சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க செயல்திட்டம்!

புதிய அரசு என்ன செய்யவேண்டும்? 
சங்க இலக்கியங்களை மொழி பெயர்க்க செயல்திட்டம்!
Published on

தாய்மொழி வழிக்கல்வி என்பது  மிக முக்கியம். அடிப்படையில் அரசு தாய்மொழிக்கல்வியை ஆதரிக்கவேண்டும்.

இரண்டாவது மொழியான ஆங்கிலமும் மிகவும் அவசியம். அதற்கு மேல் பணிச்சூழல்களுக்கு தக்கபடி சுயதேவைக்கேற்ப பின்னர் வேறு மொழிகளைக் கற்கலாம். எந்த  மொழியாக இருப்பினும் ஆறு மாதம் முதல் ஓராண்டில் கற்றுக்கொள்ளலாம். தாய்மொழிக்கல்வி என்பது சமூகநீதியின் இன்னொரு பரிமாணம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எனவே தாய்மொழிக்கல்வியை கட்டுபடியாக்குவதும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தருவதும் அவசியமாகும்.

நமது கடந்தகால வரலாற்றை தரவுகளால் கட்டமைக்க வேண்டும். இல்லையெனில் வரலாறு என்ற பெயரில் நம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகள் தொடரும்.  இப்போது வரலாறு

சார்ந்த விஷயங்களைப் பேச, பன்முகத் துறைசார்ந்த ஒருங்கிணைந்த ஓர் அணுகுமுறை தேவைப்படுகிறது. கீழடியில் கிடைத்த பொருட்களை சும்மா கையில் வைத்துக்கொண்டு பேசுவதற்கும் கரிம ஆய்வு, நானோ குழாய்கள் பற்றிய ஆய்வுமுடிவுகள் ஆகியவற்றின் உதவியோடு பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதற்கு தமிழ் பண்பாடு வரலாறு போன்றவற்றில் தமிழ்மக்கள் தங்களுக்கே உரிய உரிமைளையும் கடமைகளையும் மனதில் வைத்து அதற்கேற்ப தங்களை  வலுப்படுத்திக்கொள்வதற்கு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் இங்கேயே உருவாக்கப்படவேண்டும்.

இந்தியாவில் கல்வெட்டுகள், சிந்துவெளி எழுத்துகள் போன்ற கீறல்குறியீடுகளுடன் கூடிய  பானை ஓடுகள் அதிகம் கிடைப்பது தமிழ்நாட்டில் தான்.  எனவே கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் படித்தவர்களுக்கு வரலாற்றுத்துறையில் வேலை கிடைக்கவேண்டும். இப்போது அப்படி இல்லை.  வரலாறு எழுதுதல் என்ற நுட்பத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார்களே தவிர அந்த வரலாற்றுக்காக இந்த மண்ணில் கிடைக்கும் சான்றாதாரங்களை வைத்துப் பேசும் அணுகுமுறை ஊக்குவிப்படுவது இல்லை.

தொல்லியல், கல்வெட்டியல், மானுடவியல்- மூன்று துறைகளையும் இணைத்துத்தான் செயல்படவேண்டும்,இதற்கான முனைப்பு நம்மிடம் இருந்துதான் உருவாகவேண்டும்.

தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வுகள் தொய்வின்றி நடைபெற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களின் துணைக்கண்ட அணுகுமுறை பற்றிய அடிப்படைப் புரிதல் வேண்டும் . எனவே இந்தியப் பழங்குடிகள் பற்றிய ஆய்வை ஒருமுகப்படுத்தும் கடமை தமிழகத்திற்கு உண்டு. மத்திய இந்தியாவில் வாழும் திராவிடப் பழங்குடிகளின் வாழ்வியலுக்கும் சங்க இலக்கிய ஆவணப்பதிவுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதலே இந்தியாவின் மழைக்காட்டுப் பன்மியத்தின் வேர்களை வலுப்படுத்தும். இதற்காக அப்பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களோடு புரிந்துணர்வு கொண்டு இணைந்து செயல்படவேண்டும்.

அதாவது சங்க இலக்கியங்கள், தமிழ் தொல்லியல் வாயிலாக இந்தியாவில் உள்ள பிற பகுதிகளில் இருக்கும் திராவிட மொழிகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்கள் பண்பாட்டை அறிந்துகொள்வதற்குமான புரிந்துணர்வு  முன்னெடுப்புகள் தமிழ்நாட்டில் இருந்து நிகழவேண்டும்.

சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை ஆராய தென்னிந்திய மொழிகள் தொடர்பான ஒருங்கிணைப்பும் உருவாக்கப்படவேண்டும்.

திருக்குறளை தேசிய நூலாக்கும் அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். திருவள்ளுவரின் சிலையை உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

சங்க இலக்கியங்களை ஏனைய இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்க கால இலக்குடன் கூடிய செயல்திட்டம் தேவை.

தொடக்கத்தில் அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப் பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கைகள் கொண்ட சங்க இலக்கியத் தொகுதியைக் கூட மொழிபெயர்க்கலாம்.

மொத்தத்தில் சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் முன்வைக்கும் விழுமியங்கள், சமூக முன்னுரிமைகள் சார்ந்த சமகால மீள்வாசிப்புகளை ஏதுவாக்கவேண்டும். அதுவே தமிழ்ச்சமூகத்தை அதன் சித்தாந்த வேர்கள் சிதையாமல் கரைசேர்க்கும்.

ஏப்ரல், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com