சிரிப்பு சண்டைக் காட்சிகள்

சிரிப்பு சண்டைக் காட்சிகள்
Published on

சை க்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான் பொடியன். அவனுக்கு ஐந்து வயதிருக்கலாம். ''கீழே விழுந்துடாதே.. கை கால் ஒடைஞ்சிடப்போவுது'' என்றிருக்கிறான் அவன் அப்பனான நண்பன். பொடியன், ''போங்கப்பா... கால் ஒடஞ்சா துப்பாக்கில விஜய் காலை சுத்தறமாதிரி சுத்துனா சரியாயிடும்... கை ஒடஞ்சா கில்லில அவர் கையை சுத்தறமாதிரி சுத்துனா சரியாப் போய்டும்... கவலைப்படாதீங்கப்பா'' என்று படுசீரியசாகச் சொல்ல, நண்பன் பேய் முழி முழித்து, அவனுக்கு உண்மையை விளக்குவதற்குள் படாதபாடுபட்டிருக்கிறான்.

தமிழ் சினிமாவின் சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அபத்தக் காமடிகள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை! பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் மற்றும் சீனப் படங்களில் இருந்து உருவிய சண்டைக்காட்சிகளை தொண்ணூறுகளில் வந்த படங்களில் பார்க்கலாம். இன்றுவரைக்கும் அர்னால்ட் நடித்த கமாண்டோ படத்தை சீன் பை சீன் உருவிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழில் அதிகமாக உருவப்பட்ட படங்களில் தலையாயது எது என்று கேட்டால் கமாண்டோவைத்தான் சொல்லவேண்டும்! அதில் மிக புகழ்பெற்ற சீன், கடைசி சண்டைக்கு முன்பாக கவச உடைகள், ஆயுதங்களை அர்னால்டு அணிவது. தமிழில் அர்ஜூன் முதல் ரஜினி வரை எல்லோரும் விதம் விதமாக அக்காட்சியில் நடித்திருக்கிறார்கள். மனிதன் படத்தில் ரஜினி இப்படி  எறிகுண்டுகளை அணிந்துகொண்டு, குண்டுகளைப் பிய்த்து எறிவதைப் பார்த்தால் இப்போது புன்னகைதான் வருகிறது!

ப்ரூஸ் லீ, ஜாக்கிசான்களின் வடிவமாக கிட்டத்தட்ட எல்லா நாயகர்களும் சண்டைபோட்டுப்பார்த்து ஓய்ந்துவிட்டார்கள். இருப்பினும் நுன்சக் சுற்றுவதில் ஒரு பிரேமை எல்லா நடிகர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது! பேட்ட ரஜினிக்குக் கூட. சமீபகாலமாக எல்லோரும் ரசித்துப் பார்த்த சீனப் படங்களில் இருந்து உருவுவதில் சுந்தர் சி முதலிடத்தில் வருகிறார்!

பொதுவாக முன்பெல்லாம் கதாநாயகன் கிராமத்தானாக இருப்பான். இல்லை அனாதையாக படிக்காதவனாக இருப்பான். ஆனால் இந்திய ராணுவத்தில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் குறிதவறாது பிரயோகிக்கும் அபூர்வ திறன் அவனுக்கு எப்படித்தான் வருமோ தெரியாது! தமிழ் சண்டைக் காட்சிகளில் இப்படிப் பார்த்து சலித்துவிட்டதால் இப்போது திருந்திவிட்டார்கள். நாயகனாக ராணுவத்திலும் போலீஸிலும் பயிற்சி பெற்றவர்களை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் இன்னொரு புறம் இவர்களுக்கு துப்பாக்கியால்
சுடுவது, கத்தியால் குத்துவது போன்றவற்றில் திடீரென நம்பிக்கை இல்லாமல் போய்விடும். ஆயிரம் அடியாட்கள் மெஷின் கன் சகிதம் நின்றாலும் வெறுங்கையுடன் நின்று
சண்டைபோட்டு வெண் திரையை 'வௌங்க வைத்து' வெறுப்பேற்றுவார்கள்!

'மக்கள் என் பக்கத்தில்' சத்யராஜ் அம்பிகாவின் குழந்தையை மீட்டுவரும் காட்சியில்  பின் வரும் காட்சியை வைத்திருப்பார்கள். அவர் அடியாட்கள் அத்தனைபேரையும் அடி அடியென அரைமணி நேரம் அடித்து துவைத்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு கிளம்புவார். ஆனாலும் அடிவாங்கிய அத்தனைபேரும் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறிக்க, சத்யராஜ், 'இருங்க பேண்ட் பாக்கெட்டில் ஏதோ உருத்துது' என்று துப்பாக்கியை எடுத்து எல்லோரையும்
சுட்டுப்போடுவார்! ஏன் இயக்குநரே.. இதை முன்னகூட்டியே செஞ்சிருக்கப்படாதா என்று கேட்க வைத்த காட்சி அது!

