சலங்கை ஒலி: காவியக் காதலி

சலங்கை ஒலி: காவியக் காதலி
Published on

நமது காப்பியங்கள் புராணங்கள் எல்லாவற்றிலும் சீதா நளாயினி, சாவித்ரி போன்ற கணவன் மீது அன்பு செலுத்தும் கற்புக்கரசிகள் தான் படைக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய ஒரு சிறந்த காதலி என உருவகப்படுத்தி எந்த பாத்திரமும் இல்லை. அதை ஈடுசெய்யும் வகையில் சலங்கை ஒலி மாதவியின்(ஜெயப்ரதா) பாத்திரப் படைப்பு நான் இப்பவும் வியந்து பார்க்கும் ஓர் அற்புதம்...

சலங்கை ஒலி படத்தில் மாதவி, அதில் பாலுவாக நடிக்கும் கமல் பாத்திரத்தின் மீது காட்டும் அன்பு நிகரற்றது. நடனத்தை உயிராகவும் கலையாகவும் நேசிக்கும் கலைஞன் பாலு. அதனால் அவனால் கலையை மதிக்க தெரியாத சினிமாவில் கூட பணி செய்ய முடியவில்லை . இந்த உலகில் ஒருநாள் இந்த நடனக்கலையில் புகழ்பெறுவேன் என கனவு காண்கிறான். ஆனால் எதார்த்த வாழ்வில் சமையல்காரியான தாய்க்கு உதவியாக அவள் பணி செய்யும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறான்.

ஒரு நாள் தரமற்ற காமிராவால் கத்துக்குட்டி போட்டோகிராபர் மூலம் புகைப்படம் எடுக்க பாலு (கமல்) கஷ்டப்படுவதை மாதவி பார்க்கிறாள். அவனுக்கு நடனத்தின் மீது ஆர்வம் என தெரிய வந்து மறைந்திருந்து அவன் விரும்பும் வகையில் புகைப்படம் எடுக்கிறாள். இருவரும் பிரிண்ட் போட ஸ்டூடியோவுக்கு ஒரே சமயத்தில் வர அங்கு மாதவி தான் விரும்பிய கோணத்தில் தன்னை அருமையாக புகைப் படங்கள் எடுத்திருப்பதை பாலு கண்டு வியக்கிறான்.

பாலுவின் அம்மா சமையல் வேலை செய்ய வந்த திருமண நிகழ்வில் மேடையில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு அதே இசையில் சமையல் கூடத்தில் பாலு தன் தாய்க்கு நடனம் ஆடிக் காண்பிக்கிறான். அங்கு வரும் மாதவிக்கு அப்போதுதான் அவனுடைய முழுத்திறமையும் தெரிய வருகிறது.

அவள் பணி செய்யும் ஆங்கில வார ஏட்டில் அவன் புகைப்படத்துடன் அவனைப்பற்றிய கட்டுரை எழுதி அவனை உலகமறியச்செய்கிறாள்.

தொடர்ந்து இருவரும் சந்திக்க ஒருநாள் அவனிடம் அவள் டெல்லியில் நடக்கும் இந்திய அளவிலான நடன நிகழ்ச்சிக்கு போக விருப்பமா என கேட்கிறாள். அதற்கு அவன் எனக்கு ஆசைதான் ஆனால் அதற்கு அழைப்பிதழ் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத் தாலும் போய் வர பணம் வேண்டுமே எனகிறான்.

பணம் நான் தருகிறேன் என என மாதவி சொல்ல, சரி அழைப்பிதழ் வேண்டுமே என கேட்க அவளோ அதுவும் கொண்டு வந்திருகிறேன் போய்வாருங்கள் எனச் சொல்ல ஆச்சர்யத்துடன் அவன் அந்த அழைப்பிதழை வாங்கிப் பார்க்கும் போது அதில் பிரபல நடன மேதைகள் புகைப்ப்டம் இருப்பதைக் கண்டு வியப்பவன் அதன் ஒரு பக்கத்தில் தன் பெயரும் புகைப்படமும் நிகழ்ச்சியின் அங்கமாக இடம் பெற்றிருப்பதைக் கண்டு சொல்ல வொண்ணா உணர்ச்சி அவன் மனதில் அலையால் எழுகிறது சட்டென என்ன செய்வதென தெரியாமல் அவள் கைவிரல்களைப் பற்றி அழுகிறான் திறமைமிக்க கலைஞன் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒரு பெண் எந்த பலனும் எதிர்பாராமல் அவள் நல்ல மனம் ஒரு குடை போல வந்து அவன் கனவை நனவாக்குவது அவன் பட்ட காயங்களுக்கெல்லாம மழைத்துளி போல ஆறுதல் சொல்வது. அவன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம்.

அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட மாதவிக்கு முன்பே திருமணம் ஆகி முற்றுப் பெறாத கோலமாக பாதியில் இருக்கும் போதுதான் அவள் இதை செய்துள்ளாள் என பார்வையாளன் அறிய வரும்போது அவள் இதயத்தின் ஆழம் இன்னும் கூடிவிடுகிறது உண்மையில் அவள் அவனுக்கு செய்வது எல்லாம் சிறு சிறு காரியங்கள் தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அந்தக் காட்சியை இயக்குநர் செதுக்கி நமக்கு காட்சிப்படுத்தும் சூழல் மாதவியாக நடித்திருக்கும் ஜெயப்பிரதாவின் பாத்திரப்படைப்பு அவரது

சொல்லமுடியாத கதை கொண்ட கருவிழிகள்... பொட்டு... புடவை... அனைத்தும் சேர்ந்து அந்த மாதவி பாத்திரத்துக்கு பெரும் காவியத் தன்மையை உருவாக்கி அழியா சித்திரமாக நம் மனதில் பதியவைத்து விடுகின்றன.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com