கொழுப்பு மருந்து!

கொழுப்பு மருந்து!
Published on

நி யாண்டர் செல்வன் வாழ்நாள் முழுக்க சைவமாக இருந்தவர். ஒரே நாளில் மீன், முட்டை என சாப்பிடத்தொடங்கினார். அவரது மனைவியும், குழந்தைகளும் பேரதிர்ச்சி அடைந்தார்கள். அதன்பின் மெதுவாக.

சிக்கனுக்கு மாறினார். அவரது மனைவி தொடக் கத்தில்  சிக்கன், மீன் எல்லாம் செய்துக் கொடுத் தாலும் அதன்பின் ஆடு, பன்றி, எருமை என இவர் உண்ணத் துவங்கியதும் ‘சமைத்துத் தர மாட்டேன்' என மறுத்துவிட்டார். அதிலும் இவர் ‘காளைமாட்டு வால், மான் இதயம், எருமை நாக்கு, பன்றித்தோல்' முதலான வித்தியாசமான இறைச்சிகளை உண்ண ஆரம்பித்துவிட்டார். 

இதெல்லாம் ஏன்? அவர் நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு சொல்கிறார்:

 ''என் இளவயதில் ஒரு நாள் அம்மா என்னிடம் 'அப்பாவுக்கு சர்க்கரை வந்துருச்சு. இனிமேல் வீட்டில் சப்பாத்திதான்' என சொன்னது நினைவிருக்கிறது. அதன்பின் அப்பா தினமும் வாக்கிங் போகத் தொடங்கினார். சப்பாத்தியையும், பாகற்காயையும், முள்ளங்கியையும் உண்டார். மருந்துகளை எடுத்தார். ஆனாலும் சர்க்கரை நோய் குணமாகவே இல்லை. அதன்பின் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நிலைக்கு சென்றார். தன் ஆயுளின் கடைசி சில ஆண்டுகளில் தினம் மும்முறை இன்சுலின் ஊசி போடும் நிலைக்கு ஆளானார். பாட்டி அதிகரித்த சர்க்கரை நோயால் மாரடைப்பு வந்து காலமானார். அம்மா வழி
தாத்தாவுக்கும் சர்க்கரை நோய் மற்றும் டிமென்ஷியா வியாதி வந்தது. எனவே 40 வயதானால் எனக்கும் சர்க்கரை வரும் என என் அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் கூறினார்கள். அதனால் சிறுவயது முதலே உடற்பயிற்சியில் ஆர்வத்துடன் இருந்தேன்.

நியாண்டர் செல்வன்
நியாண்டர் செல்வன்

ஆனாலும் 37, 38 வயதில் என் உடல் பருக்கத் துவங்கியது. அதன்பின் கைக்குத்தல் அரிசி, முழுகோதுமை, கம்பு போன்றவற்றுக்கு மாறினேன். அதிக காய்கறிகள், பழங்களை உட்கொண்டேன். கொழுப்புணவை மேலும் குறைத்தேன். அவகாடோ, நட்ஸ் போன்றவற்றை உண்பதை கூட தவிர்த்தேன். என்றாலும் பலனின்றி உடல்பருமன் அதிகரித்தது. 39வது வயதில் நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த சர்க்கரை வியாதி எனக்கு வந்தே விட்டது. மிகுந்த கவலையுடன் அமெரிக்காவில் உள்ள என் மருத்துவரை அணுகினேன். அவர் எனக்கு 'மாமிசம் குறைவாக எடு, கொழுப்பெடுத்த பாலை குடி, முழு தானியம் சாப்பிடு, உடற்பயிற்சி செய்' என அறிவுரை கூறினார்.

''இதைத்தானே இத்தனை ஆண்டுகளாக செய்துவருகிறேன்? அப்புறம் அதையே சொன்னால் எப்படி?' என கேட்டதற்கு 'சர்க்கரை நோயைப் பற்றி மருத்துவர்களுக்கு இவ்வளவுதான் தெரியும்.  இது ஒருதரம் வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது. மருந்து வேண்டுமானால் எடுத்து அதை கட்டுக்குள் வைக்கலாம்' என்றார். அப்போதுதான் மருத்துவர்களை நம்பி இனிமேல் பயனில்லை என தோன்றியது. டயட், உடல்நலம், சர்க்கரை வியாதி குறித்த நூல்களை தேடிப் படித்தேன். அப்படித்தான் பேலியோ டயட் என்பதைக் கண்டறிந்தேன்.''