காட்டுபங்களா, இடுப்புக்குக் கீழ் பாவாடை கட்டிய பெண்ணின் ஆட்டம், அடியாட்கள்... இந்த சூழலில் ஒளிந்து மறைந்து நாயகன் உள்ளே போய் துளிக் கீறல் கூட விழாமல் அடி அடியென அடிப்பது.. அல்லது எவனாவது ஒரு மாமிச மலையிடம் எவ்வளவு மிதி வாங்கினாலும் பிறகு எதிர்த்து அடித்துவிடுவது என்று போகிற சண்டைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

மிகச்சரியாக பழைய படங்களாக இருந்தால்
பி எஸ் வீரப்பாவோ, இடைக்கால படங்களாக இருந்தால் ராதாரவியோ ஆனந்தராஜோ நாயகியைக் கற்பழிக்க முயற்சி செய்யும் சரியான நேரத்தில் கதவு, ஜன்னல், கூரை ஆகியவற்றில் எதையாவது உடைத்துக்கொண்டு உள்ளே வந்து நாயகன் விழுவது ஒரு பரபரப்பான சண்டைக்காட்சிக்கு அற்புதமான முன்னொட்டாக அமைவது தமிழ்ப்பட பார்முலா.

எம்ஜிஆரும் நம்பியாரும் இன்னபிற வில்லன்களும் போடும் கத்திச்சண்டைகள் எல்லாம் ஒரே பார்முலாக்கள் ஒரே மாதிரி கிளாங் கிளாங் என ஒலிகள் எழ, தேர்ந்த நடன அசைவுகள், மாடிப்படிகளில், அரண்மனை மாடிகளில், திடீரென மலை உச்சிகளில், சரிவுகளில் எல்லா இடங்களிலும் சண்டைபோடுவார்கள். வில்லனின் வாள் உடைந்தால், இன்னொரு வாளைத் தூக்கிப் போடுவது, தன்னுடையை வாள் உடைந்தால் உடைந்த வாளுடனே சண்டையிடுவது, கண்ணைக் கட்டிக்கொண்டு மோதுதல், கால் ஊனமாக இருந்தால் ஹீரோ தன் காலையும் கட்டிக்கொள்ளுதல்.. என சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட சாகசவீரர்களின் சண்டைக்காட்சிகள் அவை! இவற்றில் எந்த மாறுதல்களும் இல்லாவிட்டாலும் அன்றைய நிலையில் அவை ரசிக்கப்பட்டன. ஆனால் இவையே திரும்பத்திரும்ப பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படும்போது அலுப்புத்தட்டுகிறது.

பழைய சண்டைக்காட்சிகளில் அடிக்கும்போது 'அபுஹை' என்ற சத்தம் வரும். பிறகு அது மெதுவாக டிஷ்யூம் என மாறி இப்போது 'குபுக்' என்று மாறி இருப்பதுதான் கவனிக்கத்தகுந்த வளர்ச்சி.

ஆயிரம் குண்டுகளால் துளைத்தாலும் ஒன்றுகூட மேலே படாது. உயரத்தில் இருந்து குதித்தாலும் கால் உடையாது. கார்கள் மோதினாலும் எதுவும் ஆகாது. கத்தியால் குத்தினாலும் ரத்தம் வராது. தண்ணீரில் மூழ்கி ஒரு மணி நேரம் இருந்தாலும் மூச்சுத் திணறாது. எல்லா தமிழ் ஹீரோக்களும் சண்டைக் காட்சிகளில் அதிமனிதர்களாக வலம் வருகிறார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சி என்றால் சாலையில் ஓரமாக பானைகளை, பிளாஸ்டிக் குடங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அதில் போய் எப்போது அடியாள் விழுவார் என்று காத்திருப்போம். பின்னர் கண்ணாடி களை உடைத்துக்கொண்டு விழுந்துகொண்டிருந்தார்கள்.

இப்போது ஒரே அடியில் நூறு அடிதூரம் பறந்துபோய் விழவேண்டும். சரியாக விழும் இடத்தில் ஒரு ட்யூப் லைட் உடைந்து சிதறவேண்டும்.  இந்த இடத்தில் சண்டைக்காட்சி நிலைபெற்றிருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாளில் பூமியில் இருந்து குத்தினால் சந்திராயன் இல்லாமலேயே விக்ரம் லேண்டர் பக்கத்தில் போய் விழக்கூடிய காட்சிகளுக்காக காத்திருக்கிறோம்.

பாட்ஷாவில் மாணிக்கம் தண்ணீர் பம்பைப் பிடுங்கி அடித்த அடி, தூளில் விக்ரம் வாக்குச் சாவடியில் அடிக்கும் அடியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. இந்த சண்டைக்காட்சிகளிலாவது ஒரு அதிமனித
சாகசத்துக்கான காட்சித் தேவை இருந்தது. ஆனால் அதன் பின்னர் தீக்குச்சி மாதிரி தனுஷ் வந்து சுள்ளானில் ஆரம்பித்து மாரி பாகம் இரண்டு வரைக்கும் செமை அடி அடிப்பதைத்தான் தாங்க முடியவில்லை!

