திதீரத்திற்குச் செல்வது என்று நெடுநாள்களாக ஆசை. நம் தமிழகத்தின் நதிதீரங்கள் பாலைபோல் ஆகிவிட்டன. நம்மிடையே நதி நடந்த தடங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் வழிந்த நதிகள் எங்கோ சிறைப்பட்டுவிட்டன. அவற்றை மீட்கும் சோழர்களை வரலாற்றில் தொலைத்துவிட்டோம். அதனால் வற்றாத வெள்ளப்பெருக்குடைய நதிகளைக் காணவேண்டு மென்றால் இருக்குமிடத்தைவிட்டு வெளியேறி கண்காணாத தொலைவு செல்லவேண்டும். நண்பர்களோடு இதை முடிவுசெய்த தருணத்தில் தென்னிந்தியாவின் பெரிய ஜீவ நதியான கோதாவரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. புயல்மழையால் கோதாவரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தட்டியெடுக்க, கரைதொட்டு ஓடிக்கொண்டிருந்தது. அரசியல் களத்தில் தெலுங்கானா மாநிலக் கோரிக்கையும் அதற்கு எதிர்ப்பும் என இன்னொருபுறம் சூடு கிளம்பியிருந்தது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அமர்ந்தால் எந்தவொரு பயணத்தையும் மேற்கொள்ள முடியாது என்பது தெரியும். அதனால் அக்காரணங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுக் கோதாவரியை நோக்கிக் கிளம்பினோம். இங்கே பன்மையில் நாங்கள் என்று சொல்வது எங்கள் இலக்கிய நட்புகளை.
கோதாவரி தென்னிந்தியாவின் நீளமான நதி. சுமார் 1465 கிமீ நீளமுடையது. இந்திய நதிகளில் சிந்து, கங்கை பிரம்மபுத்திர நதிகளுக்கு அடுத்த பெரிய நதி. அது அரபிக்கடலிலிருந்து 80கிமீ அருகில் மகாராட்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வரம் என்னும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றுகிறது. அந்தத் தோற்றுவாயிலிருந்து அப்படியே மேற்காக இறங்கியிருந்தால் அதன் நீளம் சுமார் 80கிமீக்குள் அடங்கிச் சிறுநதியாகிச் சிறுத்திருக்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்காகப் பாய்ந்து தக்காண பீடபூமியை ஈரமாக்கித் தன்னோடு சேரும் துணையாற்றுத் தண்ணீரையெல்லாம் கூட்டிப் பெருக்கிக்கொண்டு பேராறு ஆகி வங்கக் கடலில் கலக்கிறது. மகாராட்டிரம், தெலுங்கானம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் ஏராளமான மாவட்டங்கள் இந்நதியால் வளம்பெறுகின்றன. நாசிக், ராஜமுந்திரி ஆகிய இரண்டு பெருநகரங்கள் இதன் கரையில் உள்ளவை. இதில் ராஜமுந்திரியை நோக்கிச் செல்வது எங்கள் பயணத்திட்டம். ராஜமுந்திரியிலிருந்து கௌதமி கோதாவரி, வசிஷ்ட கோதாவரி ஆகிய இரண்டு கிளைகளாகப் பிரிந்து கடலில் கடந்துவிடுகிறது. இந்திய நதிகளில் கோதாவரி ஒவ்வொருவரும் காணவேண்டிய அதிசயம். தக்காண கங்கை என்றழைக்கப்படும் இந்நதி இந்து மதத்தவர்க்குப் புனித நதியும் ஆகும்.
நாங்கள் பயணித்த இருப்பூர்தி ராஜமுந்திரியை நெருங்க நெருங்க பச்சை வயல்களால் ஆகிய நிலக்காட்சிகள் கண்களைக் கொய்தன. கோடை தணிந்து மழை பொழியத்தொடங்கும் பருவத்தில் சென்றிருந்ததால் வயல்களில் பனிப்புகை கூடியிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சையாக இருக்கும் இந்த பூமியில்தான் நாம் உண்ணும் அரிசிமணிகள் விளைந்து வருகின்றன. ஒரு காலத்தில் தஞ்சை பூமியும் இப்படித்தான் பச்சைவயல்களாகப் பாங்கெய்தியிருந்தது என்பதை நினைத்துக்கொண்டேன்.
