தோளிலிருந்து வழியும் துண்டு காலைத் தொட்டுக் கொண்டு புரள, வருடக் கணக்காகப் பழகியவர் போல் தயக்கமின்றி வீடுகளுக்குள், கூடம் வரை போய் கும்பிடு போட்டு வாக்குக் கேட்கிறார் தமிழ்க்குடிமகன். மாலை மறைந்து இரவு பூத்த பின் ஒரு முட்டுச் சந்தில் போட்ட மேடையேறிப் புன்னகை மாறாமல் பேசுகிறார். தனித்தமிழ் ஆர்வலர் என்றாலும் மதுரைத் தமிழின் மணம் கமழ, அலங்காரம் தவிர்த்து யதார்த்தமாய்ப் பேசுகிறார். சொந்த ஆர்வங்களைத் தின்று சிரிக்கும் காலம், தேர்தல் காலம்.
அந்தக் காலத்தின் காட்சிகளையும் வண்ணங்களையும் இந்தியா டுடே வாசகர்களுக்கு வழங்குவதற்காகச் சூறாவளிச் சுற்றுப் பயணம். புதுச்சேரி, திருச்சி முடித்து மதுரையில் முகாம். தமிழ்க் குடிமகனிடம் பேட்டிக்கு நேரம் கேட்டிருந்தேன். பிசியாய் சுற்றிக் கொண்டிருந்ததால், கூட்டம் முடிந்ததும் என்னை கூப்பிட்டு அவரது காரில் ஏற்றிக் கொள்கிறார். அடுத் தடுத்த கட்டிடங்களில் தங்கியிருந்தோம் என்பதும் ஒரு காரணம். அவர் அரசினர் விருந்தினர் இல்லத்தில். நான் பாண்டியன் ஹோட்டலில். பாலம் தாண்டி வந்து விட்டோம். தமுக்கத்தின் வாயிலில் ஆளுயுரக் கருணாநிதி கட் அவுட். சரசரவென்று சாரத்தில் ஏறி அதைப் பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறார்கள் சிலர்.
கடந்து கொண்டிருக்கும் காரில் அமர்ந்து அதைக் காண நேரிட்ட தமிழ்க்குடிமகனின் முகத்தில் தணல் போல் கோபம். வண்டியை நிறுத்து என வாகன ஓட்டியிடம் உறுமுகிறார். அருகில் அமர்ந்திருக்கும் காவலர், நிற்காதே போ என்கிறார். தனது ஆணையை தன் முன்னாலேயே மீறுவதா? தமிழ்க்குடிமகனுக்குக் கோபம் தலைக்கு மேலேறுகிறது. காவலர் பணிவாக ஆனால் உறுதியாகச் சொல்கிறார், “ஐயா இத்தனை நாள் நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்டோம். இன்றொருநாள் நாங்கள் சொல்வதை தயவு செய்து நீங்கள் கேட்க வேண்டும்” அவருக்குச் செய்தி தெரிந்திருக்க வேண்டும்.
அறைக்குத் திரும்பி, அகப்பட்டதைச் சாப்பிட்டுவிட்டு, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்-கிறேன். இடைவிடாத தொலைபேசி மணி கேட்டு எழுந்தேன். எதிர்முனையில் பிரபு சாவ்லா. “தெரியுமா உனக்கு, உங்கள் ஊரில் ராஜிவ்காந்தியைக் கொலை செய்துவிட்டார்கள்” என்கிறார். “நிச்சயம் இருக்காது, நிஜமாகத்தான் சொல்கிறீர்களா?” என்கிறேன். அவர் பதிலைக் காதில் வாங்கிக் கொள்வதற்குள் அறைக்கதவை யாரோ இடிக்கிறார்கள். பொறுமையிழந்து போய்த் திறக்கிறேன். ஜூனியர் விகடன் சௌபா. “சேதி தெரியுமில்லையா?” என்கிறார் சிக்கனமாக. “ஆமாம் கேள்விப்பட்டேன்” என்கிறேன்.
அன்றிரவு சிவராத்திரி. சென்னையை அழைத்து செய்தியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுக்கிறேன். தொலைபேசி இணைப்புக் கிடைப்பது எளிதாக இல்லை. இரவே புறப்படலாமா என்று யோசிக்கிறேன். வழியில் கலவரமாக இருக்கிறது வேண்டாம் என ஓட்டல்காரர்கள் எச்சரிக்கிறார்கள். என் வாகன ஓட்டி தயங்குகிறார்.
மறுநாள் காலை எழுந்து சிம்மக்கல் வரை நடக்கிறேன். சிறிதும் சலனமில்லாதிருக்கிறது நகரம். கடைகள் எதுவும் திறக்கவில்லை. காலைப் பேப்பர்களை சாலையோரமாக நடைபாதையில் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள். விடுதிக்குத் திரும்பி ஓட்டல் பணியாளர் ஒருவரிடம் சைக்கிள் வாங்கிக் கொண்டு அழகர்கோவில் இருக்கும் திசையில் மிதிக்கிறேன். ஆங்காங்கு மக்கள் குழுமி, அழுது கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறு கிராமத்தில் ஆண்கள் அனைவரும் கூடி தலையை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
சௌபா வந்தார். கையில் ஒரு கறுப்புச் சட்டை. முன்புறத்தையும் முதுகுப்புறத்தையும் கிழித்துக் கொடிகளாக மாற்றுகிறார். கைப் பகுதிகள் கத்தரிக்கப்பட்டு ‘பேட்ஜ்’களாக மாறுகின்றனர். காரின் பின் சீட்டில் என்னை அமர்த்தி இருபுறமும் சௌபாவும் நண்பர்களும் இறுக்கமாக நெருக்கி உட்கார்ந்து கொள்கின்றனர். முன் சீட்டில் இன்றைய ஆனந்த விகடன் ஆசிரியர் இரா.கண்ணன். அன்று அவர் மாணவ நிருபர்.
பாதுகாப்பிற்கு அவர்கள் துணை வர, கறுப்புக் கொடிகள் முன்னால் பறக்க, கார் மின்னல் வேகத்தில் பறக்கிறது. திருச்சி வரை பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவர்கள் விடை பெறுகிறார்கள். அலைந்து சேகரித்த தேர்தல் செய்திகள் எதையும் அந்த இதழில் எழுதவில்லை.சைக்கிளில் சென்று கண்ட கிராமக் காட்சிகளை எழுதினேன். ஏனென்றால் அந்த இதழ் ராஜீவ்காந்தி சிறப்பிதழ்!
பிப்ரவரி, 2016.