அன்று வெள்ளிக்கிழமை. அந்த அம்மன் சாமிக்கு தீபாராதனை நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளுக்கு 29 அல்லது முப்பது வயதிருக்கும். அவள் உடம்பை உரசியவாறு நின்று கொண்டிருந்த அவனுக்கு வயது ஆறு. தீபாராதனை தட்டுடன் குருக்கள் வந்தார்.பயபக்தியுடன் அவள் தீபத்தை கும்பிட்டாள். அவனைத் தூக்கி காட்ட அவன் தீபத்தைக் கும்பிட்டான்.
தீபத் தட்டை வைத்துவிட்டு தீர்த்த கமண்டலத்துடன் வந்த குருக்கள் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்தார். அநேகர் தீர்த்தத்தை குடித்துவிட்டு தலையில் கையை தடவிக் கொண்டனர். அவள் தீர்த்தத்தை கையில் வாங்கி வாயருகில் கொண்டு போய் குடிப்பது போல் பாவனை காட்டிவிட்டு கையை இடுப்பருகில் கொண்டு வந்தாள். தீர்த்தத்தை வயிற்றில் தடவி கொண்டாள்.
அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும். தலையைத் தூக்கி அவள் முகத்தை பார்த்தான். அவள் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. வாய் யாருக்கும் கேட்காத குரலில் எதையோ பிராத்தனை செய்து கொண்டிருந்தது.
இதே காட்சி பலமுறை பல தேவி சந்நிதானங்களில் நிகழ்ந்துள்ளது. முப்பந்தலில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில், மண்டைக்காடு கோவிலில், திருவனந்தபுரம் ஆற்றுங்கால் பகவதி அம்மனின் முன்பு, கன்யாகுமாரி தேவி கோவிலில் இன்னும் எத்தனையோ சிறு குறு அம்மன்களின் முன்பு திரும்ப திரும்ப நிகழ்ந்துள்ளது. வீட்டின் பூசையறையில் உள்ள கோட்டாணிக்கரை பகவதி அம்மன் முன்னும் அவள் தீவிர பிராத்தனை செய்ததையும் அவன் பார்த்திருக்கிறான் பலமுறை.
ஒவ்வொரு சந்நிதானத்திலும் இது நிகழ்ந்த பின் அவன் அவள் காலைக் கட்டிக் கொள்வான் இறுக்கமாக. ஏதென்று தெரியாத பிராயத்தில் அவனுக்கு பயமாக இருக்கும் லேசாக உடல் நடுங்கும். பின் அவள் மெல்ல மண்டியிட்டு அவன் உயரத்திற்கு வந்து அவனை அணைத்துக் கொள்வாள். அப்போது இருவர் கண்ணிலும் நீர் வழியும். பின் அந்த இடத்திலே அவள் அமர, மடியில் அவன் படுத்துக் கொள்வான்.
இந்த நிகழ்வு நடக்கும் போது சன்னக்குரலில் அவன் அம்மா அம்மா என்று திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டு இருப்பான். ஒரு ஆழமான சோகம் அவள் முகத்தில் படர்ந்திருக்க அவனது தலையையோ முதுகையையோ நீவிக் கொண்டிருப்பாள். அவளது விரல்களின் தொடுகை அவனை பாதுகாப்பது போல் தோன்றும்.
பல ஆயிரம் தடவைகள் அவளை அம்மா, அம்மா என்று அழைத்த அவனுக்கு பிரிதொரு நாள் அவள் தன்னை பெற்றெடுக்கவில்லை என்ற விஷயம் தெரியவந்தது. அன்றைக்கு ஏற்பட்ட குழப்பம் அவன் மனதில் தீரவே இல்லை.
சிறு வயதில் தாயை இழந்த அவளுக்கு பதினேழு வயதில் திருமணம். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பிள்ளைப்பேறு மட்டும் தள்ளிக்கொண்டே போனது. குசும்பாய், பரிதாபமாக, போலியாய், நக்கலாய், அனுசரணையுடன் என்று விதவிதமான கேள்விகளும் ஆலோசனைகளும் அவளை எல்லா திசைகளிலிருந்தும் துரத்தின.
அவளது வீட்டிற்கு அருகில் குடியிருந்தவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அந்த அம்மா ஒருநாள் அவளிடம் தனியாக,‘நானும் கல்யாணமாகி முதல் ஆறு வருஷம் குழந்தை இல்லாமல் இருந்தேன், பின் அவரது குடும்பத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தேன். அவ வந்த ராசில அஞ்சு குழந்தைகள் பெற்றெடுத்தேன்,' நம்பிக்கையளிக்கும் விதமாக தன் கதையைச் சொன்னார்.
அவளுக்கு பின் கல்யாணமான அவளது தங்கைக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து ஒன்றரை வருடம் கழித்து இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. தனியாக சிரமப்படும் தங்கைக்கு உதவியாக சென்றவள், இரண்டு குழந்தைகளையும் கவனித்து கொள்ள அவள் படும் சிரமத்தை உணர்ந்தாள். மூத்தவனை நான் வளர்க்கிறேனே என்று எடுத்து வந்தாள்.