ராஜமுந்திரியில் கோதாவரியின் வியாபகம் பிரம்மாண்டமானது. ராஜமகேந்திரகிரியின் மருவல்தான் ராஜமுந்திரி. ராஜமுந்திரிக்கும் மறுகரையான கொவ்வூருக்கும் இடையில் கோதாவரியின் அகலம் 5 கிமீ என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மறுகரை தெரியாத நதிதீரம். ஆந்திரத்தின் பண்பாட்டுத் தலைநகர் என்று ராஜமுந்திரியைச்
சொல்கிறார்கள். தெலுங்கு மொழியின் எழுத்துரு இங்குதான் வடிக்கப்பட்டது. ஜீவநதியின் கழிமுகத்தில் உள்ள ஊர்களுக்கேயுரிய செழிப்புக்களை படிந்த ஊர். காவிரி மட்டும் காயாது பாய்ந்திருந்தால் நம் தஞ்சாவூர் ராஜமுந்திரியைப்போல் செழிப்படைந்து வளர்ந்திருக்கும்.
நீர்வளக்கரையில் இருக்கும் ராஜமுந்திரியை விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் வந்தடைந்தோம். நம் நாட்டில் அனைத்துவகைப் போக்குவரத்து வழியும் ஒருங்கே அமைந்த, கைவிட்டு எண்ணக்கூடிய ஊர்களில் ராஜமுந்திரியும் ஒன்று. தரைவழிப் போக்குவரத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 5-இல் உள்ள ஊர்.
சென்னை-கொல்கத்தா இருப்பூர்தி வழித் தடத்தில் முக்கிய நிலையம். விமான நிலையமும் உள்ளதால் இங்கே வான்வழிப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. கோதாவரி நதியில் நீர்வழிப் போக்குவரத்தும் நடைபெறுகிறது.
நவீனத்தை அடையத்துடிக்கும் பராம்பரிய நகரங்களுக்குரிய எல்லாக் களைகளும் இவ்வூருக்கு உண்டு. பழைமையான தோற்றமுடைய கட்டடங்களும் நவீன அடுக்ககங்களும் சேர்ந்தே உள்ளன. ஒருபுறம் புதுப்புது மகிழுந்துகள் சீறிப் பாயும் சாலைகளின் ஓரத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் எளிமையாய் நடந்துசெல்கின்றனர். பழைமையான தோற்றமுடைய திரையரங்கக் கட்டடங்கள் சிறப்பாக நவீனப்படுத்தப்பட்டுள்ளன. நதிவெள்ளத்தால் ஊறிய நகரம் என்பதால் சுவரொட்டிகள் முதல் விளம்பரப் பாதாகைகள் வரை ‘சேற்றுப் புண்ணா ? எங்களிடம் வாருங்கள்’ என்னும் விளம்பரங்கள் நிறையவே தென்பட்டன.
ராஜமுந்திரியில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அரங்கு நிறைந்த கூட்டத்தின் மத்தியில் தெலுங்குப் படம் பார்ப்பது சிறப்பான அனுபவம். ‘அத்தகாரின்டிகி தாரேதி’ என்ற பவன் கல்யாணின் படத்தைப் பார்த்தோம். படம் வெளியாகி நான்காம் வாரம் ஆகியிருந்தபோதும் அரங்கு நிறைந்துவிட்டது. படத்தை எந்தவொரு கேள்வியும் இல்லாமல் மனமொன்றி
ரசிக்கிறார்கள் மக்கள். அந்த மூன்று மணி நேரமும் அவர்களுக்கு வேறொரு உலகத்தில் வசிக்கும் வாய்ப்பைத் தெலுங்குப் படங்கள் வழக்குகின்றன. நாங்கள் சென்றபோது கோதாவரியில் வெள்ளப்பெருக்கு என்பதால் நகரையொட்டிய படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அங்கிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர்கள் டாடா குட்டியானை வாகனத்தில் சீதாநகரம் என்ற சிற்றூர் வழியாகக் கோதாவரிக் கரையைப் பிடித்தபடி வந்து புருஷோத்தமபட்டணம் என்ற ஊரில் படகு பிடித்தோம். வழியெங்கும் வயல்களே இருமருங்கும் செழித்திருந்தன. நெல்வயல்களைத்தாம் வயல்கள் என்கிறேன். அறுவடைக்குச் சிலவாரங்கள் இருக்கும். கண்ணுக் கெட்டிய தூரம் வரை தெரியும் இந்நிலப்பரப்பில் எத்தனை மனித உழைப்புகள் கொட்டப்பட்டு இந்தப் பச்சையை உருவாக்கியிருக்க வேண்டும் ! கோதாவரியும் ஆந்திரமண்ணும் உள்ளவரை இந்நாட்டுக்கு அரிசிப்பஞ்சம் வராது என்றே தோன்றியது.
