"சாவு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்!''

படைப்பும் தடையும் : தஸ்லிமா நஸ்ரின்
"சாவு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்!''
Published on

இன்று வரை நான் பெற்ற விருதுகளில் வேசி என்றும் விபச்சாரி என்றும் கிடைத்திருக்கும் பட்டங்களையே பெரிதாக நினைக்கிறேன்’- இப்படிச் சொல்கிறார் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். சர்ச்சைக் குரிய எழுத்துக்களால் நாடுவிட்டு நாடு விரட்டப்பட்டுக்கொண்டிருக்கும்  வங்கமொழி எழுத்தாளர் நஸ்ரினின் வாழ்க்கை திருப்பங்கள் நிறைந்தது. இன்றும் கொலை மிரட்டலின் நிழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் அவர்.

வங்கதேசத்தில் நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் தஸ்லிமா. மருத்துவப்படிப்பை 23 வயதில் முடித்துவிட்டு அந்நாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் பெண்களின் பிரச்னைகளை செய்தித்தாள்களில் எழுத ஆரம்பித்தவர், மதரீதியாக பெண்கள் ஒடுக்கப்படுவதை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அவரது கட்டுரைகள் கடும் எதிர்ப்பைப் பெற்றன. ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள் என்று நிறைய பார்க்க வேண்டி இருந்தது. 1993-ல் லஜ்ஜா என்ற நாவலை எழுதினார். அது அவரது நான்காவது நாவல். அந்த நாவல் மேலும் கடுமையான விமர்சனங்களை இஸ்லாம் மீது வைத்தது. இஸ்லாமியப் பெரும்பான்மையினர் நாட்டில் வசித்து அந்த மதத்துக்கு எதிராக எழுதியதன் விளைவுகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த நாவலை வங்கதேச அரசு தடை செய்தது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில் இஸ்லாமை மேலும் விமர்சித்தார். அது சற்று திரித்து வெளிவந்துவிட்டதாக பின்னர் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார். இந்த நேர்காணல் வங்க தேசத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. டாக்காவில் மூன்று லட்சம் பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவருக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது. அவரைக் கொல்பவர்களுக்கு பணப்பரிசு அறிவித்தார்கள். தஸ்லிமா தலைமறைவானார். அவரது பிரச்சனை உலகெங்கும் தெரியவந்த பின்னர் மனித உரிமை அமைப்புகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகள் தலையிட்டன. நாட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால் தஸ்லிமாவுக்கு  பிணை வழங்குவதாக வங்க தேச அரசு ஒப்புக்கொண்டது. காவல்துறை பாதுகாப்புடன் தஸ்லிமா டாக்கா விமான நிலையம் வரை கொண்டுவரப்பட்டு ஸ்வீடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

“நான் ஸ்வீடனுக்கு வந்தபோது சுமார் நூறு காவலர்கள் 24 மணி நேரமும் எனக்குப் பாதுகாப்புப் பணியிலிருந்தார்கள். எனக்கு மூச்சு முட்டியது. ஒரு முறை அவர்களுக்குத் தெரியாமல் நழுவிப் பனியில் நடந்தேன். ஆனால் என்னைப் பிடித்து கடுமையாக எச்சரித்தார்கள். நான் எங்கு போனாலும் கடுமையான காவல். சில ஆண்டுகளில் என்னால் இதைத் தாங்கமுடியாமல் போய்விட்டது. மேற்குலகில் அபாயம் குறைவு என்பதால் சுதந்தரம் விரும்பினேன். பெரிய கூட்டங்களில் பேசும்போது மட்டும் காவலர் பாதுகாப்ப்பு இருந்தால் போதும் என்று சொல்லிவிடுகிறேன்” என்று அவரே  சொல்லும் அளவுக்கு அவருக்குப் போலீஸ் காவல் இருந்தது.  அடுத்து ஜெர்மனியில் கொஞ்ச நாள் இருந்த அவர், பின்னர் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். பின்னர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று விண்ணப்பித்தார்.  ஆறு ஆண்டுகள் கழித்து அரை மனதுடன் அவர் இந்தியாவில் வசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையில் அவர் சர்ச்சைக்குரிய நூல்களை எழுதுவதை மட்டும் நிறுத்தியிருக்கவில்லை. அவர் எழுதிய சுயசரிதை நூல்களின் பாகங்கள் வங்க தேசத்தில் தொடர்ந்து தடை செய்யப்பட்டன. அவரது சுயசரிதையின் மூன்றாம் பாகமான திவிகாந்திதா மேற்கு வங்கத்திலும் 2003-ல் வெளியானபோது தடைசெய்யப்பட்டது. அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