இப்போது வேறு விதமான கேள்விகள். உனக்குப் பிள்ளை பிறந்தால் இவனை என்ன செய்வாய்? உசிரைக்கொடுத்து வளர்க்கிறாயே... வளர்ந்த பின் உன்னை பார்ப்பானா? என்னதான் இருந்தாலும் சொந்தப் பிள்ளை சொந்தப் பிள்ளை தான் என்று புதிய கேள்விகள் தினுசுதினுசாக தோன்றிக் கொண்டிருந்தன.
தன் வயிற்றில் குழந்தை ஜெனிக்க வேண்டும் என்ற ஆசை தொடர்ந்து கொண்டிருந்தாலும் அந்த ஆசை அவன் மீதான அன்பை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. அவளது கணவன் செய்யும் தொழிலில் எப்போதும் பிஸியாக இருப்பதால் எங்கே சென்றாலும் அவனைத்தான் அழைத்துச் செல்வாள். ‘என்னம்மா தனியாவா வந்தே?' என்று யாராவது கேட்டால் ஆம்பள துணையோடு தானே வந்திருக்கேன் என்பாள், அவனைச் சுட்டிக்காட்டி.
தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை மற்றவர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டது. அவர்களிடம் எண்ணற்ற ‘ஏன்'கள் இருக்கும். அந்த கேள்விகளை முன் வைப்பதும் கடினம். அதற்கான பதிலை தேடிப் பெறுவது கடினம்.
ஒரு முறை ராஜேஷ் தியேட்டரில் ‘கௌரவம்' படம் பார்க்க அவள் அவனை அழைத்து சென்றிருந்தாள். குழந்தையில்லாத வக்கீல் சிவாஜி (சினிமாவில் பெயர் ரஜினிகாந்த்) மற்றொரு சிவாஜியை (பெயர் கண்ணன்) தத்தெடுத்து வளர்ப்பார்கள். பின் கொள்கைப் போராட்டத்தில் சின்ன சிவாஜி வீட்டை விட்டு வெளியேறுவார். அந்த காட்சியில் அவள் விசும்பி விசும்பி அழுவாள். கூடவே அவனும்.
படிக்காத மேதை, எஜமான், கன்னத்தில் முத்தமிட்டால் என்று சில படங்கள் பார்க்கும் போது இருவரும் அழுவார்கள். அவனை மிகவும் பாதித்த படம் ‘Lion' என்ற ஆங்கிலப்படம்.
இந்தியாவில் வணிகம் செய்யும் சில சமூகங்களில் தத்தெடுப்பது ஒரு திட்டத்துடன் செய்யப்படுகிறது. மார்வாடி குடும்பங்களில் குழந்தைகளை அதிகம் பாதிக்காமல் தத்தெடுக்கப்படுகிறது. அம்புஜா சிமெண்டின் நிறுவனர் நரோத்தம் சேக்ஸாரியா, தன்னை தத்தெடுத்த விதத்தையும் தொடர் நிகழ்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளார்.
பிர்லா நிறுவனத்தின் நிறுவனரான பல்தியோ தாஸ் பிர்லா, ஜமன்லால் பஜாஜ், லட்சுமி நாராயண் பிர்லா என்று பலர் தத்துப்பிள்ளைகள் தான்.
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் தாத்தாவின் பெயரும் ரத்தன்ஜி டாடா தான். அவருக்கு குழந்தை இல்லாததால் நவல் டாடாவை தத்தெடுத்தார்.
வறுமையில் உழன்று கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்த நவல், குடும்பத்தினரால் ஒரு பார்ஸி அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய 13 வது வயதில் ரத்தன்ஜி டாடாவின் மனைவி தத்தெடுத்துக் கொண்டார்(1917). இந்த நவல் டாடாவின் முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் ரத்தன் டாடா.
தத்துப்பிள்ளையால் தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி அடைந்த மனவருத்தங்கள் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் தான் தத்துக் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் தன் வாழ்வு வேறு ஒழுங்கில் இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அவனுக்கு திருமணமானபோது அவள் ஒரே ஒரு அறிவுரைதான் சொன்னாள், ‘தள்ளிப் போடாமல் சீக்கிரமாக பிள்ளையை பெற்றுக்கோங்க' என்பது தான். இந்த சிந்தனைகள் அந்த மருத்துவ மனையின் மூன்றாவது மாடியிலிருந்த ஐசியுவில் அவள் கை பற்றியவாறு அவன் நின்று கொண்டிருந்தபோது மனதில் ஓடியது.
‘இன்னும் செய்வதற்கொன்றுமில்லை, வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்' என்று மருத்துவர்கள் வற்புறுத்தியும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் முடிந்தவரை முயற்சிப்போம் என்றான். அவளது மூச்சு நின்றது.
