சம்பவாமி யுகே யுகே

அரசியல் மொழி
சம்பவாமி யுகே யுகே
Published on

ஜாதி ராஜ ராஜ கம்பீர ராஜ வீர குலதிலக’ என்கிற மன்னர் காலத்து முழக்கங்களிலிருந்து  ‘சேரிகளின் சேகுவேராவே என்கிற இன்றைய தமிழகத்தின் லேட்டஸ்ட் முழக்கம் வரை பிறந்ததிலிருந்து விதவிதமான கோஷங்களைக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்! நாமும் சேர்ந்து முழக்கமிட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

சொல்லப்போனால் கற்கால ஆதிவாசிகள் கூட தங்கள் தலைவனை நடுவில் உட்கார வைத்து ஈட்டி, வேல் கம்புகளுடன் லூ...லூ..லூ என்று  கத்திக்கொண்டு சுற்றி வந்தார்களே அதுவும் இதில் சேர்ந்ததுதான். உளவியல் ரீதியாக ஆராய்பவர்கள் தங்களைத்  தூண்டிவிட்டுக்கொள்ள மக்களுக்கு இந்த முழக்கங்கள் தேவை என்கிறார்கள். அது உண்மையே. தெய்வபக்தி, தேசபக்தி, மொழி பக்தி, தலைவன் பக்தி - எல்லாவற்றையும் நிலை நிறுத்த முழக்கங்கள் காரணமாக இருந்திருக்கின்றன.

 ‘தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!..’  ‘அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை’ ‘புத்தம் சரணம் கச்சாமி!’ - சொன்னதுமே இந்த ஆன்மீக வார்த்தைகள் பக்தனை சிலிர்க்க வைக்கிறதே!

‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான்’ என்பதுபோன்ற சித்தர்கள் எழுப்பிய கோஷங்கள் நாத்திகனையும் கவர்ந்திருக்கின்றன.  ‘கச்சி வரதப்பா’ என்று ஒரு பக்தன் உள்ளமுருக சொல்ல, அது பசியோடு இருந்தவனின் காதில் ‘கஞ்சி வருதப்பா’ என்று விழ, ‘எங்கே வருதப்பா?’ என்கிற கேலி  முழக்கம் மறக்கமுடியாது!

‘ஈசனோடாயினும் ஆசை அறுமின் ஆசை அறுமின்’ போன்ற திருமூலர் திருமந்திர வார்த்தைகள் நெஞ்சில் முழங்குகின்றன. திருக்குறளில்தான் எத்தனை முழக்கங்கள்! வேதங்களில் முழக்கம் இருக்கிறது!  ‘சத்யமேவ ஜயதே!’ என்பதை விட உயர்வான கோஷம் உண்டா?!

பல நூற்றாண்டாக அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை, அடிமையாக இருக்கிறோம் என்ற உணர்வே இன்றி இருந்த நம்மை, விழிக்கச் செய்து சுதந்தர போராட்டத்தில் ஈடுபடச்செய்த முழக்கங்கள் எத்தனையோ! ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘பாரதமாதாவுக்கு ஜே!’, ‘ஜெய்ஹிந்த்!’, ‘வந்தேமாதரம்’ என்பதெல்லாம் இன்னும் காற்றுவாக்கில் மிதந்து வருகின்றன! ‘மகாத்மா காந்திக்கு ஜே!’ என்பது இந்தியர்களிடையே ஏற்படுத்திய முழக்கம் எத்தகையது? காந்தியின் ‘செய் அல்லது செத்துமடி’, ‘வெள்ளையனே வெளியேறு’ எப்பேர்ப்பட்ட முழக்கம்?

சுதந்தரத்துக்குப் பிறகு பிரதமர் நேரு ,‘ஜனநாயக சோஷலிசம்’ என்கிற கோஷத்தை முன்வைத்தார்! ‘சூடான ஐஸ்கிரீம்’ என்று அது விமர்சிக்கப்பட்டது! இன்று ஜனநாயகமும் சோஷலிசமும் இருப்பதாகச் சொல்லமுடியாது! ஆனால் சூடான ஐஸ்கிரீம் சில கடைகளில் கிடைக்கிறது!

பாகிஸ்தானை வீழ்த்திக்காட்டிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்றார். ஆட்டி வைத்த இந்திராகாந்தி ‘கரீபி ஹட்டாவோ’ என்றார். இப்போது பிரதமர் மோடி ‘ஸ்வச் பாரத்’ என்கிறார்! அவர் முன்வைத்தவை இன்னும் பல!