சமீபகாலமாக 1970 -ல் வெளியான படத்தில் இருந்து ஒரு சண்டைக்காட்சி வீடியோ எல்லோர் மொபைலிலும் சுற்றிக்கொண்டிருக்கிறது! தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கரும் தாரா
சிங்கும் 'அதி நவீன' தற்காப்புக்கலை கொண்டு மோதும் சண்டைக்காட்சி அது. இயக்குநர் கர்ணனின் காலம் வெல்லும் என்ற படம் அது! கையை மடக்கி ஒருவர் மீது ஒருவர் அடிக்க வருவதுபோல் வந்து அப்படியே ப்ரீஸாகி நின்று, பிறகு மீண்டும் பின்னடி எடுத்து வைத்து, மிகத்தேர்ந்த நடனக்காட்சி போன்ற அதைப் பார்த்திருந்தால் ப்ரூஸ்லீ எனக்கு சினிமாவே வேண்டாம் என்று போயிருப்பார்!

கிட்டத்தட்ட இந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாதது நரசிம்மா படத்தில் விஜயகாந்த் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. கேப்டனை சிறைக்குள் அடைத்து அவரது நகத்தைப் பிடுங்க வரும்போது, நகம்தானே வேண்டும் இந்தா பிடி என்று அவரே கடித்து உமிழ்வார்; பனிக்கட்டியில் படுக்கச்சொல்லும் முன்பே அவரே சட்டையைக் கழற்றிவிட்டு படுப்பார்; மின்சார அதிர்ச்சி கொடுக்கும்போது அந்த மின்சாரத்துக்கே ஷாக் கொடுப்பார்! ஏற்கெனவே அவர் சுவர்களில் குதித்து ஏறி உதைப்பதற்குப் பெயர்போனவர். இந்த காட்சிகளில் அவர் எல்லாவற்றையும் விஞ்சிவிட்டார்!

இந்த ரணகளத்தில் கிளுகிளுப்பு ஊட்டுவதற்காகவே வந்தவர் டி.ராஜேந்தர். வசனம் பேசிக்கொண்டே அடிப்பதில் வல்லவர். வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜியை மறக்கமுடியாது!(கவண் படத்தில் டி.ஆரின் இந்த வசனத்தை சரியான இடத்தில் பயன்படுத்தியது மிகச்சிறப்பு). சீறிவரும் காளையில் ராமராஜன், எங்கோ பைக்கில் போய்க்கொண்டிருப்பார். ஒரு அம்மணியை வில்லன் ஒருவன் தள்ளிவிட அந்த சத்தம் கேட்டு பைக்கில் திரும்பிவந்து, அந்த அம்மா கீழே விழுவதற்குள் தாங்கிப் பிடித்துவிடுவார்... இதுபோன்ற காட்சிகள் இப்போதுதான் அவெஞ்சர் சீரீஸ் படங்களில் ஹாலிவுட்டில் இடம் பெற்றன. ஆனால் அவற்றை முந்திச் செய்தவர் ராமராஜன் என்றால் அது 'மிகையாகாது.'

வில்லன்கள் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட பின்னர் ஹீரோ வில்லனின் ஈகோவுடன் விளையாடுவார். கட்டி வச்சி அடிக்கிறீங்களேடா.. அவிழ்த்து வுடுங்கடா பாப்போம்! ஆட்கள் இருக்கும் தைரியத்தில் வில்லன் அவிழ்த்துவிட்டு ஒத்தைக்கு ஒத்தை மோதினால் ஆளை காலி செய்வது. முருகதாஸின் துப்பாக்கி வரைக்கும் இதே டெக்னிக் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது!

உலகம்பூராவும் ஒற்றை ஆளாக விசா வாங்காமலேயே போய்ப் போராடும் நாயகன் இன்னொரு அபத்தம்! விவேகத்தில் ஜார்ஜியா காடுகளில் உடற்பயிற்சி செய்து மீண்டு வரும் அஜீத் இதற்கொரு அழகான உதாரணம்! அதில் வாங்கிய பல்பால்தான் பிறகு விஸ்வாசம் என அப்பா&மகள் சென்டிமெண்டுக்குள் வந்து சேர்ந்தார் அவர்!

பெண்ணுக்கு மீசை வைத்தால் குரல் பெண்குரலாக இருந்தாலும் அடையாளம் தெரியாதது, தாடி வைத்துக் கொண்டால் ஹீரோவை யாருக்கும் தெரியாது, மரு வைத்தால் மாறுவேடம் போன்ற தமிழ் சினிமா கிளிஷேக்கள் இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டன. ஆனால்
சண்டைக்காட்சிகளின் அமைப்பு மட்டும் இன்னும் மாறாமலேயே இருப்பதை என்ன செய்ய? குறைந்த பட்சம் எதாவது செட் பிராப்பர்ட்டியை எடுத்து அடிக்கிறமாதிரியாவது சீன்களை அமையுங்கள் அய்யா!

நவம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com