சினிமா உலகமும் கிசுகிசுக்களும்

சினிமா உலகமும் கிசுகிசுக்களும்
Published on

அவர் உயிரோடு இருந்தபோது மிக சொற்பமான சந்தர்ப்பங்களிலேயே சந்தித்திருக்கிறேன் என்றாலும், தற்கொலை செய்துகொண்ட இந்த 25 ஆண்டுகளில் வருடத்துக்கு மூன்று முறையாவது சில்க் ஸ்மிதா என் கனவில் வந்துவிடுவார். எப்போதும் அது சும்மா ஒரு ரெண்டு நிமிட பிட்டுக் கனவாகவே முடிந்துவிடும்.

அந்த சிறு தரிசனத்தின்போது அவருக்கு என்னிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருந்தது...‘‘ஏன் பாவா, நீ ஒரு சினிமா ரிப்போர்ட்டரா இருந்துக்கிட்டு என்னைப் பத்தி  ஒரு கிசுகிசு கூட எழுதலை?''

‘மூன்றாம் பிறை'யில் கமலஹாசனிடம் விரகதாபத்துடன் பேசிய அதே தொனியில்தான் அந்தக் கேள்வி இருந்தது என்பதையும் நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.

உண்மையில் நான் ஒரு சினிமா நிருபரே அல்ல...இன்னும் சொல்லப்போனால் நிருபரே கூட அல்ல...வேறு ஒரு இடத்துக்குத் தாவுவதற்கு முன்னர் சும்மா தாற்காலிமாக ஏற்படுத்திக்கொண்ட பணி என்று நான் பதில் சொல்வதற்குள் சில்க் கனவிலிருந்து மறைந்துவிடுவார்.

வேறு ஒரு இடத்துக்குத் தாவுவதற்கு முன்னர் சும்மா தாற்காலிமாக ஏற்படுத்திக்கொண்ட பணியில் முப்பது வருடங்களுக்கும் மேலாக குப்பை கொண்டிருப்பவர் வேறு யாராவது இந்த பூமியில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் என் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது.

சரி இந்த கிசுகிசு சமாச்சாரங்களுக்கு வந்துவிடுவோம்.

இன்றைய வாட்ஸ் ஆப் வாந்திகளுக்கு ஸாரி வதந்திகளுக்கு முன்னோடியாய் இருந்தவர்களில் மிகவும் பிரபலமானவர் ‘இந்து நேசன்'

பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பது பழைய சமாசாரம். அதாவது சினிமா தோன்றி நட்சத்திரங்கள் ஜொலிக்கத்தொடங்கியதிலிருந்தே இந்த வதந்தி சமாசாரம் அவர்களை விடாமல் துரத்தியிருக்கிறது. பின்னர் லட்சுமிகாந்தன் தனது கிசுகிசுக்களுக்கு கொடுக்க நேர்ந்த விலை இந்த உலகம் அறிந்தது.

அவர்கள் வழியே எல்லா பத்திரிகைகளும் கிசுக்களை தங்கள் பத்திரிகா தர்ம கடமைகளுள் ஒன்றாகவே கருதி ஆற்று ஆற்று என்று ஆற்றினார்கள். அதிலும் அந்த நான்கெழுத்துப் பத்திரிகையின் ‘ஒரு நடிகையின் கதை' இருக்கிறதே உச்சங் களுக்கெல்லாம் உச்சம். எச்சங்களுக்கெல்லாம் எச்சம். இண்டஸ்ட்ரிக்குள் இல்லாத நடிகைகளையெல்லாம் கற்பனையில் படைத்து, அவர்களை நடிகர்களுடன், தயாரிப்பாளர்களுடன், ஃபைனான்சியர்களுடன் இணைத்து படுத்து படுத்து என்று படுத்தினார்கள்.

அப்புறம் சில ரோஷக்கார சினிமாக்காரர்கள் வீட்டு வாசலில் ‘நான்கெழுத்துப் பத்திரிகை நிருபர்களும் பிச்சைக்காரர்களும் கேட்டைத்தாண்டி உள்ளே வரக்கூடாது' என்று போர்டு வைக்காத குறையாய் எதிர்ப்பு தெரிவிக்கவே அத்தொடர் அல்பாயுசில் முடிந்தது.

அந்தக்கால, அதாவது 80கள், 90களில் ‘சரோஜா தேவி',‘மூக்குத்தி',‘பருவகாலம்'போன்ற பத்திரிகைகளில் இந்த வதந்திகளுக்கு என்றே பெரிய வாசகர் வட்டம் உண்டு.

