உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக, தங்களது துறையில் முன்னணியில் இருப்பது அந்த நிறுவனம். அதன் நிர்வாகத்திற்கு சினிமா தயாரிப்பில் இறங்கினால் என்ன என்று தோன்றுகிறது. நீண்ட விவாதத்திற்கு பின் சரி என்று முடிவு செய்து களத்தில் இறங்குகிறார்கள்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தை வாங்குகிறார்கள். ஆண்டு 1982. படங்கள் தயாரிக்கப்படுவதும் வெளியிடுவதும் தொடர்கிறது. பட விழாக்களிலும் விருது வழங்கும் விழாக்களிலும் பங்குபெறுவதும், புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுப்பதும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சி தருகிறது.
சில ஆண்டுகள் கழித்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் இன்றைய மதிப்பில் 192 கோடி ரூபாய் (27.5 மில்லியன் டாலர்). தயாரிப்பில் ஏற்படும் பல்வேறு குளறுபடிகள், நடிகர் - டைரக்டருக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தங்கள் என்று எண்ணிலடங்கா காரணங்களால் படத்தில் பட்ஜெட் எகிறுகிறது. படம் முடிவடையும்போது மொத்த தயாரிப்புச் செலவு ரூபாய் 357 கோடிகள் (51 மில்லியன் டாலர்). அதற்கு பின் விளம்பரம் மற்றும் வெளியீட்டு செலவு ரூபாய் 140 கோடிகள் (20 மில்லியன் டாலர்).
1987 - ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி ரிலீஸான அந்த படம் வட அமெரிக்காவில் வெறும் ரூபாய் 100 கோடியையே வசூலாகப் பெறுகிறது. படத்தின் தோல்வி அந்த புகழ்பெற்ற நிறுவனத்திற்குள் மிகப்பெரிய புயலை கிளப்ப 1989 ஆம் ஆண்டு கொலம்பியா பிக்சர்ஸை சோனி நிறுவனத்திற்கு விற்றுவிட்டு பெருமூச்சு விடுகிறார்கள் உயர் அதிகாரிகள்.
'இஷ்டார் (Ishtar)' தான் அந்த ப்ளாப் படம். படம் வெளியாகி 27 ஆண்டுகளுக்கு பின் 2014 - ல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை உலகில் இதுவரை வெளியான படங்களில் தி மோஸ்ட் எக்ஸ்பென்ஸிவ் பாக்ஸ் ஆபிஸ் ப்ளாப்ஸ் பட்டியலில் முதலிடம் கொடுத்து சிறப்பிக்கிறது.
'இஷ்டார்' படத்தை தயாரித்து பெரிய பாடத்தை கற்றுக்கொண்ட நிறுவனம் கோகோ கோலா. 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் இந்நிறுவனத்தின் 2018 ஆண்டு சொத்து மதிப்பு ரூ 5,82,610 கோடிகள். நிர்வாகத்தில், பணத்தை கையாளுவதில் தேர்ச்சி பெற்ற கோகோகோலா நிறுவனம் கூட சினிமா தயாரிப்பைக் கண்டு பயந்து போயிருக்கிறார்கள்.
கந்து வட்டிக்கு கடன் வாங்காமலே கோகோ கோலா நிறுவனம் படத் தயாரிப்பில் கையைச் சுட்டுக்கொண்டது.
இஷ்டார் படத்தின் தோல்வியை அமெரிக்க ஊடகங்கள் துவைத்து தொங்கவிட்டன. தயாரிப்பில் எங்கெங்கே கோட்டை விடப்பட்டது என்று விரிவான
அலசல்கள் நிகழ்ந்தன. மோசமான படம், மோசமான திரைக்கதை மற்றும் மோசமான டைரக்டர் என்ற மூன்று பிரிவுகளில் இஷ்டார் திரைப்படத்திற்கு கோல்டன் ராஸ்பெர்ரி விருது கொடுக்கப்பட்டது.
'தமிழ் சினிமாவின் பிரச்னைகளைத் தீர்ப்போம்' என்ற முழக்கம் தமிழக
சினிமா மேடைகளில் அடிக்கடி ஒலிக்கிறது. ஆனால் அதற்கான முயற்சிகள் தொடங்கிய பாடில்லை.
நடிகர், நடிகையின் அந்தரங்கங்களை பேசுமளவிற்கு கூட தமிழ்
சினிமாவின் உண்மையான சிக்கல்கள் விவாதிக்கப்படுவதில்லை.
''நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்''
என்ற குறளின் அடிப்படையில் தமிழ்
சினிமாவின் சிக்கல்கள் வரும் பக்கங்களில் விரிவாக அலசப்பட்டிருக்கிறன. தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த அக்கறையினால் தயாரிக்கப்பட்ட இந்த
சிறப்பிதழுக்கு பலர் மௌனத்தையே பதிலாக தந்தனர். இதழை படித்துவிட்டு மற்றொரு கோணத்தை பதிவு செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் கருத்தை அந்திமழைக்கு அனுப்பவும்.
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன் .
ஆகஸ்ட், 2019.