நீர் மாலைக்கு போகும் போதும், சில சம்பிரதாயங்கள் சொல்லும் போதும், முணுமுணுப்புடன் மறுதலிக்கலாமா என்ற யோசனை வந்தது. ஒன்றும் சொல்லப்படாது, சடங்குகள் படி சொன்னதைச் செய்ய வேண்டுமென்றனர்.
மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக சொன்ன போதும், ஆம்புலன்சில் வீட்டிற்கு வந்த போதும், வீட்டில் கிடத்தியிருந்த போதும், இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற போதும், இடுகாட்டில் படுக்க வைக்கப்பட்ட போதும் அவனைப் பார்த்து அவள் புன்னகைத்ததாகவே தோன்றியது.
ஒழுகினசேரியில் பாலத்தை ஒட்டி பழையாறு நதியின் கரையில் அமைந்த இடத்தில் மற்றவர்கள் சொல்லச் சொல்ல அவன் சடங்குகளைச் செய்தான். நீர்க்குடம் தூக்கும் முன் அவள் கழுத்தில் இருந்த தாலியை அறுக்கவா? கழற்றவா? என்று திரும்பத் திரும்ப கேட்கப்பட்டது.
யாரும் பதில் சொல்லாத நிலையில் அவன் சொன்னான்,‘அறுக்க வேண்டாம், கழட்டி விடுங்கள்' என்று.
கொள்ளி வைத்த பின்னும் அவள் புன்னகை கண்ணுக்குள்ளே நின்றது.
பின் ஒரு திண்டில் அமர வைக்கப்பட்ட அவனிடம், ‘மீசையை மட்டுமா? மொட்டை மட்டுமா? இல்ல ரெண்டுமா?' என்று கேட்கப்பட்டது.
வந்தவர்களிடம் ஒரு விவாதம் கிளம்பியது பெற்றவர்கள் இருக்கும்போது இந்த சடங்கு செய்யலாமா? கூடாதென்று.
யாரோ எதையோ சொல்ல, மொட்டை அடித்து மீசை மழிக்கப்பட்டது. பழையாற்றில் குளித்துவிட்டு அவன் திரும்பினான் வெறுமையோடு.
மறுநாள் காலை அதே இடத்திற்கு மீண்டும்.
எரிந்துபோன எலும்புகள் எடுத்து வைக்கப்பட்டிருந்தன. எரி மேட்டிற்கு அருகில் அவன் அமர வைக்கப்பட்டான். முன்னால் ஒரு இலை, அதில் ஒரு பகுதி எரிகுழியின் உள்ளே நீட்டப்பட்டிருந்தது. அவளது எலும்புகள் தண்ணீர், பின் தயிரில் கழுவப்பட்டன. எலும்புகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கப்பட்டது. பன்னீரில் கழுவப்பட்டது. இறுதியாக பாலில் கழுவப்பட்டு இரண்டு பாத்திரங்களில் பிரிக்கப்பட்டது.
சடங்குகள் முடிந்தபின் ஆற்றின் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தலைக்குப் பின்னால் எலும்புகளை ஆற்றில் வீசிவிட்டு படித்துறை போய் குளித்தான்.
மற்றொரு பாதி எலும்புகளுடன் கன்னியாகுமரி பயணமாகி அதை கடலில் கரைத்தான்.
கோவிலுக்கு பின்புறம் உள்ள மண்டபத்தில் வைத்து சடங்குகள். சடங்கு செய்தவர் கொடுத்த பொருட்களை கொண்டு போய் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணியில் கரைத்துவிட்டு, குளித்தான்.
எத்தனையோ முறை இந்த சடங்குகளை பார்த்திருந்தாலும், தான் செய்யும்போது அவன் மனதிற்குள் என்னென்னவோ தோன்றியது. இந்த சடங்குகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால்தான் பிள்ளைப்பேறு முக்கியமாக கருதப்படுகிறதோ என்றும் அவனுக்கு தோன்றியது. பேசாமல் மருத்துவமனைக்கு உடலைத் தானமாக எழுதி வைத்துவிட்டால் சடங்குகளும் இல்லை பிள்ளைகளும் தேவையில்லை என்று கூட எண்ணினான்.
கருத்தரித்து பிள்ளை பெறாவிட்டால் என்ன கெட்டுப் போயிற்று? சிறுவயதில் தாயை இழந்தாலும் தன் தந்தை, தங்கை, தம்பி மற்றும் அவனுக்கு மட்டுமல்ல எத்தனையோ பேருக்கு தாயாக அவள் இருந்திருக்கிறாள்.
பிள்ளை பெறுவது அவரவர் தேர்வு. ஆனால் அநேக பெண்கள் பெற்றாலும் பெறாவிட்டாலும் தாய்மை உணர்வுடனே இருக்கிறார்கள் என்பது அவன் எண்ணம்.
மார்ச், 2022