அதிலும் பருவகாலத்தில் வந்த ‘வந்த வதந்திகளும் விசாரித்த உண்மைகளும்' பகுதிக்கென்றே பைத்தியக்கார ரசிகர்கள் இருந்தார்கள். வெறும் வதந்திகளோடு நிறுத்திக்கொள்ளாமல் விசாரித்த உண்மை என்ற பெயரில் ஒரு நடிகையின் வயிற்றில் அவர்கள் அடிப்பது இருக்கிறதே... அது பெருங்கொடுமையானது. ஒரு சின்ன சாம்பிள் பார்க்கலாம்...வந்த வதந்தி...  தொடைபெருத்த அந்த  மூன்றெழுத்து நடிகை நாலாவது முறையாக ஐந்தெழுத்து மருத்துவமனையில் அபார்ஷன் செய்துகொண்டாராம்.

விசாரித்த உண்மை ‘அதாவது நேர்மையாக விசாரித்து எழுதுகிறார்களாம்': நாம் விசாரித்த வகையில் இது நான்காவது அபார்ஷன் இல்லையாம். கோவையைச் சேர்ந்த ஏழெழுத்து ஃபைனான்சியருடன் நெருக்கமாக இருந்த வகையில் அவர் கர்ப்பமாக இருந்தது உண்மைதான். ஆனால் அது அபார்ஷன் அளவுக்குப் போகாமல் சில பல மாத்திரைகளுடன் நடிகை சுமுக நிலைக்கு வந்துவிட்டாராம்...இப்படிப்போகும் அந்த விசாரித்த உண்மை.

‘அந்த ஐந்தெழுத்துப்' பத்திரிகையில் முதல் நான்கு ஆண்டுகள் நான் ஆபீஸ் பாயாக பணியாற்றியபோது, கிசுகிசு எழுதும் பல புள்ளிகளைச் சந்தித்து வியந்து அயர்ந்திருக்கிறேன். அங்கிருந்து தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கும் நான்கெழுத்து இதழ் துவக்கத்தில் சினிமா கிசுகிசுக்களுடன் தான் தனது பயணத்தைத் துவங்கியது.

அதில்  நான்கெழுத்து பத்திரிகையாளர் ஒருவர்தான் தொடக்கத்தில் சினிமா செய்திகள் தருவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார். ஒரே ஒரு பீடிக்கட்டு மட்டும் போதும். உட்கார்ந்த இடத்தில் மொத்த இதழுக்குமான வதந்திகளை சுடச்சுட வடித்துக் கொட்டுவார். அதே நபரிடம் இன்னொரு உத்தியை கையாண்டும் சினிமா கிசுகிசுக் களை ஆன் த ஸ்பாட்டில் வாங்கமுடியும். அவர் எழுதிக்கொண்டிருக்கும் மேசையில் கொண்டுபோய் குத்துமதிப்பாய் ஒரு 30 ஸ்டில்களை வைத்தால்போதும். அடுத்து கண்ணை மூடிக்கொண்டு அந்த முப்பது பேர்களுக்குமான வதந்திகளை எழுதிக்கொட்டுவார்.

அந்த வதந்திகளில் சில சமயம் சொந்த வயிற்றெரிச்சலும் வெளிப்படும். பத்திரிகையாளர் மோகிக்கும் நடிகையை அவர் சுத்தமாக வெறுக்கும் ஒரு நடிகர் மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருப்பார். அந்தத் தகவலை வதந்தியாக எழுதிவிட்டு, ‘...ம்ம்ம் என்ன செய்யிறது கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டாமை'என்று முடிப்பார்.

அதே சமயம் வதந்திகளில் இடம் பெறாதவர்கள் அத்தனை பேரும் யோக்கியம் என்று முடிவுக்கு வரவேண்டியதில்லை. ‘என் இத்தனை வருஷ சர்வீஸ்ல ஒரு நடிகை மேலயும் என் சுண்டு விரல் கூட பட்டதில்லை'என்று மேடைகளில் புளுகும் யோக்கிய சிகாமணிகள் நடிகைகளுக்கு இணையாக கிசுகிசு எழுதும் நிருபர்களையும் மெயிண்டெயின் பண்ணிக்கொண்டிருந்தார்கள் அவ்வளவுதான்.

இந்த வதந்தி சமாச்சாரத்தில் நடிகர்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை. எப்போதும் போல சிக்கிச் சீரழிபவர்கள் நடிகைகள் மட்டுமே.

தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றை குறுக்கு வெட்டாக ஆராய்கிறபோது இந்த வதந்திகளுக்கு அதிக ஆயுள் கொடுத்த நடிகைகள் என்று எங்கள் தலைமுறையில் த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரைச் சொல்லலாம். இவர்கள் இருவருமே தற்போது 39 வயதில் இருப்பவர்கள், ஒரே சமயத்தில் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்கள்(2003)  என்பது உட்பட நிறைய ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு.

