பாரதிராஜா எப்போதும் நம்பிக்கையை இழக்கமாட்டார். தன் திறமைமீது அவருக்கு அப்படி ஒரு உறுதி. எழுபதுகளில் இருந்தே அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அது பாரதிராஜா உதவி இயக்குநராகவும் நான் பத்திரிகையாளனாகவும் இருந்த கால கட்டம். அதன் பின்னர் அவர் இயக்குநராகி தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்து தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய சாதனையை செய்தார்.
1980 - ல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அவருடைய அழைப்பின் பேரில் நான் அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அந்த கால கட்டத்தில் மக்கள் தொடர்பாளராக நான் நன்றாக சம்பாதித்துக்கொண்டு இருந்தேன். அந்த வருமானம் உதவி இயக்குநர் பணியில் எனக்குக் கிடைக்காது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் அவரது அழைப்பின் பேரில் நான் அவரிடம் உதவி இயக்குநராக சேர முடிவு
எடுத்ததற்கு காரணம் இருந்தது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நூற்றுக் கணக்கான இளைஞர்கள் ஏங்கிக் கொண்டிருந்த கால கட்டம் அது. அப்படிபட்ட ஒரு நிலையில் அவரே என்னை அழைத்ததால் அதை மிகப்பெரிய வாய்ப்பாக எண்ணித்தான் அவரிடம் சேர்ந்தேன். வாழ்க்கையில் நான் எடுத்த மிக முக்கியமான முடிவு அது. இன்று நான் இருக்கும் நிலைக்கு அந்த முடிவே காரணம். அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் நான் நிச்சயமாக இயக்குநராக ஆகியிருக்கவே மாட்டேன்.
அலைகள் ஓய்வதில்லை வெற்றிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் உருவான டிக்டிக்டிக் படம் வெளியானது. அந்த படம் வெளியாவதற்கு முன்பே மிக அதிகப்படியான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. கமல் அமர்ந்திருக்க அவருடன் மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய மூவரும்
நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக நின்று கொண்டிருந்த ஒரு வண்ணப்படம்தான் அதற்கு முக்கியக் காரணம். அந்தப் படம் நன்றாகப் போகவில்லை எனச் சொல்லமுடியாது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று வேண்டுமானால்
சொல்லலாம்.
அதற்கு அடுத்து பாரதிராஜா காதல் ஓவியம் எடுத்தார். அந்தப் படத்திற்காக அவர் உழைத்தது மிகக் கடுமையான உழைப்பு. ராதா அப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்த அவர் பார்வையில்லாத ஒரு புது நாயகனுக்கு ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் விரும்பாததால் அந்தப் படம் தோற்றுப்போனது. அலைகள் ஓய்வதில்லை படத்திலே அவருடைய அறிமுகக் காட்சியில்
ரசிகர்கள் திரையரங்கில் சில்லறைக் காசுகளை
வீசி எறிந்ததை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் இருந்த ராதாவுக்கு ஜோடியாக ஒருவேளை கமல் நடித்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அந்தப் படத்தின் தோல்வி இயக்குநருக்குக் கோபத்தை மூட்டிவிட்டது. இவ்வளவு காவியமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கோம்.. மக்கள் பார்க்கவில்லையே... என்று அவர் நினைத்தார்.. ஒரு படைப்பாளியாக அவரை சலனப்படுத்தியதன் காரணமாக அவர் எடுத்த படம்தான் வாலிபமே வா.. வா.
'உங்களுக்கெல்லாம் பாட்டு, மசாலா, வெச்ச படம்தானே பிடிக்கும்.. இந்த பிடியுங்கள்' என்று அவர் எடுத்த படம் அது. கார்த்திக்& ராதா என்ற வெற்றிகரமான கூட்டணி இருந்தும் இந்தப் படம் ஓடவில்லை!
தோல்வியைச் சந்திக்கும் இயக்குநர்கள் எப்போதும் அடுத்து தோல்வியை தவிர்ப்பதற்காக பெரிய நாயகர்களை வைத்துப் படம் பண்ணவே நினைப்பார்கள். ஆனால் பாரதிராஜா அப்படி நினைக்கவில்லை.
