சவால்கள் தொடர்கின்றன…

சவால்கள் தொடர்கின்றன…
Published on

ஊடகத்துறைக்கு வந்த சில வருடங்களில், இரண்டாயிரமாவது ஆண்டு தொடக்கத்தில் சென்னையைச் சேர்ந்த சில பெண் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து எங்களுக்கான அமைப்பு ஒன்று தொடங்க சில முயற்சிகளை எடுத்தோம். 24 மணி செய்தி சேனல்களின் ஆக்கிரமிப்பு அதிகம் தொடங்கியிருக்காத அந்த காலகட்டத்தில் சென்னையில் மட்டும் சுமார் 500 பெண் ஊடகவியலாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அந்த முயற்சியின் போதுதான் தெரிய வந்தது. அப்போது பெரிய பிரமிப்பை ஏற்படுத்திய எண்ணிக்கை அது. (இப்போது அந்த எண்ணிக்கை நிச்சயம் இருமடங்கு ஆகியிருக்கும்.)

500 பேருக்கும் பின்னால் 500 வெவ்வேறான கதைகள் இருக்கும். எனக்கிருப்பது போல. பள்ளியிறுதி படிக்கும் போதே ஊடகத்துறைதான் எதிர்காலம் என்பதில் தெளிவாக இருந்தேன். கல்லூரியில்  சேர்ந்தவுடன் எனது பெரியப்பா டி.என்.கோபாலன் ஊடகவியலாளர் என்பதால் அவரது பணியிடத்துக்கு பயிற்சிக்காக செல்லத் தொடங்கிவிட்டேன். கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது நியூஸ் டுடே என்கிற மாலை நாளிதழில் வேலை கிடைத்துவிட்டது. பெண்களுக்கு படிப்பு முக்கியம், வேலை தேவையில்லை என்று நினைக்கும் ஒரு குடும்ப பின்னணியிலிருந்து வேலைக்கு அதுவும் ஊடகத்துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறவில்லை. மாலை நாளிதழ் என்பதால் மாலை ஆறுமணிக்குள் வீடு திரும்ப வேண்டும், இரண்டு வருடங்கள் கழித்து ஆங்கில நாளிதழில் வேலைக்கு சேர்ந்த போது இரவுப் பணி இருந்தால் கம்பெனி காரில் இறக்கிவிடப்படும் சலுகை, ஒரு மாநிலத்துக்கான நிருபராக வார இதழில் சேர்ந்த போது தினமும் தொலைபேசியில் நிலைமை சொல்ல வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளோடு தவிர்க்கவியலாத வெளியூர்/வெளிநாட்டுப் பயணங்கள் என்று ஒவ்வொரு விதியாக தளர்த்திக்கொண்டே வந்திருக்கிறேன்.

எனக்கு முன்பிருந்த பெண்களுக்கும் இது போன்ற நிறைய சவால்கள். எனக்கு அடுத்து வந்தவர்களுக்கு இந்த சவால்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. வீட்டில் அனுமதி கிடைக்காது என்கிற காரணத்துக்காகவே ஊடகத்துறைக்கு படித்திருந்தாலும் விளம்பரத்துறை, மக்கள் தொடர்புத்துறை என்று வெவ்வேறான துறைகளை தேர்ந்தெடுக்கும் மாணவிகளை இப்போதும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த சவால்களை எதிர்கொண்டு நுழைந்துவிட்டால் ஊடகத்துறை அதற்குரிய சில சவால்களோடுதான் பெண்களை வரவேற்கிறது. 90களின் இறுதியில் நான் ஊடகத்துறையில் நுழைவதற்கு இரு பத்தாண்டுகளுக்கு முன்பே பெண்கள் இந்தியாவில் ஊடகத்துறையில் இருந்திருக்கிறார்கள். ஆனால் நான் நுழைந்த போதும் கூட வெளிப்படையான பெண் வெறுப்பும், பாலின அடிப்படையிலான ஏளனமும் துறையில் இருந்தன. ஒரு பாரம்பரியமான தமிழ் நாளிதழில் பெண்களை செய்தியாளர்களாக பணி அமர்த்த தடை இருந்தது. பெண்கள் என்றாலே அவர்கள் டெஸ்க் பணி மட்டும்தான் செய்ய முடியும், அலைந்து திரிந்து வேலை பார்க்க முடியாது என்கிற முன்முடிவு மாற பல வருடங்கள் ஆனது. அப்போது மிகக் குறைவான பெண்களே அரசியல், கிரைம் போன்ற பீட்களில் இயங்கிக்கொண்டிருந்தார்கள். அச்சுத்துறையைப் பொறுத்தவரையில் கிரைம் பீட்டில் பணி புரியும் பெண்களை இப்போது கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். பெண்களுக்கு அரசியல் புரியாது, அவர்களால் கிரைம் தொடர்பான செய்திகளை மன தைரியத்தோடு கவர் பண்ண முடியாது போன்ற பல புனைவுகள் உலவிக்கொண்டிருந்தன. கடும் உழைப்பை செலுத்தியே இந்த  முன்முடிவுகளை அடித்து நொறுக்க வேண்டியிருந்தது.

