சன்னதம் வருதல் என்பது உலகம் முழுக்க எல்லா பழங்குடி வழிபாடுகளிலும் இருந்து வரும் ஒரு நிகழ்வு. மதம் என்னும் அமைப்பின் தொடக்கமே அதிலிருந்துதான் என்று சொல்லலாம். அதன் தொடக்கம் எங்கிருந்து என பண்பாட்டாளர்கள் பலவகையில் ஊகித்திருக்கிறார்கள்.
மனிதனும் விலங்குநிலையில் தனித்த உள்ளமும் தனித்த ஆளுமையும் இல்லாதவனாக இருந்திருப்பான். பண்பாட்டு வளர்ச்சிப்போக்கில் மெல்லமெல்ல அவனுக்கு என தனியாளுமை உருவாகி வந்தது. விளைவாக அவனுடைய பொது உள்ளம் பின்னுக்குத்தள்ளப்பட்டு ஆழ்மனமும் நனவிலியும் ஆகி உள்ளே அமைந்தது. அது அச்சமூகத்தின் கூட்டான உள்ளம். கடந்தகாலம் நிகழ்காலம் என்றெல்லாம் பிரிக்கப்படாத ஓர் அறியாப் பெரும்பரப்பு அது.
நிலத்தடி நீர் போல. வெளியே பெய்யும்மழை ஊறிச்சென்று தேங்கும் ஒரு ஆழம். அங்கே பல்லாயிரமாண்டு காலம் ஊறிய நீர் உறைகிறது. மேல்நிலப்பரப்பில் உருவாகும் துளைவழியாக ஆழ்நீர் பீய்ச்சியடிப்பதைத்தான் ஆர்ட்டீசியன் ஊற்று என்கிறோம். சன்னதமும் அப்படித்தான்.
மேல்மனம் பல்வேறு சடங்குகள் வழியாக கரைக்கப்படுகிறது. குறிப்பாக குறியீடுகளும் தாளமும் ஒருவகை மனவசியத்தைச் செய்கின்றன. மேல்மனம் அழியும்போது ஆழ்மனம் பீரிட்டு வெளிப்படுகிறது. அதுவே சன்னதம்'' - இவை எழுத்தாளர் ஜெயமோகனின் வார்த்தைகள்.
‘பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
‘என்ன வேண்டும்
கேள் மகனே' என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.'
இது வித்யாஷங்கர் எழுதிய ‘சாமக்கொடை' கவிதை.
குலசாமி, நாட்டார் தெய்வங்கள், தாய்த்தெய்வ வழிபாடு என்று பரந்திருக்கும் தொன்மையின் ஒரு பகுதியை இந்த இதழில் தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகளின் வார்த்தைகள் மூலமாக பதிவு செய்ய முனைந்துள்ளோம். நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உடைய இந்த தலைப்பில் நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதி அனுப்புங்கள் பிரசுரிக்க காத்திருக்கிறோம்.
தனிப்பட்ட முறையில் இந்த கதைகளை பலரிடம் கேட்கும் வாய்ப்பை பெற்ற எனக்கு, ஒவ்வொரு முறையும் ஆத்மாநாமின் இக்கவிதை நினைவிற்கு வரும்,
கடவுளைக் கண்டேன்
எதையும் கேட்கவே தோன்றவில்லை
அவரும் புன்னகைத்துப்
போய்விட்டார்
ஆயினும்
மனதினிலே ஓர் நிம்மதி
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
ஏப்ரல், 2020 அந்திமழை இதழ்