சுந்தர் பிச்சையின் 7 சூத்திரங்கள்

சுந்தர் பிச்சையின் 7 சூத்திரங்கள்

மாதச்சம்பளம் வாங்குபவர்கள் கோடீஸ்வரர்களாக வேண்டுமா?
Published on

மாதச்சம்பளம் வாங்கி கோடீஸ்வரராக முடியுமென்கிற இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தின் சமீபகால நம்பிக்கையை வலுவூட்டும் புதிய மந்திரச்சொல், சுந்தர் பிச்சை. கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி.

சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் 315 கோடி ரூபாய். மாதச்சம்பளம் 25 கோடிக்கு சற்று மேல். இந்த சம்பளமும் பதவியும் இவருக்கு யாரும் தங்கத்தட்டில் வைத்து கொடுத்து  விடவில்லை.

ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் குறிக்கோளை நிறைவேற்ற தளபதிகளை, செயல்வீரர்களை தேடுகிறது.நிறுவனங்களின் நோக்கத்தோடும், கனவுகளோடும் வேலை பார்ப்பவரின் திறமைகள் பொருந்திப் போக வேண்டும். அந்தக் கனவுகளை  நிஜமாக்க கூடிய செயல்திட்டமுள்ளவருக்கு சிகரம் நிச்சயம்.

எந்த நிறுவனத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சுந்தர் பிச்சையின் வாழ்விலிருந்து ஏழு விஷயங்களை உருவி நாம் முயற்சித்துப் பார்க்கலாம்.

1. தலைவரின் வேலை:

“சுந்தர், நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை சரியாக சொல்கிறார்; சில சமயங்களில் என்னை விட சிறப்பாக.” என்றார் கூகுளின் நிறுவனர் லாரி பேஜ். தலைமையின் வேலையை இழுத்துப்போட்டு செய்வது அவர்களின் மனதை கவர்வதற்கான எளிதான வழி, ஆனால் கொஞ்சம் சிரமமானதும் கூட. தனக்கு மேலிருப்பவர்களின் வேலையை தொடர்ந்து செய்து சுந்தர் பிச்சை தன்னை அந்த நிலைக்கு தகுதியாக்கியுள்ளார். இப்படி செய்யும் பலர் நான் தான் அதை செய்தேன் என்று தம்பட்டமடித்து தனக்குத் தானே குழி தோண்டிக்கொள்வதும் உண்டு. சுந்தர் பிச்சையின் அமைதி அவரை உயர்த்தியுள்ளது.

2. தேவையான தகுதிகளை வளர்த்துக் கொள்ளுதல்:

சுந்தர் பிச்சையின் ஆரம்ப காலம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. 1993 ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த சுந்தர் பிச்சை பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு பிஹெச்டி படிப்பதற்காக சேர்ந்தவர் பாதியில்  விட்டுவிட்டு அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் என்ற நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராக  சேருகிறார். ஓரளவு அனுபவம் பெற்ற பின் முறையாக நிர்வாகம் கற்றுக்கொள்ள பிரசித்தி பெற்ற  வார்ட்டனில்(Wharton) எம்பிஏ படித்தார். பின் மெக்கன்ஸி (Mckinsey) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் சகல நுணுக்கங்களிலும் தேர்ச்சி பெறுகிறார். 2004ல் கூகுளில் சேரும் சுந்தர் பிச்சைக்கு ஆழமான பொறியியல் அறிவு, புதிய பொருட்களை உருவாக்கும் புராடக்ட் மேனேஜ்மெண்ட் திறன், நிர்வாக கலையின் சூட்சுமம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையாக திறமை இருந்தது தான் ஸ்பெஷாலிட்டி.