நான் மிகவும் ரசிக்கும் பெண் ஊடகவியலாளர் அவர். டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இப்போதும் கிரைம் பார்த்துக்கொண்டிருக்கும் சிந்து. பிப்ரவரி 20012ல் சென்னையில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டதாகச் சொல்லி என்கவுண்டரில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நாளில் முதல் நபராக ஸ்பாட்டில் இருந்தார் சிந்து. அப்போது அவரோடு டெக்கான் கிரானிக்கல் நாளிதழில் பணிபுரிந்து  கொண்டிருந்தேன். சின்ன குழந்தை காத்துக்கொண்டிருக்கும் வீட்டுக்கு திரும்ப சிந்துவுக்கு நள்ளிரவுக்கு மேலாகிவிட்டது.. எளிமையான, அதிர்ந்து பேசாத சிந்துவிடம் அவரது பணியில் மட்டுமே அபாரமான உறுதி வெளிப்படும்.  

சிந்து போலதான் நிறைய பெண்கள். எப்போதும் ஆண்களுடனான ஒப்பீடுக்கு ஆளாகி, அதை தவிர்க்கவும் உடைக்கவும் கூடுதலாக உழைப்பைச் செலுத்திக்கொண்டிருக்கும் பெண்கள்.

தொலைக்காட்சி செய்திகளின் பரவலாக்கம் பல முன்முடிவுகளை அடித்து நொறுக்கியிருக்கிறது. கார்கிலில் போர்முனையில் நின்று செய்தி சேகரித்த பர்கா தத் போல பல சாதனைகளை தமிழ்நாட்டில் உள்ள பல பெண் ஊடகவியலாளர்களும் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அதன் பொருட்டு பல பிரச்னைகளையும் சந்தித்திருக்கிறார்கள். 2001ல்  திமுக தலைவர் மு கருணாநிதியின் கைதை கண்டித்து  தி.மு.க மெரினா பீச்சில் ஒரு பேரணியை நடத்தியது. அந்த பேரணிக்குச் சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியது. இப்படி தாக்குதலுக்குள்ளான ஒரு பெண் பத்திரிகையாளர் குடும்ப நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வேலையை விட்டுவிட்டார். அந்த பேரணியில் பாதிப்புக்குள்ளான இன்னொரு பத்திரிகையாளர், ஜெயஸ்ரீ. அப்போது அவர் ஆஜ்தக் தொலைக்காட்சியிலும் நான் இந்தியா டுடே வார இதழிலும் வேலைப்பார்த்துக்கொண்டிருந்தோம். ஒரே பணியிடம். பேரணியில் பிரச்னையானவுடன் அலுவலகம் திரும்பி அழுதுகொண்டேயிருந்த ஜெயஸ்ரீயிடம் அவருக்கு ஏதாவது அடி பட்டதா என்று கேட்டேன். ஜெயஸ்ரீ சொன்ன பதில் எப்போதும் மறக்க முடியாதது. “எனக்கு அடிபட்டிருந்தா சும்மாவா விட்டிருப்பேன்? ஆனா கேமராவ உடைச்சிட்டாங்க.”

