ரிவஞ்ச் ஸ்டோரி பற்றி எழுதணும்” என்று அந்திமழை ஆசிரியர் கேட்டதும், நம்மள பழி வாங்கற எண்ணம் ஏதோ அவருக்கு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அதையும் மீறி எழுதத் துணிந்த பின்பு, கட்டுரையைப் படிக்கும் வாசகர்கள் எந்த வகையிலும் பழிவாக்கப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.
வீட்டுப் பாடம் எழுத மறந்த சிறு தவறுக்கு, பிரம்படி வழங்கிய வாத்தியார் உட்காரும் பெஞ்ச்சில் முட்களைப் போட்டு வைத்து பழிதீர்த்துக் கொண்டவர்கள் நாம். பழிக்குப்பழி என்பது நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுதான். கூனியின் பழிவாங்கல் ராமாயணம். சகுனியின் பழிவாங்கல் மகாபாரதம். நிஜ வாழ்க்கையில் யார் யாரையோ பழிவாங்கிவிட மனம் ஏங்குகிறது. அதெல்லாம் முடிகிறதா என்ன? ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களித்து ஆளுங்கட்சியைப் பழிவாங்குகிறோமே.. அது democratic revenge!!
இந்திய சினிமாவின் ஆரம்பகட்டத்தில் எடுக்கப்பட்ட புராணப் படங்களில் மூலக் கதைகளில் இருந்த பழிவாங்கல் சம்பவங்கள் அப்படங்களிலும் இடம்பெற்றிருக்கலாம். தொடக்கால சமூகப் படங்களில் பழிக்குப் பழி , ரிவெஞ்ச் போன்றவை முக்கியக் கருப் பொருளாக இடம்பெற்றதாக ஆதாரம் இல்லை. அந்த நாள் (1954) படத்தில் தேசத் துரோகம் செய்யும் கணவர் சிவாஜியை பண்டரிபாய் சுட்டுக் கொன்றுவிடுவார்.
1936ல் அறிமுகமான எம்ஜிஆர் சிறுசிறு வேடங்களில் தோன்றி, 1950களில் தான் கதாநாயகனாகிறார். எம்ஜிஆர் வருகையை யொட்டியே, குறிப்பிடும் படியான பழிவாங்கும் படங்களின் ஃபார்முலா உருவாகிறது. அதற்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் பிள்ளையார் சுழி போடுகிறார். தாய்க்குப் பின் தாரம் (1956) படத்தில் எம்ஜிஆர், தன் தந்தையைக் கொலை செய்தவர்களை பழி வாங்குவார். பாக்தாத் திருடன், அடிமைப்பெண், அரசிளங்குமரி, குடியிருந்த கோயில், நீரும் நெருப்பும், நாளை நமதே என்று அவரது பழிவாங்கும் பட்டியல் மிக நீண்டது.
உண்மையில் அந்தக் கால கட்டப் படங்களில் பழிவாங்குதல் என்பது குரூர, கொடூர கொலையாக இருக்காது. வில்லன்கள் கொலை செய்யலாம். நாயகர்கள் அவர்களை அடித்து உதைத்து இழுத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே மிகக்பெரிய பழிவாங்கலாக இருந்திருக்கிறது.
சிறையில் இருந்து தப்பியோடி வரும் நம்பியாரின் கால்களை போலீஸாரின் விசில் சத்தங்கள் துரத்தி வரும். அமைதியாக இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அப்பா அம்மாவுடன் திருடன் போலீஸ் விளையாடும் சின்ன வயசு எம்.ஜி.ஆர் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வார்.
அப்போது அந்த வீட்டுக்குள் புகும் நம்பியார், “என்னையா போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தே.. இத்தோட செத்துப் போ” என்று எம்.ஜி.ஆரின் அப்பா கதாபாத்திரத்தை சுட்டுப் பொசுக்குவார். நெஞ்சில் குண்டுடன் சரிந்து விழும் அவரை கட்டிலுக்கு அடியில் பயந்து ஒடுங்கி ஒளிந்திருக்கும் சின்ன வயசு எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டிருப்பார்.
நம்பியாரின் கன்னத்து தழும்பு, மணிக்கட்டில் தொங்கும் ப்ரேஸ்லெட் என எதையாவது அடையாளம் பார்த்து வைத்துக் கொள்வார் இளவயது புரட்சித் திலகம்.
அப்புறம் என்ன? சுடுகாட்டில் அம்மாவிடம் (வேற யாரு பண்டரிபாய் தான்), “அழாதெ.. அம்மா.. அழாதெ.. அப்பாவை நம்மகிட்டே இருந்து பிரிச்சு. உன் பூவையும் பொட்டையும் பறிச்சவனை சும்மா விடமாட்டேன்.. இது சத்தியம்” என்று சொல்ல.. தாய் வாஞ்சையுடன் தன் பிள்ளையை அணைத்துக் கொள்ள, படத்தின் டைட்டில் கார்டு அப்போதுதான் தொடங்கும் (குடியிருந்த கோயில்).