இந்தியாவுக்கு 2004-ல் வந்த அவர் கொல்கத்தாவில் வசித்தார். வங்காள மொழி எழுத்தாளர் என்பதால் மேற்கு வங்கம் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அவரது நூலான திவிகாந்தா மேற்குவங்கத்தில் தடை செய்யப்படும் என்று அவர் நினைத்திருக்கவில்லை. அந்நாவலில் தன்னுடன் உறவு கொண்ட வங்க எழுத்துலகின் பெரும்புள்ளிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கி இருந்தது. ஆனாலும் இந்தியாவின் மிகவும் முற்போக்கு மாநிலமான கொல்கத்தாவைப்போல பாதுகாப்பான இடம் தனக்குக் கிடைக்காது என்பதால் கொல்கத்தாவில் வாடகை வீட்டில் தஸ்லிமா தங்கி இருந்தார். இங்கேயே தங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.ஆனால் நடந்ததோ வேறு.

2008-ல் ஹைதராபாத்தில் ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்காகப் போனார். பத்திரிகையாளர் மன்றத்தில் நிகழ்ச்சி. எங்கு போனாலும் போலீஸ் காவல் இருக்கும். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதெல்லாம் தேவைப்படாது என்று இருந்துவிட்டார்கள். மனித உரிமைகள் பற்றி தஸ்லிமா பேசினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக அந்த விபரீதம் நிகழ்ந்தது. அங்குள்ள இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த மூன்றுச் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஒரு கும்பல் கூடி மன்றத்துள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. “கையில் கிடைத்ததை எடுத்து தாக்குதல் நடத்தினார்கள். நான் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பின்னால் மறைந்துகொள்ள முயற்சி செய்தேன். மரணம் நிச்சயம் என்று அப்போது முடிவு செய்துவிட்டேன். என்னை பின்வாசல் வழியாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்ப முயற்சி செய்தார்கள் முடியவில்லை. கதவுகளை மூடினார்கள். ஆனாலும் அக்கதவுகளை உடைத்துகும்பல் உள்ளே வர முயற்சி செய்தது. எனக்கு எதிராக பத்வா விதித்தவர்கள் அவர்கள். என் தலையைக் கொண்டுவருகிறவர்களுக்கு பரிசுகள் அறிவித்தவர்கள். என் கொடும்பாவிகளை தொடர்ந்து எரிப்பவர்கள், என்னைத் தண்டிக்க தெருவில் போராட்டம் நடத்துகிறவர்கள். இதுவரைக்கும் எனக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு கிட்டே வந்தது இல்லை. சாவு எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். வலிக்குமா? இதயத்தில் சுடுவார்களா? தலையிலா? அல்லது என்னைச் சிதைப்பார்களா? சடாரென போலீஸ் வந்துவிட்டது. என்னை பாதுகாப்பாக வளையம் அமைத்து அழைத்துச் சென்றார்கள்” என்று ஹைதராபாத் தாக்குதலை விவரிக்கிறார் எக்ஸைல் என்கிற தனது சுயசரிதை நூலில் தஸ்லிமா.