தமிழ்நாட்டுக்கு திமுக முழக்கங்களில் பல கவர்ச்சிகளைச் சேர்த்தது! ஆட்சியைப் பிடிக்க திமுகவுக்கு பெரும் துணை செய்தவை இவை என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!

அன்று காங்கிரஸ் ஆட்சியில் கோடை காலத்தில் சட்டசபை ஊட்டியில் நடக்கும். ‘கும்பி எரியுது! குடல் கருகுது! குளுகுளு ஊட்டி ஒரு கேடா?’ என்று அண்ணா எழுதிக்கொடுத்த முழக்கம் தமிழக சுவர்கள் முழுக்க அலங்கரித்தது.  ஊட்டியில் பின்னர் சட்டசபை நடக்கவில்லை!

1956-ல் அரியலூர் ரயில் விபத்து நடந்தது. மத்தியில் ரயில்வே அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி பதவி விலகினார்! துணை ரயில்வே அமைச்சராக இருந்த ஓ.வி. அளகேசன் பதவி விலகவில்லை! ‘அரியலூர் அளகேசா, ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?’ என்கிற திமுக கோஷம் அளகேசனின் அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்தது, ‘காகிதப்பூ மணக்காது; காங்கிரஸ் சோஷலிசம் இனிக்காது’ என்றும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்றும் திமுக முழக்கங்கள் அன்று தமிழகத்தின் மூலை  முடுக்குகள் எங்கும் ஒலித்தன.

காங்கிரஸ் ஆட்சியை வலுவிழக்கச்செய்தன. காமராஜர் ஆட்சியில் அவருக்குக் கோஷங்களில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. சாதனைகளை அவர்கள் முழங்கவில்லை! ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்கிற காமராஜரின் மந்திர வார்த்தை ஒன்றே பிரபலம். காமராஜர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது ‘மக்கள் தலைவரை மக்கள்சபைக்குத் தேர்ந்தெடுப்பீர்!’ என்று ஒரு வாசகத்துடன் போஸ்டர்கள் அடிக்கப்பட்டன். அத்துடன் அழகான அவர் படமும் தெரிவு செய்யப்பட்டது. இது அவர் கவனத்துக்குப் போனபோது,‘மக்கள் தலைவரா? நாமே அதைச் சொல்லிக்கிறதா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம் போ!’ என்று சொல்லிவிட்டார். புகைப்படமும் வழக்கமான ஒன்றைப் போடுமாறு வலியுறுத்தினார். இதே வாசகமும் புகைப்படமும் இடம்பெற அவரை ஒப்புக்கொள்ள வைக்க மிகவும் போராடவேண்டியதாயிற்று! தமிழ்நாட்டு காங்கிரஸ் காரர்கள் ஆட்சியில் இருந்த போதும் சரி; இன்று மிகச் சிறுபான்மை கட்சியாக ஆனபிறகும் சரி.. சக்திவாய்ந்த கோஷங்களை  உருவாக்கியதே கிடையாது!

மாறாக திமுகவின், ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ போன்ற மொழிப்பற்றைத் தூண்டும் வாசகங்கள் ஏராளம்! இன்னொருபுறம் பெரியாரின் பகுத்தறிவு முழக்கங்கள் அசாதாரணமானவை! இளைஞர்களைச் சிந்திக்க வைத்தன! ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்பது அற்புதம் அல்லாமல் வேறென்ன?

போராட்ட உணர்வுகள் குறைந்துவிட்ட நிலையில் உணர்ச்சியூட்டும் முழக்கங்களும் மறைந்துவிடுகின்றன. வேறு சில முழக்கங்களோ பொருளற்றவையாக, தமாஷாக இருக்கும் அளவுக்கே மதிக்கப்பட்டிருக்கின்றன!

ஜெயலலிதாவின் ‘மக்களுக்காக நான்; மக்களால் நான்’ என்பது சமீபத்தில் புதுமையாக ஒலித்தது! நமக்கு நாமே என்பது முகஸ்டாலின் சமீபத்தில் வைத்த முழக்கம்! மானத்தோடு வாழ்வோம் என்பது தமாகா உருவானபோது வைக்கப்பட்ட முழக்கம்!

இருப்பினும் முழக்கங்களே இல்லாமல் போகாது! அவ்வப்போது வந்தே தீரும்! சூழலுக்கு ஏற்ப அவை பிறக்கும்! சம்பவாமி யுகே யுகே என்பது முழக்கங்களுக்கும் பொருந்தும். அது அமரத்துவம் வாய்ந்தது!

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com