ஆணாதிக்க சினிமாவில் சுமார் 18 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தாக்குப் பிடித்து வருகிறவர்கள். பல முறை காதல் வயப்பட்டு அந்தத் தோல்விகளுக்காக தாடி வளர்க்காதவர்கள் (தண்ணி அடிக்காதவர்கள் என்ற உத்தரவாதத்தை தர இயலாமைக்கு வருந்துகிறேன்). அசவுகரியமாக உணர்ந்த அடுத்த சந்தர்ப்பத்திலேயே தங்கள் முதல் காதலைத் துறந்து அடுத்த விருப்பத்தைத் தேடிக் கொண்ட நேர்மை இவர்கள் இருவரிடமுமே இருந்தது.

இதனாலே வதந்தியாளர்களின் அகோரப்பசிக்கு  அடிக்கடி தீனியானார்கள்.

300 ரூபாய் சம்பளத்தில் ரிச் கேர்ளாக, ஜூனியர் ஆர்டிஸ்டாக தனது சினிமா வாழ்வைத் துவங்கிய த்ரிஷா இந்த 18 ஆண்டுகளில் வாரத்துக்கு ஒன்று என்று வைத்துக்கொண்டாலும் 52 X 18 கணக்கில் இதுவரை ஆயிரத்துக்கு சற்று அருகே எண்ணிக்கை கொண்ட அளவுக்கு வந்ததிகளை சந்தித்திருக்கிறார். அவற்றில் உண்மைக்கு நெருக்கமானவை என்று எடுத்துக் கொண்டால் பத்து சம்பவங்களுக்கு மேல் தேறாது. இதன் உச்சமாக ஒருமுறை அவரது அந்தரங்க குளியல் காட்சி ஒன்று அநாகரிகமாக வலைதளங்களில் பகிரப்பட்டது. அப்படி கண்டு அனுபவித்த காட்சியின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் ஆழமாகத் தெரிந்துகொள்ள ஒரு நிருபர் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பியபோது, மிகமிகத் துணிச்சலாக ......என்று அர்த்தம் தொனிக்க தனது நடுவிரலைத் தூக்கிக் காட்டினார்.

த்ரிஷாவையும் விட ஒரு அடி மேலே என்று சொல்லத் தகுந்தவர் நயன்தாரா. ‘அய்யய்யா' என்று சொல்லக்கூடிய வயதுடைய ஒருவருடன்தான் இவரது முதல் தமிழ்ப் படம் அமைந்தது. வதந்தியாளர்கள் அப்போதே மிக உற்சாகமாகி எழுத ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து இவர் எந்த எந்த ஹீரோவுடன் நடித்தாரோ அவரெல்லாம் இவரது காதலராக்கப்பட்டார். வேறு மத நடிகர்களுடன் கிசுகிசுக்கப் பட்டபோதெல்லாம் இவர் மிகசர்வசாதாரணமாக மதம் மாற்றப்பட்ட கொடுமையும் நடந்தது.

ஒரு வழியாக நாலைந்து நிஜ காதல் தோல்விகளுடன், வதந்தியாளர்களால் இட்டுக்கட்டப்பட்ட இன்னொரு நூத்திச்சொச்ச காதல் தோல்விகளுடனும் இவர் விக்னேஷ் சிவனை வந்தடைந்தபோது, கொரோனா தாக்கப்பட்டதால் குவாரன்டெய்ன் செய்துகொண்டது போல, கிசுகிசுப்பாளர்கள் சற்றே சற்று ஓய்வெடுத்தனர்.

பின்னர் மெல்ல இவர்கள் திருமணத்துக்கு நாள் குறிப்பது, பிரசவத்துக்கு தேதி குறிப்பது, பிள்ளைக்கு பேர் வைப்பது என்று கொஞ்சம் சாந்த நிலைக்கு வந்திருக்கிறது. அதாவது இவர் விஷயத்தில் நம்ம வதந்தியாளர்கள் ரொம்பவே டயர்டாகிவிட்டார்கள் என்று புரிந்துகொள்ளமுடிகிறது.

முந்தைய கொரோனா சீஸனுக்கும் சில தினங்கள் முன்னால்... ஓர் இரவு டின்னரின்போது மூன்றாவது கிளாஸ் ஒயினை நயன் எனக்கு கொடுத்தபோது, ‘ஏம்பா, இந்த பதினெட்டு வருஷ காலத்துல உன்னைப்பத்தி நானே ஆயிரக்கணக்குல வதந்திகள் படிச்சி கொதிச்சிருக்கேன். அதையெல்லாம் படிக்கிறப்ப நீ டென்ஷன் ஆகவே மாட்டியா?' என்று அவர் விரும்பாத டாபிக்கைப் பேச ஆரம்பித்தேன்.

‘லுக் மிஸ்டர் முத்து,... திஸ் இஸ் மை லைஃப்... அந்த வதந்தி எழுதுற பயலுகளுக்கு எப்பவுமே என்னோட பதில் ஒண்ணே ஒண்ணுதான்' என்றபடி தனது ஒரு விரலை உயர்த்திக்காட்டினார். அது த்ரிஷா காட்டிய அதே விரல்!

ஜூன், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com