உடனே கொல்கத்தாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார் அவர். அங்கே நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் அவர் வீட்டருகே காத்திருக்கிறார்கள்.  யாரிடமும் அவர் பேசுவதில்லை என்றாலும் இது பெரும் கவனத்தைப் பெறுகிறது. ஹைதராபாத்தைத் தொடர்ந்து  கொல்கத்தாவில் தஸ்லிமாவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டம் அதிகரிக்கிறது. வீட்டுக்குள்ளேயே கைதியைப் போல தஸ்லிமா வைக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் அரசே அவரை கொல்கத்தாவை விட்டு வெளியேறச் சொல்கிறது. அவரோ கொல்கத்தாவை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.  “இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்குச் செல்லுங்கள். பிறகு வந்துவிடலாம். அங்கே எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளோம் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள். ஜெய்ப்பூர் விமானநிலையத்தில் துணைக்கு என் சகோதரனுடன் சென்று இறங்கினேன். அங்கே எனக்காக போலீஸ் காத்திருந்தது. எங்கே போகவேண்டும்? எங்கே தங்கப்போகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, என்னை கொல்கத்தாவிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றிவிட்டார்கள் என்று. நான் மாற்று உடைகள் கூட எடுத்து வந்திருக்கவில்லை”.

ஒரு நாள் அங்கே ஒரு ஹோட்டலில் தங்க வைத்த போலீஸ் மறுநாள் விடிகாலையில் அவரை காரில் ஏற்றி விமான நிலையம் போகலாம் என்று சொல்லி அப்படியே டெல்லிக்குத் தரைவழியே கொண்டுவந்தார்கள். அங்கே ரகசியமான ஒரு வீட்டில் அவர் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்பட்டார்.

நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் இதே போல் சிறைக்கைதி வாழ்க்கை தான் என்று உணர்ந்த அவர் கடைசியில் ஸ்வீடனுக்கு செல்வதாகச் சொன்னார். கிளம்புவதற்கு முன்பாக அரசு செலவில் அவர் நண்பர்களுடன் நட்சத்திர உணவகத்தில் விருந்து. விமான நிலையத்தில் அவருக்கு ஒன் வே டிக்கெட் எடுத்துக்கொடுத்துப்  பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு இந்திய அரசு அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது! 2008-ல் வெளியேறிய அவர் ஸ்வீடன்,பாரிஸ், நியூயார்க் என்று அலைந்தார். பரிசுகளும் விருதுகளும் கௌரவ டாக்டர் பட்டங்களும் கிடைக்கின்றன.

இந்திய விசா வைப் புதுப்பிக்க ஆறு மாதத்துக்கு ஒருமுறை டெல்லி வருவார். ஒன்றிரண்டு நாட்களிலேயே அவர் திரும்பிச் சென்றுவிடவேண்டும் என்ற கட்டுப்பாடு அவருக்கு இருந்தது. கொல்கத்தாவுக்குச் செல்ல அனுமதியே இல்லை. 2010 க்குப் பின்னர் டெல்லியில் வசிக்க அவருக்குக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டன. இருந்தாலும் மேற்குவங்கம் செல்ல மட்டும் அவருக்கு அனுமதி இல்லை. வங்காள மொழிப் பத்திரிகைகள் எதிலும் அவருடைய எழுத்துகள் வருவதில்லை.  ஒரு சில பத்திரிகைகள் பிரசுரித்தாலும் ஒரு வாரம் வெளியாகும். அடுத்த வாரம் தொடராது. அவற்றைப் பிரசுரிக்க அறிவிக்கப்படாத தடை நிலவுவதாக புலம்பிக்கொண்டிருக்கிறார் தஸ்லிமா! இப்போதைக்கு அவருக்கு நாடு இல்லை! எழுத பத்திரிகைகளும் இல்லை! இந்தியாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமே சுயசரிதையாக எழுதி எக்ஸைல் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். மூச்சுக்காற்றுக்காகத் திணறும் துடிப்பை இதன் பக்கங்களில் உணர முடியும்!

ஏப்ரல், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com