சூடான் மாணவனின் கிடார் கம்பிமேல் நின்று!

சூடான் மாணவனின் கிடார் கம்பிமேல் நின்று!
Published on

மேன்ஷன் என்ற வார்த்தைக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள் ஃப்ளாட் எடுத்து தங்குகின்றனர். மூன்று பேர் ஒரே ஃப்ளாட்டில் தங்குவதாக இருந்தால் கூட, எல்லோருக்கும் தனித்தனி அறைகள் இருக்கின்றது. வீடுகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இது எதுவும் நான் இளைஞனாக இருந்தபோது கிடையாது.

ஸ்டில்ஸ் ரவி சாரிடம் அசிஸ்டெண்ட் வேலை பார்த்த நானும் ராஜா ராணி பாண்டியனும் வில்லிவாக்கத்தில் பதினைந்து ரூபாய்க்கு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கினோம். ஐம்பது ரூபாய் அட்வான்ஸ். ஐந்து ரூபாய் கரண்ட் பில். கோழி முட்டை போல் ஒரே ஒரு பல்பு தான் இருக்கும், சிமெண்ட் சீட் போட்ட மொட்டை மாடி வீடு அது. பேச்சிலருக்கு அப்போதெல்லாம் அது போன்ற வீடுகள் தான் கிடைக்கும். நிறைய இடங்களில் பேச்சிலருக்கு வீடு கொடுக்க மாட்டார்கள்.

பிறகு வில்லிவாக்கத்திலிருந்து கோடம்பாக்கத்திற்கு வந்தேன். அப்போது, தி.நகரில் நிறைய மேன்ஷன்கள் இருந்தன. ஆனால் மாத வாடகை நூற்றைம்பது ரூபாய். ஒரே ஒரு படுக்கை மட்டும் தான் இருக்கும். அதில் மூன்று பேர் தங்கியிருப்பார்கள். அவ்வளவு பெரிய தொகையில் தங்குவதே அன்றைக்கு வசதியானதாகப் பார்க்கப்பட்டது. அப்போது, எனக்கு நூற்றைம்பது ரூபாய் இருந்தால், ரூம் வாடகை, மாதம் மூன்று வேளை சாப்பாடு, பஸ் போக்குவரத்து என எல்லா செலவுகளும் அதிலேயே அடங்கிவிடும்.

கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் இரண்டாவது தெருவில் ஒரு பெரிய கோழிப்பண்ணை இருந்தது. அதில் ஒரு தடுப்பை வைத்து அறைகளாக மாற்றியிருந்தார்கள். அட்டாச்டு பாத்ரூம் வசதியுடன் இருந்த அந்த அறையில் நானும் நண்பர் தாஸும் நூற்று இருபத்தைந்து ரூபாய் வாடகை கொடுத்துத் தங்கினோம். மூன்று மாத வாடகை பணத்தை அட்வான்ஸாக கொடுத்தோம். ஒரு அம்மாவுக்கு மாதம் நூறு ரூபாய் கொடுத்து, மூன்று வேளையும் சமைக்க சொல்லிவிடுவோம். இப்படி சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், கொஞ்சம் பணம் கிடைத்தது. உடனே எல்.ஐ.சி பின்புறம் உள்ள தாயார் சாகிப் தெருவில் கேரூ மேன்ஷனில் தங்கினேன். சூட்டிங் இருந்தால் வெளியே சென்றுவிடுவோம். இல்லையெனில், அறையில் சீட்டு விளையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் தங்கியிருந்த அதே மேன்ஷனில் சூடான் நாட்டை சேர்ந்த மாணவர்களும் நிறையப் பேர் தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பையன் மிக அற்புதமாக கிடார் வாசிப்பான். மாபெரும் கலைஞன் அவன்.

வேறொரு நாட்டில் இருந்து கல்வி படிப்பதற்காக வந்தவர்கள், எவ்வளவு பரந்த அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி இப்போதும் நான் வியக்கிறேன். அந்த பையனுக்கு இருபத்தி இரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதுதான் இருக்கும். நான் தங்கியிருந்தது சென்னை, இருப்பது இந்தியாதான் என்றாலும், ஃபாரின் ஸ்டூடண்ட் சங்கத் தலைவரே எங்கள் கூடத்தான் இருப்பார். அதேபோல், எங்கள் அறையைச் சுற்றி நைஜீரியா, சூடான், குவைத் மற்றும் நைரோபி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் எல்லாம் தங்கியிருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்கள் எங்களை ஒருமாதிரி பார்ப்பார்கள். கிட்டாரிஸ்ட் கலைஞன் மட்டும் நல்ல நண்பனாக இருந்தான்.