இப்படி கொழுப்பும் புரோட்டினுமாக சாப்பிட ஆரம்பித்த மூன்றே மாதத்தில் இவருக்கு 12 கிலோ எடை இறங்கியது. சர்க்கரையும், ரத்த அழுத்த வியாதியும் இவரை விட்டு மூன்றே மாதங்களில் ஓடின. அதன் பின்னர் தீவிரமாக  பேலியோவை இவர் பரப்பி வருகிறார்.

பேலியோவுக்கும் சர்க்கரைக்கும் என்ன தொடர்பு?

உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்தி அதை சக்தியாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. கணையத்திலுள்ள பீட்டா
செல்கள் தான் இன்சுலினை சுரக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது கணையம் இன்சுலினை சுரந்து சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது. மேலும் இன்சுலின் தான் இரத்தத்திலுள்ள கொழுப்பு அமிலங்களையும், அதிகப்படியான சர்க்கரையையும் கொழுப்பாக மாற்றி பின்னர் தேவைப்படும் காலங்களில் பயன்படுத்த உதவுகிறது. உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காவிட்டாலோ அல்லது உடல் செல்கள் இன்சுலினை ஏற்க முடியாவிட்டாலோ ஏற்படும் நிலைதான் நீரிழிவு நோய்.

 இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை இன்சுலின் குறைக்கிறது. இதனால் நமக்குப் பசி எடுக்கிறது. உடல் நம்மை மேலும் உண்ண கட்டளையிடுகிறது. அப்போதும் நாம் என்ன செய்கிறோம்? மீண்டும் சர்க்கரை உள்ள உணவுகளையே உண்கிறோம். இதனால் மீண்டும் இன்சுலின் சுரந்து மீண்டும் உடலில் கொழுப்பு சேர்கிறது.  இது சங்கிலித் தொடர் நிகழ்வு. தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் சர்க்கரை அளவுகள் உடலில் ஏறி இறங்கி, தினமும் இன்சுலின் பலமுறை தொடர்ந்து சுரந்து கொண்டே இருந்தால் ஒருகட்டத்தில் கணையத்தின் பீட்டா
செல்கள் பழுதடைந்துவிடும். கூடவே இன்சுலினின் உற்பத்தியும் குறைந்துவிடும். இதன்பின் நம் உடலில் சர்க்கரை அளவுகள் அதிகரித்து நமக்கு நீரிழிவு வியாதியும் வந்துவிடுகிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் முக்கியமானது

வகை& 1 நீரிழிவு நோய். இது இன்சுலின் உடலில் முற்றிலும் சுரக்காத நிலை.  இவ்வகை நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்கள் உடலால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது.

வகை - 2: நீரிழிவு நோய்:

இது இன்சுலின் சார்பற்ற நீரிழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90&95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். இந்த வகையினர் சரியான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சியின் மூலமாக முற்றிலும் இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது.

இங்குதான் பேலியோ உணவு முறையை ஆதரிப்பவர்கள் இதற்கான தீர்வைச்
சொல்கிறார்கள். கடந்த 29 ஆண்டுகளாக டைப் 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிவராம் ஜெகதீசன் அனுபவபூர்வமாக உணர்ந்து 'உன்னை வெல்வேன் நீரிழிவே' என்ற புத்தகத்தில் விரிவாகவே எழுதியுள்ளார். இந்நூலில், 'பேலியோ உணவு என்பது ஆதி மனிதனின் உணவு வகை. இதில் மாவுச்சத்தை( அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகள்) முற்றிலுமாக நீக்கி கொழுப்பு, புரதத்துடன் நார்ச் சத்தை மட்டுமே உணவாக உட்கொள்ளுதல். இதில் கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கச் சொன்னாலும் காய்கறி மற்றும் சில பழங்கள் வழியாக குறைவான அளவு வந்தே சேரும். அதனால் ஒரு நாளைக்கு அதிகப்படியாக 40 கிராம் கார்ப் வரை இருக்கலாம்.