வாலிபமே வா வா படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் நான் எடுக்க முடிவு செய்திருந்த படத்துக்கு ராதா தான் நாயகி என்று முடிவு செய்து அவரிடம் 60 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்திருந்தேன். படத்தின் பூஜை விளம்பரத்தில்கூட அவரது படத்தைப் பயன்படுத்தி இருந்தோம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து மண்வாசனை படத்தை எடுக்க அவர் முடிவு செய்தார்.
முதலில் அந்தப் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ஷோபனா. அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் நாங்கள் அலைகள் ஓய்வதில்லை இந்தி படபிடிப்புக்காக மும்பை போய்விட்டு திரும்பியபோது ஷோபனா, தேர்வு இருக்கிறது. நடிக்க முடியாது என்று கூறிவிட அதன் பின்னாலேதான் ரேவதியை தெரிவு செய்தோம். அவரும் அப்போது 12 ஆம் வகுப்பு மாணவிதான்.
சரி.. அடுத்தது நாயகன்... சென்னையில் எங்கு கண்காட்சி, கூட்டம் நடந்தாலும் அங்கே பாரதிராஜாவும் நானும் போய் நிற்போம். இயக்குநருக்குப் பிடித்தமாதிரியான முகம் எதுவும்
கிடைக்கவில்லை. சரி மதுரைக்குப் போறோமில்ல. அங்கே ஏதாவது கல்லூரியில் ஒரு ஹீரோவைப் பிடிச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டார். 1983& ஆம் ஆண்டு தேனி அருகே வீரபாண்டி கோவிலில் படப்பிடிப்பு என்று அறிவித்து நடிகர் நடிகைகள் பட்டாளத்துடன், முப்பது நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களுடனும் போய்ச்சேர்ந்தோம். ஆனால் நாயகன் யார் என்று முடிவாகவே இல்லை. அங்கிருந்து மதுரைக்கு வந்து கல்லூரி கல்லூரியாக அலைந்து பார்த்து யாரும் சிக்கவில்லை. திரும்பும் முன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் வணங்கிவிட்டு செல்வோம் என்றேன். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு காரில் ஏறும்போது ஒரு பையன் எக்கி எக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கே வளையல் கடையில் வேலை செய்கிற வாலிபன். அவனையே கூர்ந்து கவனித்தார் பாரதிராஜா. ' சித்ரா, இவனை காரில்
ஏத்திக்க' என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சரி.. நானும் ஏதோ அவருக்கு சொந்த ஊரில் தெரிந்த பையன் என்று நினைத்து ஏற்றிக்கொண்டேன். ஓட்டலுக்கு வந்ததும் பையனைப் பார்த்து 'முறைச்சுப் பார்' என்றார். சிரி என்றார். சில பாவங்களைக் காட்டச் சொன்னார். இவன்தான்யா நம்ம படத்துக்கு ஹீரோ என்று சொல்லிவிட்டார். அவர்தான் பின்னாளில் 70 படங்களுக்கு மேல் நடித்து முடித்த பாண்டியன்!
உலகத்தில் எங்குமே இப்படி நடந்திருக்காது... அந்தத் தேர்வுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் இயக்குநர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். முதல் நாள் வரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் வளையல் விற்றுக்கொண்டிருந்த பாண்டியன் அடுத்த நாள் 'பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு' என்ற பாடலுக்கு நடித்தார். அதெல்லாம்
சாதாரணமாக கனவில்தான் நடக்கும். ஆனால் பாரதிராஜா நிஜத்தில் நடத்திக் காட்டினார்.
மண்வாசனை படம் வெளிவந்தது! மதுரையில் மட்டும் 231 நாட்கள் ஓடியது பல இடங்களில் வெள்ளிவிழா கண்டது! அப்படியொரு மாபெரும் வெற்றி! ரசிகர்கள் இப்படத்தை வெற்றியடைய வைத்ததன் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை மீண்டும் சிம்மாசனத்தில் ஏற்றி கொண்டாடினர்.
(நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து)
செப்டெம்பர், 2019.