இனி, 25 வருடங்களுக்குப் பின் “அம்மா” என்றபடி என்ட்ரி ஆகும் எம்.ஜி.ஆர், கதாநாயகியை ஈவ் டீசிங் செய்து, காதலித்து, நாகேஷ் காமெடிக்கு இடுப்பில் கைவைத்து சிரித்தபடி போஸ் கொடுத்து, அசோகனுடன் சிறு சண்டையிட்டு, கடைசியாக கள்ளக்கடத்தல் கும்பல் தலைவன் நம்பியாரிடம் அடைக்கலம் ஆவார்.
ஒரு நல்ல முகூர்த்த வேளையில் நம்பியார் தன் முகமூடியை கழற்ற அவரது முகத் தழும்பை எம்ஜிஆர் பார்த்து விடுவார். இல்லை, முழுக்கைச் சட்டை கிழிந்து மணிக்கட்டில் தொங்கும் ப்ரெஸ்லெட்டை கண்டுகொள்வார்.
அப்புறம் என்ன? ஒரு நீண்ட சண்டை. எம்ஜிஆரின் தாயும், காதலியும் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரிமோட் மூலம் திறக்கும் கதவு கொண்ட பத்துக்குப் பத்து அறைக்குள் இருக்க.. அவர்களை விடுவித்து கடைவாயில் ரத்தம் ஒழுக குத்துயிரும் குலைஉயிருமாக நிற்கும் நம்பியாரைப் பார்த்து, “என் அப்பாவைக் கொன்னதுக்கு இது” என்றபடி சாட்டையைச் சுழற்றி நம்பியாரின் முதுகுத் தோலை உரிப்பார். “என் அம்மாவை விதவையாக்கி பூவையும் பொட்டையும் அழிச்சதுக்கு இது” என்று அடுத்த அடி. “இத்தன வருஷமா மாறு வேஷம் போட்டுக்கிட்டு கள்ளக்கடத்தல் செஞ்சதுக்கு இது” என்று அடுத்த அடி.. இறுதியாக அதே சவுக்கால் நம்பியாரின் கழுத்தை எம்ஜிஆர் நெரிக்க அம்மா ஓடிவந்து, “வேண்டாம் மாணிக்கம் விட்டுடு..” என்று சொல்ல தாயின் பேச்சுக்கு தலைவணங்குவார்.
வானத்தை நோக்கி சுட்டபடி போலீஸ் என்ட்ரி ஆகி, “பல வருஷமா நாங்க தேடிட்டு இருந்த பயங்கர (!) குற்றவாளியை பிடிச்சிக் கொடுத்திட்டீங்க மாணிக்கம்.
சர்க்கார்கிட்டே இருந்து உங்களுக்கு பாராட்டும் விருதும் கிடைக்கும்” என்று கைகுலுக்கிவிட்டுச் செல்வார் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். இந்த வகையில் அவர் நடித்த 136 படங்களில் பத்து பதினைந்து படங்களில் தந்தையைக் யைக் கொலை செய்தவனை துரத்திப் பிடித்து பழி வாங்கியிருக்கிறார்.
மற்றவர்கள் அளவுக்கு இல்லையென்றாலும் சிவாஜியும் தன் பங்குக்கு பழிவாங்கும் படங்களில் நடித்துள்ளார்.
சித்ரா பவுர்ணமியில் பவுர்ணமி நாளில் பழிவாங்குவதாகட்டும்; திரிசூலத்தில் அப்பா சிவாஜிக்காக இரண்டு மகன் சிவாஜிகள் பழிதீர்ப்பதாகட்டும்; நடிகர் திலகம் முத்திரை பதித்துள்ளார். பிரபுவுடன் இணைந்து நடித்த படங்களில் (சந்திப்பு, வெள்ளைரோஜா) அவர் பழிவாங்க துணை நின்றிருக்கிறார், சிவாஜி. மணிவண்ணனின் ஜல்லிக்கட்டு படத்தில் நீதிபதியான சிவாஜி, சத்யராஜை பயன்படுத்தி எதிரிகளை ‘பழி தீர்த்து’க்கொள்வார்.
ரஜினி பழிவாங்குவது என்றால் என்ன என்று பாடம் நடத்தும் அளவுக்கு வகை தொகை இல்லாமல் ரிவைஞ்ச் ஸ்டோரியில் நடித்துவிட்டார். எஸ்பி முத்துராமன் இயக்கிய பாயும் புலி (1983), அடுத்த வாரிசு (1984), நான் மகான் அல்ல (1984), குருசிஷ்யன் (1988) போன்ற படங்கள் பல பானை சோற்றுக்கு பல சோறு. இதுதவிர, ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் மூன்று முகம் (1982) படத்தில் அப்பா அலெக்ஸ் பாண்டியனை கொன்றவர்களை மகன் ரஜினிகள் பழிவாங்குவர். நான் சிகப்பு மனிதன் படத்தில் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களை தேடித் தேடி கொன்றொழிப்பார்.