நாங்கள் ஏறவேண்டிய படகு சித்தாரா வந்தது. படகு என்றால் நல்ல மாடவிதானமும் உள்கூடகமும் கலந்த சிறுகப்பல் தோற்றத்தோடு இருந்தது. அடுத்த இரண்டு நாள்களுக்கு நதியைப் பிடித்தபடி கானகப்பகுதிக்குள் செல்லப்போகிறோம் என்பதால் அதிலேயே சமையல் வசதியும் இருந்தது. படகில் ஆடல் பாடல் நிகழ்த்தியபடி செல்ல விரும்பினால் அதற்கும் தோதாக ஒலிக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. நம்மை மகிழ்விக்க நடனக் கலைஞர்களும் உடன்வர இயலும். எங்கள் விருப்பு அதுவன்று என்பதால் தவிர்த்துவிட்டோம்.
படகு கிளம்பி தண்ணீரைக் கிழித்துக்கொண்டு மிதந்து சென்றது. எங்களுக்கும் முன்பாகக் கிளம்பிச் சென்றிருந்த பயணியர் படகு ஒன்று திரும்பி வந்துகொண்டிருந்தது. நதிக்குக் குறுக்கே தூண்விதானங்கள் அமைத்து மின்கம்பிகளைக்கூட கொண்டு சென்றிருந்தார்கள். ஆற்றின் வேகம் குறைந்திருந்த ஓரிடத்தில் நிறுத்தி இறங்கிக் குளித்தோம். கோதாவரித் தண்ணீரை அள்ளிப் பருகினேன். மழைத்தண்ணீர் செம்மண்ணில் கலந்து தெளிந்தபின் ஒரு சுவையைத் தருமே அப்படி இருந்தது. என்னதான் இருந்தாலும் சிறுவாணித் தண்ணீரின் சுவைக்கு ஈடான நீர்ச்சுவையை நான் பருகி அறியவில்லை. கோதாவரித் தண்ணீரின் சுவை ஏரித்தண்ணீரின் சுவை எனலாமே தவிர பேராறு ஒன்றின் தனித்து இனிக்கும் தாமிரபரணிச் சுவை என்பதற்கில்லை. அது கரைத்துக் கலந்து தெளிந்து வரும் மண்ணும் நிலமும் ஒன்றா இரண்டா..? அப்படித்தானிருக்கும்.
அகன்ற கோதாவரியின் சுழல்குறைந்த பகுதியாய்ப் பார்த்து பார்த்து படகைச் செலுத்தினார் மாலுமி. ஓரங்களில் உள்ள சின்னஞ்சிறு ஊர்களும் ஓரிரு வீடுகளும் இவர்கள் இவ்வாறு வாழ எத்தவம் செய்தனரோ என்று ஏங்க வைத்தது. இதுவும்கூட இக்கரைக்கு அக்கரைப் பச்சை எண்ணமாக இருக்கலாம். ஆனால், நதிக்கரை வாழ்க்கையைவிட மேம்பட்ட வாழ்க்கையை எந்த மனிதனும் வாழ்ந்துவிட முடியாது. நதிகள் இருந்திருக்கவில்லையென்றால் மானுடம் ஏது ?
நதியின் நடுவழியில் பாப்பிகொண்டலு எனப்படுகின்ற பாப்பு மலைகள் குறுக்கிடுகின்றன. இரண்டு மலைத்தொடர்கள் அரணாய் எழுந்துநிற்க அவற்றுக்கிடையில் உள்ள குறுகிய பள்ளத்தின் வழியே வெளியே வந்து விழுகிறது கோதாவரி. ஏறத்தாழ கணவாய் போன்ற அமைப்பு இது. கோதாவரி நதி கிழக்குத் தொடர்ச்சி மலைகளைக் கடந்துவரும் பயணத்தின் கடைசி கட்டம் இது. நாங்கள் கீழிருந்து ஏறுவதால் எங்களுக்கு அவ்விடம் முதலில் வருகிறது. அவ்விடத்தில் ஆற்றுநீரின் ஆழம் நூற்றுக்கணக்கான அடிகள் இருக்கலாம் என்றனர். இரண்டு மாமலைகளுக்கு இடையில் ஒரு நதி பாய்கிறது. அதன் மடியில் நாம் நகர்ந்து ஊர வாய்க்கிறது என்றால் அது எத்தனை அரிய காட்சி என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.
