சீரியல்கள் அழிவதில்லை!

சீரியல்கள் அழிவதில்லை!

Published on

அறிவு ஜீவியாக உங்களை நீங்கள் காட்டிக் கொள்ள வேண்டுமென்றால் ஓர் எளிதான வழி இருக்கிறது. டிவி சீரியல்களைத் திட்டி ஒரு பதிவுவோ கட்டுரையோ எழுதினால் உடனடி பலனாக உங்கள் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் வளர்வதை உணரலாம்.

நம்மூருக்கு டிவி வந்த போது சினிமாக்காரர்கள் இடியட் பாக்ஸ் என்று திட்டினார்கள். ஓடிடி தளம் வந்தபோது தியேட்டர் ஓனர்கள் குதித்தார்கள். விஸ்வரூபத்தை தடுத்தார்கள். சூரரை போற்றுவை தூற்றிக் கொண்டே வழிவிட்டார்கள். இப்போது ஜகமே தந்திரமும் சார்பாட்டா பரம்பரையும் சத்தமே இல்லாமல் ஓடிடியில் ஓடிக் கொண்டிருக்கிறது. நம் படைப்பாளிகளும் கலைஞர்களும் தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்துவிட்டார்களா? அல்லது அப்படியொன்று அவர்களுக்கு இல்லவே இல்லையா?

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் ட்ணிணஞுதூ டஞுடிண்t வெப்சீரிஸை மொபைலில் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞனின் வீட்டில் அவன் தாயும் சகோதரியும் டிவியில் சீரியலைப் பார்த்து அதில் வரும் வில்லியை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலத்திற்கு ஏற்ப கலையும் ஊடகமும் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டேதானிருக்கும். இதை யாரும் தடுக்கவோ தள்ளி வைக்கவோ முடியாது. இது காலத்தின் கட்டாயம். சினிமாக்காரர்கள் கையில் மொபைல் இருக்கலாம் ஆனால் அந்த மொபைலில் யாரும் சினிமா மட்டும் பார்க்கக் கூடாது என்றால் எப்படி? தியேட்டருக்குப் போய் பார்க்கிங் கட்டணத்துக்கும் கேன்டீன் செலவுக்கும் அழுது கொண்டே படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?

கலை பல வடிவங்களில் இங்கே நீடித்துக் கொண்டேதானிருக்கும் இன்னும் நாரத கானா சபையில் எஸ்வி சேகரின் ஆயிரம் தலைவாங்கிய ஆபூர்வ சிகாமணி (நகைச்சுவை!!) நாடகத்தைப் பார்க்க ஒரு கூட்டம் இருப்பது தெரியுமா உங்களுக்கு?

வீட்டில் இருக்கும் பெண்கள் (ஏன் வேலைக்குப் போகும் பெண்களும், ஆண்களுக்கும் கூடத்தான்) டிவி சீரியல்களின் பார்வையாளர்கள். டிவி சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பச் சூழலை பாதிக்கிறது என்கிறார்கள்.  தீப்பிடிக்க தீப்பிடிக்க என்று தன் அந்தரங்கப் பகுதியில் கை வைத்தபடி நாயகன் ஆடுவதை குடும்பத்துடன் பார்ப்பதால் கெட்டுப் போகாத குடும்ப சூழல், கீச்சுக்குரலில் கத்திக் கொண்டே ரத்தம் தெறிக்கத் தெறிக்க எதிரிகளை நாயகன் வெட்டி வீழ்த்துவதை குழந்தைகளை பார்க்க அனுமதிப்பதால் கெட்டுப்போகாத மனங்கள் சீரியல்களால் கெட்டுப் போகிறது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

கடந்த சில ஆண்டுகளாக சீரியல்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் சீரியல்கள் கடந்து வந்த பாதையை உற்று நோக்கினால் எனக்கொன்று புரிகிறது.

ஆரம்பத்தில் சீரியல்களுக்கு எழுத வந்தவர்கள் வகுத்த பாதை சற்று மோசமானதுதான்.