ஊடகத்துறையில் பெண்கள் சந்திக்கும் இன்னொரு முக்கியப் பிரச்னை, பாலியல் துன்புறுத்தல். தி நியூஸ்மினிட் என்கிற ஆங்கில செய்தி இணையத்தளத்தின் ஆசிரியராக இருப்பவர் தன்யா ராஜேந்திரன். சமீபத்தில் ஜெயலலிதா இறந்த போது அவர் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தார். டைம்ஸ் நௌ தொலைகாட்சியில் அவர் வேலை பார்த்த சமயத்தில் நடந்த சம்பவம் அது. அப்போது தேர்தல் நேரம். பிரச்சாரத்துக்காக ஊடகவியலாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஓரிடத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பேட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார். கொடுமையான கூட்டம். பிதுங்கும் பத்திரிகையாளர்களுக்கிடையில் தன்யாவும் தனது நிறுவனத்தின் மைக்கை நீட்டியபடி பேட்டியை எடுத்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் தன்யாவுக்கு பின்னால் நின்று கொண்டு அவரிடம் தவறாக நடந்து கொள்ள தொடங்கிவிட்டார். திரும்பி யாரென்று பார்க்க முடியாத அளவுக்கு கூட்டம். தன்யா மைக்கைப் பிடித்துக்கொண்டிருந்தாலும் அவர் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. அந்த கண்ணீரை பார்த்து விசாரித்து பின்னர் ஜெயலலிதா அந்த நபருக்கு தண்டனை அளித்ததெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் தன்யா அந்த பதிவில் எழுதியது போல போராட்டம், ஆர்ப்பாட்டம், தேர்தல் கூட்டம் என்று செய்தி சேகரிக்கச் செல்லும் பல பெண் ஊடகவியலாளர்கள் இது போன்ற மோசமான அனுபவங்களை சந்திக்க நேர்கிறது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க குழு இருக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதல். பாலியல் வன்முறைகள் பற்றி அறச்சீற்றத்தோடு செய்தி வெளியிடும் எத்தனை ஊடகங்களில் இந்த குழு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பாலியல் துன்புறுத்தல் என்று புகார் கொடுத்தால் அந்த பெண் பிரச்னைக்குரிய பெண்ணாக பார்க்கப்படும் மனநிலைதான் இன்றும் பெரும்பாலான ஊடக நிறுவனங்களில் இருக்கிறது. இப்போதும் பல தொலைக்காட்சி நிறுவனங்களில் திரையில் தோன்றும் பெண்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதி இருக்கிறது.

மிக இறுக்கமான, எதிர்ப்புணர்வு கொண்ட ஒரு சூழலில்தான் பெரும்பாலான பண்கள் ஊடகத்துறையில் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தனையையும் மீறி அசாதாரணமான உழைப்பையும் மனவலிமையையும் கோரும் ஒரு துறைக்கு பெண்கள் ஏன் தொடர்ந்து வர வேண்டும்? ஏன் தொடர்ந்து இயங்க வேண்டும்?

இந்த பணி தரும் மனநிறைவு அப்படி. களம்தான் நமது அலுவலகம் என்று ஒரு நண்பர் சொல்லிக்கொண்டேயிருப்பார். அது ஒரு நாள் மெரினா பீச், இன்னொரு நாள் ஸ்டார் ஹோட்டல், வேறொரு நாள் எதாவது ஒரு குக்கிராமம். அந்த பணிக்கான அங்கீகாரம் என்பது எங்களுக்கு கிடைக்கும் சம்பளம் மட்டுமல்ல. பல நெருக்கடிகளுக்கிடையிலும் எதாவது ஒரு சின்ன நேர்மறையான விஷயத்தை செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கைதான் அடிப்படை.

பல பிரச்னைகளுக்கு இடையில், தொடர் கண்காணிப்பின் கீழ்தான் 2008ல் எனது முதல் இலங்கை பயணம் அமைந்தது. தி வீக்கில் அந்த கட்டுரைகள் வெளிவந்த பிறகு ஆஸ்திரேலிய வாழ் தமிழர் ஒருவர் நெகிழ்ந்து போய் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தார். எல்லா விருதுகளையும் விட முக்கியமானது அந்த கடிதம்.

இத்தனை வருடங்கள் கழித்து ஒரு பிரபலமான செய்தி இணையத்தளத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்னைகள் வெடித்த போது பெங்களூரிலிருந்து கிளம்பி வந்து செய்து சேகரித்துக்கொண்டிருந்தார் தன்யா.  ஜெயலலிதாவை கேட்டது போலவே சசிகலாவை துரத்தித் துரத்தி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். தன்யாவோடு சேர்ந்து தி நியூஸ்மினிட் இணையத்தளத்திற்காக களத்தில் நின்று செய்தி சேகரித்துக்கொண்டிருந்த எல்லோருமே பெண்கள். சென்னையில் கலவரம், பிரச்னை என்றால் அங்கு இப்போதும் சிந்து அலைந்து திரிந்து செய்தி சேகரித்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்.

மனிதர்களுடன் தொடர்ந்து பயணிக்கும், அவர்களுடைய வெவ்வேறான கதைகளை நேரடியாக அறிந்து கொள்ளும், அதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வாய்ப்பை வேறு எந்த துறை இது போல வழங்கும்? ஒரு பெண்ணால் அந்த கதைகளை இன்னும் வலிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்ல முடியும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

மார்ச், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com