உணவில் மாவுச்சத்து( கார்போஹைட்ரேட்) இல்லாததால் இரத்தத்தில் குளுகோஸ் இருக்காது. உடலின் சக்திக்கு குளுகோஸ் இல்லாத நிலையில் உடல் சேமிப்பிலுள்ள கொழுப்பை எரிக்கத் துவங்கும். தொடர்ச்சியாக குளுகோஸ்
கிடைக்காததால் கொழுப்பு கீட்டோனாக மாற்றப்பட்டு சர்க்கரையின் வேலையைச் செய்யும். இதன் மூலமாக இன்சுலினின் தேவை குறைகிறது. அதனால் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும். அதனால் இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி படிப்படியாகக் குறைத்து முழுமையாக குணம் பெறலாம். ஆனால் வகை 1 நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவு குறையுமே ஒழிய முற்றிலுமாக நிறுத்த முடியாது'  என்றிருக்கிறார்.

''முக்கியமாக இதில் இரத்தப் பரிசோதனை செய்து தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதனை தொடங்க வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட நபரின் இரத்த பரிசோதனை அளவுகளைக் கொண்டு அவர் என்ன மாதிரியான உணவை கடைபிடிக்க வேண்டுமென்பதற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியம். சுயமாக சரியான வழிகாட்டுதலின்றி இதில் இறங்குவது தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட,''  என்று குறிப்பிடும் இவர் நீரிழிவைப் பற்றியும் தன் அனுபவப் பூர்வமான பேலியோ டயட்டில் அதனை கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றியும் விரிவாகவே எழுதியுள்ளார்.

பேலியோவில் சைவம் மற்றும் அசைவம் உண்பவர்களுக்கு தனித்தனியான உணவு பரிந்துரைகள் உள்ளன. முக நூலில் 'ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு' என்ற பெயரில் இயங்கும் பேலியோ டயட்டாளர்களின் பக்கத்தில் இரத்தப் பரிசோதனை முடிவுகளுக்கு ஏற்ப இலவசமான உணவு வகை பரிந்துரையையும் செய்கிறார்கள்.

பேலியோவில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

அரிசி,கோதுமை ,மைதா. பேக்கரி பொருட்கள், பழங்கள் / ஜூஸ், அனைத்து வகை இனிப்புகள், தேன், நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை,ஓட்ஸ், மேகி, ரீபைன்ட் என்ற வார்த்தையுடன் விற்கப்படும் அனைத்து எண்ணெய்கள். ஜங்க் புட் எனப்படும், குப்பை உணவுகள் அனைத்தும். அனைத்துவகை பீன்ஸ், கிழங்கு வகைக் காய்கறிகள், அனைத்து வகை கடலைகள், அனைத்து வகை பருப்புகள், புளி, அனைத்து வகை சோயா பொருட்கள். காபி, டீ, அனைத்துவகை கூல் டிரிங்க்ஸ், எனர்ஜி ட்ரிங்க்ஸ்.

தற்போது தமிழில் பேலியோ உணவு பற்றி ஏராளமான நூல்கள் வந்து விட்டன. இதில் நியாண்டர் செல்வனின் 'பேலியோ டயட்' புத்தகம் தான் அனைத்திற்குமான ஆதார நூல்.  ஏற்கெனவே குறிப்பிட்ட ' உன்னை வெல்வேன் நீரழிவே' என்ற
சிவராம் ஜெகதீசனின் நூல் நீரிழிவு நோயாளிகளுக்கான
சிறந்த பேலியோ புத்தகம். பேலியோவில் அசைவ உணவை விரும்பாதவர்களுக்கு பா. ராகவனின் 'சைவ பேலியோ' உதவும்.  டாக்டர் பரூக் அப்துல்லாவின் 'பேலியோவில் குணமாகும் நோய்கள்' புத்தகமும், ஷங்கர் ஜி யின்  'பேலியோ சந்தேக நிவாரணி' நூலும் இந்த உணவு முறையைப் பற்றி மேலதிக தகவல்களுக்கு உதவுபவை.

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com