மருமகள் வைத்துவிட்டுப் போன சாம்பாரில் உப்பு மிளகாப் பொடியையும் அள்ளிப் போடும் மாமியார்கள், படுக்கை அறைக்குள் விடப்படும் விஷப் பாம்புகள், கணவனின் நோய் குணமாக தீமிதிக்கும் மனைவிகள், அங்கபிரதட்சணம் செய்யும் பெண்கள், திருமணத்தை நிறுத்த மணமகளை கடத்தும் வில்லிகள், புடவை கட்டினால் ஹீரோயின், மாடர்ன் டிரஸ் போட்டால் வில்லி, தெய்வ வாக்கு, தெய்வக் குத்தம் செய்வினை, மந்திரவாதிகள், ஜோசியரின் பரிகாரங்கள், கெட்ட சக்தியை விரட்டும் தாயத்துகள் என்பதெல்லாம் இவர்கள் வகுத்த பாதைகளே.

சில ஆண்டுகளுக்கு முன், விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் சீரியல்களுக்குள் காலடி வைக்கத் தொடங்கியதும் புது எழுத்தாளர்கள் உள்ளே வரத் தொடங்கினர். வில்லிகள், பரிகார பூஜைகள், நேர்த்திக்கடன்கள் இல்லாத, கருப்பு நிற நாயகிகள் வலம் வரும் சீரியல்கள் இங்கேதான் உருவாகத் தொடங்கி விட்டன.

இது, ஓடிடி காலம், யார் சீரியல்கள் பார்க்கப் போகிறார்கள் என்கிறீர்களா?

இந்தக் கட்டுரையை வாசிப்பதை நிறுத்திவிட்டு உங்கள் கைபேசியை எடுத்து இன்றைய நாளில் யூடியூப்பில் டிரெண்டிங்கில் உள்ள வீடியோக்களை பாருங்கள். முதல் 50 இடங்களில் இருபது இடங்களை டிவி சீரியல்களே ஆக்கிரமித்து இருக்கும். அதிலும் சீரியல்களின் 30 வினாடி வீடியோக்கள் டிரெண்டிங்கில் முதல் பத்து இடங்களுக்குள் நிச்சயம் இருக்கும். யூடியூப்பில் மட்டுமல்ல ஹாட் ஸ்டாரிலும், சன் நெக்ஸ்டிலும் சீரியல்களை சுடச்சுடப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

ஆம், நவீன ஊடகமான ஓடிடி தளங்களிலும் சீரியல்கள் கோலோச்சத் தொடங்கி விட்டன. லட்சங்களில் புழங்கிய சீரியல்களில் இப்போது கோடிகள் புரள்கின்றன. வெறும் சினிமாத் துறையால் மட்டுமே இங்குள்ள தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வேலை கொடுத்து விட முடியுமா? சென்னையில் மட்டும் ஒரு நாளில் கிட்டத்தட்ட நூறு சீரியல்களின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் சீரியல்களால் பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவை நம்பி வந்தவர்களில் எத்தனை பேர் கோடம்பாக்கத் தெருக்களில் பசியோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை நான் சொல்ல வேண்டியதில்லை. சினிமாவால் கைவிடப்பட்டவர்களுக்கு சீரியல்களே ஆபத்பாந்தவன். சினிமாவில் ஜெயித்தால் புகழ் கிடைக்கலாம். சீரியல்களை நம்பி வந்தால் பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். வெறும் புகழால் கிடைத்து விடாத புகலிடம் சீரியல்களால் கிடைக்கும்.

ஏதோ சத்தம் கேட்கிறது, யாரோ சில அறிவு ஜீவிகள் கிளப் ஹவுசில் சீரியல்களைத் திட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. அது வெறும் வெற்றுக் கூச்சல்!!

(வெற்றி, ராஜாராணி, தேன்மொழி பி.ஏ., ஆகிய நெடுந்தொடர்களின் எழுத்தாளர்)

ஆகஸ்ட், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com