அவனுடைய கேர்ள் ப்ரண்ட் மெட்ராஸ் யுனிவர் சிட்டியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டு பேர் கையிலும் பணம் இல்லை என்றால், இரண்டு பேரும் சேர்ந்து பாட்டுப் பாடுவார்கள். அந்த பெண் அவளுடைய தாய் மொழியில் பாடுவாள். அந்த பையன் கிட்டார் வாசிப்பான். சாப்பிடக் கூப்பிட்டால், அதற்கு அவன் மூஞ்சி கடுமையாக மாறும். ஏன்னா? சுயமரியாதை இல்லையாம்.

அவனுடைய மியூசிக் பத்தி பேசி, இளையராஜா சாரை அவனுக்கு அறிமுகப்படுத்தி, அவன் எங்களுக்கு பீத்தோவன் பத்தி சொல்லி.. ஒரு பரிமாற்றம் நடந்தது. அந்த மேன்ஷன் வாழ்க்கையில் கிடைத்த நல்ல சொத்து இந்த அனுபவம்.

நம்ம ஊரில் அப்ப கரகாட்டக்காரன் படம் ரிலீஸ். அவனுக்கு அந்தப் படத்தின் பாடலை போட்டு காட்டினேன். ‘வானத்துல சுத்துதடி ஒன்பது நவக்கிரகம்'. இந்த பாடலுக்கு அவனால் வாசிக்க முடியாது. பிறகு ஜானி பட பாடலையும் போட்டு காட்டினேன். பாடலை கேட்டவன் ஒரு மாதிரி பிரமித்துப் போய்விட்டான். இளைராஜா சார் நாடுகளின் எல்லைகளைத் தாண்டியவர் என்பதை கண்முன்னே கண்டோம். ‘என் வானிலே ஒரே வெண்ணிலா' என்ற பாடலை நான்கு நாட்கள் தான் கேட்டான் அப்படியே இளையராஜா சார் இசை மேல் பைத்தியமாகிவிட்டான்.

அதன்பிறகு, இளையராஜா சாரின் பாடல் எதாவது புதியதாக வந்திருக்கிறதா என்று கேட்பான். அப்போது, நாடோடி தென்றல் படத்தின் ரெக்காடிங் முடிந்திருந்தது. அந்த படத்தின் பாடல் கேசட் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தேன். ‘மணியே மணிக்குயிலே' பாடல் அவனை கிட்டதட்ட ஒரு தமிழனாகவே மாற்றிவிட்டது.

அன்னைக்கு 1991 ஆம் ஆண்டு, மே மாதம் 21ஆம் தேதி. அப்போது தான் அறைக்கு வந்து உட்காருகிறோம். ஒரே சத்தம். ஆ..ஊ..னு அடிதடி சண்டை சத்தம்...எல்லா பக்கமும் சத்தம். எழுந்து வெளியே வந்து என்னடான்னு பார்த்தால், அன்னைக்குத் தான் ஸ்ரீபெருப்புதூரில் ராஜீவ்காந்தியை குண்டு வைத்து கொலை செய்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த ஒரு இருபது நிமிடத்தில் சென்னையில் பெரும் கலவரம். எங்க மேன்ஷன் மேனேஜர், அன்னைக்கு இரவு மொட்டை மாடி கதவை திறந்துவிட்டார். எல்லோரும் மாடிக்கு போய்விடுங்கள் என்றார். இல்லை என்றால், கலவரம் செய்யக்கூட்டியவர்கள் இங்கு வந்துவிடுவார்கள் என்றார். பிறகு எல்லாரும் மாடிக்குப் போய்விட்டோம். மாடியில் சென்று பார்த்தால் ரணகளமா இருக்கிறது மவுண்ட் ரோடு.

காலையில் எழுந்து பார்த்தால் காபி குடிப்பதற்குக் கூட வழி கிடையாது. எங்களிடம் காசும் கிடையாது. அதேபோல், எந்த கடையும் திறக்கவும் இல்லை. யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டில் சென்று, அவர்களிடம் பால் வாங்கி அங்கேயே சுட வைத்து குடித்தோம். கிட்டதட்ட ஒருநாள் முழுக்க பால்தான் குடித்தோம். மறுநாள் பக்கத்திலிருந்த ஒரு மெஸ்கார முஸ்லீம் குடும்பம் எங்கள் ஐம்பது பேருக்கு

சமைத்துக் கொடுத்தார்கள். சென்னையில் மூன்று நாள் எங்கேயுமே போக முடியவில்லை. என்னுடைய மேன்ஷன் வாழ்க்கையில் நான் சந்தித்த சூடான் மாணவர்களையும் ராஜீவ்காந்தி சம்பவத்தையும் மறக்கவே முடியாது.

அன்னைக்கு மொழி தெரியாத ஒருத்தனிடம், இசை சார்ந்து ஒருத்தனிடம் நல்ல நட்பு கிடைத்தது. தொலைத்தொடர்பு இல்லாததால் அவனுடைய நட்பைத் தொடர முடியவில்லை.அவனை மீண்டும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்.

செப்டம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com