3. புதிய யோசனை மற்றும் திறனாய்வு சிந்தனை:

கூகுள் குரோம் என்கிற ப்ரௌசரை உருவாக்கி வெளியிட வேண்டுமென்கிற சுந்தர் பிச்சையின் ஆலோசனையை பலர் எள்ளி நகையாடினர். அவருக்கு உயர் அதிகாரியான ஆண்டி ரூபின்  மற்றும் அப்போதைய தலைமை செயல் அதிகாரியான(CEO) எரிக் ஸ்மித்திடமிருந்து  பலமான எதிர்ப்பு. நிறுவனர்களான  பேஜ் - பிரெய்னுக்கு சுந்தர் பிச்சையின் திட்டத்தை முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான குழுவை அமைத்து செயலாற்றிய சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் 45 சதவீத மார்க்கெட் ஷேரை பிடித்து வெற்றி பெறும் வரை  ஓயவில்லை. “சுந்தருக்கு தொலை நோக்குப் பார்வையும், அதை நோக்கி குழுவை நகர்த்தும் மிகப் பெரிய திறனும் இருக்கிறது” என்று லாரி பேஜ் அக்டோபர் 2014 ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

4. மௌனமாக காத்திருப்பது:

மேலதிகாரியுடன் ஏற்படும் மோதல்கள் நிகழாத நிறுவனங்களே இல்லை என்று சொல்லலாம்.  ஆமாம்சாமி என்று ஜால்ராவாக இருப்பவர்களுக்கு பிரச்னைகள் வருவதில்லை. ஆமாம் சாமிகள் உயர்வான எதையும் சாதிப்பதுமில்லை. கூகுளில் சுந்தர் பிச்சைக்கு பலமுறை மேலதிகாரிகளுடன் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரூபின், குரோம் ப்ரௌசரை எதிர்த்ததற்கு காரணம் அவர் தலைமையிலான குழு மற்றொரு ப்ரௌசரை  உருவாக்கி இருந்தது. ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங்       சிஸ்டத்தை உருவாக்கிய ரூபின்  நிறுவனத்தின் முக்கிய புள்ளி. சுந்தர் பிச்சையின் திட்டங்களை அங்கீகரிக்காத மற்றொரு நபர் எரிக். சக்தி வாய்ந்த மேலதிகாரிகளிடம் சிக்கல் வரும் போதெல்லாம் சண்டைக் கோழியாக மாறாமல் தனது கருத்துக்களை வெளியிட்டு விட்டு மௌனமாக கத்திருப்பது சுந்தர் பிச்சையின் பழக்கம். 2013 ல் ரூபின் நிறுவனத்தை விட்டு வெளியேற சுந்தர் பிச்சைக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. தனது சிக்கல்கள் பற்றி அடுத்தவரிடம் வார்த்தைகளாக வெளியிடாதது கூடுதல் சிறப்பு.

5.தெளிவான கருத்துப் பரிமாற்றம்:

2014 ல் ஒரு கூகுள் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளும் இயக்குநர்களும் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளையும், ரகசிய திட்டம் பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்தனர். கூச்சலும் குழப்பமும் நிலவிய அந்தக் கூட்டத்தில்  பேச ஆரம்பித்த நிறுவனரான லாரி பேஜ் புதுப்புது  கருத்துகளையும் ஐடியாக்களையும் பேசிவிட்டு வெளியேறிவிட்டார். அவரின்  பேச்சு பலருக்கு புரியவில்லை. அடுத்து பேச ஆரம்பித்த சுந்தர், பேஜ் சொன்னதை புரியும்படி சொல்லி முடித்தார். தலைமையின் மனதில் இருப்பதை தெளிவாக சொல்லுபவரை எந்தத் தலைமைக்குத்தான் பிடிக்காது?