கமல் மலையாளத்தில் நடித்த சாணக்யன் (1989) படம் பழிவாங்குதலில் ஒரு டிரெண்ட் செட் படம் என்றே சொல்லலாம். காதலியைக் கொன்றவர்களை விதவிதமாக, சாட்சிகள் இன்றி கொலை செய்வார். பாரதிராஜாவின் கைதியின் டைரியில் (1985) தன் மனைவியைக் கற்பழித்து கொன்ற அரசியல்வாதியை கொன்று பழிதீர்ப்பார், கமல். எனக்குள் ஒருவன் (1984) படத்தில் மறுஜென்மம் எடுத்து பழிவாங்குவார்.
எண்பதுகளின் தொடக்கத்தில் ரிவைஞ்ச் ஸ்டோரியில் புரட்சி ஏற்பட்டது. ஆம், புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகம் ஆனார். பழிவாங்கும் படங்களை எடுத்தே பார்வையாளர்களை பழிவாங்கினார். அவரது அனைத்துப் படங்களும் பெரிய ஹிட்!! அவரது ஆரம்ப கால படங்களின் ஹீரோ பெரும்பாலும் விஜய்காந்த் (நீதி பிழைத்தது, சட்டம் ஒரு இருட்டறை).
எஸ்.ஏ.சி.யின் சட்டம் ஒரு இருட்டறை (1981). விஜயகாந்த், எஸ்.ஏ.சி.க்கு லைஃப் டைம் படம் இது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டது. பிறமொழிகளில் கமல், ரஜினி, சிரஞ்சீவி என முன்னணி நடிகர்கள் நடித்து பழிவாங்கிவிட்டுப் போனார்கள். அண்மையில் கூட (2013) இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ச்சினிமாவில் மனிதர்கள் மட்டுமல்ல.. ஆடு பாம்பு, யானைகள் கூட பழிவாங்கியுள்ளன. நீயா (1976) படத்தில் பாம்பு பழிவாங்கும். ஆட்டுக்கார அலமேலு (1977) படத்தில் பழிவாங்கிய ஆடு தமிழ்நாட்டின் ‘பட்டி’தொட்டி எல்லாம் பிரபலமானது. ராமநாராணன் இயக்கிய துர்கா படத்தில் தன் எஜமானியைக் கொலை செய்தவர்களை பாம்பு, குரங்கு, யானை ஒன்று சேர்ந்து கொலை செய்யும்.
எந்த காலகட்டமாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பழிவாங்குதல் என்பதற்கு பெரும் இடம் இருக்கிறது. குடும்பத்தை சீரழித்ததற்காகப் பழிவாங்கலாம்; அல்லது சமூகக் காரணங்களுக்காகப் பழிவாங்கலாம். இந்தியன், அந்நியன் ஆகிய படங்கள் சமூகக் காரணங்களுக்காக பழிவாங்கும் பட்டியலில் எளிதாகச் சேரும். நாட்டாமை படத்தில் அவரது தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் அவரது குடும்பத்தைப் பழிவாங்குவதுதான் முடிச்சு. ஆனால் நாட்டாமை நாயகன் என்பதால் அந்த பழிவாங்கும் முயற்சியை வெல்கிறார். இதே வரிசையில்தான் தேவர்மகனும். எதிர்கதாபாத்திரமான மாயனின் பழிவாங்கும் உணர்ச்சி கதையை நகர்த்திச் செல் கிறது. படையப்பா படத்தில் புகழ்பெற்ற நீலாம்பரி தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கும் படையப்பாவைப் பழிவாங்க காத்திருக்கிறார். ஆனால் ரஜினியை எல்லாம் பழிவாங்கமுடியுமா பாஸ்?
சமீபத்தில் வந்து ஹிட் ஆன விஜயின் போக்கிரி கூட பழிவாங்கும் படம்தான். தன் மகனை போலீஸ் அதிகாரியாக்கி அவனை யாரென்றே தெரியாமல் அடையாளத்தை மறைத்து எதிரிகளைப் பழிவாங்குகிறார் நாசர். அட... சூர்யாவின் கஜினிகூட காதலியைக் கொன்ற வில்லனைப் பழிவாங்கும் படம்தான். அய்யகோ.... தமிழ் சினிமாவின் பழிவாங்கும் படங்களுக்கு முடிவே இல்லையா என்று கேட்டால் இல்லை என்பதே பதில்!
ஏப்ரல், 2013.