ்சம் வரவு! கொஞ்சம் செலவு!

இயக்குநர் ராசி அழகப்பன்

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்தது. பொருளாதாரம் முடங்கியது. பொதுவாக திரைத்-துறையில் ஆளுமை மிக்கவர்கள் தப்பித்துவிடுவார்கள்! ஆனால் துறையில் உள்ளோர் சிக்கிக்கொள்வார்கள்.

சென்னை எப்போதுமே வாழ்வாதாரம் தேடி வருவோரை வாழவும் வைக்கும் அழவும் வைக்கும்.

எனது நிலை பரவாயில்லை. அடிப்படையில் நான் பெருஞ்செலவாளி இல்லை. குறைவான பொருளே போதுமானது. வசதி, புகழில் சிக்கிச் சிதிலமடைய விரும்பாதவன். இருப்பிடம் சோழிங்கநல்லூர். எனவே சென்னை, திநகர், வடபழனி வந்துபோக பஸ்வசதி போதும். அதுவும் முடங்க இருக்கவே இருக்குது டிவிஎஸ் எக்ஸ் எல்.. நம்ம ஊரு வண்டி.

அதற்கும் முடக்கமா.. இருக்கவே இருக்குது வீட்டில் படிப்பதும், எழுதுவதும் ஜூம் மீட்டிங்கில் பேசுவதும்..

அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் தலைகாட்டிவிடுவேன். எனது தனிப்பட்ட செலவுகள் சொற்ப ஆயிரம்தான். திரைப்பட வேலைகள் கொஞ்சம் நடக்க இருந்தபோது, ஓர் இயக்குநர் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். வாத்தியார் என்கிற கால் பந்தாட்டப்படக் குழு திரைப்படம். சிறுவேடம்தான். ஆனால் நடிப்புக்குப் பணம் கிடைத்தது. சிலசமயம் கல்லூரி, வெளிநாட்டு அமைப்புகளில் இணையவழி உரையாற்ற கொஞ்சம் பணம் கிடைக்கத்தான் செய்தது.

எழுதுவதும் பேசுவதும் உதவத்தான் செய்தது. வீட்டில் மனைவியும் மகனும் பணியாற்றுகிறார்கள் என்பதால் பிக்கல் பிடுங்கல் குறைவு. இதிலே இன்னொருவர் ஒரு ஐடியா கொடுத்தார். யூட்யூப் சானல் ஆரம்பித்துப் பேசுங்கள். கலக்கலாம் என்றார். அட. செல்போனில் என்ன முடியுமோ அதில் தயாரித்துப் பேசுவதில் ஒரு நாளில் பாதி பறி போகிறது!

கலக்கலாம் என்றாரே அவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். பரப்பாகப் பேசி கலாய்க்க முடியாத எனக்கு இது சரிப்பட்டு வருமா? ஏதோ எங்கும் வெளியே போகமுடியாததற்கு இது நடக்கட்டும் என வீட்டிலுள்ளோர் சந்தோஷப்படுகிறார்கள்.

வாடகை வீட்டில் வாழ்வதாக இருந்தால் இந்நேரம் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த கிராமம் போயிருப்பேன். ஆனாலும் அங்கும் வாழ சொத்து என்று சொல்லிக்கொள்ள ஓரடி கூட இல்ல.

கையில் வந்த பணத்தை கஷ்டப்பட்ட ரெண்டு பேருக்கு உதவி செய்தேன். உண்மையில் வருமானத்தைப் பெருக்க வழி தேடணும் என்று இப்போதுதான் தோன்றுகிறது. கடன் வாங்கும் பழக்கம் இல்லை. இருப்பதை வைத்து வாழ்கிறேன். மத்தவங்க மெச்ச வாழணும்னா நெறைய மெனக்கெடணும். அது நமக்கு வராதே? என்ன பண்ணட்டும். ஒற்றை வரியில் சொன்னால் கொஞ்சம் வரவு கொஞ்சம் செலவு!

முதலீட்டின் அவசியம்

பத்மப்ரியா, சமூக செயல்பாட்டாளர்

நான் சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கிறேன். அதில் வருகின்ற வருமானத்தை வைத்துதான் வாழ்க்கையை நடத்துகிறேன். வருகின்ற வருமானத்தை அப்படியே செலவு செய்துவிடாமல் அதை முதலீடாகவும், பணமாகவும் சேமித்து வைப்பது முக்கியம். நமக்கே தெரியாமல் நாம் சேமித்து வைக்கின்ற சேமிப்புகள் இது போன்ற நெருக்கடி காலங்களில் நிச்சயம் உதவியாக இருக்கும். சம்பாதிக்கின்றோம், செலவழிக்கின்றோம் என்று இல்லாமல், சேமித்து வைத்தல், முதலீடு செய்தல் போன்றவை நெருக்கடியான காலத்தில் உதவியாக இருக்கும் என்பது தான் என்னுடைய கருத்து.

முதலீடு தொடர்பான திட்டங்கள், பாலிசி,  சேமிப்பு போன்றவை குறித்து  நான் இன்னும் பெரிய அளவுக்கு முடிவெடுக்கவில்லை. ஆனால் கையிருப்பு என்று எதாவது இருக்க வேண்டும் என்று  நினைப்பது உண்டு.

இந்த கொரோனா பல்வேறு விஷயங்களை உணர்த்திவிட்டு செல்கிறது. வருகின்ற வருமானத்தை அப்படியே செலவு செய்கிறவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

ஜூலை, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com