6. ரிஸ்க் எடுப்பது:

 நமக்கு எதுக்குடா வம்பு என்று கொடுத்த வேலையை மட்டும் முடித்துக் கொடுத்து விட்டுச் செல்லும் யாரும் நிறுவனத்தின் உயர் நிலைக்கு செல்வதில்லை. எதிர்காலத்தில் எது எடுபடும், எது தேவை என்று ஆய்ந்து அதை நோக்கி தன் செயல்பாடுகளை மாற்றியமைப்பது ரிஸ்க்கான ஒன்று. அந்த  முயற்சி வெற்றியாக உருமாறும் போது கிடைக்கும் பலன் மிக உயர்வானதாக இருக்கும். சுந்தர்பிச்சையின் ரிஸ்க்கும்தான் அவரை உயர்த்தியது.

7. தீராத காதல்:

‘பர்சனல் கம்ப்யூட்டிங், குரோம் ஓஎஸ், கூகுள் பேமிலி, ப்ரெண்ட்ஸ் - லைப் ‘ இப்படித்தான் சுந்தர் பிச்சை தன்னைப்பற்றி தனது டிவிட்டரில் குறிப்பிடுகிறார். அவரது வாழ்வும் இந்த வரிசையில் தான் நிகழ்ந்திருக்கிறது. சுந்தர் பிச்சையைப் போல் தான் செய்யும் வேலையில் தீராக் காதலுடன் செயல்படும் யாரும் வெற்றிபெற்றே தீருவார்கள்.

வெற்றி பெற்ற மனிதர்களெல்லாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளை நம் பார்வைக்கு வைக்கிறார்கள். நமக்கு தேவையானதை எடுத்துக் கொள்வதும் விட்டு விடுவதும் நம் இஷ்டம்.  நம் வாழ்வு நம் கையில்...

அமெரிக்காவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இந்தியர்கள்

(வருட சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளது)

சத்ய நாடெல்லா - 531 கோடி

            ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி.

2.         சுந்தர் பிச்சை - 315 கோடி

            கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி.

3.         இந்திரா நூயி - 120 கோடி

            பெப்சி அண்ட் கோ வின் முதன்மைச் செயல் அதிகாரியான இவர் சென்னைக்காரர். அமெரிக்காவில் அதிகமாக சம்பளம் வாங்கும் பெண் அதிகாரிகளில் மூன்றாமிடத்தில் உள்ளார்.

4.         சாந்தனு நாராயண் - 112 கோடி

            அடோப் சிஸ்டம்சின் சிஇஓ வான இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

5.         சூர்யா மொஹபத்ரா - 79 கோடி

            உடல் நலம் சார்ந்த துறையில் அனுபவம் பெற்ற இவர் தற்போது ஆஸ்பர்ன் குரூப் கம்பெனியின் சி.இ.ஓ.

6.         அஜய் பங்கா - 78 கோடி

            இந்த வருடம் அமெரிக்க அதிபரின் ஆலோசனைக் குழு உறுப்பினராக அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட பங்கா, இதற்கு முன்னர் சிட்டி குரூப், நெஸ்ட்லே மற்றும் பெப்சி கம்பெனிகளில் பணியாற்றியவர்.

7.         பிரான்சிஸ்கோ டிசோசா - 71 கோடி

            கோவாவை சேர்ந்தவரான இவர் காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி.

8.         சஞ்செய் மெகரோத்ரா - 67 கோடி

            சான் டிஸ்க் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான சஞ்செய் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ வாகவும் செயல்பட்டு வருகிறார்.

9.         தினேஷ் பலிவால் - 66.8 கோடி

            ஹமாம் நிறுவனத்தின் சி.இ.ஓ,வான இவர் ஹமாமை பன்னாட்டு நிறுவனமாகவும், நுகர்வோருக்கு இலகுவான நிறுவனமாகவும் மாற்றியவர்.

10.       சஞ்செய் ஜா - 53 கோடி

            மோட்டோரலா நிறுவனத்தின் துணை செயல் அதிகாரியாக செயல் பட்டு வந்தவர் தற்போது சிப்மேக்கர் நிறுவனத்தின் சி.இ.ஓ.

செப்டெம்பர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com