அடுத்த சில கிலோமீட்டர்களில் அழகிய நதிக்கரைக் கிராமம் ஒன்று தென்பட்டது. அங்கே படகை நிறுத்திவிட்டு ஊருக்குள் உழன்றோம். கிழக்குத்தொடர்ச்சி மலையின் எளிமையான ஆந்திரச் சிற்றூர். உள்ளே சென்றால் காடு மலை திருத்தி விவசாயம் செய்திருந்தனர். மழை விட்டு விட்டுப் பெய்ததால் கால் வைத்த இடமெல்லாம் அரையடி புதைத்தது. தணிவாய் இருந்த இடங்களில் வெள்ள நீர் வாய்க்கால் உருவாக்கி ஓடியது. மலையையொட்டிய மடியில் குளம் எனத்தக்க சிறு நீர்த்தேக்கம் காணப்பட்டது. அதன் ஓரங்களில் அல்லிகள் பூத்திருந்தன. ‘அல்லிகள் பூத்த குளத்தை ஆழ்ந்து ரசி’ என்ற என் கவிதை வரி நினைவுக்கு வர அப்படியே நின்றுகொண்டிருந்தேன். மறுநாள் அக்குளக்கரையில்தான் எங்கள் காலைக்கடன்களும் கழிந்தன.
மீண்டும் படகுப் பயணத்தைத் தொடங்கி பத்ராச்சலம் வரையிலான பயணத்தை மேற்செல்லவிருந்தோம். ஆனால், ஆற்றின் வேகம் கூடிக்கொண்டே இருக்கவே அதைக் கைவிட வேண்டியதாயிற்று. கிழக்குத் தொடர்ச்சி மலையின் மையத்தில் கோதாவரிக் கரையில் இருக்கின்ற புனிதத் தலம் பத்ராச்சலம். கங்கைக்குக் காசி எப்படியோ அப்படி கோதாவரிக்குப் பத்ராச்சலம். அடுத்தொரு சிற்றூரில் மலையடர்ந்த நிழலில் ஆசிரமத் தவத்தலம் இருந்தது. புகழ்பெற்ற தவசிகள் இருந்து தியானம் செய்த இடம். இப்போது வழிபாட்டுக்கூடம் கட்டிப் பராமரிக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து திரும்ப எத்தனித்தோம். வழியில் கொல்லூரு என்ற இடத்தில் சிற்றாறு ஒன்று கலந்தது. அவ்விடத்தில் கோதாவரிப் படுகையில் தேனிலவுக் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்த்தவிடங்களை மீண்டும் பார்த்தபடி, அங்கங்கே இறங்கிக் குளித்தபடி திரும்பினோம்.
ராஜமுந்திரியில் ஊர்திரும்பும் இருப்பூர்தியைப் பிடித்தோம். இந்தப் பயணத்தில் எனக்குத் தோன்றியது இதுதான். நம் தேசத்தின் நதிகள் அளப்பரிய வளத்துடன் பாய்கின்றன. இந்த உலகம் முழுக்க முழுக்க நீராலானது. ஆனால் நீரின்மை, வறட்சி, குடிநீர்த் தட்டுப்பாடு போன்ற பெயர்களால் நம்மீது சுமத்தப்படும் எல்லாப் பற்றாக்குறைகளும் ஆட்சியாளர்களின் கையாலாகத்தனம்தான். ஒரு நதியின் ஒரு பருவத்து வெள்ளத்தைச் சிந்தாமல் சிதறாமல் பருகிக்கொள்ள நம்மிடம் எந்த ஏற்பாடுகளும் இல்லை. அவற்றை வீணடித்துவிட்டு மீதமுள்ள காலங்களில் கண்ணீர் வடிக்கிறோம். இந்த அவலங்களுக்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப்படும்?
ஜூலை, 2014.